பட மூலம், 7iber
கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் இலங்கைக்குள் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கு பிரவேசிக்க முடியாமல் முடக்கப்பட்டிருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே. இலங்கையின் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு லங்கா ஈ நியூஸினை தடைசெய்யுமாறு இணையசேவை வழங்குநர்களிற்கு அறிவுறுத்தியதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை செய்தியொன்றையும் அன்று வெளியிட்டிருந்தது.
அதன் படி, தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி, லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் முடக்கப்பட்டதா? என்ன காரணத்திற்காக அது முடக்கப்பட்டது என ‘மாற்றம்’ ஆணைக்குழுவிடம் கடந்த மாதம் (நவம்பர்) 13ஆம் திகதி தகவல் கோரியிருந்தது (தகவல் கோரி விண்ணப்பித்தபோது மொழிப் பிரச்சினையை தகவல் கோருனர் எதிர்கொண்டிருந்தார்). 15 தினங்களுக்குப் பின்னர் இன்று ஆணைக்குழுவினால் பதில் வழங்கப்பட்டிருக்கிறது.
தங்களால் கோரப்பட்ட தகவல்கள் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால் அத்தகவல்களை வழங்குவதற்கு இயலாது என இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பதில் வழங்கியிருக்கிறது.
“உங்களுடைய தகவல் விண்ணப்பப்படிவத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது தகவல் கோரலுக்கு ஏற்ப கோரப்பட்டுள்ள தகவல்கள் 5 (1) (அ) (i) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப அத்தகவல்களை வெளிப்படுத்தல் அரச பாதுகாப்பிற்கு அல்லது தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் காரணத்தின் படி அத்தகவல்களை வழங்குவதற்கு இயலாது என்பதை அறிவித்துக் கொள்கின்றேன்.”
அதேவேளை, செய்தி இணையத்தளங்கள் முடக்கத்துடன் தொடர்பாக ‘மாற்றம்’ தகவல் கோரிய ஏனைய நான்கு கேள்விகளுக்கும், தங்களுடைய பொறுப்பில் தகவல்கள் இல்லை என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பதில் வழங்கியிருக்கிறது.
செய்தி இணையத்தளம் ஒன்று முடக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியிடுவது எந்த வகையில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்?
ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் என்ற வகையில் லங்கா ஈ நியூஸ் முடக்கப்பட்டதை நியாயப்படுத்தி கருத்துத் தெரிவித்திருந்தார். அதன் செயற்பாடுகள் தன்னை பொறுத்தவரை சட்டவிரோதமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என இலங்கையின் பிரதான ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
ஓபன் ஒப்சவேர்ட்டரி நெட்வேர்க் இன்டபரன்ஸினால் (Open Observatory of Network Interference) நடத்தப்படும் சுயாதீன ஒன்லைன் தணிக்கை சேவையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத நெட்வேர்க் மதிப்பீடுகளின் போது லங்கா ஈ நியூஸ் தடைசெய்யப்பட்டுள்ளமை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உறுதிப்படுத்தியிருந்தது.
இந்த நடவடிக்கை ஜனாதிபதியின் உத்தரவினால் இடம்பெற்றிருந்தாலும் அல்லது இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், லங்கா ஈ நியூஸினை முடக்கும் நடவடிக்கைகளின் போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதையும் இது முற்றுமுழுதாக நீதித்துறையின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கை என்பதையும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியிருந்தது.
சமூக ஊடகங்களில், இணையத்தளங்களில் ஜனாதிபதியை விமர்சிக்கும் விடயங்களைப் பதிவு செய்பவர்களை அல்லது அவர்களுக்கு எதிராக தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பதிவு செய்பவர்களை ஜனாதிபதி கைதுசெய்யவேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்த பின்னர் லங்கா ஈ நியூஸ் முடக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயமாக உள்ளது.
இணையத்தளங்களை முடக்கும் நல்லாட்சி எனக்கூறிக்கொள்ளும் நடப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைகள், மாற்றுக் கருத்துக்களையும் அதிருப்தியையும், உண்மைகள் வெளிவருவதையும், சகித்துக்கொள்ள முடியாத, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்த தந்திரோபாயங்களை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக ஊடகச் செயற்பாட்டாளர்கள் கவலை வௌியிட்டுள்ளார்கள்.