பட மூலம், Eranga Jayawardena Photo, Huffingtonpost

புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல் 2015ஆம் ஆண்டே ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான குழு நாடுமுழுவதுமாகச் சென்று அரசியலமைப்பு தொடர்பாக மக்களிடம் கருத்துக்களை அறிந்துகொண்டது. அவ்வாறு மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையிலும் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பெரும்பாலான பகுதிகளில் மிக முக்கியமான யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் இது தொடர்பாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை அரசாங்கமோ அல்லது சிவில் சமூகமோ மேற்கொண்டிருக்கவில்லை.

இந்த நிலையில், புதிய அரசியலமைப்பால் மிகப் பெரிய அழிவொன்று நிகழப்போகிறது என்று மூன்று பிரதான நிக்காயக்களும் தெரிவித்துவருகின்றன. அத்தோடு, இந்த விடயம் தொடர்பாக நிக்காயக்கள் ஜனாதிபதியிடம் யோசனைகளையும் முன்வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1978ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனவால் அறிமுகம் செய்யப்பட்ட அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடாது, இந்த நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு அவசியமில்லை என்றே நிக்காயக்களின் கருத்தாக இருக்கிறது.

1978 அரசியலமைப்புதான் வேண்டும் எனக் கோரும் தேரர்களுக்கு அதில் உள்ள சில விடயங்களை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

வாழ்வதற்கு உள்ள உரிமை

தேரர்களே, தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பில் “வாழ்வதற்குள்ள உரிமை” மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறீவீர்களா? அதனால், புதிதாக உருவாக்கப்பட்டுவரும் அரசியலமைப்பில், உங்களுக்கு தானம், காவி உடை வழங்கவுள்ள மனிதர்களைப் போன்று ஏனையோருக்கும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பை புத்தரின் புத்திரர்களாகிய உங்களால் நிராகரிக்க முடியுமா? இதனை நிராகரிப்பதன் மூலம் நீங்கள் கௌதம புத்தரை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?

மற்றையது, புதிய அரசியலமைப்பின் ஊடாக கல்விக்கு, சுகாதாரத்துக்கு இருக்கும் உரிமை உறுதிப்படுத்தப்படும் நிலையில் அதனையும் உங்களால் நிராகரிக்க முடியுமா? புதிய அரசியலமைப்பு வேண்டாம், பழையது சிறந்தது என்பதை தர்க்கரீதியில் உடனடியாக மக்களிடம் விளக்கிக் கூறுங்கள். கல்விக்கான, சுகாதாரத்துக்கான, வாழ்வதற்குள்ள உரிமை நீங்கள் பாதுகாக்க முற்படும் 1978 அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதாலேயே நான் இதனைக் கூறுகிறேன். தெரியவில்லை என்றால் உங்களிடத்தில் வரும் பக்தர் ஒருவரை அனுப்பி 1978 அரசியலமைப்பை எடுத்துவந்து வாசித்துப் பார்க்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்வதற்குள்ள உரிமை​யை ஏற்றுக்கொள்ளும் புதிய அரசியலமைப்பு உங்களுக்கு அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், அது நாட்டு மக்களுக்கு அத்தியாவசியமானதொன்றாகும். ராஜபக்‌ஷாக்களின் போதனையை கேட்டு நீங்கள் செயற்படுவதால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளே மறுக்கப்படுகின்றன.

குறைந்தபட்சம் அரசியலமைப்பை வாசிக்கவேண்டும், நேரமில்லை என்றால் மக்களுக்கு உபதேசம் செய்துகொண்டு ஞானம் பெறுவதற்கான வழியைத் தேடவேண்டும்.

(அதேவேளை, மக்களின் கருத்துக்களடங்கிய புதிய அரசியலமைப்பை விட மோசமானதொன்றை நல்லாட்சி அரசாங்கம் முன்மொழியுமானால் அதற்கு எதிராகவும் மக்கள் வீதியில் இறங்குவார்கள் என்பதையும்  நினைவில்வைத்திருக்க வேண்டும்.)

හාංදුරුවනේ ‘ජීවිතය’ එපාද? என்ற தலைப்பில் விகல்ப தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்