படம் | Cartoonist Pradeep

உலகில் விமர்சனத்துக்கு விதிவிலக்கானதென்று எதுவுமில்லையென்று சொல்லிக்கொள்ளமுடியும். ஆனால், ஒவ்வொரு நாட்டினதும் சட்டத்தை, நீதித்துறை சார்ந்த நடைமுறைகளை எந்த குடிமகனாலும் விமர்சிக்க முடியாது. சட்டமும், நீதியும் விமர்சனங்களுக்கு, குறைகூறல்களுக்கு அப்பாலானவை. கடவுளை விட உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவை அவை. மனிதர்களுக்கு அச்சம் தருபவை. நல்லொழுக்கமுள்ள மனிதக் கூட்டத்தை நடத்திச் செல்லும் வழிகாட்டிகள் என்று கற்பிதப்படுத்தப்படுவதுண்டு. ஆனால், உண்மையில் சட்டமும், நீதியும் அப்படித்தானா? மறுகேள்வி கேட்கமுடியாதளவுக்கு புனிதத் தன்மை வாய்ந்தவைதானா? கறைபடியாத வெண்மைத்தனங்களால் மூடப்பட்டவையா?

இந்தக் கேள்விகளுக்கு ஆம் என்று பதில் அளிக்கக்கூடியவகையிலான குடிமக்களையே அதிகார உற்பத்திச்சாலை தயாரித்திருக்கிறது. ஆனால், நடைமுறை மனிதர்கள் சட்டமும், நீதியும் அதிகாரத்தின் பொய் என்று முழக்கமிடுகின்றனர். இதுவும் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தின் அடிப்படையில் உருவானதுதான்.

குறுநில அரசுகளின் உருவாக்கங்களோடு அதிகார மையங்கள் எல்லா சமூகங்களிலும் தலையெடுத்தது. அதில் பலமுள்ள சமூகக்குழுக்கள் ஏனைய குழுக்களை விழுங்கி, ஒரு பிரமாண்ட மையத்தை உருவாக்கியது. அவைகளின் இருப்புக்கு சரியான வரைமுறைகள் தேவைப்பட்டன. அதனை உருவாக்கிக் கொடுத்தனர் அவைக்களத்தார். கற்றோர் என்று சொல்லக்கூடிய ‘சமூக ஒழுக்கம்’ அறிந்தோர் இந்த அவைக்களங்களில் இருந்தனர். சில அரசர்கள் மத அனுட்டானங்களில், சாத்திரங்களில் பெயர்பெற்றவர்களையும் இருப்புக்கு வலுச்சேர்க்கும் அறிவுசார் படையணிகளில் இணைத்துக் கொண்டார்கள்.  நூற்றாண்டுகள் கணக்கில் நிலவிய மன்னராட்சித் தத்துவங்கள் அடிமைத்தனத்தை விதம் விதமாக நடைமுறைப்படுத்தியது. பலமற்றவர்களின் முதுகில் அரசியல் நடத்துவதற்கான சகல அதிகாரங்களையும் உத்தியோகபூர்வமாக மன்னர்களும், இளவரசர்களும், குட்டி இளவரசர்களும் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டதாக அறிவித்தார்கள். அவைக்கள ஊதிகள் இதற்கு சாட்சியும் சொல்லினர்.

இந்த மரபில் வந்த மன்னர்கள் காலவோட்டத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட காலத்தில், நவீன கால மன்னர்கள் உதயமானார்கள். அவர்களை காப்பாற்றும் ஆயுதங்களாக சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இது பொதுவான நீதி, சட்ட உருவாக்கங்களின் பின்னால் இருக்கின்ற அரசியல். ஆனால், ஆசிய சமூகங்களில் நீதி மற்றும் சட்ட உருவாக்கங்களில் பின்னால் இருப்பது எது? அந்த பிராந்திய சமூகத்தவரது பண்பாட்டை, அடையாளத்தை, கௌரவத்தை பிரதிபலிக்கும் அம்சங்கள் எவையும் அதனிடத்தில் உண்டா?

இந்தப் பிராந்தியத்தில் இருக்கின்ற நீதி சார்ந்த நடைமுறைகள் யாவும் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டவை; தொகுக்கப்பட்டவை. 16ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து கீழைத்தேயம் மற்றும் ஆசிய நாடுகள் நோக்கி பரந்த காலனியாதிக்கம், இங்கெல்லாம் அடிமைகளை வைத்திருக்கவேண்டிய தேவையை ஏற்படுத்தியது. மக்களை மக்களாக நடத்தும் எண்ணத்தை அது துளியளவும் கொண்டிருக்கவில்லை. வெள்ளைக்காரர்களுக்கு பணிசெய்யும் கறுப்பு அடிமைகளாகவே பார்க்கப்பட்டனர்; பயன்படுத்தப்பட்டனர். ஆகவே, அடிமைகளை நடத்தக்கூடியளவுக்கான நீதியை, சட்டத்தை அவர்கள் எழுதினார்கள். இந்த நீதிக்கு முன்பு அடிமைகள் ‘ஆம்’ – ‘இல்லை’ என்பதை மட்டுமே பதிலாக சொல்லமுடியுமே தவிர, மறுப்புவாதங்களுக்கோ, எதிர்ப்புகளுக்கோ இடமில்லை. அதையும் மீறி எதிர்ப்பு காட்டினால் சட்டத்தின், தண்டனையின் வலு இன்னும் அதிகமாகலாம். இது இன்றும் நீடிப்பதை இந்திய நீதித் துறையில் அவதானிக்க முடியும். ஆசியாவில் இருக்கின்ற மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலேயே இப்படியாயின் ஏனைய நாடுகளின் நிலை குறித்து சொல்லத் தேவையில்லை. நீதித்துறை சார்ந்த அனுபவம் நமக்கு அதிகமாகவே உண்டு.

ஆசிய நீதி மற்றும் சட்டம் சார்ந்த நடைமுறைகள் காலனிய ஆதிக்கவாதிகளால் மட்டும் உருவாக்கப்பட்டவையல்ல. மாறாக ஏற்கனவே நம்மிடம் ஊறியிருந்த ஆண்டான் – அடிமைத்தனமாகிய “கும்புடுரேணுங்க சாமி” மனநிலையின் வெளிப்பாடுகளும் இதில் கலந்துவிட்டன. ஆக, மன்னராட்சியின் நீதி விழுமியங்களும் இதில் உள்ளடக்கம். இந்த பிராந்தியத்தவரின் பண்பாடுபோல, கலாசாரம் போல நீதியும் ஒரு சுவையானதாக இல்லை. மேற்கின் எஜமானத்தினதும், தெற்கின் மன்னராட்சி முறைமையினதும் கூட்டுக் கலப்பாகவே நீதி மற்றும் சட்ட உருவாக்கம் நிகழ்ந்திருக்கிறது. அதன் துயரத்தையே இப்பிராந்தியத்தவர் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜனநாயகத்தின் அடித்தளமான தனிமனித உரிமையை காப்பாற்றிக் கொள்ளுதல் என்பதை முதலில் நீதி மற்றும் சட்டத்திடமிருந்து காப்பாற்ற வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இது ஆசிய நாடுகளுக்கு அதிகளவில் தேவைப்படும் விடயம். ஒவ்வொரு மனிதனின் அசைவையும், அதன் விளைவையும் அக்குவேறு ஆணிவேராக பிளந்து பங்கிட்டுக் கொள்ளும் நீதியும் சட்டமும், உலகை புதிய உலகை நோக்கி பயணிப்பதற்கு பெருந்தடையாக இருக்கின்றது.

இந்தக் கலப்பின் விளைவால்தான் சட்டத்தையோ தனக்கு விதிக்கப்படும் தண்டனையையே எவரும் விமர்சிக்க முடியாத நிலையை அடைந்திருக்கின்றனர். அடிப்படையில் தனி மனித உரிமை காப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இவைகள், அந்த உரிமையை பறித்துக்கொள்ளும் நிலையே மறுவலமாக நிகழ்கின்றது. அது மிகப்பெரும் ஓட்டையாகவும் இருக்கின்றது. மிகப்பெரும் குற்றங்களை புரிந்தவர்கள் வழிகாட்டிகளாகவும், சாதாரண குற்றங்களை புரிந்தவர்கள் வாழ்நாள் கைதிகளாகவும், எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்கள் சந்தேகக் கைதிகளாகவும் அடையாளம் தேடிக் கொள்வதற்கு இந்த ஓட்டையே வழிகொடுக்கிறது.

முடிவாக, ஜனநாயகத்தின் அடித்தளமான தனிமனித உரிமையை காப்பாற்றிக் கொள்ளுதல் என்பதை முதலில் நீதி மற்றும் சட்டத்திடமிருந்து காப்பாற்ற வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இது ஆசிய நாடுகளுக்கு அதிகளவில் தேவைப்படும் விடயம். ஒவ்வொரு மனிதனின் அசைவையும், அதன் விளைவையும் அக்குவேறு ஆணிவேராக பிளந்து பங்கிட்டுக் கொள்ளும் நீதியும் சட்டமும், உலகை புதிய உலகை நோக்கி பயணிப்பதற்கு பெருந்தடையாக இருக்கின்றது. அதேவேளை காட்டுமிராண்டிகளின் ஆட்சிக்கு ஆழமான அத்திவாரத்தை அமைக்கும் பணியையும் இவை செய்கின்றன.

ஜெரா

Jera