படம் | Dalocollis

1952ஆம் ஆண்டு முதல் தமிழ்மொழி கல்வி உரிமைக்காகப் போராடிவரும் வேவில தோட்ட மக்கள் தற்போது களைத்துவிட்டார்கள். ஆனால், போராட்டத்தைக் கைவிடவில்லை. அமைதியான முறையில் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்தக் குரல் வேவிலவுக்காக மட்டும் ஒலிப்பதல்ல. ஆங்காங்கு மலையகத்தில் தாய்மொழி தமிழில் கல்வி மறுப்பு இடம்பெறும் மக்களுக்காகவும் இவர்களது குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இரத்தினபுரி மாவட்டம் வேவில தோட்டம் சுமார் 400 ஹெக்டேயர் பரப்பு கொண்டது. நான்கு டிவிசன்களைக் கொண்டு வேவில தோட்டம் பலாங்கொடை பிளான்டேஷனைச் சேர்ந்தது. இங்கு 400 குடும்பங்கள் வாழும் இத்தோட்டம் இரத்தினபுரி மாவட்டத்தின் ஹெலியகொடை பிரதேச செயலகத்துக்கு உட்பட்டதாகும். வெளிப்பார்வையில் பசுமையாக காணப்பட்டாலும் இங்கு வாழும் மக்களது வாழ்க்கை வரண்ட பாலைவனமாக உள்ளது. தமக்கு பல குறைகள் இருந்தாலும் தம் பிள்ளைகளின் எதிர்கால கல்வி சரியான முறையில் கிடைக்கப்படவேண்டும் என இரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.

வலது கையில் வாளியும், இடது கையில் தலையிலுள்ள இறப்பர் பால் வாளியை பிடித்த வண்ணமும் இடது தோல் பட்டையில் ஒட்டுப்பால் நிறைந்த சாக்குளை ஏந்தியபடி சிலர் சென்றுகொண்டிருந்தனர். சுமைகளை கீழிறக்கி வைத்துவிட்டு ஓய்வில் இருந்தபோது அவர்களிடம் பேசினேன்.

“நாங்கள் 1949ஆம் ஆண்டு இங்க வந்தோம். இங்க தான் ஸ்கூலுக்குப் போனோம். தமிழ் ஸ்கூல். இப்போது அது இல்லை. தோடத்தை விற்கும் போது அதுவும் அதுக்கும் மூடுவிழா நடந்திருச்சி. இப்போவும் ஸ்கூல் பில்டிங் மட்டும் இருக்கு. எங்க சமூகத்தில் ஒழுங்கா தமிழ்ல படிச்சவங்க யாருமே இல்ல. எங்கட பிள்ளைகள் எல்லாம் சிங்களத்துலதான் பேசுவாங்க. சாப்பிட முடியாதுனு சொல்றத கூட “அம்மா கண்ட பே…”னுதான் சொல்வாங்க. எங்களுக்கு பின் இந்த தோட்டமும், எங்க பிள்ளைகளும் முழு சிங்களமா மாறப் போறது மட்டும் நிச்சயம்.”

தனஞ்சன் – தனஞ்சய, குமார் – குமார, சம்பந்தர் – சம்பத் என்று பிள்ளைகளின் பெயர்கள் மாறிவிட்டன என்று தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி கவலைபடுகின்றார் ஒரு தாய்.

“எங்க பிள்ளைகளுக்கு ஒரு மொன்டிசி ஒன்னு இல்ல. எமது தோட்ட நிர்வாகத்தில ஒரு ‘கிரச்’ (Crèche) இருக்கு. அங்கதான் படிச்சி குடுப்பாங்க. ஆனால், தோட்டத்தில வேலை செய்றவங்களின் பிள்ளைகளுக்கு மட்டும்தான் இங்க படிக்க முடியும் என சொல்லி மத்தவங்களை விரட்டிருவாங்க. இங்கயும் சிங்கள மொழியில தான் படிப்பிக்கிறாங்க. தமிழ் மொழியில ஒரு பாலர் பாடசாலைய தேடி போவதற்கு 20-25 கிலோமீற்றர் தூரம் போகவேண்டும். அவிசாவளை இல்லாவிட்டால் ஹெலியகொடக்கே போகனும்” என ஒருவர் கூறினார்.

இவ்வாறு தமது தாய் மொழியில் அடிப்படை கல்வியை பெறமுடியாத சூழலிலும் வேவில தோட்ட மக்களின் பிள்ளைகள் கல்வியை பெற்றே தீருவோம் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதையும் என்னால் அவதானிக்க முடிந்தது. கிடைத்ததைப் பெறுவோம் என்றாலும்கூட அதிலும் சிக்கல் என்கின்றார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர்.

“வேவில ஸ்கூல் ஆண்டு 9 வரை இருக்கு. இது சிங்கள ஸ்கூல். தோட்டத்து பிள்ளைகளில் அதிகமானோர் இங்க தான் படிக்கிறாங்க. மொத்தமாக 58 பிள்ளைகள் இந்த ஸ்கூலுக்குப் போறாங்க. மத்த பிள்ளைகள் வேற வேற சிங்கள ஸ்கூலுக்குப் போறாங்க. எங்க தோட்டத்து பிள்ளைகள் படிச்சி வெளியவர முடியாததுக்கு தமிழ் மொழிமூல பாடசாலை இல்லாததுதான் முக்கிய காரணம். வேவில ஸ்கூல்ல சிங்கள மொழி மூலமே படிப்பிக்கிறாங்க. அது ஒரு சிங்கள ஸ்கூல். எங்க பிள்ளைகளுக்காக ஒரு தமிழ் இல்லை. இந்த ஸ்கூலுக்கு எங்க பிள்ளைகள அனுப்ப வேண்டிய கட்டாயத்தில இருக்கிறோம். ஆண்டு ஒன்பதுக்கு பின் வேறு ஒரு ஸ்கூலுக்குப் போக வேண்டும். ஆனால், பிள்ளைகள் 10ஆம் வகுப்புக்கு போக மாட்டாங்க. காரணம் பிள்ளைகள் கல்வியிலும், அறிவு மட்டத்தில் குறைந்தவர்களாகவும், அறியாமை காரணமாகவும் புதிய பாடசாலையில் நிலைக்க முடியாம இடைவிலகுறாங்க.”

வேவில தோட்டத்தைச் சேர்ந் 58 மாணவர்கள் பாடசாலையில் பதிவு செய்யப்பட்டுள்ளபோதிலும் அன்றாடம் 40 – 45 மாணவர்கள் மட்டும்தான் பாடசாலைக்கு சமூகமளிக்கிறார்கள். ஏனையவர்கள் அன்றாட கூலி வேலைகளான மிளகு, பாக்கு பறிப்பதற்காக, புல், காடு வெட்டுவதற்காக போகிறாரகள் என அறியமுடிந்தது. அத்தோடு, இளவயதிலேயே போதைப் பொருள்களுக்கு அடிமையாவதாகவும், இளவயது திருமணங்கள் அதிகரித்துவருவதாகவும் அறியமுடிகிறது.

“நானும் வேவில ஸ்கூல்ல படித்தவன். 8 வரை மட்டும்தான் ஸ்கூலுக்கு போனேன். ஆனால், எனக்கு தொடர்ந்து பாடசாலைக்கு செல்ல முடியாது போனது. காரணம் அப்போது இருந்த ஒரு ஆசிரியர் என்னை காதா (பௌத்த ஸ்தோத்திரம்) சொல்லுமாறு வற்புறுத்துவார். நான் பாட மாட்டன். பிறகு என்னை அவர் இழிவுபடுத்தத் தொடங்கினார். அதனால எனக்கு ஸ்கூலுக்கு போக விருப்பம் இல்லாம போயிட்டு. இன்னைக்கி நான் தோட்ட தொழிலாளியா இருக்கேன். எனது பிள்ளைகளுக்கும் இதே நிலை என்பதை நினைச்சாலே வேதனையா இருக்கு என கவலையுடன் அவர் கூறினார்.

இதுபோன்ற பல சம்பங்களால் பலர் பாடசாலையை விட்டு இடைவிலகினர் என அவர் மேலும் கூறினார்.

இன்று குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நிலை இதைவிட மோசமாக உள்ளது. “எனது பிள்ளை தற்போது பத்தாம் வகுப்பிற்கு படிக்கிறான். ஆனால் அவனுக்கு நேரம் பார்த்து கூட சொல்ல தெரியாது. அவன்ட எதிர்காலம் என்ன ஆக போகுதோ. அவங்களுக்கு படிப்பிக்க எங்களுக்கு படிப்பறிவும் இல்ல” என்று கூறுகிறார் மற்றுமொருவர்.

வேவில வித்தியாலயத்தில் 15 ஆசிரியர்கள் கடமை புரிகின்றார்கள். அவர்கள் அனைவரும் சிங்கள மொழி மூலம் கற்பிப்பதற்காக நியமனம் பெற்றவர்கள். அவர்கள் தங்களது கடமையை சரியாக மேற்கொண்டாலும் வேவில பிள்ளைகளுக்கு தமிழ் மொழி மூலம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. இதுகுறித்து பல அதிகாரிகளிடம், ஆட்சியாளர்களிடம் குறிப்பிட்டும் எந்த பலனும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இம்மாணவர்களின் கல்வி குறித்து வலயக் கல்விப் பணிப்பாளரிடம் வினவிய போது, தான் இப்பாடசாலையின் நிலை பற்றி முழுமையாக அறிவதாக தெரிவித்தார். இங்கு கற்கும் மாணவர்கள், தமிழ் மாணவர்கள் என்பதையும் அறிவேன் எனக் குறிப்பிட்ட இவர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடுமாறு கூறினார். அவரே இதற்குப் பொறுப்பு கூற வேண்டியவர் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன்படி மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மகிந்த வீரசூரியவைத் தொடர்பு கொண்டபோது, வேவில வித்தியாலயம் பற்றி நான் அறிவேன். இவ்வித்தியாலயத்தின் நிலமை பற்றி எழுத்து மூலமான எவ்வித வேண்டுகோள்களும் இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை. இப்பாடசாலை தமிழ் மொழி பாடசாலையாக மாற்றி அமைப்பதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலம் வலையக் கல்வி பணிமனையின் வேண்டுகோளினூடாக எம்மை தொடர்பு கொண்டால் இது குறித்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். விசேடமாக இப்பாடசாலை சிங்கள பாடசாலை என்பதனாலேயே இவ்விடயம் மேலும் மேலும் பின்நோக்கி செல்கின்றது. மிகவும் கவனமாகவே இதனை கையாள வேண்டியுள்ளது. வேவில பிரதேசத்தில் புதிய பாடசாலை ஒன்று அமைப்பது சாத்தியமில்லை. வேவில வித்தியாலயத்தை இருமொழி பாடசாலையாக மாற்றுவது நடைமுறைக்கு உகந்ததாக அமையும் என்பதே எனது கருத்து என அவர் தெரிவித்தார்.

ஓர் இனத்துக்கு தொடர்சியாக நடக்கும் அநீதி பற்றி ஆட்சியாளர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என அனைவரும் அறிந்திருந்தும் தீர்வுகாண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் தெரிவுசெய்த பிரதிநிதிகளும் அதிகாரிகளினாலும் தேடிப்பார்த்து தீர்வு காணமுடியாதளவுக்கு வேறு என்ன வேலையிருக்க முடியும்? தற்போதைய நல்லாட்சி அரசிடம் இது குறித்து பலமுறை தெரிவித்தும் எமக்கான தீர்வு இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இரத்தினபுரி மாவட்ட எல்லையையும் கொழும்பு மாவட்ட எல்லையையும் கொண்ட நாம் அனைவரும் இன்று ஆதரவற்ற ஓர் சமூகமாக ஓரங்கட்டப்பட்டுள்ளோம் என்கின்றனர் வேவில மக்கள்.

மலையகத்தின் கல்வி வளர்சிக்காக பாடுபடுகிறோம் என கூறுவோர் இந்த வேவில தோட்ட மக்களின் கல்விக்கு வழிகாட்டுவார்களா? இது வேவில தோட்ட மக்களது பிரச்சினையாக மாத்திரம் கருத முடியாது. ஒட்டுமொத்த மலையக சமூகத்தின் கல்வி பிரச்சினையையும் இதனூடாகப் பார்க்கலாம். விசேடமாக இறப்பர் தோட்டப் பிரதேசங்களிலேயே இவ்வாறான சிங்களமயமாக்கும் நிலை அதிகமாக காணப்படுகின்றது. இவர்களுக்கு காட்டப்படும் இப்பாகுபாடு அடிப்படை உரிமை மீறலாகும்.

சுரேஸ்குமார்