பட மூலம், Constitutionnet

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் நிறுவப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை மீதான விவாதம் தற்போது சூடுபிடித்துவருகிறது. அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற விடயங்கள் அனைத்தும் யோசனைகள் என்ற போதிலும் இதுவே இறுதி அறிக்கை என்ற ரீதியில் அடிப்படைவாதிகளும் மஹிந்த ராஜபக்‌ஷ கூட்டணியினரும் கூச்சலிட்டு வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசியலமைப்பை ஒழிக்கவேண்டும் எனப் போராடியவர்கள் தற்போது அதுவே இந்த நாட்டுக்குப் பொருத்தமானது, புதிதாத ஒன்றும் அவசியமில்லை என்று கூறிவருகிறார்கள். ராஜபக்‌ஷ கூட்டணியில் உள்ள இராணுவத் தளபதிகளுள் ஒருவரான கமல் குணரத்ன, புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவோர் துரோகிகள், அவர்கள் கொல்லப்படவேண்டியவர்கள் என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கின்றார்.

இந்த நிலையில், இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரதானமான விடயங்களை வீடியோ உதவியுடனும், கேள்வி பதில் வடிவிலும் உங்கள் முன் வைக்க விரும்புகிறோம்.

கேள்வி: இலங்கைக்கான ஒரு அரசியலமைப்பினை வரைவதற்கான செயன்முறையிலே இதுவரையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளச் செயன்முறைகள் யாவை?

பதில்: இலங்கை நாடாளுமன்றமானது 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி ஒரு தீர்மானமொன்றினை நிறைவேற்றியதன் மூலமாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடக்கப்படுகின்றதான அரசியலமைப்புச் சபை என்ற ஒரு குழுவினை உருவாக்கியது.  இத் தீர்மானமானது அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்பிற்கான ஒரு வரைவுப் பிரேரணையினை தயாரிப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு அரசியலமைப்புச் சபையானது சில பிரதானமான விடயங்களை பரிசீலனை செய்வதற்காக வழிகாட்டல் குழுவினையும், அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை மற்றும் மத்திய – மாகாண அரசாங்கங்களுக்கிடையிலான உறவு ஆகிய ஆறு விடயங்களைப் பரிசீலனை செய்வதற்காக ஆறு உப குழுக்களையும் நியமித்தது. இக்குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

இச்செயன்முறைக்குத் தேவையான மேலதிக உதவிகளைச் செய்வதற்காக, அமைச்சரவையின் அமைச்சர்கள் பல்வேறுபட்ட கல்வியியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் பெயர் குறிக்கப்பட்ட பொது நபர்கள் ஆகியோரை உறுப்பினர்களாக உள்ளடக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பொது மக்கள் கருத்தறியும் குழுவினை நியமித்தனர். பொது மக்கள் கருத்தறியும் குழுவானது பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக பொதுமக்கள் சமர்ப்பிப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நாடு முழுவதிலும் பொது மக்களுடனான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தது. பொது மக்கள் கருத்தறியும் குழுவானது பொதுமக்களின்  சமர்ப்பிப்புக்களினது சுருக்கத்தினையும் மற்றும் பல விதந்துரைகளினையும் உள்ளடக்கி இரண்டு அறிக்கைகளை 2016ஆம் ஆண்டு மே மற்றும் ஜூலை மாதங்களில் அரசியலமைப்புச் சபைக்கு வழங்கியது.

உப குழுக்கள் அவற்றின் அறிக்கைகளை 2016ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிட்டதுடன் வழிகாட்டல் குழுவானது தனது இடைக்கால அறிக்கையினை 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியிட்டது.​

கேள்வி: அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையானது சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இது தான் இறுதி அறிக்கையா?

பதில்: இல்லை. இடைக்கால அறிக்கை மீதான விவாதங்களினைத் தொடர்ந்து வழிகாட்டல் குழுவானது இறுதி அறிக்கையினையும், அரசியலமைப்பு வரைவுப் பிரேரணை ஒன்றினையும் தயாரிக்கும். இவ் இறுதி அறிக்கையானது இடைக்கால அறிக்கை, ஆறு உப குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பொது மக்களின் கருத்துக்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு தயாரிக்கப்படும்.

கேள்வி: யாருடைய யோசனைகள் இடைக்கால அறிக்கையிலே உள்ளடக்கப்பட்டுள்ளன?​

பதில்: நாடாளுமன்றத்தில் உள்ள  சகல அரசியல் கட்சிகளினதும் தலைமைத்துவத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வழிகாட்டல் குழுவின் 21 உறுப்பினர்களினுடைய யோசனைகளும் இடைக்கால அறிக்கையிலே உள்ளடக்கப்பட்டுள்ளன. இடைக்கால அறிக்கையானது உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக இணக்கம் தெரிவித்த யோசனைகளையே உள்ளடக்கியுள்ளது.​

மேலும் இவ் இடைக்கால அறிக்கையிலே உள்ள பொதுவான யோசனைகளுடன் வேறுபடுகின்றதான குறிப்பிட்ட எண்ணிக்கையான அரசியல் கட்சிகளினது தனிப்பட்ட கருத்துக்களும் இவ் இடைக்கால அறிக்கையிலே உள்ளடக்கப்பட்டுள்ளன.​

கேள்வி: இவ் அறிக்கை வெளியிடப்பட்டதற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட படிமுறைகள் யாவை?

பதில்: அரசியலமைப்புச் சபையானது இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தினை மேற்கொள்ளும்.

அதன் பின்னர் வழிகாட்டல் குழுவானது அரசியலமைப்பு வரைவொன்றுடனான இறுதி அறிக்கையினை வரைதல் வேண்டும். இறுதி அறிக்கையினை வரைவதற்கு முன்னர் அரசியலமைப்புச் சபையானது பல விவாதங்களை நடாத்த வேண்டியிருக்கும்.

வழிகாட்டல் குழுவினது இறுதி அறிக்கைக்குப் பின்னர் அரசியலமைப்புச் சபையானது அரசியலமைப்பு வரைவின் மீதான விவாதத்தினை நடாத்தி அதற்கு வாக்களிக்கும். மூன்றில் இரண்டிற்கு மேற்பட்ட அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் அரசியலமைப்பு வரைவினை அங்கீகரிக்கின்ற போது அவ் அரசியலமைப்பு வரைவானது அமைச்சரவை அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசியலமைப்புச் சபையின் சாதாரண பெரும்பான்மை உறுப்பினர்கள் மாத்திரம் அங்கீகரிக்கின்ற போது, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அரசியலமைப்பு வரைவிற்கு வாக்களிப்பதற்காக ஒரு மாத காலம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டு அதன் பின்னர் அவ்வரைவு அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்படும்.

அமைச்சரவை அமைச்சர்கள் அரசியலமைப்பு வரைவினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற எண்ணியுள்ளார்களா அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற எண்ணியுள்ளார்களா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். இதன் பின்னர் சட்டமூலமானது நாடாளுமன்றத்தின் ஒழுங்குப்பத்திரத்தில் இடப்படுவதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்.

அமைச்சரவை அமைச்சர்கள் குறிப்பிட்ட சட்டமூலமானது மக்கள் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என உறுதிப்படுத்துவார்களாயின், எந்தவொரு பிரஜையும் சட்டமூலமானது நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் இடப்பட்டு ஏழு நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றினை தாக்கல் செய்வதனூடாக குறிப்பிட்ட சட்டமூலமானது சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலமாக பொது மக்களுடைய அங்கீகாரத்தினைப் பெற வேண்டும் என்று வழிப்படுத்துமாறு கோரலாம்.

இதன் பின்னர் நாடாளுமன்றமானது அரசியலமைப்பு வரைவு மீதான விவாதத்தினை நடாத்தி அதற்கு வாக்களிக்கும். சர்வஜன வாக்கெடுப்பும் தேவைப்படுத்தப்படுமாயின் (அமைச்சரைவையினால் உறுதிப்படுத்தப்பட்டதன் மூலம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ்) குறிப்பிட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்திலுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறும்.

கேள்வி: புதிய அரசியலமைப்பிலே மதம், குறிப்பாக பௌத்த மதம் வகிக்கும் வகிபங்கு என்ன?

பதில்: இது தொடர்பாக இடைக்கால அறிக்கையிலே இரண்டு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு தெரிவுகளினதும் பொதுவான பகுதி “இலங்கையானது பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்க வேண்டும் என்பதுடன் பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் இலங்கை அரசின் கடமையாயிருத்தல் வேண்டும்” என்பதுவாகும்.

தெரிவு 1: 10ஆம், 14 (1) (உ) உறுப்புரைகளால் எல்லா மதங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.

தெரிவு 2: எல்லா மதங்களையும் மற்றும் அதன் நம்பிக்கைகளையும் மரியாதையுடனும் மாண்புடனும் மற்றும் பாரபட்சமின்றியும் நடத்துவதுடன் அரசியலமைப்பில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் வழங்கவேண்டும்.

தொடர்புபட்ட கட்டுரைகள்: 

சிக்கலடைந்துள்ள இலங்கை அரசியல்யாப்புக் குழுவின் இடைக்கால அறிக்கை

‘வியத்மக’வின் பாசிச போக்கு…