பட மூலம், Selvaraja Rajasegar Photo

பெருந்தோட்ட பயிற்செய்கையில் ஆரம்பத்தில் பிரித்தானியர்கள் 1824 களில் கம்பளை சிங்கபிடிய என்ற கிராமத்தில் கோப்பி பயிர் செய்கையை ஆரம்பித்தனர். இந்த நிலங்களில் இந்திய பூர்வீக மக்கள் பெரும்பாலானோர் வேலைக்கு இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டனர். இந்த மக்கள் தமது உழைப்பின் விளைவாக கோப்பி பயிற்செய்கையை செழிப்பாக்கினர். 1834 களிலும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இவ் நிலங்களில் வேலை செய்ய வரவழைக்கபட்டனர். இவர்கள் இலங்கையில் பல இன்னல்களை சந்தித்தாலும் தமது உழைப்பில் வஞ்சனை இன்றி சேவை செய்தனர். ஆயினும், 1866 இல் Hemileia vastatrix எனும்  பங்கசு நோயினால் கோப்பி பயிற்செய்கை கைவிடப்படும் நிலையை நெருங்கியது. இதனால் பிரித்தானியர்கள் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தேயிலை பயிர்ச்செய்கையை 1967ஆம் வருடம் ஜேம்ஸ் டெயிலர் என்பவரின் தலைமையில் லூல்கந்துற எனும் தோட்டத்தில் முதன் முதலாக பயிரிட்டனர். இந்த அறிய வகை பயிரின் வளர்ச்சிக்கு உகந்த சூழல் இலங்கையில் இருந்ததோடு அந்தப் பயிரினை அரவணைப்போடு பராமரிக்கும் தன்மை தொழிலாளர்களிடத்தில் இருந்ததாலும் தேயிலை சிறப்பாக வளர்ச்சிகண்டது.

150 வருட பூர்த்தி காணும் தேயிலையின் வரலாற்று பின்னணி இப்படியாக இருந்தாலும் தேயிலை எனும் போது இலங்கையின் பெயரை பலர் மனதில் நிலை நிறுத்த அயராது பாடுபட்ட தொழிலாளர்களின் நிலைமை பழமை வாய்ந்த நிலையில் இன்னும் தீர்க்கபடாது இருக்கின்றது. இவர்களில் பலர்  வாழும் லயன்கள் இன்னும் அன்று காணப்பட்ட நிலைமையிலே காணப்படுகின்றன. இவர்களின் சிவில் உரிமைகள் இன்னும் வழங்கப்படாத நிலைமை தொடர்கின்றது. நாட்டின் முதுகெலும்பு என கூறப்படும் இவர்களுக்கு வழங்கப்படும் வேதன அதிகரிப்பானது இன்னும் எட்டாக்  கனியாகவே காணப்படுகிறது. மேலும், பெருந்தோட்ட தேயிலை பயிர்ச்செய்கை வேண்டுமென்றே நஷ்டம் அடையவும், நஷ்டத்தில் நடாத்தப்பட்டு வருவதாகவும் காட்டும் பெருந்தோட்ட கம்பனிகளின் அரங்கேற்றமும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது. பெருந்தோட்ட கம்பனிகளினால் மிகையூதியம் (bonus) வழங்க நேரிடும் என்பது இதற்கு ஒரு காரணமாகும். அத்துடன்,  இக்கம்பனிகள் அன்று தொடக்கம் இன்று வரை வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சரியான வேதனம் வழங்காமல் கூடிய இலாபத்தினை ஈட்டும் நோக்குடன் செயற்பட்டதன் விளைவாக ஏற்றுமதி சந்தையில் இலங்கை தேயிலைக்கான கேள்வி படிப்படியாக குறைவடைந்துள்ளது. அத்துடன், தேயிலை தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு குறைந்த சலுகைகள் மற்றும் வேதனம் வழங்கியதாலும் தேயிலை தோட்டங்களில் காணப்படும் கடினத்தன்மை போன்றவற்றினாலும் அவர்களினால் உயர்ந்த செயல்திறனுடன் செயற்பட முடியாமல் உள்ளது. இதனால் இந்த பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்கள் மிகவும் இக்கட்டான நிலையை அடைந்துள்ளனர்.

கடந்த வருடங்களில் போல் அல்லாது இவ் வருடம் 1kg தேயிலைக்கான சந்தை பெறுமதி அதிகரித்துள்ளதோடு சிறு தேயிலை பயிற்செய்கை உரிமையாளர்களுக்கு பாரிய இலாபத்தினை ஈட்டித் தந்துள்ளது. ஆயினும், பெருந்தோட்ட தேயிலை கம்பனிகளில் அதிருப்தி அடைந்த மக்கள் வேறு தொழில்களில் ஈடுபடுவதால் சிறு தேயிலை உரிமையாளர்கள் தமது தோட்டங்களில் வேலை செய்வதற்கு தொழிலாளர்களைத் தேடுவதில் பெரும் சிரமத்தை எதிர் நோக்குகின்றனர். இதனால் இவர்கள் 1kg தேயிலையிற்கு ஒரு தொழிலாளியிற்கு வழங்கும் வேதனத்தின் பெறுமதியையும் அதிகரித்துள்ளனர். சிறு தேயிலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் இவ் சிரமத்தை ஒரு வகையில் தனிப்பதற்காக சில ஊடகங்கள் பிற நகரங்களில் வேலை செய்யும் மலையக இளைஞர்களை மீண்டும் தேயிலை தோட்டங்களிற்கு இழுத்து தள்ளும் வகையில் செயல் படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறாக அவலம் தொடரும் நிலையில் இலங்கையில் தேயிலையிற்கான வெளிநாட்டு சந்தையில் கேள்வியினை அதிகரிக்கும் எந்தவிதமான முன்னகர்வுகளையும் காணக்கூடியதாகத் தெரியவில்லை. எமது நாட்டின் தேயிலை 1995இல் உலக தேயிலை நுகர்வின் 23% பூர்த்தி செய்தாலும் எமது நாட்டிற்கு பின்னர் (1903) தேயிலை உற்பத்தியை ஆரம்பித்த கென்யா எமது நாட்டின் தேயிலை ஏற்றுமதியினை விஞ்சும் அளவில் தமது ஏற்றுமதியை அதிகரித்துள்ளது. எமது நாட்டின் தேயிலைக்கு தனி சிறப்பு காணப்பட்டாலும் எமது நாட்டினால் சரியான முறையில் கேள்வி நிரம்பல் செய்ய முடியாமையினால் கொள்வனவு செய்யும் நாட்டினர் வேறு நாடுகளில் இருந்து விலை கூடிய தேயிலைகளை கொள்வனவு செய்து நுகர்வதற்கு உந்தப்படுகின்றனர். இந்தக் கேள்வியினை ஈடுசெய்ய முடியாமைக்கு பெருந்தோட்டக் கம்பனிகள் ஏற்கனவே கூறியது போல தொழிலாளர்களுக்கு உரிய வேதனம் அல்லது உரிமைகள் வழங்கபடாமையும் ஒரு காரணியாகும். அத்துடன், அரசு தேயிலை உற்பத்தியை ஊக்குவிப்பதில் கவனம் எடுக்காமை, தேயிலை ஆராய்ச்சி நிலையங்களுக்குத் தேவையான அனுசரணை வழங்காமை, பிற நாடுகளில் கடைப்பிடிக்கும் நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிக்காமை போன்ற பல காரணிகள் எமது நாட்டின் தேயிலை உற்பத்தியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைகின்றது. எமது அயல் நாடான இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் பல புதிய தொழில்நுட்பங்களை பரீட்சிக்கின்றனர். உதாரணமாக அதிர்வலைகளை (Vibrational Waves)  உபயோகித்து தேயிலை செடிகளுக்கு தீங்கு விளைவிக்கும் பீடைகளை அழிக்க தொழில்நுட்பங்களை பரீசித்த வண்ணம் உள்ளனர். இவற்றை நோக்கும் போது எமது தேயிலை ஆராய்ச்சி நிலையங்களின் மூலம் பெறக்கூடிய உச்ச பயனை அடைய எமது நாடு இன்னும் தயார் நிலைக்கு வரவில்லை என்றே கூற வேண்டும்.

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க பெரும்பாலும் தேயிலை பறிப்பதை தொழிலாக கொண்டுள்ள மலையக மக்கள் தமது உரிமைகளை பெற 19ஆம் நூற்றாண்டு தொடக்கம் போராடினாலும் அவர்களின் போராட்டங்களை மழுங்கடிக்கும் முகமாக பல முன்னகர்வுகளை அந்தந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் முன்னெடுத்துள்ளனர். இதன்படி சில  போராட்டங்களில் கந்தன், எபிராம் சிங்கோ போன்றோரின் உயிரை மாய்பதின் மூலம் போராட்டங்களை அடக்க முற்பட்டுள்ளனர். பின்னர் இலங்கையில் ஒற்றுமையாக வாழ்ந்த சிங்கள, தமிழ் மொழி பேசும் மக்களிடையே பேதத்தை உண்டாகும் மொழிக்கொள்கையை 1956இல் அறிமுகப்படுத்தியதன் மூலம் பிரிவினையை உண்டாக்கினர். இதனடிப்படையில் 1958இல் உருவாக்கப்பட்ட தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் தனி சிங்கள மொழி பேசும் தோட்ட தொழிலாளர்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்தச் செயலானது அதுவரை காலமும் ஒன்றாக செயற்பட்ட தமிழ்,சிங்கள தோட்ட தொழிலாளர்களின் பலத்தை சற்று குறைத்தது. ஆயினும், இந்தச் செயல்களின் மூலம் தோட்ட தொழிலாளர்களின் போராட்டங்களை முடக்க முடியாமல் போனது. அதனடிப்படையில் பல முன்னகர்வுகள் மேற்கொண்டாலும் அவற்றை வாக்கு குண்டுகளாக பாவித்து தொழிற்சங்கங்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பாதாளத்தில் தள்ளி விட்டிருப்பதை நம்மில் பலர் உணர்ந்துள்ளனர்.

அந்த வகையில் இனியும் அவர்களின் நயவஞ்சக செயல்களுக்கு அடிபணியாது உரிமைகளை வெல்ல ஒன்று சேர வேண்டும். மக்களின் உணர்ச்சிகளை தூண்டி அடையாள அரசியல் செய்யும் எவரையும் இனியும் ஏமாற்ற இடமளிக்காது உண்மையாக உணர்வுடைய ஆற்றல் உடைய, அனுபவ தேர்ச்சி மிக்கவர்களை இனங்கண்டு அவர்களை சரியான வழியில் அழைத்து செல்வதன் மூலமே விடிவை நோக்கிச் செல்லலாம்.

கிரிஸ்ணகுமார்

 

 

இலங்கையில் தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவருகிறது. இதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் இலங்கை தேயிலைச் சபையினாலும், அமைச்சினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச தேயிலை சம்மேளனமும் இடம்பெற்றுவருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு இலங்கையில் 150 வருட தேயிலை உற்பத்திக்காக பரம்பரை பரம்பரையாக உழைத்துவரும் ஒரு மலையகத் தோட்டத் தொழிலாளியேனும் அழைக்கப்படவில்லை என்று அறியமுடிகிறது. தேநீரை சுவைப்பவர்கள், தேயிலையை விற்பனை செய்பவர்கள் கொண்டாட்டங்களை நடத்த தேயிலையை உற்பத்தி மலையக தோட்டத் தொழிலாளிகள் நாட்டின் சக பிரஜைகள் அனுபவிக்கும் உரிமைகளைக் கூட பெறமுடியாமல் தேயிலை மரத்துக்கு உரமாகிக்கொண்டிருக்கிறார்கள்.