பட மூலம், Selvaraja Rajasegar

முழுநாடும் இன்னுமொரு குட்டித் தேர்தலுக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் மலையக மக்களின் வாழ்வில் மாற்றங்களுக்கு வழி வகுக்குமா? அல்லது தேர்தல் கண் துடைப்பா? என்று சிந்தித்துப் பார்த்தல் நலமானது.

மலையக மக்களின் அரசியல் கௌரவம் என்பது அவர்களால் உருவாக்கி 200 வருட காலம் எட்டாவது பரம்பரையாக வாழ்ந்து வரும் நிலத்தோடு தொடர்புடையது. இதுவரை காலமும் இம்மக்கள் வாக்களித்த கட்சிகள் அத்தகைய கௌரவத்துடனான வாழ்வு கலாச்சாரத்திற்கு அடித்தளமிட்டுள்ளனவா? என்பதையும் சிந்தித்தல் நலம்.

மலைய மக்களின் வரலாற்றைப் பொறுத்தவரையில் 1927ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு சர்வஜன வாக்குரிமை தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பித்தபோது டி.எஸ். சேனநாயக்க, எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, கண்ணங்கர போன்றவர்கள் மலையகத் தமிழர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக்கூடாது என பலமான எதிர்த்தனர். அது மட்டுமல்ல மலையத் தொழிலாளர் வர்க்கத்திற்கு வாக்குரிமை கொடுத்தால் “இலங்கையில் நிரந்தர குடிகளை மூழ்கடித்து விடுவார்கள். இவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கு எதிராக குரல் கொடுக்காதவர்கள் துரோகிகளாவர்” என பச்சை இனவாதத்தைக் கக்கினர்.

இதற்குப் பதிலளித்த பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள், “2,500 ஆண்டுகளுக்கு முன்னர் காற்றின் வீச்சினால் தற்செயலாக இலங்கை வந்தடைந்த சிங்கள் மக்கள் எப்படி தோட்டத் தொழிலாளர்களைப் பார்த்து இந்தியனே வெளியேறு” எனக் கூற முடியும் (சட்டமன்ற பதிவேடு இல 3 – 1928) என தம் கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.

இதே பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள், பெண்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வாக்குரிமை கொடுக்கவேண்டும் என டொனமூர் ஆணைக்குழு சிபாரிசு செய்தபோது அதற்கு எதிராக வாதிட்டார். ஆனால், சிங்களத் தலைவர்களின் இனவாத கருத்தியலை குறுகிய காலத்திலேயே நன்குணர்ந்து கொண்டதால் தமது கருத்தியலை மாற்றி மலையக மக்களுக்கு ஆதரவாக தமது கருத்தியலை பதிவு செய்துள்ளார் என்பதையும் பதிவு செய்தல்வேண்டும்.

இதே காலப் பகுதியில் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான குணசிங்க, “இந்தியர்கள் சிங்களத் தொழிலாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் என சில செல்வந்தர்கள் பேசுகின்றனர். நமது தொழிலாளர்கள் துன்பமும், தொல்லையும் உற்றபோது மனசாட்சியும் நாட்டுப் பற்றும் உடைய இந்த செல்வந்தர் என்ன செய்தனர்? தமது நாட்டு ஏழை மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக ஏழைக் கிராமத்தவர்களை அவர்கள் சிறு துண்டு நிலத்திலிருந்து விரட்டியடிப்பதில் தமது சக்தியை செலவழித்தனர். இப்போது இவர்களுக்கு நாட்டுப் பற்று வளர்ந்துள்ளது. இந்த அக்கரைக்கு காரணமென்ன? ஏழைக்கு கொடுக்கப்பட்ட வாக்குரிமையே” என்றார். ஆனால், இதே குணசிங்க 1930 ஆண்டில் கொழும்பில் நடந்த புத்தாண்டு நிகழ்வொன்றில் சிங்களவர்கள் அனைவரும் ஒரு கொடியின் கீழ அணித்திரள வேண்டும் என இனவாதிகளில் ஒருவராகத் தம்மை அடையாளப்படுத்தி தமது நாட்டுப் பற்றினை வெளிப்படுத்தினார்.

மலையக மக்கள் அரசியல் ரீதியாக இந்நாட்டில் கால் ஊன்றக் கூடாது. நாட்டின் அபிவிருத்திக்கு உடல் உழைப்பை பெற்று அவர்களை வெறுஞ் சக்கைகளாக வைத்திருக்க வேண்டுமென்பதே பெரும்பாலான ஆட்சியாளர்களின் இனவாத செயற் திட்டமாகும்.

இதன் தொடர்ச்சியாகவே 1948ஆம் ஆண்டு சுதந்திர இலங்கையை தமதாக்கிய மேட்டுக் குடியினர் அரசை சிங்களமயமாக்கி முதலாவது நாடாளுமன்ற அமர்விலேயே மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்து அரசியல் அநாதைகளாக்கினர்.

1977ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிராகவும், மலையக மக்களுக்கு எதிராகவும் இன அழிப்பு கட்டவிழ்த்து விட்டபோது இந்திய சார்புடைய மலையக அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டோரும் இந்தியாவிற்கே திரும்பிவிட வேண்டும் எனும் கருத்திலை மலையகமெங்கும் முனனெடுத்தனர். அதேவேளை, வவுனியாவைத் தளமாக கொண்டு இயங்கிய காந்திய இயக்கம் வட்டுக்கோட்டை தமிழ் ஈழ பிரேரணையை முன்வைத்ததைத் தொடர்ந்து அதனைப் பாதுகாக்கும் முகமாக இன அழிவிற்கு முகம்கொடுக்கின்ற மலையக மக்கள் வடக்கு வன்னியிலே குடியேறி தமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனும் கருத்தாடலை மலையகமெங்கும் தொடர்ந்ததோடு மக்களை குடும்பங்களாக அழைத்துச் சென்று வட்டுக் கோட்டை தீர்மானத்தின் தனிநாட்டு எல்லைகளில் குடியேற்றக் கிராமங்களை உருவாக்கி குடியேற்றங்களை உருவாக்கினர்.

இதே காலப் பகுதியில் மலையகத்தில் எழுச்சிக்கொண்ட இளைஞர் குழு மலையகத்தை நாமே உருவாக்கினோம், இந்நிலத்திற்கு நாமே உரிமையாளர்கள், மலை மண்ணே எமது தாயகம், மலையகமே எமது தேசியம் எனும் உரிமைக் குரலை உயர்த்தி மக்களின் இந்தியா செல்லும் நோக்கத்தையும், வன்னிக்குச் சென்று குடியேறும் செயற்பாட்டையும் தடுத்து நிறுத்தினர் (இதில் முக்கிய பங்கு மலையக மக்கள் முன்னனி முன்னால் உறுப்பினர்களுக்கு உண்டு).

இத்தகைய அரசியல் கௌரவத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கு மலையகத்தில் பெரும் தொழிற்சங்கமாக செயற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கவில்லை. காரணம் அவர்களின் இந்திய சார்பு நிலையும், முதலாளித்துவ சிந்தனையுமாகும். அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்றுக்கொடுத்து தமது இருப்பையும் கௌரவத்தையும் பாதுகாத்துக் கொண்டார்களே தவிர மலையக மக்களின் கௌரவத்துடனான அரசியலை தக்கவைப்பதற்கு செயற்பட தவறிவிட்டனர்.

இன்றும் மலையக தேசியமே தமது உயிர்நாடி என தமிழ் முற்போக்கு கூட்டணி கொள்கை பிரகடனம் செய்தாலும், மலையகத் தேசியத்தை காப்போம் என ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரகடனம் செய்தாலும் அவை எல்லாவற்றையும் காற்றிலே பறக்கவிட்டு சலுகை அரசியலை தக்கவைப்பதற்காக முதலாளித்துவ கட்சிகளோடு கைகோர்த்து நிற்கின்றனர்.

தற்போது நடைபெறப் போகும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பெரும்பான்மை கட்சிகள் அனைத்தும் அரசியல் பேசிக் கொண்டிருக்கின்றனர். கூட்டு எதிர்கட்சியினர், ஆட்சியைப் பிடிப்போம், நாட்டைக்காப்போம் என முழங்க ஆளுங்கட்சியினர், கள்வர்களைப் பிடிப்போம், நாட்டை பிரிக்க மாட்டோம் எனக் கூறுகின்றனர்.

வடக்கின் கட்சிகள் இனப் பிரச்சினைக்கான இடைக்கால அறிக்கையை முறியடிப்போம், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுப்போம் என கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஆனால், மலையகக் கட்சிகள், முன்னெடுக்கும் அரசியல் திட்டங்கள் தொடர்பாக எத்தகைய கருத்துக்களையும் முன் வைக்கவில்லை. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடந்து உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டாலும் அவர்களால் முழுமையான அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாத நிலையே தொடர்கின்றது.

பெருந்தோட்டங்கள் அரசாங்கத்திற்கு சொந்தமாக இருந்தாலும் அதனுடைய இயக்கம் முதலாளித்துவ கம்பனிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்கு உரிமையற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். வீட்டுக்கான வரியோ, நிலவரியோ மக்களிடம் அறவிடப்படுவதில்லை. அங்குள்ள பாதைகளும் உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளுக்கு உட்பட்டதாகவும் அமையவில்லை. பொதுவாக மக்களும் பெருந்தோட்டங்களும் உள்ளூராட்சி சபைகளின் சட்டங்களுக்குள் உள்வாங்கபடாத நிலையில்தான் மலையக மக்கள் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் வாக்களிக்கப் போகின்றார்கள்.

இவ்வருடம் பெருந்தோட்டக் கம்பனிகளின் முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்குமிடையில் செய்து கொள்ளப்படவிருக்கும் கூட்டு ஒப்பந்தம் மலையக தொழிலாளர் வர்க்கத்தை அவர்கள் உருவாக்கி 200 வருட காலமாக பாதுகாத்து வரும் மண்ணிலேயே நில உரிமையற்ற அடிமை தொழிலாளர்களாக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனை தகர்ப்பதற்கு எத்தகைய செயற்பாட்டையும் மலையக கட்சிகள் எவையும் மக்கள் முன்வைக்காமை பல கேள்விகளை எழுப்புகின்றது.

மலையக மக்கள் பல தேர்தல்களில் வாக்களித்திருந்தாலும், வாக்குரிமையின் உண்மையான அரசியல் கௌரவத்தை அடைய முடியாத அளவிற்கு தூரமாகவே வைக்கப்பட்டுள்ளனர். இதனை ஜனநாயக தோல்வி என்றே குறிப்பிடலாம்.

அருட்தந்தை. மா சத்திவேல்

 


ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரைகள், “ராமசாமியையும் ராமாயியைும் ஏன் அழைக்கவில்லை?”, “150 வருட பூர்த்தி: உரிமைகளைப் பெறுவதில் அந்நியப்படுத்தப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள்”