படம் | AFP, scmp
“யாழ்ப்பாணத்து மாம்பழம் தனி ருசி
யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் தனி ருசி
யாழ்ப்பாணத்து புகையிலை தனி ருசி
யாழ்ப்பாணத்தானும் ஒரு தனி ரகம்”
– நிலாந்தன் –
சில நாட்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, “நீ கதைக்கிறது ஒரு மெல்லிய ஆங்கிலம் கலந்த, சினிமாப் பாணியான தமிழ்” என்ற தொனிப்படக் கூறியிருந்தார். ஆம். அது சரிதான்.
“தொனி” தான் நாம் இப்போது பேசப்போகும் பிரச்சினை. யாழ்ப்பாணத்தின் தனித்த அடையாளங்களை சொல்லிக்கொண்டே போகும்போது முதலில் சொல்லத் தொடங்குவது அதன் வித்தியாசமான அழகான தமிழை உச்சரிக்கும் பாணியைத்தான். யாழ்ப்பாணத்து அன்ரிமார் “இஞ்சருங்கோ” என்று அழைப்பதில் தொடங்கி, அதன் காதல் இழைந்து கிடக்கும் தனித் தொனி தன்னை இழந்து வருகிறதா என்று கேட்டுக்கொண்டால், பதில், “ஆம்” என்றுதான் வரும்.
இலகுவான ஒரு சாட்சி, சமீபத்தில் வெளிவரும் குறும்படங்களில் இதன் தாக்கத்தையும், தாக்கத்தை மீறி அதன் இயல்புத் தன்மையை பேணும் பிரயத்தனங்களையும் சொல்லலாம்.
ஆனால், இது சரியாயிருக்குமா? நாம் நமது மொழியை, அது ஏற்கனவே கொண்டிருக்கும் ஒலியமைப்பிற்கு ஏற்ப உச்சரிப்பது ஏன்? அவ்வாறு உச்சரிக்காமல் இருப்பதால் என்ன நேர்ந்துவிடப் போகிறது?
முதலில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது, இது சரியோ அல்லது தவறோ, ஆனால் இப்படி நிகழும் மாற்றத்தை தடுப்பதென்பது மிகவும் கடினம். கிட்டத்தட்ட முடியாது. ஆனால், அது அதன் அழகியலை, தொன்மையை, அடையாளத்தை இழந்துவருகிறது என்பதை உணர்த்த முடியும்.
ஒன்று, நாம் நமது ஒலியமைப்பைக் கொண்டு நம்மை வேறுபடுத்துவது சரியாயிருக்குமென்று தோன்றவில்லை. ஆனால், பொதுவாக எல்லா நிலங்களின் வட்டார மொழியும் அதனை உச்சரிக்கும் பாணியும் அவர்களை யாரென்று காட்டிவிடும். மட்டக்களப்பு தமிழ், மலையகத் தமிழ்… என்று மாறுபடும் தொனிகளில் அவர்கள் தமது பின் புலத்தை சொல்லி விடுகிறார்கள். இப்போதுள்ள பிரச்சினை, அது (தொனி ) ஒரு அடையாளமாக பார்க்கப்படுமிடத்து அடையாளமிழத்தல் ஒரு பாதிப்பு என்பதே. இதை ஒரு சீரழிவு என்று கருதுவதை விட பண்பாட்டு பிறழ்வு அல்லது கொஞ்சம் மென்மையாக பண்புரு மாற்றம் என்று கருதலாம் .
இரண்டு, உச்சரிக்காமல் விடுவதால் ஒன்றும் பெரிதாக நேர்ந்துவிடப் போவதில்லை, தொனி மாற்றம் என்பது உலகமயமாதலின் ஒரு விளைவு தான், தொலைக்காட்சி, பேஸ்புக் என்று வீட்டுக்குள் நுழைந்திருக்கும் உலகமும், அதனால் வெளியில் நாம் புழங்கும் சம வயதினை ஒத்த உலகமும், அதன் மீது கொள்ளும் கவர்ச்சியும், அதை பிரயோகிக்க காட்டும் அக்கறையும்தான் அதன் உடனடி விளைவுகளுக்குக் காரணம். ஒரு குழந்தை தான் வளரும் சூழலில் உச்சரிக்கப்படும் தொனியையே பின்பற்றும். இதை சாதாரணமாக பறவைகளின் தொனி வேறுபாட்டுடன் கூட ஒப்பிடலாம். நகரங்களில் வாழும் பறவைகள் இப்போது அவ்வளவாக அதன் சொந்த அமைப்பில் ஒலிப்பதில்லையென ஆய்வுகள் சொல்லுகின்றன.
சமீபத்தில் ஒரு ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண், பக்கத்தில் வந்து கொண்டிருந்த ஒரு சிறுவனை இன்னொருவன் அடித்ததற்கு “ஏய், எங்க சங்கத்து ஆளு மேல கைய வைச்சா, கொண்டே போடுவன்” என்று சொன்னாள். இன்னொரு சந்தர்ப்பம் சமீபத்தில் நடந்த விழாவொன்றில் (இது குறும்படங்கள் பற்றிய விழா) அதில் சிறந்த குறும்படத்திற்கான விருதை வாங்கிய அதன் இளம் வயது இயக்குனர், பேசிய பேச்சில், அப்படியே தென்னிந்திய சினிமா சனல்களின் தாக்கம் தெரிந்தது. இப்படி அவதானித்தால், நாளொன்றுக்கு ஒவ்வொருவரைச் சுற்றியும் தொனி வேறுபாட்டுடன் பேசும் பலரையும் அவதானிக்க முடியும் .
இந்த மாதிரி எழுதி அப்படி பேசுவதை கண்டனம் செய்வதோ புத்தி கூறுவதோ இப்பத்தியின் நோக்கமல்ல. வெகு அழகானதொரு உச்சரிக்கும் தொனி அழிகிறது என்ற கவலைதான் இதற்குக் காரணம். ஆங்கிலத்தில் பேசும்போது கூட ஓஷோவின் உரைகளில் அவரது சொந்த மொழியின் அழகுடனே அதை உச்சரிப்பார். அந்த ஆங்கிலம் கவிதையாவது அப்படித் தான். உலகின் தலை சிறந்த பேச்சாளரான ஹிட்லர், ஜெர்மன் மொழியில் பேசும்போது அதை உச்சரிக்கும் விதம் அந்த அழகு, அதன் பிரயோகம்தான் அந்த நாட்டின் மக்களை அவரை நம்பச் செய்தது. எப்படியோ, தொனி மக்களின் உணர்வுகளை ஒருவித, கண்டுபிடிக்கக் கடினமான இழையில் கோர்த்து வைத்துள்ளது என்பது உண்மை.
இதன் பின் நீங்கள் உச்சரிக்கும் தொனியை கவனித்துப் பாருங்கள். புதிதாக நீங்கள் பேசும் பாணியை அதில் பயன்படுத்தும் சில சொற்களை, உதாரணம் “கலாய்க்கிறது” போன்ற சொற்கள், அதன் அபத்தங்களை உணர்ந்தீர்கள் என்றால், யாழ்ப்பாணத்து தமிழும் ஒரு தனி ருசி என்று நினைத்தீர்கள் என்றால், கஷ்டப்பட்டு இதை டைப் செய்த கைகளுக்கு முத்தம் கொடுத்தது போல் இருக்கும்.
கிரிஷாந்