பட மூலம், asianews
விசேட வைத்திய நிபுணர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக்கொண்டு கருக்கலைப்புடன் தொடர்புடைய சட்டத்தில் உடனடியாகவே திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியை வழங்கவேண்டும். கருக்கலைப்பு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஆகவும் பொருத்தமானவர்கள் வைத்திய நிபுணர்களே தவிர வேறு யாருமல்லர். பின்னர் கருக்கலைப்புடன் தொடர்புடைய திருத்தப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்ற வேண்டும். இது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் தீர்வல்ல, கத்தோலிக்க சபையின் திமிர்தனத்தை அடக்கவும் இந்தச் சட்டம் திருத்தப்படவேண்டும்.
தங்களின் விருப்பத்திற்கேற்ப அரசியலமைப்பு மற்றும் வேறு சட்டங்களைக் கொண்டுவரவும் கொண்டுவருவதைத் தடுக்கவும் முடியும் என மூன்று நிக்காயக்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றன. கத்தோலிக்க சபையினால் சட்டங்களை இயற்றமுடியும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறார். இந்த வணக்கத்துக்குரியவர்களால் சட்டங்களை இயற்றவும், இயற்றப்பட்ட சட்டங்களை நீக்கவும் முடியும் என்றால் நாட்டின் இறையாண்மைக்கு உரித்தான மக்கள் இங்கு இருக்கவேண்டிய அவசியமில்லை.
கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மீண்டும் வைத்திய நிபுணர்களே கூறியிருந்தார்கள். குறைந்தபட்சம் இரண்டு காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரியிருந்தார்கள். முதலாவது, கடுமையான ஊனக்குறைபாடுடைய கருவை தாய் சுமக்கும்போது. இரண்டாவது, பாலியல் வன்புணர்வு காரணமாக ஒரு பெண் கருத்தரித்துள்ளபோது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் கருக்கலைப்பு செய்வதாக இருந்தால் இரண்டு விசேட வைத்திய நிபுணர்களின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும், இருந்தபோதிலும் கருக்கலைப்பு செய்துகொள்வதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவை எடுக்கும் உரிமையை கருவை சுமக்கும் தாய்க்கு வழங்கவேண்டும் என்ற இரண்டு விடயங்களும் புதிய சீர்த்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பொதுவாக மனித உரிமைகள் பற்றி, குறிப்பாக பெண்களின் இனப்பெருக்க உரிமைகள் பற்றி பார்க்கும்போது இந்த இரு சந்தர்ப்பங்களிலாவது கருக்கலைப்புக்கு அனுமதியளிக்காவிட்டால் அல்லது அதற்கு எதிராகச் செயற்படுவார்களேயானால் இந்த நாட்டை நாகரீகமடைந்த நாடென்று கருத முடியுமா?
இலங்கையில் கருக்கலைப்பு தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டம் மிகவும் பலமானது. கருவினால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே கருக்கலைப்புச் செய்யலாம் என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 303 பிரிவு கூறுகிறது. ஆனால், இலங்கையில் தினமும் 750 – 1,000 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இவையனைத்தும் கருவினால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் இடம்பெறும் கருக்கலைப்புகள் அல்ல என்பதை நான் கூறித் தெரியவேண்டியதில்லை.
இவ்வாறான கருக்கலைப்புகளில் பெரும்பாலானவை திருமணமான பெண்களினால் மேற்கொள்ளப்படுகின்றன என்பது மற்றுமொரு விசேட அம்சமாகும். தவறான உறவின் மூலம் உருவான கருவை அழிப்பதற்காக இவர்கள் கருக்கலைப்பில் ஈடுபடவில்லை. சட்டரீதியான திருமணத்தின் மூலம் உருவான கருவை பொருளாதார நெருக்கடி அல்லது வேறு காரணங்களுக்காக கருக்கலைப்புச் செய்கிறார்கள். கருக்கலைப்பு தொடர்பாக காணப்படும் பெருமளவான மற்றும் நியாயமான கோரிக்கைகளை தற்போது காணப்படும் சட்டத்தினூடாக நிறைவேற்ற முடியாதவிடத்து அவர்கள் தனியார் வைத்தியசாலை நோக்கிச் செல்கிறார்கள். அங்கு கருக்கலைப்புக்காக பெருமளவு நிதி அறவிடப்படுகிறது.
இந்த பெருமளவு நிதியைச் செலுத்தமுடியாமல் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் பெண்கள் சட்டவிரோத, நிபுணத்துவம் இல்லாத பொருத்தமற்றவர்களினால் குறைந்த கட்டணம் அறவிடும் நிலையங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. சற்று வளர்ந்த கருவொன்றை கலைப்பதற்கு அல்லது நீக்குவதற்கு பெண்ணின் உறுப்பினூடாக கூரான ஆயுதமொன்றைச் செலுத்தி வளர்ந்த கருவை சிறுதுண்டுகளாக வெட்டி பெண்ணுறுப்பினூடாக வெளியில் எடுக்கப்படுகிறது.
இந்த முயற்சி இறுதியில் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு குறித்த பெண் உயிரிழக்கக்கூடிய நிலையும் ஏற்படலாம். அல்லது மீண்டும் ஒருமுறை கருத்தரிக்க முடியாதளவுக்கு கர்ப்பப்பை சேதமடையக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அல்லது வேறு ஏதாவது உடல் உபாதைக்கூட ஏற்படலாம். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்துக்கு முகம்கொடுத்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் அரசாங்க வைத்தியசாலையில் சேர்க்கப்படும் பெண்களின் நிலை தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருவது நீங்கள் அறிந்ததே.
பெண்களுக்கு தங்களுடைய திருமணத்தின் மூலம் உண்டான கருவை வளர்க்க முடியாத காரணத்தினால் அதனை சட்டபூர்வமான முறையில் கருக்கலைப்புச் செய்துகொள்வதற்கான உரிமைகூட இலங்கையில் கிடைக்காது போலத் தெரிகிறது. இலங்கையில் பெண்களின் இனப்பெருக்க உரிமையை மதிக்கும் ஒரு சமூகம் உருவாக நீண்டகாலம் எடுக்கும் என்பதாலேயே இவ்வாறு தோன்றுகிறது.
கடந்த காலங்களில் கருக்கலைப்பு தொடர்பாக பல திருத்தங்கள் முன்மொழியப்பட்டிருந்தன. வன்புணர்வினால் ஏற்பட்ட கருவை கலைப்பதற்கு அனுமதி வழங்குவது அதில் முதன்மையாகும்.
அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், பெண் ஒருவரின் அல்லது சிறுமி ஒருவரின் வயிற்றில் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரின் குழந்தை வளரும்போது, அந்தக் கருவைப் பற்றிய அவரது உணர்வை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குழந்தை பிறந்த பின்னர், அந்தக் குழந்தை மீதான தாயின் எண்ணவோட்டம் என்னவாக இருக்கும்? குறித்த பெண் தனது தந்தை, சித்தப்பா – பெரியப்பா, மாமா போன்ற நெருங்கிய உறவுகளால் வன்புணர்வுக்கு உட்பட்டிருந்தால்? இவ்வாறானதொரு நிலை இருந்தும் பெண் கருக்கலைப்பில் ஈடுபடக்கூடாது, குழந்தையை வளர்க்கவேண்டும் என்று கூறவோமாக இருந்தால்?
கடுமையான ஊடனக்குறைபாடுடைய கருவொன்றை சுமக்கும் பெண்ணொருவரும் இதுபோன்றதொரு அழுத்தத்தையே எதிர்கொள்வார். இவ்வாறு ஊனக்குடைப்பாடுடன் குழந்தை பிறந்த குடும்பங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் சொல்லில் அடங்காதவை. ஊனக்குறைபாடுடன் பிறந்த குழந்தைக்காக பெண் உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் தியாகம் செய்துதான் ஆகவேண்டும் என்று அழுத்தம் பிரயோகிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
1995ஆம் ஆண்டு மூன்று சந்தர்ப்பங்களில் கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் அப்போதைய அரசாங்கத்தால் திருத்தம் கொண்டுவரப்பட்டது. வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்தால், நெருங்கிய உறவினரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பம் தரித்தால், கடுமையான ஊனக்குறைபாடுடன் கரு வளரும் பட்சத்தில் முறையான வைத்திய கண்காணிப்பின் கீழ் கருக்கலைப்பில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று அப்போது யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இருந்தபோதிலும், கத்தோலிக்க சபை, முஸ்லிம் பள்ளிவாசல்கள், அந்தந்த சமயங்களுக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் எதிர்ப்பினால் திருத்தம் மேற்கொள்ளப்படாமல் அரசாங்கத்தால் மீளப்பெறப்பட்டது.
இன்றும் முழுவதுமாக இல்லாமல், ஓர் எல்லைக்கு உட்பட்டு கருக்கலைப்பு சட்டத்தில் சிறிய திருத்தம் கொண்டுவர முயற்சிக்கும்போது முன்னர் போன்று எதிர்ப்பு கொடியை பிடித்தவாறு கர்தினால் உட்பட கத்தோலிக்க சபை, ஆயர் சம்மேளனம் வீதியில் இறங்கியிருக்கின்றன. எந்தக் காரணமாக இருந்தாலும் தான் உட்பட கத்தோலிக்க சபை கருக்கலைப்புக்கு இடமளிக்காது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் அண்மையில் கூறியிருந்தார். “கடந்த அரசாங்கமும் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சித்தது. இந்த அரசாங்கத்திலும் அங்கும் இங்குமாக குரல்கள் கேட்கின்றன” என்றும் கூறியிருக்கிறார். அச்சுறுத்தும் தொனியே கர்தினாலின் கருத்தில் உள்ளடங்கியிருக்கிறது. “கடந்த அரசாங்கம் முயற்சி செய்தது. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீளப்பெற்றுக்கொண்டார்கள். இன்றும் நாங்கள் எதிர்க்கிறோம். அதனால் இந்த அரசாங்கத்தாலும் இதை நிறைவேற்றிக்கொள்ள முடியாது. நல்லது, திருத்திப் பாருங்களே…” என்ற அச்சுறுத்தும் தொனி அவரது கருத்தில் புதைந்திருக்கிறது. அரசாங்கம் இவரது சவாலை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏற்றுக்கொண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்புடன் தொடர்புடைய சட்டத்தை அமைச்சரவையில், நாடாளுமன்றில் நிறைவேற்றி சவால் விடுக்கும் கத்தோலிக்க சபைக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.
கருக்கலைப்பு எதிராக கர்தினால் கூறும் சமய காரணங்கள் குறித்து இங்கு கலந்துரையாடுவது அவசியமில்லை என்பதே எனது கருத்து. இருந்தபோதிலும் அவர் கூறிய ஒரு விடயம் குறித்து கருத்து கூறலாம் என்று நினைக்கிறேன். மேற்குலக முதலாளித்துவ நாடுகளுக்கு இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சனத்தொகையில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் தேவைப்பாடு இருப்பதாகவும், கருக்கலைப்பு சீர்த்திருத்தம் தொடர்பான பேச்சுகள் வருவது அதனால்தான் என்றும் கர்தினால் கூறியிருக்கிறார். “உலக மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டிருக்கிறது, குறைக்குமாறு சில முதலாளித்துவ நாடுகளில் உள்ள மக்கள் ஏனையவர்களைப் பார்த்து கூறுகிறார்கள். மூன்றாம் உலக நாடுகளில் குழந்தை பிறப்பை குறைக்க பணம் தருகிறோம் என்று கூறுகிறார்கள். இந்த பிரசார நடவடிக்கையை கொண்டுசெல்ல என்.ஜீ.ஓக்களுக்கு பணம் வழங்குகிறார்கள். ஐரோப்பியர்களின் சுயநல நோக்கத்துக்காக எமது குழந்தைகளை பலிகொடுக்க முடியாது” என்று கர்தினால் கூறியிருந்தார். குறைந்தபட்சம் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் கத்தோலிக்க மதம் எவ்வாறு வந்துசேர்ந்தது என்ற அறிவு இருந்திருந்தால் இவ்வாறான கருத்தொன்றை தெரிவிக்க முன் இரண்டு தடவையாவது அவர் யோசித்திருப்பார்.
கத்தோலிக்க சபை இந்த அச்சுறுத்தல் பாணியை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலப்பகுதியில் வேறுமாதிரி கையாண்டது. பெண்களின் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் குடும்ப திட்டமிடல் பற்றி பணியாற்றும் உலகப் புகழ்பெற்ற மாரி ஸ்டொப்ஸ் எனும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் இலங்கைக் கிளை (இலங்கை சட்டத்திற்கு உட்படாத) கருக்கலைப்பில் ஈடுபடுவதற்கு நியாயமான காரணத்துடன் வரும் பெண்களுக்கு உயர் வைத்திய வசதிகள் வழங்கும் சேவையை கடந்த காலங்களில் செய்து வந்தது. இலங்கையின் சாதாரண பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொண்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் வாய்ப்பு இந்த நிறுவனத்தினால் கிடைக்கப்பெற்றது. முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவின் இறைபக்தியினூடாக செயற்பட்ட கத்தோலிக்க சபை ஜனாதிபதி ராஜபக்ஷவைக் கொண்டு அந்த நிறுவனத்துக்கு மூடுவிழா நடத்தியது.
கருக்கலைப்பு நல்லதொரு விடயம் என யாரும் கருதவில்லை. இருப்பினும் பல காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்துகொள்வதற்கு அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இலங்கையில் உள்ள சட்டத்தின்படி தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கருவைக் கலைப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பது அதில் ஒன்றாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைக் கொண்டுவந்த பிரித்தானியர்களால் நமக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகும். இப்போது கொண்டுவரப்போகும் திருத்தங்களும் ஒருபோதும் திருப்திகொள்ள முடியாத ஒன்று என்றபோதிலும் குறைந்தபட்சம் ஒரு படி முன்னகர்ந்திருக்கிறோம், காலம்தாழ்த்தியாவது அவசியமான ஒன்றை கொண்டுவந்திருக்கிறோம் என்றாவது திருப்தியடைந்து கொள்ளலாம்.
உலகில் பெரும்பாலான நாடுகள் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமை இருக்கிறது என ஏற்றுக்கொண்டிருக்கின்றன. கருவொன்றை சுமப்பதை/ கருக்கலைப்பில் ஈடுபடுவதை குறித்த பெண்ணே தீர்மானிக்க வேண்டும் என்ற உரிமை சார்ந்த விவாதங்களை அந்த நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அவ்வாறான விவாதங்கள் இங்கு இடம்பெறுமா என நினைத்துக்கூட பார்க்க முடியாவிட்டாலும் வரவிருக்கும் குறைந்தபட்ச, அத்தியாவசியமான திருத்தத்தைக் கூட கர்தினால், மதத் தலைவர்கள், கத்தோலிக்கச் சபை போன்ற மத நிறுவனங்களின் விருப்பு வெறுப்புகளுக்காக திரும்பப்பெறுவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.
ගබ්සා කළ යුත්තේ කාදිනල්ට වුවමනා විදියටද? என்ற தலைப்பில் கே. டபிள்யூ. ஜனரஞ்சன எழுதி ‘ராவய’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் தமிழாக்கம்.