பட மூலம், Selvaraja Rajasegar

2009ஆம் ஆண்டு நீதியமைச்சராக இருந்த கௌரவ மிலிந்த மொரகொடவினால் உயர் நீதிமன்ற நீதியரசர் கௌரவ சலீம் மர்சூப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான முஸ்லிம் தனியாள் சட்டச் சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த 9 வருட கடின உழைப்பின் பின்னர் இந்தக் குழுவின் அறிக்கை இவ்வாண்டு ஜனவரி மாதம் குழுவின் தலைவரினால் நீதியமைச்சருக்குக் கையளிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாக நாட்டின் முஸ்லிம் சமூகத்தினரிடையே இது தொடர்பில் பாரிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஒரு சட்டத்தரணி என்ற ரீதியிலும் இக்குழுவின் ஒரு அங்கத்தவராக இருந்து  கடந்த 9 வருடங்களாக இவ்வறிக்கை தயாரிப்பதற்காகப் பாடுபட்டவர் என்ற ரீதியிலும் இது தொடர்பிலான சில கருத்துக்களை முன்வைக்க வேண்டிய தலையாய சமூகக் கடமை ஒன்று எனக்கு இருக்கின்றது.

ஷரீஆ சட்டத்தை மாற்றுவதற்கான முயற்சி நடைபெறுகின்றது என்ற தவறான சிந்தனை ஒன்று மக்கள் மத்தியில் வேரூன்றி உள்ளது. முதலில் இந்தச் சிந்தனை அகற்றப்பட வேண்டும். இங்கு ஷரீஆ சட்டத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திலேயே, இது தொடர்பில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு வழங்கி சமூகத்தை வழிநடாத்துவதற்குரிய சட்டச் சீர்த்திருத்தங்களை ஷரீஆவிற்குட்பட்ட வகையில் ஏற்படுத்துவதே இச்சட்டச்சீர்திருத்தத்தின் நோக்கம் என்பதை மக்கள் முதலில் உணர வேண்டும். ஷரீஆச் சட்டமானது எக்காலத்திற்கும் பொருத்தமானது என்ற உண்மையையும் ஷரீஆச் சட்டத்தில் எல்லாப் பிரச்சினைகளுக்குமான சரியான தீர்வு தெளிவாக வழங்கப்பட்டுள்ளது என்ற உண்மையையும் யாராலும் மறுக்க முடியாது. இது தொடர்பில் சமூகத்திலுள்ள மக்கள் மனதில் சரியான தெளிவு காணப்பட வேண்டும்.

2009ஆம் ஆண்டு நீதியமைச்சினால் நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர் கௌரவ சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் அறிக்கை பற்றியும் மக்கள் மத்தியில் ஒரு தெளிவின்மை காணப்படுகின்றது அல்லது தெளிவின்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இதற்குத் தெளிவான சான்றாக அமைவது எஸ்.எம் அறிக்கை (SM report), எப்.எம் அறிக்கை (FM report) என்று இரண்டு அறிக்கைகளாக சமூகத்திலுள்ள மக்கள் மத்தியில் பிழையான சிந்தனை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே இவ்வாறான இரண்டு அறிக்கைகள் கிடையாது. இரண்டு அறிக்கைகள் எனில் இரண்டு குழுக்கள் நீதியமைச்சினால் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். நீதியமைச்சினால் உயர் நீதிமன்ற நீதியரசர் கௌரவ சலீம் மர்சூப் தலைமையில் ஒரு குழுதான் நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கைதான் இந்தக் குழுவின் தலைவரினால் நீதியமைச்சருக்குக் கையளிக்கப்பட்டது.

விடயம் என்னவெனில் இவ்வறிக்கையில் கலந்துரையாடப்பட்ட சில கருத்துக்களில் மாத்திரம் குழுவின் உறுப்பினர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. இவ்வேறுபட்ட கருத்துக்களின் மீது குழு உறுப்பினர்களிடையே உடன்பாடு காண்பதற்கு பல வருடங்களாக முயற்சிகள் எடுக்கப்பட்டும், முடியாத சந்தர்ப்பத்தில் அந்தச் சில விடயங்களில் மாத்திரம் குழு உறுப்பினர்களிடையே காணப்பட்ட இரண்டு வித்தியாசமான கருத்துக்களுடன் ஏனைய அனைத்து விடயங்களிலும் ஏகமனதான கருத்துடன் இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அறிக்கை நீதியமைச்சரிற்கு, குழுவின் தலைவரினால் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் மக்கள் மத்தியில் தெளிவு காணப்பட வேண்டும்.

இவ்வறிக்கையில் ஏகமனதாக முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளை விடுத்து இரண்டு கருத்துக்களுடன் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் மீது அண்மைக்காலமாக சமூகத்தில் பாரிய கருத்து மோதல்களும், வாதப் பிரதிவாதங்களும் நடைபெறுகின்றன. இது தொடர்பில் சமூகத்தில் பாரியதொரு தெளிவின்மையும் காணப்படுகின்றது. ஆகவே, எவ்விடயங்களில் இந்த வித்தியாசமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

  1. நிலையான சட்டம்
  2. காதி நீதிமன்ற முறைமையைச் சீர்திருத்துதல்
  3. பலதாரமணம்
  4. திருமணத்தைப் பதிவு செய்தலும், வலியின் தேவைப்பாடும்
  5. திருமண வயது
  6. மத்தா
  7. காதி நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் தோன்றுதல்

என்ற விடயங்களில் குழுவின் உறுப்பினர்களிடையே இரண்டு வெவ்வேறான கருத்துக்கள் காணப்பட்டன. இங்கு விளக்கத்தை இலகுவாக்குவதற்காக மாத்திரம் ஒரு கருத்துப்பிரிவினை பிரிவு A என்றும் மறு கருத்துப் பிரிவினை பிரிவு B என்றும் நான் குறிப்பிடுகின்றேன்.

நிலையான சட்டம் தொடர்பில் “மத்ஹப்” (Sect) என்ற விடயம் சம்பந்தமாக இரண்டு கருத்துக்கள் காணப்பட்டன.

பிரிவு A யின் கருத்துக்களாவன:

“தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் சட்டத்தில் மத்ஹப் என்று பொருள்கோடல் செய்யப்படுகின்ற “Sect” என்ற பதம் இல்லாமலாக்கப்பட்டு, எல்லா மத்ஹபுகளையும் உள்ளடக்கிய முஸ்லிம் சட்டம், பிரச்சினைகளுக்கேற்ற சரியான தீர்வினைப் பெறுவதற்கு பிரயோகிக்கப்பட வேண்டும்.” இத்திருத்தம் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லையாயின் பிரிவு A ஆனது அதற்குப்பகரமாகப் பின்வரும் இரண்டு மாற்றுக்கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளது. அவையாவன இரு வெவ்வேறான மத்ஹபுகளினால் ஆளப்படுகின்றவர்களின் திருமணத்தின் போது அவர்களது திருமணம் தொடர்பிலான எல்லா விடயங்களிலும் குறித்த ஒரு மத்ஹபினால் ஆளப்படுவதற்கு அவர்கள் இருவரும் பரஸ்பரம் சம்மதிக்க வேண்டும். மற்றையகருத்து, திறத்தவர்கள் இருவரும் எந்த மத்ஹபுகளையும் சாராதவர்களாக இருக்கும் போது அல்லது இருவரும் வெவ்வேறான மத்ஹபுகளினால் ஆளப்பட்டு, குறித்த ஒரு மத்ஹபினால் இருவரும் ஆளப்படுவதற்கு பரஸ்பரம் சம்மதிக்காத சந்தர்ப்பத்தில் குறித்ததொரு மத்ஹபினுள் கட்டுப்படுத்தப்படாமல் எல்லா மத்ஹபுகளின் கோட்பாடுகளையும் உள்ளடக்கிய முஸ்லிம் சட்டத்தினால் ஆளப்பட வேண்டும். இக்கருத்துக்களுக்குரிய ஷரீஆவின் பார்வை ஆங்கில அறிக்கையின் 72ஆம் பக்கத்திலிருந்து 82ஆம் பக்கம் வரை பிரிவு A யினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

B பிரிவின் கருத்து என்னவெனில், திறத்தவர்கள் இருவரும் தங்களது மத்ஹபுகளைத் திருமணத்தின் போது பிரகடனம் செய்ய வேண்டும். அவ்வாறு பிரகடனம் செய்யவில்லையாயின் அதனைத் தீர்மானிக்கும் அதிகாரம் முஸ்லிம் விவாக விவாகரத்து ஆலோசனை சபைக்கு வழங்கப்பட வேண்டும்.

காதி நீதிமன்ற முறைமையைச் சீர்திருத்துதல் என்ற தலைப்பின் கீழ் A பிரிவினருக்கும் B பிரிவினருக்குமிடையில் கருத்து வேறுபாடு காணப்படுகின்ற விடயம் பெண்கள் காதி நீதவான்களாக நியமிக்கப்படுதல் தொடர்பிலாகும்.

A பிரிவினர் பெண்களை காதி நீதவான்களாக நியமிக்கலாம் என்றும் B பிரிவினர் பெண்கள் காதி நீதவான்களாக நியமிக்கப்படக் கூடாது என்றும் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். பெண்கள் காதி நீதவான்களாக நியமிக்கப்படலாம் என்ற சிபாரிசை முன்வைத்தள்ள A பிரிவினர் தங்களது கோரிக்கையை ஷரீஆவின் பார்வையில் ஆங்கில அறிக்கையின் 64ஆம் பக்கத்திலிருந்து 72ஆம் பக்கம் வரை தெளிவாக விளக்கியுள்ளனர்.

பலதாரமணம் தொடர்பிலான A பிரிவினரின் சிபாரிசின் சாராம்சமானது, பலதாரமணத்தில் ஈடுபடும் ஒரு ஆணிற்கு எல்லா மனைவியரையும், பிள்ளைகளையும் போதியளவிலும், நியாயமான நீதமான முறையிலும் கவனிப்பதற்குரிய இயலுமையும் பொருளாதார ஆற்றலும் உள்ளதா என்பதைக் கவனித்து, விசாரித்து அதன் பின்னர் பலதாரமணத்திற்கான அனுமதி காதி நீதிமன்றங்களினால் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தனது மனைவியரையும், பிள்ளைகளையும் நீதமான முறையில் கவனிக்க ஆற்றலில்லாத ஆண்களுக்கு பலதாரமண அனுமதி வழங்கப்படக் கூடாது. அவ்வாறு காதி நீதவானினால் அனுமதி வழங்கப்படாது நடைபெறுகின்ற திருமணம் செல்லுபடியற்றதாக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளனர். இதற்கான ஷரீஆவின் பார்வையிலான நியாயங்கள் ஆங்கில அறிக்கையின் 107ஆம் பக்க முதல் 112ஆம் பக்கம் வரையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

B பிரிவினரின் சிபாரிசு என்னவெனில், பலதாரமணத்திற்கு ஷரீஆ ரீதியில் காரணங்கள் காணப்படுகின்ற போதும், மனைவியரைக் கவனிப்பதற்கு போதுமான பொருளாதார வசதி இருக்கின்ற போதும் பலதாரமணத்திற்கு காதி அனுமதி வழங்கலாம். அனுமதி வழங்காமல் பலதாரமணம் செய்கின்ற ஆணுக்கு தண்டப்பணமும், சிறைத்தண்டனையும் வழங்கப்பட வேண்டும். அத்துடன், மனைவியின் அனுமதியின்றி கணவன் பலதாரமணத்தில் ஈடுபடும் போது கணவனிடமிருந்து விவாகரத்து கோருவதற்கான அனுமதி மனைவிக்கு வழங்கப்பட வேண்டும் என்பன B பிரிவினரின் சிபாரிசுகளாகும்.

அடுத்த விடயம் திருமணத்தை பதிவு செய்தலும், வலியின் தேவைப்பாடுமாகும். திருமணத்தைப் பதிவு செய்தலைப் பொறுத்தவரையில் A பிரிவினர் திருமணத்தின் வலிதுத்தன்மை, நிகாஹ்விலும், பதிவிலும் தங்கியிருக்க வேண்டுமெனக் கூறுகின்ற அதேவேளை B பிரிவினர் பதிவை வலிதுத்தன்மைக்கு கட்டாயமாக்கவில்லை.

வலி சம்பந்தமான விடயத்தைப் பொறுத்தவரையில் A பிரிவு திருமண வயதையடையாத திறத்தினர் அல்லது திருமணவயதையடைந்தும் ஏதேனும் இயலாமையினால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் இரு திறத்தவர்களுக்கும் திருமணப்பாதுகாவலர் எனும் வலி அவசியமென்று கூறுகின்ற அதேவேளை B பிரிவினர் எல்லாப் பெண்களினதும் திருமணத்திற்கு வலி அவசியம் எனக் கூறுகின்றர். A பிரிவினர் தங்களது சிபாரிசுகளுக்கான காரணகாரியங்கள் ஷரீஆ கண்ணோட்டத்தில் ஆங்கில அறிக்கையின் 82ஆம் பக்கம் முதல் 96ஆம் பக்கம் வரை காணப்படுகின்றது.

திருமண வயதெல்லையைப் பொறுத்தவரையில் A பிரிவினரின் சிபாரிசு ஆனது 18 வயதைப் பூர்த்தியடையாத முஸ்லிம்களின் திருமணம் நிகழ்த்தப்படவும் பதிவுசெய்யப்படவும் முடியாது எனக் கூறி அதற்கான பின்வரும் விதிவிலக்குகளையும் சிபாரிசு செய்துள்ளது. 18 வயது பூர்த்தியடையாத சந்தர்ப்பத்தில் 16 வயது பூர்த்தியடைந்துள்ள போது அம்முஸ்லிமின் மேலான நலனிற்காகத் திருமணம் நடைபெற வேண்டுமென்ற விடயத்தில் நீதிமன்றம் திருப்தியடையும் பட்சத்தில் அத்திருமணத்தை நடாத்திப் பதிவு செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கலாமெனக் கூறுகின்றது. A பிரிவினரது சிபாரிசுகளுக்கான காரணகாரியங்கள் ஷரீஆ கண்ணோட்டத்தில் ஆங்கில அறிக்கையின் 97ஆம் பக்கம் முதல் 107ஆம் பக்கம் வரை காணப்படுகின்றது.

B பிரிவு ஆணிற்கான திருமண வயதெல்லை 18 ஆகவும் பெண்ணிற்கான திருமண வயதெல்லை 16 ஆகவும் இருக்கவேண்டுமென்று சிபாரிசு செய்யும் அதேவேளை அவ் வயதுக்கு கீழ்ப்பட்டவர்களின் திருமணத்திற்கும் காதி நீதவான் தேவையான சந்தர்ப்பங்களில் அனுமதிக்கலாம் என்ற நெகிழ்வைத் தனது சிபாரிசில் முன்வைத்தள்ளது.

கணவனின் கொடுமை போன்ற தவறுகள் காரணமாக ஒரு பெண் விவாகரத்துக் கோரும் போது அப்பெண்ணிற்கு இழப்பீடு ஆணினால் வழங்கப்பட வேண்டுமென்று A பிரிவும், வழங்கப்படத்தேவையில்லையென B பிரிவும் சிபாரிசு செய்கின்றது. இதற்கான A பிரிவின் நியாயங்கள் ஷரீஆவின் கோணத்தில் ஆங்கில அறிக்கையின் 123 முதல் 130  வரையான பக்கங்களில் காணப்படுகின்றது.

காதி நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் மூலம் ஆஜராகுவதற்கான தேர்வுரிமை திறத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என A பிரிவு சிபாரிசு செய்யும் அதேவேளை, அத்தேர்வுரிமை தடுக்கப்பட வேண்டும் என்றும், காதி நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் திறத்தவர்கள் சார்பில் ஆஜராகக் கூடாது என்றும் B பிரிவு சிபாரிசு செய்கின்றது. A பிரிவின் சிபாரிசுகளுக்கான காரணங்கள் ஆங்கில அறிக்கையின் 130 முதல் 136ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க A பிரிவின் சிபாரிசுகள் ஷரீஆவிற்கு முரண்பட்டவையாக உள்ளன என்றும் B பிரிவின் சிபாரிசுகள் ஷரீஆவிற்கு உட்டபட்டவையாக உள்ளன என்றும், சமூகத்திற்கு தவறாக விளக்கமளித்து A பிரிவில் உள்ள சிபாரிசுகளுக்குச் சார்பாகக் கையொப்பமிட்டவர்கள் மீது பாரிய பழி ஒன்று அண்மைக்காலமாகச் சுமத்தப்பட்டு வருவது நாமனைவரும் அறிந்த விடயம். அதேவேளையில் இஸ்லாத்தை ஒரு தீவிரவாதப் போக்கில் அவதானிக்காமல், அழகிய மார்க்கமான இஸ்லாத்தின் ஷரீஆச் சட்டத்தைப் பிக்ஹுடைய கண்ணோட்டத்தில் அவதானிக்கின்ற இஸ்லாமிய அறிஞர்கள் பலர் A பிரிவின் மீது இடப்பட்ட பழி அபாண்டமானதென்றும், அச்சிபாரிசுகள் அனைத்தும் ஷரீஆவிற்கு உட்பட்டவையே என்றும் பல சமூகவலைத்தளங்களினூடாகத் தமது கருத்துக்களை முன்வைப்பது  A பிரிவின் சிபாரிசுகளுக்குச் சார்பாகக் கையொப்பமிட்ட எனக்கும் ஒரு பாரிய திருப்தியை ஏற்படுத்துகின்றது.

2003ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல பாதிக்கப்பட்டவர்களுக்கு காதி நீதிமன்றம் செல்வதற்குரிய சட்ட ஆலோசனைகள் வழங்கிய அனுபவமும், காதிகள் சபை முதல் உயர் நீதிமன்றம் வரை சட்டத்தரணியாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான பல வழக்குகளில் வாதாடிய அனுபவமும் என்னை இந்தக் கையெழுத்தையிடத் தூண்டியது. 2003ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் சட்ட ஆலோசகராக இருந்து, காதி நீதவான்களைப் பற்றி யாருமே சிந்திக்காத காலத்தில் அவர்களைப் பற்றிச் சிந்தித்து, எவ்விதமான பயிற்சிகளுமின்றி அவர்கள் பதவியில் அமர்த்தப்படுவதனால் அவர்களும் பாதிப்புக்குள்ளாகி அவர்களினால் நிவாரணம் பெற வேண்டியவர்களுக்கும் பாதிப்பையேற்படுத்திப் பரிதவித்துக் கொண்டிருந்த காதி நீதவான்களைப் பற்றி முதன் முதலில் சிந்தித்தது ஒரு பெண்கள் நிறுவனமே முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி. காதி நீதவான்களுடன் வருடம் தோறும் கலந்துரையாடல்கள் நடத்தி, அவர்களுக்குப் பயிற்சியை அளித்தது. அந்நிறுவனத்தின் காதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வுகளின் பிரதான வளவாளராக சுமார் 10 வருடங்கள் சேவையாற்றிய எனது அனுபவமும் நீதிபதிகள் பயிற்சி நிலையத்தில் காதி நீதவான்களுக்கு பயிற்சி அளித்த அனுபவமும் என்னை இக்கையெழுத்தையிடத் தூண்டியது. நாடளாவிய ரீதியில் காதி நீதிமன்றங்கள் தொடர்பிலும், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினாலும் பின்னர் மற்றும் சில நிறுவனங்களினாலும் நடாத்தப்பட்ட சட்டவியலாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டத்தின் பயிற்றுவிப்பாளராக இருந்து இன்றுவரை அடிமட்ட மக்களுக்கு சட்ட விழிப்பணர்வை ஏற்படுத்துகின்ற சந்தர்ப்பங்களில் எனக்குக் கிடைக்கப்பெற்ற அனுபவமும் என்னை இந்தக் கையெழுத்தையிட வைத்தது. இலங்கையின் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் காணப்படுகின்ற இடைவெளிகளினாலும், ஓட்டைகளினாலும் காதி நீதிமன்ற நடவடிக்கைகள் ஒழுங்காக நடைபெறாமையினால்; கண்ணீரும் கம்பலையுமாக பரிதவிக்கின்ற சமூகத்தின் கண்ணீர்க் காவியங்களைக் கண்டும் கேட்டும் நான் பெற்ற வேதனையின் வலி என்னை இக்கையெழுத்தையிடத் தூண்டியது.

இவ்வறிக்கையில் நான் உட்பட A பிரிவினால் கையொப்பமிடப்பட்ட சிபாரிசுகள் எதுவுமே ஷரீஆவிற்கு முரண்பட்டவையோ  அப்பாற்பட்டவையோ அல்ல. ஷரீஆவிற்குட்பட்ட காலத்தின் தேவைக்கேற்ற நிவாரணங்களாகும்.

பல முஸ்லிம் நாடுகளின் சட்டங்களைப் பற்றி நாம் ஆராய்ந்தோம். நாடாளாவிய ரீதியிலும், உலகளாவிய ரீதியிலும் பல முஸ்லிம் அறிஞர்களுடன் கலந்துரையாடினோம். பல இஸ்லாமிய அறிஞர்களின் நூல்களை ஆராய்ந்தோம். அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பத்வா குழுவினருடன் நாம் பல முறை யதார்த்தமான பிரச்சினைகளை முன்வைத்துக் கலந்தாலோசித்துள்ளோம். அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் அலுவலகத்திலேயே எமது பல கூட்டங்கள் நடைபெற்றன என்பதை நான் நன்றியுடன் நினைக்கின்றேன். பல இஸ்லாமிய அறிஞர்களுடனும், உலமாக்களுடனும் ஆலோசனை செய்துள்ளோம். ஜாமியா நளீமியா கலாபீடத்திற்குச் சென்று கலந்துரையாடல்கள் நடாத்தினோம். இதன் பின்னர்தான் நாம் எமது கருத்துக்களைச் சிபாரிசுகளாக முன்வைத்துள்ள போது ஷரீஆவிற்கு முரணான கருத்துக்களை முன்வைத்துள்ளதாக எமது அடிப்படை ஈமானேயே கேள்விக்குட்படுத்திக் குற்றம் சுமத்துவது மிகவும் பாரதூரமான செயலாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

முஸ்லிம் விவாக விவாகரத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றும் போது, அப்பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணும் விடயத்தில் ஒரு குறிப்பிட்ட மத்ஹபுடைய கோட்பாட்டினுள் மாத்திரம் தீர்வுக்கான வழிமுறைகளைத் தேடுவது என்ற மட்டுப்பாட்டை விதிக்காமல் எல்லா மத்ஹபுகளினதும் கருத்துக்களடங்கிய முஸ்லிம் சட்டத்தின் பார்வையில் பரவலான வழிமுறைகளில் பிரச்சினைகளுக்குத் தீர்வை நாடுவதும், அத்தீர்ப்புக்கான வழிகளில் பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கப்படுவதில் கூடியளவு நன்மை பயக்கக்கூடிய வழிவகை எதுவோ அதைக்கடைப்பிடிப்பதற்கு உரிமை வழங்குவதும் எவ்வாறு ஷரீஆவிற்கு முரணாகும்? கட்டாயமாக ஒரு மத்ஹபினால் ஆளப்படுபவர்கள் என்று பிரகடனம் செய்யப்படவே வேண்டும் என்றும் அவ்வாறின்றி அதற்குரிய தேர்வுரிமை வழங்கப்படுவது ஷரீஆவிற்கு முரணானது என்றும் கருதினால் அதனை ஆதரிக்கும் வகையில் இலங்கை மக்கள் பெரும்பான்மையானோர் ஷாபி மத்ஹபினால் ஆளப்படுபவர்களே என்ற கருத்தையும் முன்வைக்கும் போது ஷாபி மத்ஹபைத் தவிர ஏனைய மத்ஹபுகள் ஷரீஆவிற்கு முரணானவையா? என்ற பகுத்தறிவுடன் கூடிய கேள்வி பகுத்தறிவுடைய ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமாக எழும். உண்மையிலேயே அறிக்கையின் சிபாரிசில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அறிவதைத் தவிர்த்து தவறான வழியில் பொருள்கோடல் செய்து ஷரீஆவிற்கு முரணான கருத்து முன்வைத்துள்ளனர் என்று மக்கள் மத்தியில் பிழையான தகவல்களைப் பரப்புவது எந்தவிதத்தில் நியாயமாகும் என்பதனை மக்களே முடிவு செய்ய வேண்டும். சட்டம் மக்களை வழிநடாத்துவதற்கும், மக்களிற்கான கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுக்கவுமே ஆக்கப்பட வேண்டும். அச்சட்டமானது ஷரீஆவிற்கு முரணாக அமையக்கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்துக்கள் கிடையாது. ஆனால், ஒரு மத்ஹபினுள் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுத் தீர்வுகளைத் தேடாமல் ஷரீஆவிற்கு முரணாகாத ஷரீஆவிற்கு உட்பட்ட முஸ்லிம் சட்டத்தினுள் தீர்வுகாண வழிவகுக்க வேண்டுமென்பதில் எந்த இடத்தில் ஷரீஆவிலிருந்து இவ்வுறுப்பினர்கள் விலகியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.

பெண்கள் காதி நீதவான்களாக நியமிக்கப்படலாம் என்ற சிபாரிசு ஷரீஆவிற்கு முரணானது என்பது அடுத்ததொரு வாதமாகும். எமது அறிக்கையில் பெண்கள் காதி நீதவான்களாக நியமிக்கப்படுவது ஷரீஆவிற்கு முரணானதல்ல என்ற விடயத்தை நாம் இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையிலும், ஷரீஆவின் பார்வையிலும் தெளிவாக முன்வைத்துள்ளோம். இதனை அறிக்கையில் பார்க்கலாம். அத்துடன், நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட பல இஸ்லாமிய அறிஞர்கள் பெண்கள் காதி நீதவான்களாக நியமிக்கப்படுவது ஷரீஆவிற்கு முரணான விடயமல்ல என்று காரணகாரியங்களுடன் நிரூபித்துள்ள உண்மை நம் அனைவரும் அறிந்த விடயமே. இதனைக் கருத்திற்கொண்டவாறே இது தொடர்பில் யதார்த்தத்தை ஆராய்வோமானால், பல முஸ்லிம் நாடுகள் ஷரீஆச்சட்டத்தை பின்பற்றுகின்ற முஸ்லிம் நாடுகள் பெண்களைக் காதி நீதவான்களாக நியமித்துள்ளார்கள் எனில் அந்நாடுகள் அனைத்துமே ஷரீஆவிற்கு முரணாகச் செல்கின்ற பாரிய தீமையைச் செய்கின்றனவா என்ற கேள்வி எழுகின்றது. நிச்சயமாக அப்படி இருக்க முடியாது. அது யதார்த்தத்திற்கு முற்றிலும் மாறுபட்ட விடயமாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம் பெற்றோரின் பிள்ளைகளின் பாதுகாப்புரிமை தொடர்பிலான வழக்குகளிற்குரிய நியாயாதிக்கங்கள் காதி நீதிமன்றங்களுக்கு இல்லை. மாவட்ட நீதிமன்றங்களுக்கே உண்டு. மாவட்ட நீதிமன்றங்கள் முஸ்லிம் சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குகின்றன. அம்மாவட்ட நீதிபதி ஒரு பெண்ணாக இருந்தால் அப்பெண் நீதிபதி தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்பு ஷரீஆவிற்கு முரணானது என வாதாடப் போகின்றோமோ? முஸ்லிம் மரணசாசனமில்லா வழியுரிமை தொடர்பிலான வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்குட்பட்டவை. முஸ்லிம் மரணசாசனமில்லா வழியுரிமைச் சட்டத்தைப் பின்பற்றி மாவட்ட நீதிபதியினால் இத்தீர்ப்பு வழங்கப்படுகின்றது.அம்மாவட்ட நீதிபதி ஒரு பெண் நீதிபதியாக இருந்தால் அப்பெண் நீதிபதி தீர்ப்பு வழங்கிய காரணத்தினால் அத்தீர்ப்பு ஷரீஆவிற்கு முரண்பட்டது என நாம் வாதாடப்போகின்றோமா? முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான விடயங்களுக்குரிய நீதிமன்ற நியாயாதிக்கக்கட்டமைப்பு பின்வருமாறு செல்கின்றது, காதி நீதிமன்றம், காதிகள் சபை, மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான மேன்முறையீடுகளின் விசாரணைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்தினாலும் பெண் நீதியரசர்களினால் விசாரணை செய்து தீர்ப்பளிக்கப்படும் போது அது ஷரீஆவிற்கு முரணானது என வாதாடப்போகின்றோமா? முடியாது, அவ்வாறு வாதாட வேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில் அது ஷரீஆவிற்கு முரணானது அல்ல. ஏனெனில், எக்காலத்திற்கும் எச்சந்தர்ப்பத்திற்கும், எச்சூழ்நிலைக்கும் எல்லா மனிதர்களுக்கும் ஏற்ற ஒன்றுதான் ஷரீஆ சட்டம். அதனைத்தவறாகப் பொருள்கோடல் செய்து பாமர மக்களைத் தவறாக வழிநடாத்துவதிலிருந்து நம்மனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா காப்பாற்ற வேண்டும்.

பலதாரமணத்திற்கு இஸ்லாம் அனுமதி அளித்துள்ள போதிலும் ஒருதார மணத்தையே ஆதரித்துள்ளது என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது. தம் மனைவியர் மத்தியில் நீதமாக நடப்பதற்கு ஆற்றல் பெற்ற ஆண்களுக்கு மாத்திரமே இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்துள்ளது. தற்போதுள்ள சட்டத்தில் பலதாரமணம் தொடர்பில் எவ்வித நிபந்தனைகளுமின்றி அனுமதி வழங்கக்கூடிய நெகிழ்வுத்தன்மை காணப்படுவதனால், அந்நெகிழ்வுத்தன்மை துஷ்பிரயோகம் செய்யப்படுவதை காதி நீதிமன்றங்களுக்கும், காதிகள் சபைக்கும் சென்றுபார்த்தால் மாத்திரமே அறியலாமேயொழிய உயர்மட்டமொன்றில் அமர்ந்துகொண்டு பலதாரமணம் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்று சூள் உரைப்பது மிகவும் தவறானதொரு விடயமாகும். மனைவியும், பிள்ளைகளும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பரிதவிக்கும் நிலையில் அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டிய தகப்பனோ, கணவனோ தனது கடமையைச் செய்யத்தவறி அவர்களைக் கைவிட்டு பலதாரமணம் எனும் தனது உரிமையை மாத்திரம் சரியாகப் பிரயோகித்துக் கொண்டு செல்வதனால் குடும்பங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் பரிதாபகரமான நிலையை அடிமட்ட சமூகத்திலிருந்து கண்கூடாக அவதானிக்க வேண்டுமேயொழிய உயர்மட்டத்திலிருந்து கனவு காணக் கூடாது.

பலதாரமணத்தைச் சட்டத்திலிருந்து அகற்றுவதற்காகச் சிபாரிசு முன்வைக்கப்பட்டிருந்தால், ஷரீஆவிற்கு முரணாகச் சமூகத்தினை திசைதிருப்புகிறார்கள் என்று அடித்துக் கூறலாம். ஆமோதிக்கின்றோம். ஆனால்,  மனைவியரிடையே நீதமாக நடப்பதற்கு வேண்டிய எல்லா நிபந்தனைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதா என்பதனை அனைத்து திறத்தவர்களையும் அழைத்து தகுந்த விசாரணைகளைச் செய்வதற்கும் அதன் பின்னர் அனுமதியை வழங்குவதற்கும், அனுமதியை மறுப்பதற்குமான அதிகாரத்தைக் காதி நீதிமன்றத்திற்கு வழங்கி, பலதாரமண உரிமை துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கான சிபாரிசுகளை முன்வைத்தால் அவை ஷரீஆவிற்கு முரணானவையா? சமூகத்தைச் சீர்கேட்டிலிருந்து தடுப்பதற்காக ஷரீஆவிற்கு உட்பட்ட நிபந்தனைகளை உள்ளடக்கிச் சட்டத்தைத் திருத்துவது ஷரீஆவிற்கு முரணானது என்று கோஷமெழுப்பப்பட்டால் எமது சமுதாயத்தை நாம் எந்நிலையை நோக்கி இட்டுச் செல்ல எத்தனிக்கின்றோம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

திருமணம் பதிவு செய்யப்படுவதை வலிதான திருமணத்திற்குரிய ஒரு தேவைப்பாடாக ஆக்கினால் நெறிமுறையற்ற முறையில் பிறந்த பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும். பதிவு செய்யப்படுவதைத் திருமணத்தின் வலிதுடமைக்கு ஏற்புடையதான காரணமாக்கினால் அது ஷரீஆவிற்கு முரணானது என்ற கோஷத்தை எவ்விதக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியவில்லை. நிகாஹ் இன்றிப் பதிவை மாத்திரம் தேவைப்பாடாக்குகின்றோமென்றால் அது ஷரீஆவிற்கு முரணானதுதான். அதில் மறுகருத்து கிடையாது. ஆனால், இங்கு நிகாஹ்வுடன் சேர்த்துப் பதிவையும் கட்டாயமாக்க வேண்டுமென்றே சிபாரிசு செய்யப்படுகின்றது. வாய்மொழி மூலம் கூறப்படுகின்ற ஈஜாப், கபூலை, எழுத்திலும் உறுதிப்படுத்துமாறு கோருவதுதான் பதிவைக் கட்டாயப்படுத்துவதாகும். காணிக் கைமாற்றங்களின் வாக்குறுதிகளுக்கு வாய்மொழியில் நம்பிக்கையில்லாமல் எழுத்து மூலம் பதிவு செய்யவே வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றோம். வெறும் காணிக்கு இந்தப் பாதுகாப்பு என்றால் வாழும் வாழ்க்கைக்கு எந்தளவு பாதுகாப்பு வேண்டும். ஏன் இதனைச் சிந்திக்கத் தவறுகின்றோம். திருமணம் பதிவு செய்யப்படுவதைக் கட்டாயமாக்கினால் நெறிமுறையற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் கொள்ளும் நாம், பதிவின்மையின் காரணமாகத் திருமணமே இல்லையென்று தப்பித்துக்கொள்வதனூடாக பிள்ளைகளின் நெறிமுறைத்தன்மையையே கேள்விக்குட்படுத்துகின்ற சீர்கேட்டை எப்படித் தடுப்பது? சிந்திக்க மாட்டோமா? பதிவின்மையைத் தண்டனைக்குரிய குற்றமாக்கினால் மாத்திரம் போதுமென்றிருந்தால் அத்தண்டனையை யார் பெற்றுக் கொடுப்பது? எப்போது பெற்றுக்கொடுப்பது? குடும்பம் சந்தோசமாக வாழ்கின்ற போது இப்பிரச்சினை எழாது. ஆனால், பிரச்சினை ஒன்று வரும் போதுதான் பதிவு பற்றிய எண்ணம் தோன்றும். அப்போது யார் யாரைக் குற்றம் சுமத்துவது. கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்ற கதை போல்தான் ஆகிவிடும். இந்நிலை சமூகத்தில் தோன்றுவதற்கு இடமளிக்காது தவிர்த்து சமூகத்தைச் சீர்கேட்டிலிருந்து காப்பது எவ்வாறு ஷரீஆவிற்கு முரணாகும்?

வலியின் தேவைப்பாடு தொடர்பிலான A பிரிவின் சிபாரிசு ஷரீஆவிற்கு முரணானது என மார்தட்டுபவர்கள் ஹனபி மத்ஹபின் பிரகாரம் வலியின் தேவைப்பாடு அவசியமில்லை என்று B பிரிவின் அறிக்கையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்ற உண்மையையும் கவனத்தில் எடுக்க வேண்டும். இருந்தபோதிலும் வலியின் தேவைப்பாடு அவசியம் என்ற B பிரிவின் சிபாரிசை ஆதரிப்பவர்கள், ஹனபி மத்ஹப் ஷரீஆவிற்கு முரணானது என்று வாதாடுகின்றார்களா? என்ற கேள்வி பகுத்தறிவுள்ள அனைவருக்கும் நிச்சயாமாக எழும்.

திருமண வயதெல்லையை நிர்ணயிப்பதை எதிர்த்து வாதிடுபவர்கள், தகப்பனையும், ஆண் சகோதரர்களையும் இழந்த நிலையில் உள்ள ஒரு குடும்பத்தில் முதல் பிள்ளைக்குத் திருமணம் செய்து ஒரு ஆணை வீட்டுக்குள் எடுப்பதன் மூலம் ஆண் துணையொன்றைப் பாதுகாப்புக்காகப் பெற்றுக்கொள்வதாகவும், அநாதரவான பிள்ளைகள் பாலியல் வன்முறை போன்ற வன்முறைகளிலிருந்து தடுப்பதற்கு பால்ய திருமணம் வழிகோலும் என்பன போன்ற கருத்துக்களை முன்வைக்கின்றனர். பெண் குழந்தை தனது கணவனின் ஆசாபாசங்களுக்கு ஈடுகொடுக்காமையினால் பல முறைகேடான சம்பவங்கள் நடைபெறுவதை  அடிமட்ட சமூகத்திற்குச் சென்று பார்த்தால் தெரியும். பெண் குழந்தை ஒன்று தான் தனது திருமண வாழ்க்கைக்குத் தயாராகாத நிலையில் திருமண பந்தத்தினுள் நுழைக்கப்பட்டதனால் பொறுமையாக அக்குழந்தையைக் கையாளுவதற்கு பொறுமையில்லாமல் கணவன் கைவிட்டுச் சென்ற நிலையில் பல குழந்தைகள் வாழாவெட்டி என்று பட்டம் சூட்டப்பட்டுப் பரிதவிக்கும் நிலையை மேலேயிருந்து அவதானித்தால் எந்த வகையிலும் புரிவதற்கு வாய்ப்பில்லை. அடிமட்டத்தினுள் ஊடுருவிப் பார்க்க வேண்டும். பாதுகாப்பு என்ற ரீதியில் கிணற்றில் சமூகத்தை தள்ளிவிடக் கூடாது என்ற தலையாய பொறுப்பு எமது சமூகத்தில் உள்ள அனைவருக்கும் இருக்க வேண்டும். குழந்தைகளின் குழந்தை என்ற எண்ணமும் சிந்தனையும், உரிமையும் பறிக்கப்பட்டு அவர்களது கல்விக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களை கஷ்டத்திற்கும் துன்பத்திற்கும் இட்டுச் செல்வது என்ன நியாயம். வெற்றிக்கொடி நாட்டிய பால்ய திருமணங்களின் எண்ணிக்கையை விடத் தோல்வியைத் தழுவியவற்றின் எண்ணிக்கையே அதிகம் என்பது மறுக்கமுடியாத உண்மை. பால்ய திருமணங்கள் சமூகத்தில் அருகிக்கொண்டு வருகின்றது என்ற சிந்தனை உண்மையில் வெறும் மாயையே தவிர வேறில்லை. சமுதாயத்தினுள் ஊடுருவிப்பார்த்தால் உண்மை விளங்கும். பெண்களினதும், குழந்தைகளினதும் உரிமைகளை முதன் முதலில் காப்பாற்றிய மார்க்கம் இஸ்லாம். அதன் கோட்பாட்டை புறக்கணிக்காது காலத்தின் தேவைக்கேற்ற வகையில் சீர்திருத்தங்கள் செய்வது எவ்வாறு அதற்கு முரணாகும்?

ஒரு கணவனின் தீராத கொடுமை தாங்கமுடியாமல் அம்மனைவி கணவனிடமிருந்து விவாகரத்துப் பெறுகையில் கணவனின் அத்தவறை நிரூபிக்கும் பட்சத்தில் அவ்விவாகரத்திற்கு முழுப்பொறுப்புதாரியுமான அக்கணவனிடமிருந்து, எவ்விதக் குற்றமுமிழைக்காத நிலையில் நிர்க்கதிக்குள்ளாக்கப்படுகின்ற அம்மனைவிக்கு நட்டஈடு பெற்றுக் கொடுத்து அம்மனைவியின் எதிர்கால வாழ்க்கைக்கு வழியமைத்துக்கொடுப்பது ஷரீஆவிற்கு முரணானது என்றால் அந்த அபலைப் பெண்ணின் நிலை என்ன? தனது கணவனாக வாழ்ந்த ஒரு ஆணிடமிருந்து, தன் மீது எந்த தவறுமற்ற நிலையில் முழுத்தவறிற்கும் அந்தக் கணவனே பொறுப்புதாரியாக உள்ள நிலையில், திருமண வாழ்க்கை பற்றிய தனது கனவுகளெல்லாம் தொலைந்து எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள அந்த ஏழைப் பெண்ணிற்கு அக்கணவனிடமிருந்து நட்டஈடு பெற்றுக் கொடுப்பது தவறா? வாழ்வதற்கு வழியற்று நிர்க்கதியாக்கப்பட்டுள்ள நிலையில், அந்நிர்க்கதிக்குக் காரணமாக இருந்த அந்தப்பெண்ணின் கணவனிடமிருந்து நட்டஈட்டைப் பெற்றுக்கொடுத்து அம்மனைவியின் எதிர்கால வாழ்க்கையை ஒழுங்கமைத்துக்கொடுப்பது ஷரீஆவிற்கு முரணானதா? நாம் சிந்திக்க வேண்டும்.

காதிநீதிமன்றங்களுக்குச் சட்டத்தரணிகள் தோன்றுவதை அனுமதித்தால் அதனால் பெண்களுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படும் என்றும், பொருளாதார ரீதியில் சட்டத்தரணிகளுக்குப் பணம் செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை மேற்கொள்வார்கள் என்றும், இதனால் தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் பிரிவு 74ஐ அதாவது சட்டத்தரணிகள் காதிநீதிமன்றத்திற்குத் தோன்றுவதை தடுக்கும் சட்டத்தில் எவ்வித மாற்றமும் கொண்டுவரப்படக்கூடாதென B பிரிவினர் தமது சிபாரிசுகளை முன்வைத்துள்ளனர்.

இச்சிபாரிசுகளை ஆதரிக்கும் வகையில் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள விமர்சனங்களில், A பிரிவினர் காதிநீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள் தோன்ற வேண்டும் என்று சிபாரிசு செய்கின்றார்கள் என்றும், ‘சில பெண்கள் தங்களை மறைத்துக்கொண்டு அப்பாவிப் பெண்களைப் பாதையில் இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கின்றார்கள் என்றும், தங்களது எதிர்கால வருமானத்திற்குரிய வழிகளை அமைத்துக் கொள்கின்றார்கள்” என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளனர். காதிநீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள் தோன்றுவதை ஆதரித்து சிபாரிசு செய்த உறுப்பினர்களின் சிபாரிசு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை ஆழமாகத் தெரிந்த பின்னர் தான் இவர்கள் இவ்வாறு விமர்சனம் செய்கிறார்களா? என்பது இங்கு ஒரு கேள்விக்குறியாகும். அக்குழு உறுப்பினர்களின் சிபாரிசு ஆனது “இந்தச் சட்டத்திலோ அல்லது இந்தச்சட்டத்திற்கு ஏற்புடைத்தான அட்டவணையிலோ குறிப்பிட்டு ஏதேனும் மாறுபாடாகக் குறிப்பிடப்படாத வரையில், ஒவ்வொரு திறத்தவரும் காதி நீதிமன்றத்திலோ அல்லது காதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலோ தங்களது வழக்குகளுக்கு தாங்களாகவோ அல்லது தங்களது சட்டப் பிரதிநிதிகளினூடாகவோ ஆஜராகலாம்.” இங்கு சட்டத்தரணிகள் கட்டாயம் காதி நீதிமன்றத்தில் தோன்ற வேண்டுமென்று சிபாரிசு செய்யப்படவில்லை, தேர்வுரிமையே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டின் எல்லாச்சட்டங்களையும் போன்று முஸ்லிம் விவாக விவாகரத்துக்காகவும், 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் நடைமுறையிலுள்ளது. ஏனைய சட்டங்களைப் போல இச்சட்டத்திற்கும் நிலையான சட்டமும் நடைமுறைச்சட்டமும் உள்ளது.

காதிநீதிமன்றத்திலிருந்து செய்யப்படும் மேன்முறையீடு காதிகள் சபை மற்றும் இலங்கையின் பொது நீதிமன்றங்களான மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அதேபோன்று வலியுறுத்தற் கட்டளைகள் நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் அவற்றின் மேன்முறையீடுகள் மேல் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்று இலங்கை நாட்டின் அனைத்து நீதிமன்றங்கள் வரையிலும் இவ்வழக்குகளின் தொடர் கொண்டு செல்லப்படுகின்றன. இவையனைத்திற்கும் முதல்நிலை நீதிமன்றம் காதி நீதிமன்றமே.

“வழக்கு நிகழ்வுகள் தொடர்பான வினாக்கள் முதல்நிலை நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தப்படாவிடின் மேன்முறையீட்டில் முதன்முதலாகக் கேள்விக்குட்படுத்தப்பட முடியாது” என்பது இந்நாட்டின் பொதுவான சட்ட விதி என்பது சட்டம் படித்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆகவே, சட்ட அறிவு எதுவுமேயில்லாத திறத்தவர்கள் மாத்திரம் முதல்நிலை நீதிமன்றமான காதி நீதிமன்றத்தில் தோன்றுகின்ற போது ஏற்படுகின்ற சில தவறுகள் இறுதி வரையில் திருத்தப்பட முடியாத துரதிர்ஷ்ட நிலை உண்டாவதைத் தடுக்கும் முகமாகவே, காதி நீதிமன்றத்திலும் சட்டத்தரணிகள் தோன்றுவதற்குரிய தேர்வுரிமையை சிபாரிசு செய்த உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். முதல்நிலை நீதிமன்றத்தில் (காதி நீதிமன்றத்தில்) அறியாமல் விடப்படுகின்ற தவறுகளினால் மேன்முறையீடுகளில் அநியாயமாகத் தோல்விக்குட்படுகின்ற வழக்குகளின் வரலாறுகள் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பில் காதிகள் சபை முதல் உயர் நீதிமன்றம் வரை வாதாடச் செல்கின்ற சட்டத்தரணிகளுக்கு மாத்திரம் தான் அறியக்கிடைக்கின்ற துரதிர்ஷ்டங்கள்.

மேலும், பண உதவிகள் எனும் போது சட்ட உதவி ஆணைக்குழு நாடாளாவிய ரீதியில் தொழிற்படுகின்றது. இலவசச் சட்ட உதவிகள் வழங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் நாடாளாவிய ரீதியில் காணப்படுகின்றன. அது மாத்திரமல்லாமல் திறத்தவர்களின் வசதிக்கேற்ப தங்களது ஊதியத்தின் அளவுகளிலும் நெகிழ்வுத்தன்மையைக் காட்டுபவர்களாகவும், தேவையேற்படும் போது இலவசமாகவே சேவையாற்றுபவர்களாகவும் பல சட்டத்தரணிகள் உள்ளனர் என்பதனை பலரும் அறியாமல் இருப்பது இச்சமூகத்தின் துரதிர்ஷ்டமே.

தேவையேற்படும் பட்சத்தில், திறத்தவர்களுக்குக் காதி நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடாகத் தோன்றுவதற்குரிய தேர்வுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற சிபாரிசு எவ்வாறு ஷரீஆவிற்கு முரணாகும்.

மக்களுக்கு விடயங்களில் பூரண தெளிவு வழங்கப்பட வேண்டும். பிழையான தகவல்களை வழங்குவதன் மூலமும், விடயங்களைத் திரிபடையச் செய்வதன் மூலமும் சமூகத்தை திசை திருப்பக் கூடாது.

யார் சொல்கின்றார்கள் என்பதை விட எதைச் சொல்கின்றார்கள் என்ற விடயத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எதைச் சொல்கின்றார்கள் என்பதை விட யார் சொல்கின்றார்கள் என்ற விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதனால்தான் சமூகமும் சமூகத்திலுள்ள மக்களும் நிச்சயமற்ற தன்மைக்குட்படுத்தப்படுகின்றார்கள். சட்டம் மக்களை ஒழுங்கமைக்க வேண்டும், சமூகத்தைச் சீரான முறையில் கட்டியெழுப்ப வேண்டும், பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளையும், நிவாரணங்களையும் வழங்கக்கூடியதாக அமைய வேண்டும். அவை ஷரீஆவிற்குட்பட்டதாகவே இருக்க வேண்டுமேயொழிய, தனிப்பட்ட கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் மட்டுப்பட்டதாக அமையக் கூடாது. சட்டத்தினால் ஷரீஆவின் கட்டுப்பாட்டினுள் சமூகத்திற்குச் சீர்திருத்தம் வேண்டுமேயொழிய, தனிப்பட்டவர்களினதும் குழுக்களினதும் கோட்பாடுகளும், கொள்கைகளும், சிந்தனைகளும் ஷரீஆ என்ற பெயரில் சட்டத்திலும் சமூகத்திலும் செல்வாக்குச் செலுத்தக் கூடாது. ஒவ்வொருவரும் தங்களது எல்லாக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கைவிட்டு தங்களது மனச்சாட்சியைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்குப் பொருத்தமான வகையில் சரியாகச் செய்கின்றோமா என்பதற்கு ‘ஆம்’ என்று நியாயமான விடை கிடைத்தால் நாம் வெற்றியாளர்களேயாவோம். சமூகத்தைப் பற்றிச் சிந்திப்போம். அதற்குத் தேவையான விடயங்களை காலத்தின் தேவைக்கேற்ற வகையில் ஷரீஆவிற்கு முரண்படாமல் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு ஒவ்வொருவரும் தைரியமாக முன்வருவோமாக.

சட்டத்தரணி சபானா குல் பேகம்