வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக வெட்டப்பட்ட மரத்தின் கீழ் ‘மர நடுகை மாதம்’ என்ற தொனிப்பொருளில் ஒட்டப்பட்டிருந்த பதாகையை பேஸ்புக்கில் பதிவு செய்தமைக்காகவும், அந்தப் பதிவை பகிர்ந்தமைக்காகவும் இரு இளைஞர்கள் நெடுங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தனர்.

விசாரணை முடிவில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இரு இளைஞர்களிடமும் தாங்கள் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்டு சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்திடுமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டிருந்தனர்.

பேஸ்புக்கில் பதிவுசெய்யும் முன்னர் பலரது ஆலோசனை பெறவேண்டும் என்றும் அரச கட்டடத்தை படம் எடுக்கமுடியாது, அப்படி எடுத்தால் அது குற்றமாகும் என்றும், நீதிமன்றம் செல்ல நேரிட்டால் அரச தொழிலை இழக்கவேண்டி ஏற்படும் என்றும் பொலிஸாரால் இளைஞர்கள் இருவருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே வடக்கில் பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடையூறாக கண்காணிப்பு நடவடிக்கைகளை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் செவ்வனே செய்துவருகின்ற நிலையில், ஜனநாயகத்துக்கு விரோதமில்லாத பதிவொன்றை சமூக வலைதளத்தில் பதிவுசெய்தமைக்காக இளைஞர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டிருப்பது நல்லாட்சியில் நிலவுவதாகக் கூறிக்கொள்ளும் பேச்சுச் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.

ஆகவே, ‘மாற்றம்’, கிரவுண்விவ்ஸ் (ஆங்கிலம்) மற்றும் விகல்ப (சிங்களம்) இணையதளங்களுடன் இணைந்து கொழும்பில் உள்ள அரச கட்டடங்களைப் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடத் தீர்மானித்தது. சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதற்கான உரிமை குடிமக்களுக்கு உண்டு என்பதை வலியுறுத்தியுமே இந்தச் செயற்பாட்டை ‘மாற்றம்’ மேற்கொண்டிருந்தது. அவற்றைக் கீழே காணலாம்.

Groundviews

Vikalpa

இந்தச் சம்பவம் தொடர்பாக எமது சகோதர தளமான விகல்ப, தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திடம் தகவல் கோரியிருக்கிறது. எந்தச் சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களைப் படம் பிடிக்க முடியாது என தகவல் கோரியிருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை பிரதேச செயலகத்திடமிருந்து பதில் கிடைத்திருக்கவில்லை.

தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை புகைப்படம் எடுப்பது குற்றமாகும் என  பாதுகாப்பு தொடர்பான சட்ட ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில் வவுனியா வடக்கு பிரதேச செயலக சம்பவத்துக்கும் இதே விடயம் பொருந்துமாக இருந்தால் ‘விகல்ப’வின் தகவல் கோரிக்கைக்கு பதில் வழங்குவதில் சிரமம் இருக்காது. அப்படி இல்லையென்றாலும் பதில் வழங்கித்தான் ஆகவேண்டும்.

#justaphotolka என்ற ஹேஷ் டெக்கைப் பயன்படுத்தி கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் வவுனியா வடக்கு பிரதேச செயலயகத்தின் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.