பட மூலம், Selvaraja Rajasegar

காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென 1994இல் இருந்து பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எந்த ஒரு ஆணைக்குழுவினாலும் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படுவதில்லை. இது இவ்வாறு இருக்க 2015ஆம் ஆண்டில் இல. 30/1 கொண்ட ஜெனிவாவில் இருக்கும் ஜ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கையும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கமைய காணாமல்போனோர்கள் தொடர்பிலான நிரந்தரமான அமைப்பு ஒன்றை நிறுவி அவ்வகையிலானோரைத் தேடிக்கண்டு கொள்வதற்காக OMP நிறுவப்பட்டது. இதற்கான சட்டம் 2016 இல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும் 2018 மே மாதம் மன்னாரில் நடந்த கலந்துரையாடல் ஒன்றைத் தொடர்ந்து இதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பிற்கான ஏற்பாடுகள் காணாமல் போனோரைத் தேடிக்கொண்டிருப்பவரின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடியதாக இருப்பதை ஆராய்வதற்காகவே இவ் கட்டுரையின் நோக்கமாகும்.

2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின் தம்மவர்கள் பலரைக் காணவில்லை என்பது தொடர்பிலும் இந்நிகழ்வுக்குப் பின்னர் முகாம்களில் வாழ்ந்து வந்த பலரும், வீடு திரும்பியவர்கள் பலரும் காணாமல் போயுள்ளார்கள் என்று அவர்களைத் தேடும் முயற்சி தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது. இம்முயற்சிகளின் தீவிரத்தைத் தணிப்பதற்கென 2013 ஆகஸ்ட் மாதத்தில் ‘பரணகம ஆணைக்குழு’ என்று அழைக்கப்படும் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அவ்விசாரணைகளால் எந்தப் பயனும் கிட்டாததால் காணாமல்போனோரைத் தேடும் முயற்சி தொடர்ந்து, தீவிரமடைந்து வந்தது. உறவுகளின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யவென குறித்த OMP அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவ் அமைப்புக்கான சட்ட வரைவு 2016 இல் முன்வைக்கப்பட்டிருந்த பொழுது அதன் ஏற்பாடுகளை மையமாகக் கொண்டு அவ்வமையம் அரசினால் நிமிக்கப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருந்த Consultaion Task Force என்ற மக்கள் கருத்துக்களைத் திரட்டும் செயலணிக்கு காணாமல் போனோர்களின் எதிர்பார்ப்புக்களின் கருத்துக்கள் குறுகிய காலத்தில் தயாரித்து ஒரு மகஜர் (Memorandum ) சமர்ப்பிக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த பல அபிலாசைகளில் ஒரு  சில வருமாறு:

 • பலாத்காரமாக காணாமல் போகச் செய்தலை OMP சட்டம் நிறைவேற்றப்பட முன்னர் அதனை ஒரு குற்றவியல் செயலாக தண்டனைக்கோவையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
 • OMP காலவரையறையற்று காணாமல்போன நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளப்பட கூடியதாக்கப்பட வேண்டும்.
 • முறைப்பாட்டுக் காரர் தாம் விரும்பின் சுயாதீனமாக குறித்த நிகழ்வுகள் தொடர்பில் சட்டத்தினூடாகப் பரிகாரம் பெறும் உரித்து இருத்தல் வேண்டும்.
 • புதைகுழிகள் தொடர்பில் தகவல் இருப்பின் அவை தொடர்பில் புலனாய்வுகள் நடத்தப்படுதல் வேண்டும்.
 • காணாமல்போனோர் சம்பந்தமாக விசாரணை செய்யவென காலத்துக் காலம் நியமிக்கப்பட்டிருந்த ஆணைக்குழுக்களுக்குப் புலனாய்வு செய்வதற்கென வழங்கப்பட்டிருந்த சகல அதிகாரங்களும் பொறிமுறைகளும் அரச அமைப்புக்களிலிருந்து பதிவேடுகளைப்பெற்று பரிசோதனை செய்ய வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களும் OMPக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
 • காணாமல்போனோர் தொடர்பில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த விசாரணைக்குழுக்களிற்கு வழங்கப்பட்ட தகவல்களை OMPயும் ஏற்றுக்கொள்ளச் செய்யப்படுதல் வேண்டும்.
 • OMP யிற்கு வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்கள் மூலம் நியாயம் பெறுவதற்குத் தடை இருக்கலாகாது.
 • OMP யின் புலனாய்வுகளின்போது பயங்கரவாதப் புலனாய்வுத் திணைக்களத்தினையோ (TID) குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினரையோ (CID) பங்கு கொள்ளச் செய்தல் ஆகாது.
 • OMP யின் விசாரணையின் போது பெற்றுக் கொள்ளும் தகவல் யாவற்றையும் நீதித்துறை மூலம் நியாயம் பெற்றுக்கொள்ள ஏதுவாக வழக்கு தொடரும் அதிகாரிகளுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
 • சம்பந்தப்பட்ட காணாமல் போனவர்களைக் கண்டுகொள்ள முடியாதுள்ளது. தொடபிலான அத்தாட்சிப்பத்திரம் ஒன்றினை OMP வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். எனினும், அதனை முறைப்பாட்டுக்காரர் ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாததாக இருத்தல் வேண்டும்.
 • OMP க்கு சாட்சியமளிப்பவர்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை அது செய்தல் வேண்டும்.
 • OMP யின் செயற்பாடுகளிற்கு உதவும் முகமாக ஜ.நா. மனித உரிமை ஆணையாளரின் அனுசரணையுடன் ஆளணியினரையோ, ஆலோசகர்களையோ OMP யின் ஆளணியினருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 • இலங்கையின் பல பகுதிகளிலும் OMP யின் கிளைகள் இருத்தல் வேண்டும். OMPயின் தலைமைக் காரியாலயத்திற்கு சமூகமளிக்கும் முறைப்பாடு செய்பவருக்கு போக்குவரத்து, தங்குமிடத்துக்கான செலவை OMP செலுத்த வேண்டியது அவசியமாகும்.

மேற்கூறியவற்றில் இருந்து காணாமல் போனவர் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் அபிலாசைகள் எந்த அளவிற்கு இருந்ததென்பதை ஓரளவிற்கு கணித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். எனினும், குறித்த சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குள்ளாகிய பொழுது இவ் அபிலாசைகளிற்கு போதிய அளவு கவனம் செலுத்தப்படவில்லை. பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரதிகளில் இருந்த ஏற்பாடுகளுக்கு எதிராக கருத்துக்களைக் கூறியதுடன், சர்வதேச அழுத்தங்களிற்கு இடமளித்து LTTE யினைத் தோற்கடித்த போர்வீரர்களைத் தண்டிப்பதற்காகவே இந்த சட்ட வரைபை முன்வைத்ததாகக் குற்றம்சாட்டினார்கள். அழுத்தங்களுக்கு இசைந்து அரசு OMP யின் விசாரணையினால் இராணுவம் எந்த வகையிலும் பாதிப்புற இடமளிக்காத வகையில் வரைபிரதிக்கு திருத்தங்களை செய்து நிறைவேற்றியது. இதன் விளைவாக OMP என அழைக்கப்படும் இந்தக் காரியாலயம் பாதிக்கப்பட்டவர்களின்  அபிலாசைகளை ஓரளவேனும் நிறைவேற்றக்கூடிய வகையில் அமையாது உள்ளது. இக்கூற்றுக்கு ஏதுவாக சட்டத்தில் என்ன உள்ளது என்பதைப் பார்ப்போம்.

OMP விசாரணைகள் நடாத்துவதற்கான அதிகாரங்கள் பற்றிய விபரங்கள் குறித்த சட்டத்தில் 12ஆம் பிரிவில் உள்ளது. அப்பிரிவினால் வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் காணாமல் போனவர் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் (COI) இருந்தன.

ஆணைக்குழுக்களில் இம்முயற்சிகளில் ஈடுபடுவதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட புலனாய்வுப் பிரிவுகள் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டதாக இருந்தன. இவ்வதிகாரிகளின் பின்புலத்தினையும் கடந்தகால செயற்பாடுகளையும் கவனத்தில் கொண்டே தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். அவர்கள் பொலிஸ் பதிவேடுகள் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருந்தமையினால் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் குறித்த காலத்தில் பயன்படுத்திய பதிவேடுகள் யாவும் உன்னிப்பாகப் பரிசீலனை செய்யப்பட்டன. அதன் பயனாக சம்பந்தப்பட்ட திகதிகளில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியல்களையும் பதிவேடுகளில் உள்ள குறிப்புக்களையும் பார்வையிடுகையில் அதே திகதியில் இருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பை மேற்கொண்டவரின் பதிவேடுகளும் பரீசீலனை செய்யப்பட்டது. அதன்போது தடுத்து வைக்கப்பட்டவர்கள் பட்டியலில் இல்லாத சில நபர்களின் பெயர்கள் உணவு வழங்கும் பொறுப்பில் உள்ளவரின் பட்டியலில் இருந்தமையாலும் அதே நபர்கள் காணாமல் போயிருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தாலும் பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி குறித்த நபர்களின் காணாமல் போனமைக்கு பொறுப்புக் கூற வேண்டும் என COI தீர்மானித்தது.

அதேபோன்று குறித்த சில முறைப்பாட்டுக்காரர்கள், தங்களுடைய பகுதிக்கு இரவில் வந்து பொலிஸ்காரர்கள் தனது மகனையோ கணவனையோ கூட்டிச்சென்றதாகவும் பின்னர் அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறினார்கள். மறு நாள் அப்பகுதி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று விசாரித்த போது தாம் வரவில்லை எனப் பொலிஸார் கூறியுள்ளனர். இது தொடர்பில் ஆணைக்குழு அப் பொலிஸ்நிலைய வாகனப் போக்குவரத்துப் பதிவேட்டினைப் பரீசீலனை செய்த போது குறித்த திகதியில் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு வாகனம் சென்றதாகவும் அவ்வகையில் வாகனத்தில் சென்ற பொலிஸ்நிலைய உத்தியோகஸ்தர் பெயர்களும் வாகன சாரதி தனது பதிவேட்டில் (Running Chart) குறிப்பிட்டு இருந்தமையால் காணாமல்போன சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் பதில் கூற வேண்டும் என COI  தீர்மானித்தது. இதே போன்ற தகவல்கள் அடங்கிய அறிக்கைகள் COI  இனால் எழுதி சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அவ் விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் பிரசுரிக்கப்படாது சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் சுவடிகள் காப்பகங்களில் புழுதி படிந்த நிலையில் தேங்கிக் கிடக்கின்றன. OMP யின் அறிக்கைகளிற்கும் இதே கதி ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.

குறித்த சட்டத்தின 12(i) பிரிவின்படி ஒரு புலன் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது குறித்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கையின் தண்டனைக் கோவையின் கீழான குற்றம் புரியப்பட்டிருப்பதாக தென்படின் அது தொடர்பில் முறைப்பாட்டுக்காரருடன் கலந்துரையாடி அது சம்பந்தமாக வழக்கு தொடுனருக்கு அறிக்கை சமர்ப்பிக்கலாம் என உள்ளது. இவ்வாறே இக்கட்டுரையாளர் பணிபுரிந்த இரண்டு COIக்களின் அறிக்கையில் மொத்தமாக சுமார் 2000 நபர்களிற்கெதிராக காணாமல் போனமைக்கு பொறுப்பு என கூறக்கூடிய நம்பத்தக்க ஆதாரங்கள் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளன. அவ் அறிக்கைகள் அக்காலத்தில் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து சட்டமாதிபரின் அலுவலகத்தின் Missing Person Unit என அழைக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான வழக்குகள் சம்பந்தமான பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு இருந்து மேலும் தகவல்களைப் பெற்றுத்தருமாறு CID பிரிவிற்கு அனுப்பப்பட்டன. இக்கோவைகளிற்கு என்ன நடந்தது என்பது இப்போத வரலாறாக மாறியுள்ளது. OMP யின் விசாரணைகள் கோவைகளிற்கும் இதே கதி நிகழாது என்பதற்கில்லை. ஏனெனில், குறித்த சட்டத்தின் பிரிவு இலக்கம் 13 (2) இற்கு அமைய OMP யினால் விசாரித்து கண்டறியப்படும் விடையங்களை அடிப்படையாகக் கொண்டு எந்த ஒரு குற்றவியல் (Criminal) அல்லது குடியியல் (Civil) பொறுப்பும் சுமத்தப்படக் கூடாது என உள்ளது.

நீதிமன்ற அதிகாரத்தைப் பெற்று சந்தேகிக்கப்படும் புதைகுழிகள் பற்றி ஏதேனும் தெரியவரின் அது தொடர்பில் செயற்படும் குறித்த சட்டத்தின்  பிரிவு இலக்கம் 12(d) க்கு அமைய OMPக்கு வழங்கப்பட்டுள்ள இவ்வகையான ஒரு அதிகாரம் COIக்கு  வழங்கப்பட்டிருக்கவில்லை ஆதலால், அவ்வகையான புதைகுழிகள் பற்றி அவ் ஆணைக்குழுக்களுக்கு கிடைத்த தகவல்கள் குறிப்பிட்டு அவை தொடர்பில் மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாத்திரமே குறிப்பிடப்பட்டன. இவ்அதிகாரம் OMPக்கு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதனைச் செய்யக்கூடும். ஆனால், அதன் பின் எவருடைய எச்சங்களாவது அடையாளங்காணப்படின் அது தொடர்பில் OMP என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெளிவில்லை.

எந்த ஒரு காணாமல்போன நபரேனும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று சந்தேகப்படுமிடத்து அவ்வாறு சந்தேகப்படும் இடத்திற்குச் சென்று பார்வையிடும் அதிகாரம் குறித்த சட்டத்தின் பிரிவு இலக்கம்  12(f) இன் கீழ் OMPயிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் அதிகாரம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் அதன் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வகையில் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட அதே சட்டத்தை OMPயிற்கும் வழங்குவதால் என்ன மாற்றத்தைக் காணப்போகின்றனறோ தெரியாது.

மேற்கூறப்பட்ட சட்டப் பிரிவுகளில் மிகவும் விரக்தி ஏற்படுத்தும் சட்டப்பிரிவு 13 (2) ஆகும். முன்னர் கூறியவாறு  OMP எந்த ஒரு புலனாய்வு மூலமும் கண்டு கொள்ளும் தகவல்கள் அடிப்படையில் எவருக்கெதிராகவும் குற்றவியல் அல்லது பொறுப்புக்கூறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. அவ்வாறாயின் குறித்த ஒரு நபர் தனது மகனையோ கணவனையோ வேறு ஒரு நபரையோ குறித்த ஒரு திகதியில் குறித்த ஒரு இடத்தில் தாமே பொறுப்பளித்ததாகக் கூறும் முறைப்பாட்டுக்காரருக்கு சம்பந்தப்பட்ட நபரை தேடியும் கண்டுகொள்ள முடியவில்லை என்று சொல்லி அம்முறைப்பாட்டிற்கு முற்றுபுள்ளி போட்டுவிட முடியுமா? மேலும், காணாமல்போன நபரை பொறுப்பேற்றவர் தொடர்ந்து பதவிகளில் இருப்பதைத் தெரிந்து அவரது மனம் என்ன பாடுபடும்.  அப்பேற்பட்டவருக்கு OMP குறித்த நபர் காணவில்லை என்று ஒரு அத்தாட்சிப்பத்திரத்தைக் கொடுத்து திருப்திப்படுத்த முடியுமா? அது அவ்வாறு இருக்க, OMP தேடி காண இருக்கும் புதைகுழிகளில் காணாமல் போனவரின் எச்சம் ஏதும் இருப்பின் மேலே சொன்ன பதில்களை அளித்து சும்மா இருந்துவிட முடியுமா? ஆதலால், இவ்வாறான ஏற்பாடுகளால் விரக்தி நிலையில் தற்போது இருக்கும் பாதிப்புற்றோரின் குமுறல்கள் மேலும் அதிகரிக்கக்கூடும். இவ்வகையான சூழ்நிலையில் தொடர்ந்து பலமேடைகளில் OMPயின் செயற்பாடுகளால் எந்த ஒரு இராணுவ உத்தியோகஸ்தருக்கும் பாதிப்பு ஏற்படாது உத்தரவாதம் அளிக்கின்றேன் என திரும்பத்திரும்ப அரசியல்வாதிகள்  கூறி வருவது பாதிப்புற்றோரின் மனநிலைக்கு என்ன வகையிலான கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதை புரியாதவர்களாக உள்ளனர். இவ்வாறு ஒன்றுக்கு ஒன்று முரணான ஏற்பாடுகளைக் கொண்ட இந்த OMP சட்டத்தினாலேயே குற்றம் புரிந்தவர்களைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சியால் பொலிஸாரின் மத்தியிலும் இராணுவத்தின் மத்தியிலும் இருக்கும் நற்பண்பு உள்ளவர்களின் பெயர்களும் மாசுபடுகின்றது என்பதைகூட அவர்கள் புரியாது இருப்பது வியப்புக்குரிய விடயம்.

இச்சட்டத்தின் பிரிவு 13(k) கேலிக்குரியதாக உள்ளது. OMP தனது விசாரணைகளின் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் காணாமல் போகும் சம்பவங்கள் நடைபெறாது இருக்க தேவைப்படும் சிபாரிசுகனை செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர். தாம் பணிபுரிந்த ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் நன்கு கற்றறிந்து நிபுணத்துவம் பெற்ற உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பில் செய்த சிபாரிசுகள் அவ்வறிக்கையில் இருக்கத்தக்கதாக அவற்றுள் எவற்றையேனும் கவனத்தில் கொண்டு செயற்படத் தொடர்ந்து வந்த அரசுகள் தவறின. அப்படி இருக்க இவ் அரசு காணாமல் போனமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கருதின் கடந்த கால ஆணைக்குழுக்களும், ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் அங்கமாகிய UNWGIED இன் சிபாரிசுகளையும்  நடைமுறைப்படுத்தலாம். அதை விடுத்து  OMPயின் சிபாரிசுகள் வரும் வரை காத்திருப்பது இவ்விடயத்தில் அவர்களின் கரிசனையைக் காட்டுகின்றது.

இத்தருணத்தில் OMPயின் சுயாதீனத் தன்மை பற்றி சில வார்த்தைகள் எழுதுவது பொருத்தமென்று கருதுகின்றேன். குறித்த சட்டத்தின் பிரிவு 3(2) க்கு அமைய OMP  தொடர்ந்து  இருக்கும் அமைப்பு எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அச்சட்டத்தின் 6ஆம் பிரிவில் OMPயின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று வருட காலம் இருக்கலாம் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆதலால், அவர்களில் எவரேனும் தொடர்ந்தும் அப்பதவியில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவார்களாயின் அவ்வகையானோர் அரசிற்கு விசுவாசமாக  செயற்பட முற்படுவார்கள். பதிலாக நியமிக்கப்பட்ட 7 நபர்களும் மூன்று வருடத்தின் பின் கால நீடிப்பு வழங்கப்படாது மாற்றம் செய்யப்படுவார்களாயின் புதிய உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்பது எவராலும் எதிர்வு கூறமுடியாமல் இருக்கும். ஆதலால், மூன்று வருட காலத்தில் உறுப்பினர்கள் அனைவரின் காலம் முடிவடைவதற்கு பதிலாக சீட்டிழுப்பின் மூலம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை மூவரின் காலம் முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தால்கூடப் பொருத்தமாக இருந்திருக்கும். இதனை விட OMPயின் சுயாதீனத்திற்கு பங்கம் விழைவிக்கக்கூடிய காரணம் யாதெனில் அவர்களின் செயற்பாடுகளுக்குத் தேவைப்படும் நிதி, திரட்டிய நிதி (Consolidated Fund) இல் இருந்து வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிதி ஜனாதிபதியின் செயலாளரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அதன் விளைவாக தேவைப்படும் போது வழங்கும் நிதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஜனாதிபதி OMPயின் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த முடியும்.

அடுத்து கவனத்தில் கொள்ள வேண்டிய விடையம் யாதெனில், குறித்த சட்டத்தின 5(3) பிரிவிற்கமைய அதன் தவிசாளரே பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருப்பார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது அவ்வாறு இருக்க அவரது அலுவலகத்தில் பின்வரும் மூன்று அலகுகள் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நபர்களைத் தேடி கண்டறியும் அலகு – சாட்சியங்களைப் பாதுகாக்கும் அலகு (முறையே பிரிவுகள் 17(2) உம் 18(2) உம் ) அவற்றிற்கான தலைமை அலுவலகர்களைப் பற்றியும் குறிப்பிடும் பிரிவு 13(h) ன் கீழான தரவுகள் திரட்டும் அலகுக்கான தலைமை அதிகாரி ஒருவரைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. அதே போன்று முக்கிய பொறுப்புக்களை நிறைவேற்றக்கூடிய செயலாளரின் பதவியைப் பற்றியோ கணக்காளர் பற்றியோ சட்டத்தில் குறிப்பிடப்படாமை ஏனோ தெரியவில்லை. குறித்த தகவல் திரட்டும் அலகு OMPக்குக் கிடைக்கும் தகவலுடன் அது போன்ற வேறு அமைப்புக்கள் ஏற்கனவே திரட்டி வைத்திருக்கும் தகவல்களைத் திரட்டும் முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளது. ஆனால், இவ்வகையான தகவல்கள் யாவற்றையும் இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளமையால் அவை யாருக்கு உதவ சேகரிக்கப்படுகின்றது என்பது தெரியவில்லை. இது இவ்வாறு இருக்க தற்போதைய அரசு நிறைவேற்றியிருக்கும் போற்றத்தக்க சட்டமாகிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பிலான 12ஆம் இலக்க சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய OMPயினால் திரட்டப்படும் எந்த ஒரு தகவலையும் எவருக்கேனும் வழங்கப்படக்கூடாது என OMP சட்டத்தின் பிரிவு 15(1) இல் குறிப்பிடப்பட்டிருக்கின்றமையால் குறித்த தகவல் அறியும் உரிமை தொடர்பிலான சட்டத்திற்கமையக் கூட OMPயில் எந்தவொரு தகவலையும் பெற்றுக்கொள்ள முடியாது.

மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களை சீராகவும், சிந்தித்தும் பார்க்குமிடத்து குறித்த OMP சட்டம் பாதிப்புற்றோர்கள் ஆதங்கத்தை தணிப்பதற்காக நிறைவேற்றப்பட்டிருப்பினும் அவர்களின் முறைப்பாட்டோடு தொடர்பான செயல்களில் ஈடுபட்டோரின் பெயர்களைக் கூட வெளிப்படுத்த அனுமதி வழங்காது அவர்களைப் பாதுகாப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட சட்டமாகவே தென்படுகின்றது.

ஐ.நாடுகள் சபையில் UNHRCயினால் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஏனைய விடயங்களுடன் நபர்கள் காணாமல்போனமை தொடர்பிலான சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்று இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்கனவே ஆட்கள் காணமல்போகச் செய்த நபர்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி அறிக்கையிட்டது. அவர்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்ப்பட்டது. அது அவ்வாறு இருக்க OMPயின் சட்டத்தை உன்னிப்பாக பார்க்குமிடத்து அவை எவ்வகையிலும் குறித்த ஐ.நா. சபையின் தீர்மானத்திற்கு ஏற்புடையதாக இல்லை. இத்தறுவாயில் முன்னொரு காலத்தில இலங்கைக்கு அழைக்கப்பட்டிருந்த சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழு 2007இல் செயற்பாடுகளை இடையில் நிறுத்திச் செல்லும் போது சமர்ப்பித்த ஒரு கூற்று ஞாபகம் வருகின்றது. “மனித உரிமைகளை மேம்படுத்துவதிலோ பாதுகாப்பதிலோ அப்போதைய அரசாங்கத்திற்கு ஆர்வமோ திடமான மனநிலையோ இருக்கவில்லை” எனக் கூறப்பட்டது. தற்போதைய அரசாங்கமும் OMP சட்டத்தை நிறைவேற்றிய போது நிபுணர்குழு கூறியவாறான அத்தகைய நிலையில் இருந்ததோ என எண்ணத் தோன்றுகின்றது. இவற்றை எல்லாம் பார்க்குமிடத்து காணாமல்போனோர் தொடர்பில் தற்சமயம் ஆதங்கத்துடன் செயற்பட்டுக்கொண்டு வருபவர்களின் முக்கிய அபிலாசைகளை OMP நிறைவேற்றுமா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டிய விடயமாகும்.

ஆசிரியர் குறிப்பு: கட்டுரையாளர் எம்.சி.எம். இக்பால் முன்னைநாள் காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுக்கள் இரண்டில் செயலாளராக கடமைபுரிந்திருக்கிறார். அவற்றுள் அவர் பெற்ற அனுபவங்களும் கட்டுரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் “The OMP and the Aspirations of Families of the Missing and Disappeared” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கமே மேல் தரப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட கட்டுரைகள்: உறவுகளும் நினைவுகளும்” (ஒலிப்படக்கதை 1, ஒலிப்படக்கதை 2), “365 நாட்களாக உறவுகளை ஏந்தியிருக்கும் கைகள்”