படம் | AFP, Ishara Kodikara | இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தெஹீத் ஜமா அத் அமைப்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படம்.

இலங்கையின் மீதான மூன்றாவது பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணையை அரசு எதிர்ப்பதில் ஆச்சரியம்கொள்ள எதுவுமில்லை. ஆனால், குறித்த பிரேரணையை, தங்களை தமிழ் தேசியவாத சக்திகளாக அடையாளப்படுத்தி வருவோரும் எதிர்ப்பதுதான் ஆச்சரியமானது. அமெரிக்கப் பிரேரணையை ஒரு தேவையற்ற தலையீடாக அரசு கருதுகிறது. இதனை ஒருவர் விளங்கிக் கொள்ளலாம். அவ்வாறாயின் குறிப்பிட்ட புலம்பெயர் தரப்பினரும் தமிழ் நாட்டில் உள்ளவர்களும் ஏன் எதிர்க்கின்றனர். பதில் மிகவும் இலகுவானது. தாங்கள் விரும்பிய விடயங்கள் குறித்த பிரேரணையில் இல்லை என்பதாலேயே அவர்கள் எதிர்க்கின்றனர். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் கூட்டமைப்பில் உள்ள சில புதிய அரசியல்வாதிகள் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டனர். மக்கள் மத்தியிலும் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை கோரினால் உடனடியாக அமெரிக்கா தனது பிரேரணையை திருத்திமைத்துவிடும் என்றவாறான நம்பிக்கை ஊட்டப்பட்டது. ஆனால், உண்மை என்ன?

முதல் அர்த்தத்தில், முன்னர் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளும் சரி, தற்போது வாக்கெடுப்பை எதிர்பார்த்திருக்கின்ற பிரேரணையும் சரி, கூட்டமைப்பின் வேண்டுகோளினாலோ அல்லது தமிழ் மக்களின் மீதுள்ள அக்கறையினாலோ கொண்டுவரப்பட்டதல்ல. இதனை முதலில் தமிழர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். சாதாரண மக்களுக்கு இவ்வாறான விடயங்களை விளங்கிக்கொள்வதில் சிரமமிருந்தாலும், மக்களை வழிநடத்துவதாக நம்பிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்காவது இதில் தெளிவிருக்கவேண்டும். உண்மையில் அமெரிக்கப் பிரேரணைகள் என்பது, இலங்கைக்கு எதிரான பிரேரணை அல்ல. மாறாக இலங்கை தொடர்பான பிரேரணை. இதனை திருகோணமலையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கை வரைபில் செல்வாக்குச் செலுத்திவரும் மிக முக்கிய அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார். எங்களது பிரேரணை உண்மையில் இலங்கைக்கு எதிரானதல்ல மாறாக, இலங்கையின் மீதானதாகும் என்றார். அவர் மேலும், இது தொடர்பில் தவறானதொரு பார்வை நிலவுகிறது. நாங்கள் இலங்கைக்கு எதிராகச் செயற்படவில்லை. இலங்கை எங்களுடைய நட்பு நாடு என்னும் வகையில், எங்களுடைய நாட்டில் இருப்பது போன்ற சில விடயங்கள் இங்கும் இருக்கவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அவற்றை நோக்கி இலங்கை முன்னேறும் வகையில் சில செயற்பாடுகளை நிறைவேற்றுமாறு கோருகிறோம். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் உள்ளக ஏற்பாடுகளைத்தான் அவர் குறிப்பிடுகின்றார்.

அவர் இவ்வாறு குறிப்பிட்டாலும், அதன் மறைபொருள், இலங்கையை ஒரு வழிக்குக்கொண்டு வருவதற்கான கருவியாகவே மேற்படி பிரேரணைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதே உண்மை. இந்த அடிப்படையில் நோக்கினால் எந்தப் பிரேரணையில் எதனை உள்ளடக்க வேண்டும், எதனை உள்ளடக்கினால் இலங்கையை நீண்டகால நோக்கில் கையாள முடியுமென்று தீர்மானிப்பது அமெரிக்காவேயன்றி வேறு எவருமல்ல. இங்கு கூட்டமைப்பு என்பது ஒரு விடயமே அல்ல. அமெரிக்காவின் இராஜதந்திர அணுகுமுறை உடனடி இலக்கை கொண்டதல்ல. அது நீண்டகால நோக்கை அடிப்படையாகக் கொண்டது. அது முதலில் சுற்றிவளைக்கும் நோக்கம் கொண்டது. பின்னர் மெது மெதுவாக இறுக்கும் உபாயம் கொண்டது. இது அரசுமும் அறியாத ஒன்றல்ல. அமெரிக்காவின் இராஜதந்திர அணுகுமுறைகளை மிகத் துல்லியமாக ஆராயும் ஆற்றல் கொண்டவர்கள் அரசில் இருக்கின்றனர். எனவே, அரசின் சமீபகால அணுகுமுறைகள் எதுவும் அறியாமல் நிகழவில்லை. அறிந்தே அனைத்தையும் அரசு மேற்கொண்டு வருகிறது. ஏனெனில், ஒரு விடயத்தில் அரசு தெளிவாக இருக்கிறது அதாவது, அமெரிக்க பிரேரணைகளின் முதல் இலக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வல்ல மாறாக, அமெரிக்காவின் நீண்டகால மூலோபாய நலன்கள் ஆகும். அமெரிக்கா திடீரென்று இலங்கையின் மீது ஏன் அழுத்தங்களை கூட்டி வருகின்றது? இலங்கையின் மீது என்றுமே காண்பிக்காதவொரு ஈடுபாட்டை இப்போது ஏன் காண்பிக்க முற்படுகிறது? இதன் பின்னாலுள்ள புவிசார் அரசியல் இலக்கு என்ன?

அமெரிக்காவின் ஆசிய மையவாத கொள்கைக்கும் (Asia Pivot) இலங்கை தொடர்பான அமெரிக்க ஈடுபாட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இவ்வாறானதொரு கேள்விக்கு இல்லையென்று ஒருவர் பதிலளிக்க முடியுமா? சமீப காலமாக, இலங்கை புவிசார் அரசியலில் கூடுதல் முக்கியத்துவம் உள்ள நாடாக கணிக்கப்படுகிறது. அமெரிக்கா மட்டுமன்றி, அமெரிக்காவின் மூலோபாய கூட்டாளிகளான ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரித்தானிய ஆகிய நாடுகளும் இலங்கை விடயத்தில் கூடுதல் அக்கறையை காண்பித்து வருகின்றன. இலங்கையின் இனத்துவ அரசியலானது, ஒரு உள்நாட்டு யுத்தமாக மாறிய வரலாற்றை உற்று நோக்கினால், ஒரு விடயம் வெள்ளிடை மலையாகும். காலனித்துவத்திற்கு பிற்பட்ட இலங்கையின் மீதான முதலாவது அந்நிய தலையீடானது, இன அரசியலை அடிப்படையாகக் கொண்டே நிகழ்ந்தது. ஆனால், உண்மையில் அன்றைய இந்திய தலையீடு என்பது, அன்றைய உலக ஒழுங்கின் கீழான ஒரு புவிசார் அரசியல் பிரச்சினையாகும். உலகம் சோவியத் முகாமாகவும், அமெரிக்க முகாமாகவும் பிளவுற்றுக் கிடந்த அன்றைய சூழலில்தான் சோவியத் முகாமுடன் கைகோர்த்திருந்த இந்தியா, அமெரிக்க முகாமின் நீட்சியாக இலங்கை கையாளப்படுவதற்கான ஆபத்துக்கள் இருப்பதை உணர்ந்தே இலங்கையின் உள்நாட்டு இனத்துவ அரசியலில் தலையீடு செய்தது. அவ்வாறு தலையீடு செய்ததன் மூலம் இந்தியா இரண்டு செய்திகளை சொல்ல முற்பட்டிருந்தது. ஒன்று, இந்தியாவின் பிராந்திய நலன்களில் குறுக்கிடும் அந்நிய சக்திகள் இலங்கைக்குள் வேர்கொள்வதை இந்தியா எதிர்க்கும். இரண்டு, தெற்காசியாவின் சக்தி என்னும் வகையில், இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் கடப்பாடு இந்தியாவிற்கு உண்டு. ஆனால், இந்தியா எதிர்பாராத விடயங்கள் பல நடந்துவிட்டது வேறு விடயம். அது பற்றி இப்பத்தி விவாதிக்கவில்லை. இங்கு கவனிக்க வேண்டிய விடயம், அன்றைய இந்திய தலையீடு என்பது முற்றிலும், அன்றைய உலக ஒழுங்கின் விளைவான புவிசார் அரசியல் முரண்பாட்டின் விளைவு என்பதே! இந்த பின்புலத்தை கருத்தில் கொண்டு தற்போதைய சூழலை உற்று நோக்கினால், இன்றைய உலக ஒழுங்கில் வெளித்தெரியும் புவிசார் அரசியல் முரண்பாடுகளின் விளைவுதான் இன்று இலங்கை அமெரிக்காவினால் இலக்கு வைக்கப்படுவதற்கான காரணமாகும்.

ஆரம்பத்தில், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை நிறுத்தி ஒரு இணக்கத்தை ஏற்படுத்துவதில் மேற்குலகு அக்கறையை காண்பித்து. ஆனால், அதில் அவர்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப விடுதலைப் புலிகள் அமைப்பு நடந்து கொள்ளவில்லை. அதன் விளைவு 2006இல் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு முழுமையான அதரவை மேற்குலக வழங்கியிருந்தது. அமெரிக்க மதிப்பீட்டில் உலக தீவிரவாதத்தின் வகைமாதிரியாகக் கருதப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் பூண்டோடு அழிக்கப்படுவதற்கு சகல தரப்பினரும் பல்வேறு வழிகளும் உதவியிருந்தனர்.

ஆனால், யுத்தம் முடிவுற்ற பின்னர் நடைபெற்ற விடயங்களில் மேற்குலகால் மகிழ்சியடைய முடியவில்லை. இதுதான் தற்போதைய அழுத்தங்களின் அடிப்படை. இங்கும் முன்னர் இந்தியாவிற்கு ஏற்பட்டதொரு அனுபவம் மேற்குலகிற்கு ஏற்பட்டதா? அல்லது இது இந்தியாவிற்கும் மேற்குலகிற்குமான ஏமாற்றமா? அவ்வாறானதொரு ஏமாற்றத்தின் விளைவாகத்தான் மேற்படி அமெரிக்க அழுத்தங்கள் தொடருகின்றனவா? மேற்குலகு என்பது, அமெரிக்க மூலோபாய நலன்களின் கூட்டு என்பதை இங்கு அழுத்திக் கொள்ளவேண்டும். அமெரிக்க ஏமாற்றத்திற்கு காரணமாக இருக்கக் கூடியது ஒன்றாகத்தான் இருக்க முடியும். அது அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு. அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு என்பது, ஆசியாவில் சீனாவை எவரெல்லாம் போட்டியாக கருதுகின்றரோ, அவர்கள் அனைவரது கரிசனையாகவும் மாறியிருக்கின்றது. இந்த பின்புலத்தில் சீனாவின் செல்வாக்கு இலங்கைக்குள் அதிகரித்துச் செல்வது அல்லது இலங்கை சீனாவின் பக்கமாக சாய்ந்து செல்வதானது, அமெரிக்காவிற்கான கவலை மட்டுமல்ல, அது இந்தியாவின் கவலையாகவும் ஜப்பானின் கவலையாகவும் இருக்கிறது.

சீனா ஆசியாவின் சக்தியாக எழுவதை தடுக்கும் வகையில் அனைவரது பார்வையும் இந்தியாவின் பக்கமாக திரும்பியிருக்கிறது. ஒட்டு மொத்தமாக நோக்கினால், அமெரிக்காவின் ஆசியா நோக்கிய மூலோபாய நகர்வுகளின் ஒன்றே இலங்கையின் மீதான அண்மைக்கால அழுத்தங்கள் ஆகும். இதில் அமெரிக்க – இந்திய ஒத்துழைப்பு முக்கியமானது. இந்த பின்புலத்தில்தான் அமெரிக்கப் பிரேரணைகளை இந்தியா ஆதரித்து வருகின்றது. ஆனால் அதனை சீர் செய்தே ஆதரிக்கிறது. சீர் செய்யும் அதிகாரத்தையும் இந்தியா விட்டுக் கொடுக்காது. அதுவும் கூட இலங்கையின் மீதான இந்திய பிடியை இறுக்குவதற்கான கருவிதான். இவை அனைத்தையும் விளங்கிக் கொள்ளாமல் அமெரிக்க பிரேரணைகளை வெறுமனே இலங்கையின் பிரச்சினையாகவோ அல்லது தமிழர்களுக்கான வாய்ப்பாகவே மட்டும் விளங்கிக் கொள்ள முற்பட்டால், அது ஒரு தவறாகவே அமையும்.

அமெரிக்க பிரேரணை சிங்களவர்களையும் இலக்கு வைக்கவில்லை, தமிழர்களையும் இலக்கு வைக்கவில்லை. அது அமெரிக்காவின் நீண்டகால மூலோபாய நலன்களை இலக்கு வைத்திருக்கிறது. முன்னர் இந்திய தலையீட்டின்போது சில நன்மைகளை தமிழர்கள் எட்டிப்பிடிக்க வாய்ப்புக் கிடைத்தது போன்று தற்போதைய அழுத்தங்களின் விளைவாகவும் சில நன்மைகளை எட்டிப்பிடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், தமிழர்களால் முன்னர் கிடைத்த வாய்ப்பை எட்டிப் பிடிக்காமல் வேறு எங்கோ அன்னாந்து பார்த்துக் கொண்டிருந்தது போன்றுதான் இருப்பார்களா?

யதீந்திரா

DSC_4908