பட மூலம், Constitutionnet

இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்கள் இடம்பெற வேண்டும் என பல வருடங்களாகப் பேசப்பட்டது. அதற்கேற்ப நாடாளுமன்றத்தால் 2016 மார்ச் மாதம் 09ஆம் திகதி நிறுவப்பட்ட இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை 2017 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்டது. அந்த இடைக்கால அறிக்கைக்கமைய குறித்த குழு 73 தடவைகள் கூடியுள்ளது. இடைக்கால அறிக்கையின் ஆரம்பப் பகுதி 27 பக்கங்களைக் கொண்டுள்ளது. அந்தச் செயற்பாட்டுக் குழுவில் 21 உறுப்பினர்கள் உள்ளடங்கியிருந்த போதிலும், அந்த அறிக்கையின் மூல வரைவுக்கு இணக்கம் தெரிவிக்காத 15 உறுப்பினர்களால் அதற்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.  அதனால், இடைக்கால அறிக்கை 86 பக்கங்களைக் கொண்டதாக மாறியுள்ளது. அதற்கமைய 6 உறுப்பினர்கள் மட்டுமே மூல வரைவுக்கு உண்மையாகவே இணக்கம் தெரிவித்துள்ளனர் என்பதைக் காண முடிகின்றது. அண்மையில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திரு. விஜேதாச ராஜபக்‌ஷவும் அந்த அறுவரில் ஒருவராவார். தற்போது அவரும் இந்த மூல வரைவுடன் இணங்குவாரா என்பது நிச்சயமில்லை.

இந்த இடைக்கால அறிக்கையின் ஆரம்பப் பகுதியில் அரசியல் யாப்பில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக திட்டவட்டமான கருத்துக்கள் காட்டப்படவில்லை. அதற்குப் பதிலாக சிற்சில உறுப்புரைகளுக்கு ஒன்றுக்கொன்று முரணான சில மாற்று நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதனூடாக இந்த இடைக்கால அறிக்கையை இணக்கப்பாடற்ற ஆவணமாகக் காண முடிகிறது.

அரசியல் யாப்பில் திருத்தங்கள் தேவையென பலர் எண்ணுகின்றனர். எனினும், அது எதற்காக என்பதைப் பற்றிய இணக்கப்பாடு இல்லை. எனவே, அதன் தேவைப்பாடுகளையும் அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளையும் இனங்கண்டு பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே கலந்துரையாடப்பட வேண்டி இருந்தது. எனினும், அந்த இடைக்கால அறிக்கையினூடாக எதுவித இணக்கப்பாடும் ஏற்படுத்தப்படவில்லை என்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இதனால், நிகழ்ந்தது என்ன? அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொண்டு நாட்டை மிகவும் சிறந்த நிலைக்கு இட்டுச் செல்ல இருந்த பொன்னான வாய்ப்பு கை நழுவியது. முக்கியமாக பயங்கரவாதத்தை முடிவுறுத்தி சமாதானமான சூழலைக் கட்டியெழுப்பியுள்ள எதிர்காலத்துக்கான நல்ல அடித்தளத்தை இடுவதற்கான அவசியமான தருணம் இதுவாகும்.

தற்போது நிலைமை சிக்கலடைந்துள்ளது. இப்போது பலர் இந்த அரசியல் யாப்பு திருத்த முயற்சியை தோற்கடிப்பதற்கு தமது ஆயுதங்களை தீட்டி வருகின்றனர். இன்னும் பலர் இந்தத் திருத்தத்தைக் காப்பாற்றுவதற்காக அடக்குமுறைக் கரங்களை ஓங்கக் காத்திருக்கிறார்கள். அதனால், இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் யோசித்துச் செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் “அறக்க பறக்க சம்பாத்தியமாம்… படுக்க பாய் இல்லையாம்…” எனும் நிலை ஏற்படும். இப்போது நாம் என்ன செய்யலாம் என்பது குறித்து கவனத்தை செலுத்த வைப்பதே இந்தக் கட்டுரையின் முயற்சியாகும்.

முதலில் எதற்காக அரசியல் யாப்பைத் திருத்த வேண்டும் எனும் கேள்வியைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதனுள் மூன்று முக்கிய விடயங்கள் உள்ளடங்கும்.

  1. தேர்தல் முறையை மாற்றியமைத்தல்.
  2. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவிக்குள்ள ஏகாதிபத்திய அதிகாரத்தை நீக்குதல்.
  3. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்துக்கு வழிகாட்டும் சூழலைக் கட்டியெழுப்புதல்.

இந்த மூன்று விடயங்களையும் வெவ்வேறாக கருத்திலெடுத்தல் வேண்டும். எனினும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புபடும் சந்தர்ப்பங்களும் உண்டு. அதனால், மிகவும் கவனத்துடன் இந்த மூன்று பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைத் திட்டமிடல் வேண்டும்.

தேர்தல் முறையை மாற்றியமைத்தல்

இடைக்கால அறிக்கையினூடாக முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு திருத்தங்களில் தேர்தல் முறையை மாற்றியமைக்க பெரும்பான்மையானோர் இணக்கம் தெரிவித்துள்ளனர். விருப்பு வாக்கு முறையை நீக்குதலும் தொகுதிக்கென ஒரு உறுப்பினரை நியமிப்பதற்காகவுமே தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான அவசியமாகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் எமது குழுவினர் சேர்ந்து தயாரித்த, உலகுக்கும் புதிய அனுபவமாக அமைந்த புதிய ஏற்பாடுகள் இந்த அரசியலமைப்புத் திருத்த பிரேரணைகளில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பெரும்பாலும் சகல கட்சிகளினதும் அங்கீகாரம் கிடைத்தது. எமது குழுவினால் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரேரித்த புதிய முறையே இப்போது உள்ளூராட்சித் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. “விகிதாசாரம் – விருப்பு வாக்குகளுக்குப் பதிலாக தொகுதி” என்பதே புதிய முறையாகும். அந்த முறைமை மாகாண சபைக்காகவும் அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் இந்த புதிய முறைமை இப்போது உள்ளுராட்சித் தேர்தல் முறைக்கும் மாகாண சபைத் தேர்தல் முறைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்தப் புதிய முறைமை முன்னர் உள்ளூராட்சித் தேர்தலுக்காக நிறைவேற்றப்பட்டிருந்த பேராசிரியர் சுசந்த லியனகேவினால் தயாரிக்கப்பட்ட தினேஷ் குணவர்தனவின் முறையை விட வேறுபட்டது. தினேஷ் குணவர்தனவின் முறைமைக்கு அமைய வட்டாரத்திற்கான உறுப்பினர்கள் வேறாக நியமிக்கப்படுவார்கள். தோல்வியடைந்த வேட்பாளர்களின் வாக்குகளின் விகிதாசாரத்துக்கு மிகுதி ஆசனங்கள் பகிரப்படும். அதன்போது சிறு கட்சிகளுக்கும் சில ஆசனங்கள் கிடைக்கக் கூடும். தினேஷ் குணவர்தனவின் முறையில் சிறு கட்சிகளுக்கு கிட்டும் ஆசனங்களின் எண்ணிக்கை குறைவதனால் அதற்குப் பற்பல காரணங்களைக் காட்டி அந்தக் கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்ததனால் உள்ளூராட்சித் தேர்தல்களைத் தொடர்ந்தும் ஒத்திவைக்க நேர்ந்தது. என்னவெனில், தமது கட்சிகளுக்கு முன் இருந்த ஆசனங்கள் புதிய முறையின் கீழும் கிட்டும் என்பதே புதிய முறைக்கு சகல கட்சிகளும் இணக்கம் தெரிவிப்பதற்கான இரகசியமாகும்.

புதிய முறையை பொதுவாக நோக்கினால் முன்னைய விகிதாசார முறையேயாகும். அதனால், அந்தந்தச் சபைகளுக்கு அந்தந்தக் கட்சிகளினால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. இதுவரை நிலவிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்டமைப்பு தொடர்பில் சகல கட்சிகளும் மனதை சரிப்படுத்திக் கொண்டமையால் இந்த முறைக்கு சகலரும் இணங்கியுள்ளனர். புதிய முறையிலுள்ள வேறுபாடு என்ன? விருப்பு வாக்குகள் இல்லை. வட்டாரங்கள் உண்டு. வேட்பாளர்கள் தொகுதியினுள் மாத்திரம் போட்டியிடுவதால் பிரசார நடவடிக்கைளை தமது தொகுதியில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். வீண்விரயம் குறையும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பணக்காரர்களாக இருக்க வேண்டியதில்லை. அந்தந்தக் கட்சிகளுக்குக் கிடைக்கும் உறுப்பினர் எண்ணிக்கை விகிதாசார அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட போதிலும், அந்தக் கட்சிகளுக்குக் கிடைத்த ஆசனங்களில் தொகுதியில் வெற்றி பெற்றவரே நியமிக்கப்படுவார்.

உள்ளூராட்சித் தேர்தல் முறையில் வட்டார முறைக்கு 60% மும் விகிதாசார முறைக்கு 40% ஆகப் பயன்படுத்துவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. சிறு கட்சிகளின் அழுத்தத்தினால் மாகாண சபைக்காக தொகுதி முறைக்கு 50% உம், விகிதாசார முறைக்கு 50% உம் ஆக மாற்றப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதனைப் புரிந்து கொள்வதில் தவறுள்ளது. புதிய முறையின் கீழ் அந்தந்தக் கட்சிகளுக்குக் கிடைக்கும் ஆசன எண்ணிக்கை விகிதாசார முறையினாலே முற்றாக தீர்மானிக்கப்படும். அதாவது, 100% உம் விகிதாசார முறையினாலாகும். உள்ளூராட்சி ஆசனங்களில் 60% இக்கும், மாகாண சபைகளில் 50% இக்கும் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நியமிக்கப்படுவர். மற்றவர்கள் தமது கட்சியின் தோல்வியுற்ற வேட்பாளர்களிலிருந்தோ பொதுப் பட்டியல் வேட்பாளர்களிலிருந்தோ கட்சியால் நியமிக்கப்படுவர். அதனால், புதிய முறையின் கீழ் தொகுதிகளுக்கு 50% , 60% என்பதன் மூலம் முழுப் பெறுபேறுகளும் மாற்றமடையாது. அதனிடையே சிறு கட்சிகளுக்கு விசேட இலாபமும் கிட்டுவதில்லை. சில சிறு கட்சிகளை மாகாண சபைகளில் தொகுதிவாரியாக 50 சதவீதத்தையும் விட குறைக்க உத்தேசிக்கப்படுவதற்கான காரணங்கள் உள்ளன. அப்போது சிறு கட்சிகள் பிரதான கட்சிகளுடன் போட்டியிடாமல் ஒப்பந்தம் செய்யும் போது அதிகளவு உறுப்பினர்களை மேலதிகப் பட்டியலிலிருந்து பெற்றுக் கொள்வதற்காக பேரம் பேச முடியும். அது தேர்தல் முறை தொடர்பான பிரச்சினையல்ல, பிரதான கட்சிகளின் தலைவர்களின் உளநிலை தொடர்பான பிரச்சனையாகும்.

புதிய முறையில் தொகுதிவாரியான சதவீதம் மாற்றமடைந்தாலும், அந்தந்தக் கட்சிகளுக்குக் கிடைக்கும் மொத்த ஆசன அளவு மாற்றமடையாது. எனினும், இன்னுமொரு பிரச்சினை உண்டு. ஏதேனுமொரு கட்சியானது விகிதாசார முறையின் கீழ் கிடைத்த ஆசன எண்ணிக்கையை விட அதிக தொகுதி ஆசன எண்ணிக்கையை வெற்றி பெற்றால் அந்தக் கட்சிகளுக்கு மேலதிக ஆசனங்களை வழங்க நேரிடும். அதாவது, மொத்த ஆசனங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும். அதாவது, எல்லையைத் தாண்டும். தொகுதிவாரியான சதவீதம் அதிகரிக்கும் போது மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை எல்லை மீறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். அதனால், தொகுதிவாரியான சதவீகிதம் குறைதல் நல்லது. எனினும், தொகுதிவாரியான சதவிகிதத்தை தேவைக்கு அதிகமாக குறைத்தல் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. முற்றுமுழுதாகக் கட்சியினால் மிகுதி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்களாயின் அது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள முறை இதுவாகும்.

நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட தேர்தல் முறைக்கு இடைக்கால அறிக்கையினூடாக மாவட்ட விகிதாசார முறைக்குப் பதிலாக மாகாண விகிதாசாரம் அல்லது இன விகிதாசாரம் மாற்று வழிகளாகப் பிரேரித்திருந்தமை பிரதான வேறுபாடாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மாகாண, தேசிய விகிதாசாரத்தைப் பின்பற்றினால் மாவட்டத்துக்குக் கிடைக்கும் ஆசனங்களின் அளவு நிச்சயிக்கப்படமாட்டாது. அத்துடன், மேலதிக உறுப்பினர்களை நியமிக்கும் போது ஏற்புடைய கட்சியின் தலைவருக்குக் கிடைக்கும் பலமும் அதிகரிக்கும். அது ஜனநாயகவாதத் தத்துவங்களுக்கு நல்லதல்ல. அதற்குப் பதிலாக மாவட்டத்தினுள் தொகுதிவாரியான அளவை 60% வரை குறைத்து மாவட்ட விகிதாசாரத்துக்குச் செல்லுதல் புத்திசாதுரியமானது.

இந்நிலையில், அரசியலமைப்புத் திருத்தத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்புடைய திருத்தத்தை கூடியளவு விரைவாக மேற்கொள்ளுதல் வேண்டும். இதன் தொகுதிகளைத் தீர்மானிக்க மேலும் குறிப்பிடத்தக்களவு காலம் செல்லும். இந்தத் திருத்தத்தை விரைவாக மேற்கொள்ளாது விடில் அடுத்த தேர்தலை விருப்பு வாக்கு முறையில் நடத்த நேரிடும். அல்லது தேர்தலை ஒத்திவைக்க நேரிடும். இவை இரண்டும் நல்லதல்ல. அதனால் உடனடியாக தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்காக அரசியலமைப்பை திருத்தம் செய்ய வேண்டும். அதற்காக பொதுமக்கள் கருத்துக்கணிப்பும் அவசியமில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியின் ஏகாதிபத்திய அதிகாரங்களை நீக்குதல்

நிறைவேற்று ஜனாதிபதிப் பதவி என்பது பல தசாப்தகாலமாக கலந்துரையாடப்பட்ட பிரச்சினையாகும். ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிப் பதவியை நீக்குவதற்கு இந்தத் துணை அறிக்கையில் பிரேரித்துள்ளன. ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை சிங்கள மக்களின் பிரச்சினையாகும். சிறுபான்மையின மக்கள் கட்சிகளுக்கு இது மிக முக்கியமான பிரச்சினையல்ல. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையின் ஏகாதிபத்திய அதிகாரங்களை நீக்குதல் என்பது இரு வேறான விடயங்களாகும். தற்போதைய ஜனாதிபதியின் ஜனாதிபதித் தேர்தல் வெளியீடான ‘மைத்றி ஆட்சி – நிலையான நாடு’ என்பதில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குதலின்றி, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையின் ஏகாதிபத்திய அதிகாரங்களை நீக்குதல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை நீக்குவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 30 (2) உப உறுப்புரையை மாற்றுதல் வேண்டும். அதற்கு மக்களின் கருத்துக் கணிப்பை நடாத்துவது கட்டாயத் தேவையாகும். எனினும் ‘மைத்திறி ஆட்சி – நிலையான நாடு’ எனும் விஞ்ஞாபனத்தில் மக்களின் கருத்துக்கணிப்புக்கு உள்ளாகும் அரசியலமைப்பைத் திருத்தம் செய்வதில்லையெனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 2015 பொதுத் தேர்தலின் போது ஜனாதிபதி தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் 19 ஆவது திருத்தத்துக்கு உயர்ந்தபட்சம் ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட மாட்டாது எனக் கூறப்பட்டுள்ளது. அடுத்த விடயம், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாயின், அந்த நபர் பெயரளவில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதில் அர்த்தமில்லை.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையைப் பேணுவதன் முக்கிய தேவையொன்று உள்ளது. 1978இல் ஜனாதிபதிப் பதவியை உருவாக்கிய சந்தர்ப்பத்திலே தேர்தல் முறை மாற்றியமைக்கப்பட்டது. 1978இக்கு முன் நடைபெற்ற தேர்தல் முறை முற்றாக தொகுதிவாரி முறையாகும். அதனால், நாடாளுமன்றத்தின் தெளிவான பெரும்பான்மை முதலாவது பிரதான கட்சிக்கு உரியதாகும். எனினும், 1978 இன் பின் நடைபெற்ற விகிதாசார தேர்தல் முறையின் கீழ் முதலாவது பிரதான கட்சிக்கு நாடாளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மை கிட்டவில்லை. அதனால், நாடாளுமன்றம் நிலையற்றதானது. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறையின் கீழ் தெளிவான பெரும்பான்மை முதலாவது பிரதான கட்சிக்கு உரித்தாகாது. அவ்வாறு செய்யக்கூடிய ஒரே முறையாக பிரதான கட்சிக்கு கருதத்தக்களவு மேலதிக ஆசனங்களைப் பெற்றுக் கொடுப்பதேயாகும். அதன்போது அரசாங்கத்தை உருவாக்கும் போது சிறு கட்சிகளுக்கு பிரதான கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கு தற்போதுள்ள வாய்ப்புக்கள் அற்றுப்போகும். அதனால், அதனை சிறு கட்சிகள் எதிர்க்கின்றன. ஆகையால், அதற்காக இணக்கம் காண்பது சிரமமாகும் என்பதனை இடைக்கால அறிக்கையினூடாகவும் காணலாம்.

இந்த சூழ்நிலையில் நாட்டின் நிலையான தன்மைக்காக நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியை தொடர்ந்தும் பேணுவதல் கட்டாயமாகும். 19ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தல் மற்றும் ஜனாதிபதியின் சில அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு வழங்குவதன் மூலம் ஜனாதிபதியின் ஏகாதிபத்திய அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது. தற்போது ஜனாதிபதிப் பதவியை நீக்குவதைப் பற்றி அல்லாது, மேலும் முறையற்ற அதிகாரங்கள் நிறைவேற்று ஜனாதிபதியிடம் உள்ளதெனில் அவற்றை நாடாளுமன்றத்துக்கு வழங்குவதைப் பற்றி மாத்திரமே கலந்துரையாட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதாயின் இந்த உத்தேச திருத்தத்துக்கு பொது மக்களின் கருத்துக் கணிப்பு அவசியமில்லை.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சூழலைக் கட்டியெழுப்புதல்

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புக்களை விரிவாக்குவதற்காகவே அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் பிரதானமாக உருவானது. எனினும், இந்த இடைக்கால பிரேரணையின் மூலமாக எதுவித முன்னேற்றமும் இல்லையெனவே தெரிய வருகிறது. அரசியல் யாப்பில் பல வாசகங்களை மாற்றியமைப்பதற்கு இடைக்கால அறிக்கையில் பிரேரிக்கப்பட்டிருப்பினும், அந்தத் திருத்தம் அனைத்தும் பல செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களின் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது. இந்த உத்தேசப் பிரேரணைகள் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்க முடியும்.

  1. அரசியல் யாப்பு எண்ணக்கருவை சிறுபான்மையினருக்கு பொருந்துமாறு மாற்றியமைத்தல்.
  2. அதிகாரப் பரவலாக்கலுக்காக இரண்டாவது அரசு பேரவையை நிறுவுதல்.
  3. மாகாணங்களுக்கு அதிகளவு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல்.

மத்திய அரசாங்கத்தின் எண்ணக்கருவை சிறுபான்மையின மக்களுக்கு ஏற்றவாறாக மாற்றியமைத்தல்

இது பெரும்பாலும் எண்ணக்கரு தொடர்பிலான பிரச்சினையாகும். இடைக்கால அறிக்கையில் இதற்கு உதவியாக பல வாசகங்களை மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த வாசகங்களுக்கிடையே ஒற்றையாட்சி தொடர்பான வாசகமும் பௌத்த மதத்துக்கான நிலை தொடர்பான வாசகமும் முதன்மையானது. இந்தப் பிரேரணைகளின் மூலமாக ஒற்றையாட்சி எனும் எண்ணக்கரு மாற்றமடையமாட்டாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் கூறிய போதிலும் அந்த வாசகத்துக்கு கைவைப்பதன் காரணம் என்ன எனும் கேள்வி எழுகின்றது. உண்மையாகவே ஒருமைப்பாட்டுக்கு உரிய அரசியலமைப்புச் சட்டத்தில் இரண்டாவது வாசகத்தை மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக அரசியலமைப்பில் தமிழ் மொழி மூலமாக ஒற்றையாட்சி  எனும் பதத்தை அகற்றி அதற்குப் பதிலாக ‘ஒருமித்த நாடு’ எனும் பதத்தை இடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக அரசியலமைப்பில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ள ‘யுனிடரி’ எனும் பதத்தை அகற்றி அதற்குப் பதிலாக சிங்கள மொழியின் ‘ஏகீய’ எனும் பதத்தையும், தமிழ் மொழியின் ‘ஒருமித்த நாடு’ எனும் பதத்தையும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இங்கு மறைந்திருக்கும் அர்த்தமாவது, சிங்கள மற்றும் தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவதேயாகும். ‘ஒற்றையாட்சி’ என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் வசனமாகும். ‘ஒருமித்த நாடு’ என்பது சமஷ்டி அர்த்தத்தைத் தரும் தமிழ் வசனமாகும். அதனால், தமிழ் மக்களை வென்றெடுக்க தமிழ் மொழியினால் அந்த வசனம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும், சிங்கள மொழியால் அந்த வசனம் மாற்றமடையாது. அதனால், சிங்கள மக்களுக்கும் மகிழ்ச்சியே. ஆங்கில மொழியின் பதம் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் இருவரும் அறிவதால் இந்தக் களவு அகப்படாதிருப்பதற்கு ஆங்கிலத்தில் ‘யுனிடரி” எனும் பதத்தை எழுதாது சிங்கள மற்றும் தமிழ் வசனத்தை ஆங்கில மொழிபெயர்ப்புக்கு உள்ளடக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது ஏமாற்றமாகும். இதற்கு தமிழ், சிங்கள மக்கள் ஏமாற மாட்டார்கள். அதனால், இந்தப் பிரேரணையைத் தோற்கடிக்க தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இருதரப்பினரும் செயற்படுவார்கள். இதன்போது அவ்வாறான பலவீனமான தந்திரத்தை முன்வைத்தவர்களே இறுதியாக ஏமாற்றப்படுவர். சிக்கலான இனப் பிரச்சினைக்கு இவ்வாறு உண்மையை மறைப்பதனால் தீர்வு காண முடியாது. அதனால், இதற்கு இணக்கப்பாட்டை உருவாக்க முடியாமையை மிகத்தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.

பௌத்த மதம் தொடர்பாகவும் அவ்வாறான அணுகுமுறையே உள்ளது. பௌத்த மதத்துக்குரிய இடம் மாற்றமடையவில்லை எனின் அந்த வாசகத்தில் கைவைக்கத் தேவையில்லை என்பதை இடைக்கால அறிக்கை வரைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் கருத்துக் கணிப்புக்கு வழிகோலும் சில வசனங்களில் ‘இலங்கை ஜனநாயக’ என்பதற்குப் பதிலாக ‘இலங்கை’ என மாத்திரம் குறிப்பிடுதல் எழுத்துப் பிழையாக அமையாது.  நிச்சயமாக அது சட்ட சிக்கலுக்கு உள்ளாகும் வசன நடையாகும். இவ்வாறான போலியான தந்திரங்களைப் பிரேரிப்பதால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே இருக்கும் இனவாதிகள் பலமடைவார்கள். இந்த அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணைகளின் மூலமாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கைத்தை உருவாக்குவதன்றி தற்போதுள்ள நல்லிணக்கமும் இல்லாமல் போகலாம். இணங்க முடியாதவற்றை இந்த இடைக்கால அறிக்கையில் இணைப்பதனால் இணக்கம் காணப்பட்டுள்ள விடயங்களைக் கூட செயற்படுத்த முடியாது போகும்.

இரண்டாவது அரசுப்பேரவை

இரண்டாவது அரசுப்பேரவை தொடர்பான பிரேரணை பொதுவாக மத்திய அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் தந்திரமாகவே முன்வைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் சிறுபான்மையின  கட்சிகளுக்கு 50% ஐ பெற்றுக் கொள்ள முடியாதமையால் இரண்டாவது அரசுப்பேரவை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டள்ளது. பொன்னம்பலத்தின் 50-50 பிரேரணையும் இந்தப் பிரச்சினையினூடாக முன்வைக்கப்பட்ட யோசனையாகும். இடைக்கால அறிக்கையின் இரண்டாவது அரசுப்பேரவையின் பிரேரணைகள் சிறுபான்மையினக் கட்சிகளுக்கு சமவாய்ப்பை வழங்குவதை விடவும் மாகாண சபைகள் மத்திய அரசாங்கத்தின் தீர்மானங்களில் தலையிட வாய்ப்பளிக்கும் சந்தர்ப்பமாகும். உத்தேச இரண்டாவது அரசுப்பேரவைக்கு ஒரு மாகாண சபையிலிருந்து 5 பேர் என்றவாறு 45 பேரும் நாடாளுமன்றத்திலிருந்து 10 பேரும் நியமிக்கப்படுவர். நாடாளுமன்றத்தின் பலம் இந்தப் பிரேரணையின் மூலமாக மட்டுப்படுத்தப்பட்டு இரண்டாவது அரசுப்பேரவைக்கு மேற்பார்வை பொறுப்பளிக்கப்படும். மாகாண சபைகளின் பெரும்பான்மை சிங்கள அரசியல் கட்சிகளின் கைகளிலேயே உள்ளது. அதனால், இந்தப் பிரேரணையின் மூலமாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு கூடுதலான தீர்மானங்களுக்கு பங்களிப்பு செய்யும் வாய்ப்பு கிட்டாது போகும். ஒன்றில் நாடாளுமன்றத்தின் அதிகாரம் இரண்டாவது அரசுப்பேரயினூடாக மட்டுப்படுத்தப்படும். அல்லாதுவிடில் இரண்டாவது அரசுப்பேரவை போலியானதொன்றாக (சூரியன் தெற்கே உதித்த கதை) அமையும். அதனால், இது மேலும் சிக்கல்களுக்கான ஆரம்பமாக அமைவது நிச்சயமே. இந்தப் பிரேரணை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது எனலாம்.

மத்திய அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது மிகவும் சிறந்த பிரேரணையாகும். உண்மையாகவே இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக உள்ள சிறந்த ஆயுதம் இதுவே ஆகும். இலங்கையின் முக்கிய பிரச்சினையாக அமைவது சிறுபான்மையின கட்சிகளுக்கு அரச அதிகாரத்தை பயன்படுத்துவதற்குள்ள வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்படுவதேயாகும். மலையக தமிழ் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் பெரும்பாலும் பிரதான கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தை உருவாக்கி அரச அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர். அப்படியிருப்பினும் வடக்கில் தமிழ்க் கட்சிகள் கடந்த பல தசாப்தங்களாக எதிர்க் கட்சியிலே உள்ளன. அதனால், வடக்கு மக்களின் பிரதிநிதிகள் அரச அதிகாரத்துடன் தொடர்புபடுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இதுவே நாட்டின் குழப்ப நிலை ஏற்படுவதற்கான பிரதான காரணமாகும். இதனால், வடக்கின் தமிழ் மக்கள் தீர்மானங்களை எடுக்கும் அமைப்புடன் தொடர்பு கொள்ளும், அதாவது அமைச்சரவைக்கு வடக்கின் தமிழ் மக்களின் தலைவர்களை நுழையவிட அரசியலமைப்புச் சட்டத்தில் அவகாசத்தை வழங்குவதே தேவையாகும். அதற்கான உத்திகள் தொடர்பான கலந்துரையாடல் சிறந்ததாக அமைவதுடன் அதன்போது நாட்டைப் பிரிக்கும் சூழ்ச்சி பற்றிய முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட மாட்டாது.  கலந்துரையாடலுக்குப் பாத்திரமாக அமையும் மாற்று வழி அமைச்சரவையின் மாகாண அபிவிருத்தி தொடர்பான அமைச்சு அந்த மாகாணத்தில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிக்குப் பெற்றுக் கொடுப்பதே ஆகும். அல்லது மாகாண முதலமைச்சர்களின் ஆட்சி அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்குக் கிட்டும். அது இரண்டாவது அரசுப்பேரவையை நிறுவுவதை விட மிகவும் சாதுரியமானது.

மாகாண சபைகளுக்கு அதிகளவு அதிகாரத்தை பகிர்ந்தளித்தல்

மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரத்தை ஒப்படைக்கும் பிரேரணை நீண்டகாலமாக கவனத்துக்கு கொள்ளப்பட்டு வந்துள்ளது.

13+ என இந்த விடயம் கவனத்துக்கு வந்துள்ளது. இங்கு இணைந்த பட்டியல் தொடர்பிலேயே கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இணைந்த பட்டியலிலுள்ள துறைகளை மாகாண சபையிடம் வழங்குவதா இல்லையா என்பதைப் பற்றியே வாதவிவாதங்கள் இடம்பெறுகின்றன. இந்த இடைக்கால அறிக்கை மூலமாக இணைந்த பட்டியல் மாகாண சபையிடம் பொறுப்பளிக்கப்படுவதாகவே தோன்றுகின்றது. அத்துடன், ஆளுநரின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் சூழ்நிலையை மாற்று வழியாக பிரேரித்துள்ளனர். இது பொதுவாக சிங்கள மக்களிடம் கடுமையான சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. அதனால், இதனை பொதுவாக நோக்கினால் நடைமுறைச் சாத்தியமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத பிரேரணையாகும். இந்தப் பிரேரணை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு அன்றி இனங்களுக்கிடையிலான பகையை அதிகரிக்கும் பிரேரணையாகவே அமைகிறது. இணக்கப்பாட்டை உருவாக்குவதற்காக இணை பட்டியலில் துறைகள் தொடர்பில் குறித்த மாகாண மற்றும் மத்திய அரசாங்கத்துக்கிடையே புரிந்துணர்வை உருவாக்கி செயற்படுத்தக் கூடிய அரசியல் தீர்வுகள் அன்றி நிர்வாகத் தீர்வுகளை தேட வேண்டும். அது தாமதிக்கும் ஒவ்வொரு தருணமும் தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படாது அநீதி தீவிரமடைவதைத் தடுக்க முடியாது.

பொதுவாகக் பார்த்தால் அரசியலமைப்பு செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை மூலம் மேலும் பல பிரச்சினைகள் சமூகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் சூழல் உருவாகலாம். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு மலர்ந்துள்ள பொன்னான வாய்ப்பு நழுவியபடி உள்ளது. மிகவும் குழப்பமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டவாறு உள்ளது. இணக்கப்பாட்டை பலவந்தமாக திணிக்க முடியாது என்பதை இந்த இடைக்கால அறிக்கையை திட்டமிடுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கருத்து முரண்பாடுகளை தோற்றுவிக்கும் விடயங்களை விடுத்து ஏனையவற்றுக்கே திறந்த கலந்துரையாடல் வழிகோலும். கருத்து முரண்பாடுகளுக்கு தூபமிடாமல், இணக்கம் காணக்கூடிய விடயங்களுக்குரிய பிரேரணைகளை முன் கொணர்வதே சிறந்தது. அவ்வாறு செய்வதற்கு மனதைத் திடப்படுத்த முடியுமானால் இன்னும் தாமதமில்லை. ஆனாலும் காலம் மிகவும் வேகமாகச் செல்வதால் உடடினயாக சரியான தீர்மானத்தை எடுப்பது அத்தியாவசியமாகும்.

அசோக அபயகுணவர்தன

கட்டுரையாளர் தந்திரோபாய முயற்சியாண்மை முகாமைத்துவ நிறுவனத்தில் தலைவராக கடமைபுரிகிறார்.

 

ஞாயிறு லங்காதீப பத்திரிகையில் வெளியான இக்கட்டுரையினை தமிழில் மொழிபெயர்த்தவர் புனிதா இராஜேந்திரன்.