படம் | Sri Lanka Air Force Photo, New York Times

இலங்கை 2003ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு மற்றும் பல மண்சரிவுகளுக்கு முகம்கொடுத்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பொருந்திய நிலையில் காணப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையும் செய்திருந்தது. தங்களுடைய உரிமைப் போராட்டத்துக்கு தென்னிலங்கை சிங்கள மக்களின் ஆதரவு அவசியம் தேவைப்படும் என்று நினைத்தார்களோ தெரியவில்லை, இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பவென தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களிடம் நிவாரணப் பொருட்களைச் சேகரித்தார்கள். பின்னர் பல லொரிகளில் அனுப்பப்பட்டிருந்த நிவாரணப் பொருட்கள் இரத்தினபுரி மக்களுக்கு வழங்கப்பட்டன.

இன்று நாம் முகம்கொடுத்திருக்கும் அனர்த்தம் 2003ஆம் ஆண்டு ஏற்பட்டதை விட பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் சரியான தொகை இன்னும் கணக்கிடப்படாத போதிலும் அது முன்னூறு நானூறாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். 2000இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. தன்னால் மட்டும் இந்த அனர்த்தத்துக்கு முகம்கொடுக்க முடியாது என்று எண்ணிய அரசாங்கம் சர்வதேசத்திடமும் நிவாரண உதவியைக் கேட்டுள்ளது.

மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்களை தமிழீழ விடுதலைப் புலிகள் 2003ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்தத்தின்போது தென்னிலங்கை மக்களுக்கு வழங்கியபோதிலும் 2017ஆம் ஆண்டு அப்படியே மாறுபட்ட நிலைமை ஒன்றை வடக்கில் காணக்கூடியதாக இருக்கிறது. அனர்த்தம் அகோரமாக இருந்த 29ஆம் திகதியன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கிளிநொச்சியில் ஒன்றுதிரட்டிய அரசியல்வாதிகள் ஏ 9 வீதியை வழிமறித்தனர். ஜனாதிபதிக்கு மனுவொன்றை வழங்கிய ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள், ஜனாதிபதியை தாங்கள் சந்திக்கவேண்டுமென கோரியதாக தமிழ் சமூக வலைதளங்கள் காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதியின் பதில் கிடைக்கும் வரை போக்குவரத்துக்கு இடமளிக்கமாட்டோம் என அங்கு உட்காரந்தவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த மக்களின் கோரிக்கை நியாயமானது. காணாமலாக்கப்பட்ட தங்களது உறவுகளின் உண்மை நிலை என்னவென்பதை தங்களுக்குத் தெரிவிக்குமாறே அவர்கள் கோருகிறார்கள். இதற்குத் தீர்வாக அரசாங்கத்தால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான அலுவலக சட்டம் இன்னும் கிடப்பில். தங்களுடைய போராட்டம் 100 நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு 29ஆம் திகதி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏ 9 வீதியை மறித்தார்கள். 100 நாட்களாகப் போராடிவரும் இம்மக்களுக்கு அரசாங்கம் இதுவரை சாதகமான பதில் எதையும் வழங்கவில்லை.

நாட்டில் ஒரு மக்கள் பிரிவினர் பெரும் அனர்த்தமொன்றுக்கு முகம்கொடுத்திருக்கும் போது, இன்னும் ஒரு தொகை மக்கள் சுயேச்சையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்துகொண்டிருக்கும்போது, கிளிநொச்சியில் தமிழ் மக்கள் வீதியை மறித்து அரசாங்கத்திடம் உடனடியாக பதிலொன்றை கோரி நிற்பது அரசியல் ரீதியில் சரியான விடயமா அல்லது பொருத்தமானதுதானா என்ற கேள்வி எழுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்த அரசியல் தந்திரோபாயத்தைக் கூட வடக்கில் காணாமலாக்கப்பட்டோர் அல்லது பாதுகாப்புப் படையினர் வசமிருக்கும் பொதுமக்களின் காணிகளை மீளப்பெறுவது தொடர்பாக நடத்தப்பட்டுவரும் போராட்டங்களில் தலைமைத்துவம் வகிப்பவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதில் ஒரு சிலர் சிங்கள எதிர்ப்பாளர்கள். சிங்கள அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு விருப்பம் இல்லாதவர்கள். அதற்கு ஒரு சிறந்த உதாரணம்: மன்னார் பகுதியில் காணாமல்போனோர் தொடர்பாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த அமைப்பொன்றுடன் இணைந்து செயற்படவேண்டாம் என தமிழ் மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ராஜபக்‌ஷ ஆட்சிக்காலப்பகுதியில் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி போராடிவந்த அந்த அமைப்புக்கு மன்னார் மாவட்டத்தில் தங்களது செயற்பாட்டை நிறுத்தவேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது.

கருத்தியல் ரீதியில் சிங்கள தேசியவாதிகளுக்கும் தமிழ் தேசியவாதிகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. நாடு மற்றும் மக்கள் முகம்கொடுத்திருக்கும் அனர்த்த சூழ்நிலைகளுக்கு மத்தியில், தன்னால் ஒரு நாளைக்குள் நாட்டினுள் பதற்ற நிலையை ஏற்படுத்த முடியும் என ஞானசார தேரர் கூறுகிறார். முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக கலவரமொன்றை ஏற்படுத்தவது குறித்தே அவர் கூறுகிறார். இந்த நிலையில், தமிழ் அடிப்படைவாதிகள் வெள்ள அனர்த்தத்துக்கு மத்தியில் வீதியை மறிக்கிறார்கள்.

மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், பிரதான தமிழ் அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, எதிர்க்கட்சிக்குண்டான பொறுப்பை நிறைவேற்றுவது ஒருபுறமிருக்க, தமிழ் மக்களின் போராட்டங்களில் தலைமை தாங்குவதிலிருந்து கூட பின்நிற்கிறது. ஒருசிலவேளை அது சிறிசேன – ரணில் அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்திருப்பதினால் இப்படி செயற்படலாம். தெற்கில் அரசாங்கத்தை நடத்திச் செல்பவர்களின் அசமந்தப் போக்கினால் ஞானசார – விமல் வீரவன்ச போன்றோர் தலைதூக்கி வருகிறார்கள். அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசாங்கம் தொடர்ந்து ஏமாற்றிவருவதால் வடக்கிலும் அடிப்படைவாத சக்திகள் தலைதூக்குகின்றன.

நல்லாட்சியை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இரண்டு வருடங்கள் போதாது என்றபோதிலும் அந்தப் பாதையிலாவது நாட்டை கொண்டு செல்ல முயற்சித்திருந்தால் இதுபோன்ற துரதிஷ்டமான சம்பவங்கள் இடம்பெறாமல் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

சுவாமிநாதன் வீடுகள்

இந்த நாட்டின் தமிழ் மக்கள், அனைத்து சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் மறுத்துவருகின்ற நிலையில், மீள்குடியேற்றத்துக்குப் பொறுப்பான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் சுவாமிநாதன் இரும்பால் செய்யப்பட்ட பொருத்து வீடுகளை இடம்பெயர்ந்திருக்கும் தமிழ் மக்கள் மீது சுமத்த அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருக்கிறார்.

6,000 பொருத்து வீடுகளை அமைப்பதற்கு சுவாமிநாதன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமைக்கப்படும் ஒரு பொருத்து வீட்டின் பெறுமதி ரூபா 21 இலட்சமாகும். ஆர்சிலர் மிட்டல் எனும் வெளிநாட்டு நிறுவனமொன்றே இந்த வீட்டை செய்துவருகிறது. இந்த வீட்டுத் தொகுதிகளுக்கான கொடுப்பனவாக இலங்கை அரசாங்கம் கடன் வாங்க தீர்மானித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவாமிநாதன் ஆரம்பத்தில் 65,000 வீடுகள் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இருந்தபோதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வட மாகாண சபை, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, நாடாளுமன்ற கண்காணிப்புக் குழு, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு போன்றன எதிர்ப்புத் தெரிவிக்க அது கைவிடப்பட்டது.

இந்தப் பொருத்த வீட்டுக்குப் பதிலாக 8-9 இலட்சம் செலவில் கல் வீடொன்றை கட்டிமுடிக்கலாம் என வடக்கில் உள்ள சிவில் சமூக குழுக்கள் கூறுகின்றன.

மக்கள் பிரதிநிதிகளின், சிவில் சமூகத்தவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஏன் இந்த பொருத்து வீடுகள் கட்டப்படவிருக்கின்றன என்று சுவாமிநாதனுடைய கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவில் இருந்தாவது இந்த மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்?

அவுஸ்திரேலியா: அடிபணியாத தேசியம்

250 வருடங்களுக்கு முன்னர் கப்டன் குக் அவுஸ்திரேலியாவுக்கு வந்திறங்கினார். சரியாக கூறுவதானால் 1770ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் திகதி. அன்றிலிருந்து வெள்ளையர்களின் குடியேற்றங்கள் ஆரம்பமாகின.

ஆனால், 50,000 வருடங்களுக்கு முன்னர் ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய பல இன மக்கள் அந்த மண்ணை தங்களது பூர்வீக நிலமாக எண்ணினார்கள். எண்ணிக்கையில் பல இலட்சங்களாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வெள்ளையின மக்களை குடியேற்றுவதற்காக அங்கு பூர்வீகமாக இருந்த ஒரு சில இன மக்களை அவர்கள் இனப்படுகொலை செய்தார்கள். இன்னும் பலர் வெள்ளையின மக்களோடு வந்த கொடிய நோய்கள் தொற்றுண்டு இறந்துபோனார்கள்.​

இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்ற கனடா, வட அமெரிக்கா, நியூஸிலாந்து போன்ற நாடுகள் தங்களது பூர்வீக குடிமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், அவுஸ்திரேலியா இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க இன்னும் முன்வரவில்லை.

பூர்வகுடி மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கூட அண்மையில்தான் வழங்கப்பட்டது. தேசிய சனத்தொகை கணக்கெடுப்பில் அவர் சேர்த்துக்கொள்ளப்பட்டதும் 1960ஆம் ஆண்டாகும். அவுஸ்திரேலியாவில் வாழும் மொத்த சனத்தொகையான 19 மில்லியன் மக்களில் வெறும் 4 இலட்சம் பூர்வகுடி மக்களே தற்போது வாழ்ந்து வருகிறார்கள்.

பல அடக்குமுறைகளுக்கு மத்தியில் தங்களுடைய இன அடையாளங்களை பாதுகாத்துவந்த இம்மக்கள் தற்போது உரிமையை வலியுறுத்தி திடமாக போராடிவருகிறார்கள். அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் உரிமையை அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்ள கடந்த மாதம் பூர்வீகக் குடிமக்களின் 200 தலைவர்கள் இணைந்து விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். இதன் மூலம் அவர்களது  பூர்வீக உரிமை மட்டுமன்றி, வெள்ளையின மக்களால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கு நட்டஈடும் வழங்கப்படும் என நம்பப்படுகிறது.

இந்த நவீன உலகில் எந்தவொரு இன மக்களின் உரிமையையும் நிரந்தரமாக, தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உட்படுத்தமுடியாது என்பதே இதன் மூலம் தெரிகிறது.

சுனந்த தேசப்பிரிய