பட மூலம், lankainformation.lk
அரசியல் செய்வதற்கோ அல்லது எந்தவொரு கைத்தொழிலை செய்வதற்கோ முதலில் ஒரு நாடு இருக்கவேண்டும். நாடு என்பது ஒரு பூமித் துண்டல்ல. தங்களுக்குத் தேவையானவற்றை செய்துகொள்ளும் ஒரு பூமி இது என்று நாட்டில் உள்ள ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது செயற்பாட்டால் நாட்டின் இருப்புக்காக உறுதிப்படுத்த வேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கும், அந்தச் சட்டத்தின் ஆட்சியின் கீழ் உறுதிப்படுத்தப்படும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நாட்டில் உள்ள மனிதர்களின் உயிர் குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல், மனித உயிர்களை வைத்து பேரம் பேசி, உடலங்களைக் கொண்டு பணம் சம்பாதித்த கொடூரமான, மிருகத்தனமான செயற்பாட்டை பின்புலமாகக் கொண்டு தெரிவிக்கப்பட்ட இரு கருத்துரைகள் குறித்து மேலுள்ள விடயத்தை நினைவில் வைத்துக்கொண்டு அவதானம் செலுத்தவேண்டியிருக்கிறது.
குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வீரவன்சவின் கருத்து
பொது எதிரணியின் முன்னணி பேச்சாளரான விமல் வீரவன்ச தெரிவித்திருக்கும் கருத்து குறித்து முதலில் நாம் அவதானம் செலுத்துவோம். பொது எதிரணி ஊடகவியலாளர் மாநாட்டின் போதே வீரவன்ச இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார். கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான டி.கே.பி. தஸநாயக்க கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே ஊடகவியலாளர் மாநாட்டை வீரவன்ச ஏற்பாடு செய்திருந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. டி.கே.பி. தஸநாயக்க ஒரு சிறந்த இராணுவ வீரர் (ரணவிருவா) என பொது எதிரணியில் உள்ள பெரும்பாலானவர்கள் கூறுவதைப் போன்றே வீரவன்சவும் கூறினார். தஸநாயக்க கடற்படையில் உயர் பதவியை வகித்த ஒரு அதிகாரி என்றும் அவர் கூறினார். இவர் போன்றோரை எந்தவொரு குற்றச்சாட்டும் சுமத்தி கைதுசெய்ய முடியாது என்றே விமல்வீரவன்ச வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்லியிருந்தார்.
முறைப்பாடு கடற்படைத் தளபதியால்
கமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க கைதுசெய்யப்பட்டதன் பின்னணி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்கு முன், அவர் கைதுசெய்யப்படுவதற்கு காரணமாக அமைந்த முறைப்பாட்டை செய்தவர் யார் என்பதை தேடிப்பார்ப்பது முக்கியமானது. அவர் வேறுயாருமல்ல, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவே அந்த முறைப்பாட்டைச் செய்திருக்கிறார். மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் முப்படையின் தளபதியாகவும் இருந்த காலப்பகுதியில்தான் முன்னாள் கடற்படைத் தளபதி இந்த முறைப்பாட்டைச் செய்திருக்கிறார்.
28 பேரை கடத்திக் கொலைச் செய்வது இராணுவ வீரச் செயலா?
விமல் வீரவன்சவால் இராணுவ வீரராகக் கொண்டாடப்படும் கமாண்டர் தஸநாயக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்வென்பதை இப்போது பார்ப்போம். தீவிரவாதிகளுடன் அல்லது தீவிரவாதத்துடன் எந்தவிதத்திலும் தொடர்புபடாத 28 பேரை கடத்திச் சென்று கொலை செய்தமையே அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும். முன்னாள் கடற்படைத் தளபதியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம், கப்பம் பெறும் நோக்கிலேயே இந்த 28 பேரும் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என தற்போது தெரியவந்துள்ளது. பணம் பெறும் நோக்கிலேயே இந்தக் கொடூரமான, மிருகத்தனமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் சாட்சிகள் இருப்பதாகத் தெரிவிக்கும் பொலிஸார், நீதிமன்றில் வழக்கொன்றையும் தொடர்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். இந்த நடவடிக்கையின் பிறகே நீதிமன்றின் உத்தரவுக்கமைய கமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க கைதுசெய்யப்பட்டார்.
கொலையாளிகளைப் பாதுகாக்கும் வீரவன்சவின் கொள்கை
விமல் வீரவன்ச கூறுவதைப் போன்று, கொலைகள் உட்பட பாரதூரமான குற்றங்களைச் செய்திருப்பவர்கள் பாதுகாப்புத் துறையுடன் சம்பந்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமா என்ற ஒரு கேள்வி எழுகிறது. அவரது கருத்தின் படி, ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் கொலை ஒன்றைச் செய்தமைக்காக நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள வாஸ் குணவர்தனவும் விடுவிக்கப்பட வேண்டியவராவார். மாணவி வித்தியா வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட நபரை பாதுகாக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதாகிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரையும் விடுதலை செய்யவேண்டும். இதுபோன்று இறந்த காலத்துக்குச் சென்று, கொலை மற்றும் பாரிய குற்றங்கள் செய்தமைக்காக நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட்ட பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் விடுதலை வழங்கப்படவேண்டும்.
சட்டத்தின் ஆட்சியின்றி அராஜக ஆட்சிமுறை ஒன்றை நோக்கி நாடு தள்ளப்பட்டுக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது உண்மைதான். ஆனால், ஒரு துளி இரத்தம் சிந்தாமல் தங்களுடைய இறையாண்மைப் பலத்தைப் பயன்படுத்தி அந்த கொடுங்கோல் ஆட்சியை மக்கள் முடிவுக்குக் கொண்டுவந்திருந்தனர். இப்போது விமல் வீரவன்ச உட்பட பொது எதிரணியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் நாட்டை மீண்டும் அந்த அராஜக நிலையை நோக்கி கொண்டுசெல்வதற்காகவே செயற்பட்டுவருகிறார்கள். நூற்றுக்கணக்கான மனிதர்களைக் கொன்று பணம் சம்பாதிக்கும் அந்த ஆட்சியை நோக்கி நாட்டை தள்ளவே இவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
புதிய பாதுகாப்புச் செயலாளர் மல்வத்து தேரரிடம் தெரிவித்த விடயம்
அவர்களது அந்தக் கொடூர கனவுக்கு சட்டத்தரணியான பாதுகாப்புச் செயலாளர் சரியான பதில் ஒன்றை வழங்கியிருக்கிறார். கடந்த வாரம் மல்வத்து தேரரைப் புதிய பாதுகாப்புச் செயலாளர் சந்தித்திருந்தார். அதன்போது, தான் ஒருபோதும், எந்தக் காரணம் கொண்டும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்றும், ஆனால், குற்றங்களில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினரை ஒருபோதும் பாதுகாப்பதற்குத் தான் தயார் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
நாங்கள் வாழ்ந்துகொண்டிருப்பது வெற்று பூமியில் அல்ல. நீதியாக நடக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு நாட்டில் என்பதை பாதுகாப்புச் செயலாளரின் பேச்சு உறுதிப்படுத்துகிறது. இதன் பொருட்டே அவரது இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
சுனில் ஜயசேகர எழுதி ‘சிறிலங்கா ப்றீப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.