பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte
எட்டாங்கட்டை வாசியான எம் ஜாஃபர் நம்பிக்கையிழந்து போயிருந்தார். “பிரதான சந்தி தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தமது கைகளைக் கட்டிய படி பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்” என அவர் முறைப்பட்டார்.
“கடைகள் எல்லாம் தீப்பற்றி எரிந்து கிட்டத்தட்ட 20 நிமிடங்களின் பின்னர் தாக்குதலினை மேற்கொண்டவர்களை நோக்கி சில முஸ்லிம் பையன்கள் கற்களை எறிந்தனர். அந்த நேரத்தில், “எங்கட ஆட்களைத் தாக்குகிறார்கள். உங்களுடைய ஆயுதங்களையும் கொண்டு இங்கே வாருங்கள்” என இராணுவத்தினர் தமது சகாக்களுக்குக் கூறினார்கள்.”
“அதுவரை அவர்கள் நிலைமையினை வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். இது எங்களுடைய அரசாங்கம் தானா? இது எங்களுடைய நீதித்துறை தானா? 1983 இல் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியும் தானே? அதுதான் இன்றைக்கு எங்களுக்கு நடக்கிறது” என எட்டாங்கட்டையில் வாழும் மற்றொருவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார். அங்கு இருந்து சில யார்கள் தூரத்தில் நெருப்பு கோரமாக எரிந்துகொண்டிருந்தது. [i]
இலங்கையினது அரசக் கட்டமைப்பிலே பொதிந்து போயிருக்கின்ற, சிங்கள பௌத்த சமூகத்தின் குறுக்குவெட்டினை உள்ளடக்கிய, அந்தச் சமூகத்தினைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க அளவானோரினால் ஆதரித்து ஏற்றுக்கொள்ளப்படும் சிங்கள-பௌத்த தேசியவாதமானது மீண்டும் ஒரு முறை தனது கோர முகத்தினை வெளிக்காட்டியுள்ளது. கண்டியில் சிங்கள-பௌத்த சமூகத்தினைச் சேர்ந்த லொறிச் சாரதி ஒருவர் முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்தவர்களினால் தாக்கப்பட்டு மரணித்த சம்பவத்தினை மத்திய மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைக்கான உடனடிச் சூழமைவாக நாம் கருதினாலும் கூட, சிங்கள பௌத்த தேசியவாதத்தின் சமூக, உளவியல், பொருளாதார மற்றும் நிறுவன ரீதியிலான பரிமாணங்களை ஆராயாது முஸ்லிம் மக்கள் இன்று இலங்கையில் எதிர்கொள்ளும் வன்முறையினை நாம் விளங்கிக் கொள்ளவோ அல்லது நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளுக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வுகளை ஏற்படுத்தவோ முடியாது.
நாட்டில் சிங்களவரின் சனத்தொகையினைக் குறைக்கும் நோக்குடன் முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்தவர்களினால் நடாத்தப்படும் ஹோட்டல்களில் பரிமாறப்படும் உணவிலே மகப்பேற்றுத் தன்மையினை இழக்கச் செய்யும் மருந்துகள் கலக்கப்படுவதாக வன்முறையினைத் தூண்டுபவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலே பயத்தினை விதைத்து வருகிறார்கள். மற்றும் சிலர் முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாகப் பலம் மிக்க ஒரு சமூகமாக இருப்பதாக அந்தச் சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்களை மேற்கொள்ளுகின்றனர். வேறு சிலர் நேரடியாகவே முஸ்லிம் மக்கள் இல்லாத ஒரு நாடாக இலங்கை இருப்பதனை தமது விருப்பாக வெளிப்படுத்துகின்றனர். முஸ்லிம் மக்களுக்கு எதிரான சிங்களத் தேசியவாத வெறுப்பின் கருத்தாக்கம் புனைவுகளினையும், பொய்களினையும், முஸ்லிம் மக்களின் பொருளாதார வலுப் பற்றிய அறிவுபூர்வமற்ற பொதுமைப்படுத்தல்களினையும், தம்மிலிருந்து வேறுபட்டோரினைத் தேச அரசிலிருந்து ஒழிக்கவும், வெளியேற்றவும் முற்படுகின்ற ஒரு கலாசார அவாவினையும் தனது அடிப்படைகளாகக் கொண்டிருக்கின்றது.
பல்வேறு தசாப்தங்களாகச் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகளையும், வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் தேசியப் (இனப்) பிரச்சினையினை மையமாகக் கொண்ட ஒரு சிவில் யுத்தத்தினையும், நிலம், இயற்கை வளங்கள், வேலைவாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு மற்றும் அரச அதிகாரத்தினை அனுபவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக இனங்களுக்கு இடையிலே ஏற்பட்ட முறுகல்களையும் கண்ணுற்ற ஒரு நாடு என்ற வகையில், இன மற்றும் மத ரீதியிலான சிறுபான்மை மக்களின் நம்பிக்கையினை வென்றெடுக்கும் நோக்கில், அனைவரினையும் உள்ளடக்கிக் கொள்ளும் ஒரு அமைப்பாக இலங்கை அரசு தன்னை மாற்றியமைத்திருக்க வேண்டும். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக தற்போதைய அரசக் கட்டமைப்பானது நாட்டின் பெரும்பாலான மக்களினால் பின்பற்றப்படும் பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பு ரீதியாக முன்னுரிமை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தென்னிலங்கையிலும், வடக்குக் கிழக்கிலே போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் ஒருவரினை ஒருவர் தற்போது சந்தேகத்துடனும், அச்சத்துடனும், நம்பிக்கையற்ற வகையிலும் நோக்கும் சமூகங்கள் தமக்கு இடையே உரையாடல்களை மேற்கொள்ளக்கூடிய வெளிகளை சமூகத்தின் அடிமட்டங்களிலே (கொழும்பின் சொகுசு மிக்க விடுதிகளில் அல்ல) அரசாங்கம் உருவாக்கிக் கொடுத்திருக்க வேண்டும்.
முஸ்லிம்கள் இன்று எதிர்கொள்ளும் பயங்கரமான சூழலுக்கு அரசினை மாத்திரம் நாம் பொறுப்பாளியாக்க முடியாது. ஏனெனில், எமது சமூக நிறுவனங்களும், சமய நிறுவகங்களும், தொழிற் சங்கங்களும் தமது செயற்பாடுகளினை தாம் தமக்கெனவும், தமது தரப்புக்களுக்கு எனவும் வரையறுத்துக் கொண்ட குறுகிய கலாசார எல்லைகளுக்கு அப்பால் மேற்கொள்ளுவதற்குத் தவறி இருக்கின்றமையும் இனவாதம் இந்த நாட்டிலே தீயாகப் பரவுவதற்குக் காரணமாக அமைகின்றது. கடந்த சில நாட்களாக நாம் எதிர்நோக்கும் நிலவரங்கள் எம்மத்தியிலே சமூக-நிறுவன ரீதியிலான ஒரு பாரிய செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை எமக்குக் காண்பிக்கின்றன. இந்த செயலிழப்புக்கு அரசும் அரசு சாரா சக்திகளும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டி இருக்கிறது.
தங்களுடைய அடையாளங்களுக்கு அப்பால் பிரஜைகளின் மத்தியில் ஒரு பொதுவான உணர்வினைத் தோற்றுவிக்கக் கூடிய அமைப்பாக இருக்கக் கூடிய ஆற்றலினை இலங்கை அரசு அரசியலமைப்பு ரீதியாக இழந்திருக்கிறது. இந்தக் காரணத்தினால் நாட்டின் சிறுபான்மையினரும், சமயப் பல்வகைமை, கலாசாரப் பல்வகைமை போன்றவற்றினை மதிக்கும் மக்களும் தற்போதைய இலங்கை அரசினை நிராகரிக்கவும், அதற்கு எதிராகக் கிளர்ந்தெழவும் எல்லா நியாயப்பாடுகளையும் கொண்டுள்ளனர். ஆனாலும், கத்தோலிக்கத் திருச்சபையின் அதிமேற்றிராணியார், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதானமான கட்சிகள் உள்ளடங்கலான அரசியல் மற்றும் சமூக ரீதியிலான பலம் மிக்க அமைப்புக்கள் பல பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலமைப்பு விதியில் மாற்றம் எதுவும் செய்யாது விடுவதற்குக் கடந்த ஆண்டிலே புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதங்கள் இடம்பெற்ற போது சம்மதம் வெளியிட்டு இருந்தன. சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்கள் இவ்வாறான விட்டுக்கொடுப்பான அரசியல் நிலைப்பாடுகளை எடுத்திருந்தாலும் கூட சிங்கள மேலாண்மைவாதிகள் சிறுபான்மையினரைத் தமது தேசத்தின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சக்திகளாகவே தொடர்ந்தும் நிலைப்படுத்துகிறார்கள். பௌத்த மதத்துக்கு அரசினால் வழங்கப்படும் நிறுவன ரீதியான ஆதரவு மேலாண்மைவாதக் குழுக்கள் தமது வன்முறை மிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலினை வெட்கம், பயம், தயக்கம் எதுவுமற்ற முறையில் முன்னெடுப்பதற்கு ஓர் ஊக்கியாக அமைகிறது. இதுவே சட்டத்தினை அமுல்படுத்தும் அதிகாரிகளும் கட்டமைப்புக்களும் வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்குத் தயக்கம் வெளியிடுவதற்கான பிரதானமான காரணங்களில் ஒன்றாக அமைகிறது.
அண்மையில் இடம்பெற்ற வன்முறையில் பங்குபற்றியோருக்கும், அவர்களுக்கு வலைத்தளங்களின் ஊடாகவும், ஏனைய வழிகளிலும் உற்சாகம் வழங்கியோருக்கும் எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்காமை, நாட்டில் கடந்த காலத்திலே இடம்பெற்ற வன்முறைகளின் சூத்திரதாரிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தாமை, பிக்குமார் உள்ளடங்கலாக வன்முறையில் பங்குபற்றிய கும்பலினை பொதுவெளியில் வைத்து உடனடியாகக் கண்டிக்காது, சிங்கள பௌத்த சிவில் சமூகத்தினைச் சேர்ந்த அமைப்புக்களும், சமய மற்றும் சமூகத் தலைவர்கள் மௌனம் காத்தமை, வன்முறைக் கும்பலின் வெறித்தனமான செயற்பாடுகளுக்கும், அரசின் சித்தாந்தத்துக்கு இடையிலான நெருக்கமான தொடர்பினை வன்முறை தொடர்பான தமது பகுப்பாய்வுகளிலே வெளிக்கொணர்வதற்குத் தென்னிலங்கையின் பிரதான ஊடகங்கள் தயங்குகின்றமை போன்ற அனைத்தும் சிங்கள-பௌத்தப் பெரும்பான்மைவாதத்தின் வெளிப்படையானதும், மறைமுகமானதுமான நிறுவன மற்றும் சமூக ரீதியான வடிவங்களே ஆகும்.
எண்ணிக்கையில் சிறிய அளவிலான சமூகங்களின் மீது தனது வன்முறையினைக் கட்டவிழ்த்து விடுவதற்கு அரசற்ற பெரும்பான்மைச் சமூகங்களினாலும் முடியும். நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலே முஸ்லிம்கள் வன்முறையினை எதிர்கொண்டிருந்த அதே தருணத்தில் வடக்குக் கிழக்கிலே தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு வழங்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் வலம்புரிப் பத்திரிகை முஸ்லிம் மக்களை நிந்திக்கும் வகையிலான ஆசிரியர் தலையங்களை எழுதியது. அதே காலப் பகுதியில் அந்தப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வட மாகாண சபையின் முதலமைச்சரினால் தமிழ் மக்களின் நீதிக்காகப் போராடும் அமைப்பாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் தமிழ்த் தேசியப் பேரவையின் செயற்குழுவிலே ஓர் உறுப்பினராக இணைக்கப்பட்டார். தமிழ்த் தேசிய அரசியலினை முன்னெடுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றவற்றினது உண்ணாட்டிலும் மேலைத் தேய நாடுகளிலும் வாழும் பல ஆதரவாளர்களும், ஈபிடிபி கட்சியின் ஆதரவாளர்களிலே சிலரும் தமது சமூக வலைத்தளப் பக்கங்களினை முஸ்லிம் வெறுப்புக் கருத்துக்களினால் நிரப்பினர். தென்னிலங்கையில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தமிழ் சமூகங்கள் மத்தியில் வேர்விட்டிருக்கும் முஸ்லிம் விரோத மனநிலையினையும் வெளிக்கொண்டுவந்தன.
அரசற்ற சமூகங்களில் இருக்கக் கூடிய பெரும்பான்மைவாதத்தினை நாம் கவனத்தில் எடுக்கையில் விடுதலைப் புலிகள் 1990இல் முஸ்லிம் மக்களினை வடக்கிலிருந்து வெளியேற்றிய நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. புலிகள் அமைப்பு தனியான, இறைமை மிக்க ஒரு தமிழ் அரசினை உருவாக்குவதற்குப் போராடிக் கொண்டிருந்த அதே காலப்பகுதியில் வட மாகாணத்தில் தமது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளில் இருந்தும் முஸ்லிம் மக்களை முழுமையாக வெளியேற்றினார்கள். அரசுருவாக்கத்துக்கு முந்தைய இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை வடக்குக் கிழக்கிலே இன்றும் கூட சில தமிழ்த் தேசியவாத சக்திகளினால் ஒற்றையான தமிழ் அடையாளத்தினை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் சுயநிர்ணய அரசியல் பற்றிய அபாயங்களை எமக்கு உணர்த்தி இருக்க வேண்டும். இலங்கை அரசின் எந்த இன ஒழிப்புத் தன்மைக்கு எதிராக இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் நாம் போராடிக் கொண்டிருக்கிறோமோ, அதே மாதிரியான இன ஒழிப்பினை ஊக்குவிக்கும் கட்டமைப்புக்களையா எமது சுயநிர்ணயப் போராட்டமும் ஏற்படுத்தப் போகிறது என்ற கேள்வி தமிழ்த் தேசியவாதத் தரப்புக்கள் பலவற்றின் முஸ்லிம் விரோதப் போக்கினையும், வடக்குக் கிழக்கின் சமூக உறவுகள், அரசியல் எதிர்காலம் தொடர்பாக அவர்களின் சில பார்வைகளையும் அவதானிக்கும் போது என் மனதில் எழுந்தது.
இனத்துவ ரீதியிலான சமஷ்டியும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கலாக அதிகாரங்களைப் பரவலாக்குதலும் மாத்திரம் இந்தத் தீவிலே சிறுபான்மை மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தப் போவதில்லை. இலங்கையில் இடம்பெற்ற இன மற்றும் சமய ரீதியிலான வன்முறையின் புவியியல் வரைபடம் 1956, 1977, 1983, 2001, 2014 ஆகிய வருடங்களிலே நாட்டிலே ஏற்பட்ட இன வன்முறையின் போது வடக்கு மாகாணத்துக்கு வெளியில் வாழ்ந்த சிறுபான்மை இன மக்களே மிகவும் மோசமான முறையிலே பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதனை எமக்குச் சொல்லுகிறது. மத்திய மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களது சொத்துக்கள், வியாபார நிலையங்கள், வழிபாட்டிடங்கள் மீதும் அண்மையில் சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் அரசினை மறுசீரமைப்பது தொடர்பாக நாம் மேற்கொள்ளும் செயன்முறைகள் வடக்குக் கிழக்குக்கு வெளியில் வாழும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கும், இருப்புக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுவதன் அவசியத்தினை எமக்கு உணர்த்துகின்றன.
நிறுவன ரீதியாக அரசில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களினால் மாத்திரம் இனவாதம் அற்ற ஓர் எதிர்காலத்தினை உருவாக்கிட முடியாது. நீதியினையும் சமத்துவத்தினையும் நோக்கி இயங்கக் கூடிய ஓர் அரசியற் பிரக்ஞை எம் மத்தியில் மலர வேண்டுமாயின், இனங்களுக்கு இடையிலான உறவுகளினை நிலம் மற்றும் அரசு தொடர்பான பன்மைத்துவ ரீதியிலான ஒரு பார்வையின் ஊடாக நாம் மீளச் சிந்திக்க வேண்டும். நாங்கள் பேசும் மொழியல்லாத வேறு மொழிகளைப் பேசுவோருடனும், நாம் வணங்காத கடவுளர் அல்லாத வேறு கடவுளரை வழிபடுவோருடனும் நாம் நிலத்தினையும், அரசினையும் பகிர்ந்துகொள்ளுகிறோம் என்ற சிந்தனையும் மனநிலையும் எம்மத்தியில் உருவாக வேண்டும். எமது கூட்டு (தேசிய) இறைமையானது மற்றைய சமூகங்களைச் சேர்ந்தோரின் பிரசன்னத்தினாலும், அவர்களின் சமூக மற்றும் அரசியல் இருப்புக்கு அவசியமான நிபந்தனைகளினாலும் மட்டுப்படுத்தப்படுகிறது என்பதனை நாம் விளங்கிக்கொள்ளுவது அவசியம். மற்றைய சமூகங்கள் தொடர்பில் எமக்கு இருக்கும் விலத்திக்கொள்ள முடியாத பொறுப்புக்களையும், அவர்களுடன் நாம் தவிர்க்க முடியாதபடி பிணைக்கப்பட்டிருப்பதனையும் விளக்கும் வகையிலே புரட்சிகரமான சுதந்திரமின்மை (radical unfreedom) பற்றிய ஒரு கருத்தியல், விடுதலையினை உருவாக்கக் கூடிய சமூக மற்றும் அரசியல் மாற்றங்களைக் கொண்டு வரும் நோக்கில் நாம் மேற்கொள்ளும் உரையாடல்களுக்கும் செயற்பாடுகளுக்கும் ஓர் உந்துசக்தியாக அமைய வேண்டும். ஒரு குறித்த அரசின் கீழே நாம் எண்ணிக்கையில் பெரும்பான்மையான சமூகமாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, கூடி வாழ்வதற்கும், பன்மைத்துவத்துக்கும் அவசியமான இந்த அடிப்படைகளில் இருந்து நாம் விலத்திச் செல்வது இன அழிப்புத் தன்மையானது என்பதனை எமது நினைவிலே நிறுத்துதல் வேண்டும்.
முஸ்லிம் மக்களுக்கு எதிரான அண்மைய வன்முறை குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் நாம் உரையாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், துணிச்சலும், பரந்த மனப்பான்மையும் உடைய பௌத்தர்கள் பலர் தமது வீடுகளை விட்டு வெளியேறித் தமது கிராமங்களிலே வாழும் முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருந்தமை தொடர்பான செய்திகள் மத்திய மாகாணத்தில் இருந்து எம்மை வந்தடைந்தவாறு இருக்கின்றன. இனவாத வன்முறையாளர்களிடம் இருந்து முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும்படி கெலிஓயாப் பிரதேசத்தில் இருக்கும் பௌத்த விகாரை ஒன்று ஒலி பெருக்கி வாயிலாக அந்தப் பிரதேசத்தில் வாழும் பௌத்தர்களை நோக்கி அறிவித்தல் விடுத்திருந்தது. பௌத்தர் அல்லாத மக்கள் அனுபவிக்கும் இன்னல்களினை விளங்கிக் கொள்ளக் கூடிய பௌத்த விகாரைகள் இந்த நாட்டுக்கு அதிக எண்ணிக்கையிலே தேவைப்படுகின்றன. அண்மைய நெருக்கடியின் போது முஸ்லிம் மக்களுக்கு அமைதியை விரும்பும் பௌத்தர்களால் அளிக்கப்பட்ட ஒத்துழைப்பு எதிர்காலத்தில் இனவாத வன்முறை நாட்டிலே இடம்பெற முடியாத வகையில் அரசிலும், சமூகத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆழமான சீர்திருத்தங்களுக்கான ஆதரவாக மாற வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறான ஒரு மாற்றத்திலேயே இலங்கைத் தீவில் இனவாதமற்ற ஓர் எதிர்காலத்தின் உருவாக்கம் தங்கியுள்ளது.
மகேந்திரன் திருவரங்கன்
(கொழும்பு ரெலிகிராஃபில் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி வெளியாகிய Towards a Non-Racist Future என்ற கட்டுரையின் தமிழாக்கம்)
மகேந்திரன் திருவரங்கன் இலங்கையிலே பொருளாதாரத்தினை ஜனநாயகமயமாக்குவதற்கான கூட்டு என்ற அமைப்பில் உறுப்பினராகவும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.
[i] http://www.ft.lk/news/Fresh-wave-of-violence-erupts-in-Kandy-despite-curfew-and-emergency/56-650819
ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, “வெறுப்பினை விதைத்தல்”