பட மூலம், கட்டுரையாளர்
“மூன்றாம் கட்டமாக 111 ஏக்கர் காணியை விடுவிக்க இக்காணிக்குள் உள்ள இராணுவத்தினரின் பாதுகாப்பு முகாம்களை அகற்றி மாற்றிடத்தில் அமைத்திட 148 மில்லியன் ரூபா தேவை என்பதை அறியத்தந்ததன் நிமித்தம் இத்தொகையை அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் பெற்றுத்தர நான் இணக்கம் தெரிவித்திருந்தேன். இதன்படி 148 மில்லியன் ரூபா இராணுவத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி இத்தொகை வழங்கப்பட்டதற்கு இணங்க 111 ஏக்கர் காணியை பொதுமக்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் வழங்குவதற்கான நடைமுறை வேலைத்திட்டங்களை இராணுவத் தரப்பு மேற்கொண்டுள்ளது”
இவ்வாறு கடந்த நவம்பர் 3ஆம் திகதி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.
இன்று டிசம்பர் 12ஆம் திகதி.
கேப்பாபிலவு மக்களின் தொடர் போராட்டம் 250 தினங்களையும் தாண்டி மக்களால் நடத்தப்பட்டுவருகிறது.
தங்களுடைய பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தொடர் போராட்டத்தை கேப்பாபிலவு இராணுவ முகாமிற்கு முன்பாக மக்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.
மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு தலையிடுமாறு கோரி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் 2017ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஜனாதிபதிக்குக் கடிதங்கள் அனுப்பியிருந்தார். சாதகமான நடவடிக்கை எடுக்கப்படாததால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இது விடயமாக ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார்கள். இதன் பிறகும் காணிகள் விடுவிக்கப்படாததால் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் இரா. சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
“பல பரம்பரைகளாக தமது மூதாதையரான தமிழ்ப் பிரஜைகளுக்குச் சொந்தமாக இருந்து வந்த இந்தத் தனியார் காணிகளில் இம்மக்கள் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளனர். இந்தக் காணிகளில்தான் அவர்களுடைய மூதாதையர்கள் பரம்பரையாக வாழ்ந்து, தமது சமூக, சமய, தொழில் மற்றும் வதிவிட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தப் பிரஜைகள் வேறு மாற்றுக் காணிகளைப் பெறுவதற்கோ அல்லது நட்ட ஈட்டைப் பெறுவதற்கோ விருப்பமுடையவர்களாக இல்லை. இக்காணிகளில் அவர்களுக்குரிய உரிமை மிக வலுவானது. அதனால் எத்தகைய மாற்றீடுகளும் அவர்களுக்குத் திருப்தியளிக்காது. இந்தப் பிரஜைகளின் விருப்பங்கள் தட்டிக்கழிக்கப்படாமல் மதிக்கப்பட வேண்டுமென்பதை நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். தமக்குரிய இக் காணிகளை மீளப் பெறுவதற்காக அவர்கள் அதிக துன்பங்களை அனுபவித்துள்ளார்கள் என்பதால் அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படக்கூடாது.”
இந்தக் கடிதத்திற்கும் சாதகமான பதில் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை.
மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து அங்கு முகாம்களை அமைத்துவிட்டு இன்று பணம் தந்தால்தான் அங்கிருந்து போவேன் என இவ்வளவு காலமும் கூறிவந்த இராணுவத்துக்கு பணமும் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். இது எந்த ஊர் நியாயம் என நம் மனதில் எழுந்தாலும் பணம் வழங்கிய பிறகும் இன்னும் காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பது போராடிவரும் மக்களை நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் வீதியில் தங்கவைக்க திட்டமிட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தங்களுடைய பூர்வீகக் காணிகளுக்குள் கால்பதிக்காமல் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என மக்கள் இரவு பகலாக இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் இன்னல்களடங்கிய குரல் பதிவைக் கீழே காணலாம்.