படம் | aid.dfat
பொதுவாகவே எந்த மொழியும் அதனை உருவாக்கிய சமூகத்தின் விழுமியங்களின் வெளிப்பாடாகவே இருக்கும். அதிலும் ஆங்கில மொழியானது விசேடம் வாய்ந்தது. அது விழுமியங்களை மட்டுமல்லாது, ஒவ்வொரு சமூகத்தினதும் வழக்கங்கள், போக்குகள் (Trends) அனைத்தையும் வெகு துல்லியமாகப் பிரதிபலிக்கும். அதன் காரணமாக தினந்தோறும் கூர்ப்படையக்கூடிய மொழியாக சிறக்கின்றது. வரலாறு என்பதற்கு History என்கின்றது அந்த மொழி. இப்பதத்தினைப் பிரித்துப் பார்த்தால் His Story எனப் பொருள்படுவதைக் காணலாம். வரலாறானது வெற்றியடைந்தவர்களால், அதிகாரத்திலுள்ளவர்களால் எழுதப்படுவதாகும். எனவே, அது அத்தகையதோர்களைப் பற்றிய கதைகளாகவே இருக்கும். இவர்களினால் மாற்று வரலாறுகள் ஒருபோதும் அங்கீகரிக்கப்படுவதில்லை. எமக்குத் தெரிந்த காலந்தொட்டு இவர்கள் ஆண்களாகவே இருப்பதனால்தான் வரலாற்றினை ‘அவன் கதை’ எனக்கூறும் பாரம்பரியம் உருவாகியது. பெண்கள் சமத்துவம் நாடும் தமது போராட்டத்தில், தமது வரலாறுகளையும் சித்தரிக்க ஆரம்பிப்பது ஓர் அவசியமான மூலோபாயமாகும். ஒதுக்கப்பட்ட சமூகக் குழுமமாக அவர்கள் தங்கள் வரலாறுகளை பதிவு செய்யும்போது கூடவே சகல ஒதுக்கப்பட்ட சாதாரண மக்களையும் தம்முடன் இணைத்து முன்கொண்டுவரும் வாய்ப்புக்கள் உருவாகின்றன.
இந்த நோக்குடன்தான் Herstories, அதாவது அவளின் கதைகள் என்னும் கருத்திட்டம் உருவானது. எமது நாட்டில் நடந்து முடிந்த யுத்தத்தின் வரலாறு பல பிரமுகர்களுடைய கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றது, எழுதப்பட்டு வருகின்றது. அரசிலுள்ள அரசியல் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் எழுதி முடித்திருக்கின்றார்கள். மனித உரிமை ஆர்வலர்கள் எழுதியிருக்கின்றார்கள். சமூக ஆய்வாளர்கள் எழுதியிருக்கின்றார்கள். ஆனால், இதுவரை அந்த யுத்தத்தினால் தமது வாழ்க்கை சின்னாபின்னப்படுத்தப்பட்ட மக்களின் பார்வையில் அது எழுதப்பட்டதா என்றால் இல்லையென்றுதான் கூறவேண்டும். குறிப்பாக, பெண்கள் நோக்கில் இந்த யுத்தம் என்னென்ன விளைவுகளை எற்படுத்தியதென்பதை நாமறியோம். ‘அவளின் கதைகள்’ இக்குறைபாட்டை ஒரு சிறிதளவில் நிவர்த்தி செய்கின்றது. இலங்கையின் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 270 பெண்கள் வாய்மூலக் கதையாடல்கள் மூலம் தமது கதைகளையும், அதன் மூலமாக எமது நாட்டில் நிகழ்ந்த கோர யுத்தத்தின் தன்மைகளையும் எடுத்துக் கூற வைக்கின்றது. இன்று இத்தனை அழிவுகளுக்கும் பின், எமது சமூகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. எமது குடும்பங்கள் ஓரளவுக்காவது சகஜ நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனவென்றால் அந்தப் பெருமை முக்காலும் இப்பெண்களையே சாரும் என்றால் மிகையாகாது. ஷெல்லடிகள், பொம்பர்கள் மத்தியில் தமது பிள்ளைகளின் உயிர்களைக் காப்பாற்றி, மீளக் குடியமர்ந்ததற்குப் பின்பு ஒரு வீடாகக் குடும்பமாக வாழ்க்கையை செம்மைப்படுத்துவதற்கு தாய்மாரைத்தவிர யாருக்கு இயலும்? அத்தகைய முக்கிய கர்த்தாக்களாகப் பெண்கள் திகழும்போது அவர்களின் வரலாறுகள் பதியப்படுவதன் தேவையை வாசகர்கள் உணர்ந்து கொள்ளலாம். அதனால்தான் இத்திட்டத்தினை வெறுமனே இந்தவொரு நடவடிக்கையுடன் விட்டுவிடாமல், எமது தேசிய சுவடிக் காப்பகத்தில் பெண்களின் வரலாற்றுக்கும் அவர்களின் வாய்மூலக் கதையாடல்களுக்குமான பகுதி திறக்கப்படவேண்டும் என்பதிலும் இத்திட்டம் அக்கறைகொண்டு இயங்கியிருக்கின்றது. அதன்படி, இன்று அவளின் கதைகளின் மூலப் பிரதிகளை எவரும் எமது தேசிய சுவடிக் காப்பகத்தில் பார்வையிடக்கூடிய எற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
மேற்கூறிய 270 பெண்களின் கதைகளும், அவர்களின் கைப்பட எழுதிய கடிதங்களாக இருக்கின்றனள. ஒரு காலப்போக்குக்கேற்பதான கதைத் தொடராக சித்திரமாக வரையப்பட்டிருக்கின்றது. அத்துடன், அவர்களின் புகைப்படப்பதிவுகளும் காணொளிகளும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அவளின் கதைகள் கண்காட்சிகள் எற்பாடு செய்தவிடமெல்லாம் பார்வையாளர்கள் இப்பதிவுகளை வாசிப்பதிலும் பார்வையிடுவதிலும் அனேக நேரத்தினைச் செலவழித்ததும் அதன் பயனை எமக்கு உணர்த்தியது. தனக்கு இது மறக்க முடியாதவோர் நாள் என ஒருவர் குறிப்பேட்டில் எழதிச் சென்றிருந்தார். அதற்குக் காரணம் இல்லாமலில்லை. இப்பெண்களின் கதைகள் அவ்வளவு உருக்கமாக இருந்தன. தனது கணவர் யுத்தத்தில் இறந்த பின்பு தனது வாழ்க்கையின் ஒரே ஆதாரமாக இருந்த மகன், “அம்மா நீ கஷ்டப்படாதே உனக்கு உழைத்து நான் சாப்பாடு போடுவன்” என்று கூறி தனது படிப்பையும் இடைநிறுத்திவிட்டு மேசன் வேலைக்குச் சென்று இதுவரை வீடு திரும்பாத சோகத்துடன் கிளிநொச்சியில் வாழும் தாய்ள, தனது ஒரே மகன் யுத்தத்தில் இறந்து விட்டான். அவன் நாட்டுக்காகத் தனது உயிரைக் கொடுத்தது பெருமையென்றாலும், தமிழர்கள் தமது உரிமைகளைக் கேட்டபோது நாம் கொடுத்திருந்தோமென்றால் இன்று என் மகன் என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பானே என பெருமூச்சு விடும் குருநாகலையைச் சோந்த வயோதிப சிங்களத் தாய், இதே கருத்தினை வெளியிடும் மொனராகலையைச் சோந்த இன்னுமொரு சிங்களத் தாய். அரசியல் பிரதிநிதித்துவமும் இல்லாமல் கேட்பாரற்று ஒதுக்குப் புறமாக மொனராகலையில் வாழும் தமிழ் பெண்கள் தம்மத்தியில் வெள்ளை வான்கள் நடமாடிய கோரங்களைச் சித்தரித்த கதைகள், “எனதப்பாவைக்கொண்டு கொண்டு போனவர்களைக் கண்டு பிடிப்பதற்காகத்தான் நான் நன்றாகப்படிக்கின்றேன்” என சூளுரைத்த அத்தகைய பெண்ணொருவரின் 12 வயதுச் சிறுவன். மொனராகலையில் வாழும் இந்தச் சின்ன சமூகத்தின் கதைகள் அங்கு அவளின் கதைகள் குழு செல்லும் வரை வெளிவரவேயில்லை. இன்று அதன் ஒரு பகுதியாவது பதிவாகியிருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாயைச் சேர்ந்தவொரு பெண், 1987ஆம் ஆண்டு அங்கு சிங்களக் குடியேற்றங்கள் வந்த காலந்தொட்டு வருடாவருடம் தானும் தனது குடும்பத்தவர்களும் இடம்பெயர்ந்த கதையைக் கூறியிருக்கின்றார். கிட்டத்தட்ட பதினொரு தடவைகள் இடம்பெயர்ந்தவருக்கு முள்ளிவாய்க்கால் இடப்பெயர்வே அதியுச்சக்கட்ட இடப்பெயர்வாக மாறுகின்றது. இத்தனை ஷெல்லடிக்குள்ளும் உங்கள் இரு பிள்ளைகளையும் எப்படிக் காப்பாற்றினீர்கள் என வினவினோம். இதற்கு கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என அவர் எங்களுக்கு விளக்கினார். அரசு யுத்தமில்லாத இடம் இது (No Fire Zone) என்று முதலில் அறிவித்தல் செய்யும். அந்த இடத்திற்குப் போய் ஆறுதலாக இரண்டு மூன்று நாட்கள் தங்கலாம்தான். ஆனால், அங்கு தொடர்ந்து தங்கக் கூடாது என்பதை நான் ஒரு சில சந்தர்ப்பங்களிலேயே கண்டு கொண்டேன். ஏனெனில், அங்கும் சனக்கூட்டம் கூடியவுடன் பொம்பரும் ஷெல்லடியும் திரும்ப ஆரம்பித்துவிடும். எனவே, சனக்கூட்டம் சேரத்தொடங்கியவுடனேயே நான் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வெளியேறிடுவேன். பிறகென்ன, ஓட்டந்தான் என்று கண்கள் பளிச்சிட எமக்கு விளக்கம் அளித்தார். இவ்வகையாக, மானுடத்தின் கதைகளை குறிப்பாக, இம்மக்களின் தைரியத்தையும் துணிச்சலினையும் ‘அவளின் கதைகள்’ பதிவு செய்திருக்கின்றது.
இதன் பயன் கண்டு வழங்கப்பட்ட பிரித்தானிய அரசின் உதவியுடன் சர்வதேச மகளிர் தினத்தினை அனுசரிக்கும் முகமாக இம்மாதம் லண்டனில் அவளின் கதைகள் மேடையேறுகின்றது. புலம்பெயர் தமிழ் சிங்கள மக்களின் பார்வைக்காக The Strand கலையகத்தில் 26ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்குமிடையில் வைக்கப்படுகின்றது. London School of Economics பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ‘நல்லிணக்கத்திற்கான குரல்கள்’ என்கின்ற குழுவினரும் இதில் பங்காளர்களாயிருக்கின்றனர். லண்டன் வாழ் சமூகவியலாளர்களையும் கலைஞர்களையும் இது தொடும் என்பது எமது நம்பிக்கை. ‘அவளின் கதைகள்’ போன்ற இன்னும் பல திட்டங்கள் நம்மத்தியில் அரங்கேறவேண்டும். பெண்களின் கதையாடல்களும் சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட எமது வரலாற்றின் பகுதியாக வேண்டும்.
அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்
சாந்தி சச்சிதானந்தம்