பிரதான பட மூலம், @vikalpavoices
சிரேஷ்ட கலைஞரும், ஆசிரியரும், 9 தேசிய முத்திரைகளை வடிவமைத்தவருமான திரு. ஆசை ராசையா (70) அவர்கள், கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற தேசிய ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை விழா 2017 இல் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார் (இன்னும் இரு சிரேஷ்ட கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டது).
திரு. ராசையா அவர்களை 2010 யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன். மிகவும் மென்மையாக பேசக்கூடிய நல்ல மனிதர். 1983 கலவரத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவர் என்கிற வகையில் அயோக்கியத்தனத்தின் உச்சத்தை காணவும் அனுபவிக்கவும் அவருக்கு நேர்ந்தது. அவ்வாறிருந்தும், நான் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களிலேயே மனக்கசப்போ, கோபமோ அற்றவராகவே அவர் இருந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியில் ஓவியக்கலை ஆசிரியராக இருந்த நாட்களையும், சிங்கள வீட்டுரிமையாளரான தனது மனைவியையும், ரோயல் கல்லூரியின் சிங்கள அதிபரையும் பல சிங்கள நண்பர்களையும் சக-ஓவியர்களையும் அவர் பிரியமாக நினைவுகூறுகிறார். அவர்களின் இனத்தை நான் குறிப்பிட்டதற்குக் காரணம், அவர் தன் கதையை அவ்வாறாகவே தொடர்புபடுத்துகிறார். ஆம், அவர் கறுப்பு ஜூலையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர். ஆம், அவை சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன் சிங்கள கலகக்காரர்களினால் வழிநடத்தப்பட்டது. ஆனால், அவை எதுவும் அவரது கதையிலோ தொடர்பாடலிலோ தாக்கத்தைச் செலுத்தவில்லை. தனது வாழ்க்கையின் குரூர அனுபவங்களோ, அவரை நோக்கி பிரயோகிக்கப்பட்ட அநீதிகளோ, தன்னை வரைவிலக்கணப்படுத்தவும், தனது வாழ்க்கை முறையில் ஆதிக்கம் செலுத்தவும் அனுமதிக்காமலிருக்கும் அவரது ஆற்றல், என்னை ஒவ்வொரு நாளும் ஆச்சரியப்பட வைத்தது.
83 கலவரம் வெடித்தபோது திரு. ராசையா கொழும்பு ரோயல் கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அப்போது கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் அமைக்கப்பட்ட தற்காலிக இடப்பெயர்வு முகாமில் ஆயிரக்கணக்கான ஏனைய தமிழருடன் இணைந்து கப்பலில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டார். அவரால் தமது குடும்பத்தினரை தொடர்புகொள்ளமுடியாமல் போனபோது, அவரது குடும்பத்தினர் அவர் இறந்துவிட்டதாக நினைத்தனர். அவருக்காக 14 நாட்களாக உறக்கமின்றி காத்திருந்த அவரது தாயார், அவர் வீடுதிரும்புவதற்கு ஒரு நாளைக்கு முன்பு மனஉளைச்சல் மற்றும் அதீத களைப்பின் காரணமாக உயிரிழந்தார். தனது தாயாரின் உயிரிழப்பிலிருந்து அவர் முழுவதுமாக மீளமுடியாமல் இருப்பதுடன் ஓவியம் கற்றுக்கொடுப்பதற்காக கொழும்பு திரும்பவுமில்லை.
கலவரத்திற்குப் பின்னர், பாதிக்கப்பட்ட அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும், ஓய்வூதியத்துடன்கூடிய குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரான பணிஓய்வு என அறிவித்து ஒரு விசேட சுற்றறிக்கையொன்றை அரசாங்கம் வெளியிட்டது. அவர் அனுபவித்து வந்த அதீததாக்கம் மற்றும் வேதனையால் அந்த சுற்றறிக்கைக்கு அமைவாக முற்கூட்டிய பணிஓய்வுக்கு அவர் முயற்சித்தார். அன்றிலிருந்து இன்றுவரை அவர் ஒவ்வோர் இடமாக அலைக்கழிக்கப்பட்டு வந்ததுடன் அரசாங்கத் தொடர்பாடல்களின் பெரும்பான்மையானவை சிங்கள மொழியில் இருக்கும்பட்சத்தில் அதனை வாசித்து மொழிப்பெயர்ப்பு செய்யக்கூடிய ஒருவரை தேடவும் வேண்டிய தேவை ஏற்பட்டது.
அத்துடன், இத்தனை வருடங்களில் நூற்றுக்கணக்கான ஆவணங்களையும் மனுக்களையும், பற்பல அரசாங்க அலுவலகங்களுக்கும் குறிப்பாக கல்வி அமைச்சு, பொதுமனுத்தாக்கல்கள் செயற்குழு, அரச சேவை ஆணைக்குழு, நிர்வாகத்திற்கான நாடாளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மென்), ஜனாதிபதி செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு அனுப்பியும் எந்தவிதமான நன்மையும் கிடைக்கவில்லை. அவரது நீடித்த ஓய்வூதியத்தையும் நிலுவைகளையும், கடந்த 3 தசாப்தங்களாக வழக்குகளுக்கு செலவழித்த தொகையையும் (இத்தொகையே குறைந்தபட்சம் ஒரு மில்லியன்) அவர் பெற்றுக்கொள்வதற்காக உகந்த நடவடிக்கை எடுக்கும்படி ஒம்புட்ஸ்மன் அலுவலகமும் (2001) மனித உரிமைகள் ஆணைக்குழுவும் (2012, 2017), கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உறுதியான சிபாரிசுகளை செய்துள்ளன.
அவர் தற்போது கழுத்தெலும்பு தேய்வு, இரத்த அழுத்தம், விரிவடைந்த சுரப்பி, கைகள் மற்றும் கால்களில் உணர்ச்சியின்மை (நீண்டநேரம் நிற்க முடியாமை), மூட்டுக்காய்ச்சல் ஆகிய சில வியாதிகளுடன் அவதியுறுகிறார். இதனால், அவருக்கு ஓவியம் வரைவதற்கு இயலாமல் இருப்பதுடன் இத்தனை வருடங்களில் சேமித்துவைத்த சிறியதொகையில் வாழ்க்கையைக் கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது. ஓய்வுதிய வழக்கிலேயே பெரும்பான்மையான சேமிப்பை அவர் இழந்திருப்பதால் தற்போது தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதில் பெரும்பாடுபடுகிறார்.
அமைச்சர்களுக்கு அரச செலவில் சொகுசு வாகனங்களும், மனைகளும், வெளிநாட்டு பயணங்களும் வழங்கப்படுகின்ற இந்தக் காலத்தில், தேசத்தின் கலை கலாச்சாரத்திற்கு செறிந்த பங்களிப்பை ஆற்றிய தேசத்தின் பொக்கிஷமான திரு. ராசையா அவர்களுக்குரித்தான நிலுவைகளை பெற்றுக்கொடுப்பதற்கு 3 தசாப்தங்களுக்கும் மேலாக காலம்தாழ்த்துவது அருவருக்கத்தக்கதொன்றல்லவா?
மரிசா டி சில்வா