படங்கள் | கட்டுரையாளர்

புதுக்குடியிருப்ப பிரதேச செயலகத்தின் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போதே நாம் முதல் தடவையாக 83 வயதான செல்லம்மாவைச் சந்தித்தோம். வீதியின் மறுபக்கத்தில் இருந்த செல்லம்மாவின் வீடும் காணியும் 8 வருடங்களாக இராணுவத்தினரின் பிடியில் இருந்து வந்தது. செல்லம்மா இன்னும் பல அயலவர்களுடன் ஒன்றுசேர்ந்து போராடிக்கொண்டிருந்தார். அவர்களில் அதிகளவானோர் பெண்களாகவே இருந்தனர். அவர்களுடைய வீடுகளும் காணிகளும் இராணுவத்தினர் அபகரித்து வைத்திருந்தனர். போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் பிரதமரைச் சந்தித்து அவரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்த நிலையிலும், தமது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

ஒருமாத கால போராட்டத்தின் பின் தமது கிராமத்தின் சில பகுதிகளை விடுவிக்கும் விடயத்தில் இலங்கை அரசையும், அதன் இராணுவத்தையும் பணியச் செய்வதில் செல்லம்மாவும் அவருடைய சில அயலவர்களும் வெற்றி கண்டனர். செல்லம்மாவையும் அவருடைய மகன் மற்றும் உறவினர்களையும் அவருடைய சில அயலவர்களையும் அவர்களுடைய சொந்த இடங்களில் கடந்தவாரம் சந்தித்தமை மகிழ்ச்சிதரும் ஒரு அனுபவமாக இருந்தது.

இராணுவத்தை கீழ்படியச் செய்த தமது சாதனை பற்றி பேசுவதைவிட, தாம் வந்து பார்த்தபோது தமது வீடுகளும் காணிகளும் இருந்த பரிதாபமான நிலை பற்றியே செல்லம்மா அதிகமாகப் பேசினார். தனது வீட்டுக்கும் காணிக்கும் ஏற்படுத்தியிருந்த சேதங்களை அவர் எமக்குக் காண்பித்தார்.

“நமது வீடுகளைத் திருப்பித் தருமாறு நாம் போராட்டம் நடத்தியதால் இராணுவம் எம் மீது கோபமுற்று இந்த அழிவுகளை ஏற்படுத்தியிருக்கலாம். வீதியின் மறுபுறத்தில் நாம் போராட்டம் நடத்தும் போது அவர்கள் (இராணுத்தினர்) பொருட்களை உடைத்து நொறுக்குவதை எம்மால் கேட்க முடிந்தது. அவர்கள் ஏன் அவ்வாறு எமக்கு செய்தார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 2008 ஆண்டிற்குப் பிறகு முதல் தடவையாக வீட்டில் காலடி எடுத்துவைத்தபோது தரை முழுவதும் பியர் போத்தல்களாலும் ஏனைய கண்ணாடித் துண்டுகளாலும் நிறைந்திருந்தது. நமது வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், சமையலறையில் உள்ள சின்குகள், கெபினட்டுகளின் கண்ணாடிகள் மற்றும் மின்சார பொருத்திகள் என அனைத்தும் அகற்றப்பட்டும் உடைக்கப்பட்டும் இருந்தன. என்னுடைய மகனின் வீட்டுக் கூரைத் தகடுகள் அனைத்தும் நீக்கப்பட்டிருந்தன. குளியலறையில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியையும் காணவில்லை. அங்குள்ள குழாய்களும் சரியாக இயங்கவில்லை. இராணுவத்தினர் எமது தென்னை மரங்களை வெட்டி அவற்றைக் கொண்டு முற்றத்திலேயே வெயிற்கால உல்லாசக் குடில்களை அமைத்துள்ளார்கள். மேலும், நமது சில அயலவர்களுடைய வீடுகள் முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. யுத்தம் முடிவுற்றதன் பின்னர் 2014 ஆண்டு எம்மை இங்கு அழைத்துவந்து காட்டியபோது இந்த வீடுகள் எந்த சேதமும் இல்லாமலேயே இருந்தன” என்று கூறுகிறார் செல்லம்மா.

“இது நம்முடைய பரம்பரை வீடாகும். இதில்தான் நானும் என்னுடன் கூடப்பிறந்த 7 உடன்பிறப்புக்களும் பிறந்து வளர்ந்து பெற்றோருடன் வாழ்ந்துவந்தோம். 2011 ஆண்டு இங்கு அழைத்துவந்து வீட்டைக் காட்டியபோது நமது விட்டின் பிரதான பகுதியையும் சமையலறையையும் இராணுவம் தரைமட்டமாக்கியிருந்தது. நமது குடும்பத்தில் நிறைய பேர் இருந்தபடியால் வீட்டில் பிரத்தியேகமான சமையலறை ஒன்று இருந்தது. அவர்கள் ஏன் இப்படிசெய்தார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதேவேளை, வீட்டுத் தோட்டத்தில் இராணுவத்தினர் ஒரு வெளிப்புற சமையலறை ஒன்றை அமைத்திருந்தனர். அதில் இருந்து குழாய் ஒன்று நேரடியாக கிணற்றிற்கு விடப்பட்டிருந்தது. சமையலறைக் கழிவுநீர் அதன் ஊடாக கிணற்றிற்கே விடப்பட்டிருந்தது. இதனால், கிணற்றுநீரைப் பயன்படுத்து முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதில் பூச்சுக்களும் பாம்புகளும் உள்ளன. அதிலிருந்துவரும் துர்நாற்றத்தையும் தாங்கமுடியவில்லை. அதனால், நாம் அந்தக் கிணற்றை மூடிவிட்டோம்” என்று கூறினார் புதுக்குடியிருப்பில் தனது வீட்டுக்கு மீண்டும் திரும்பிய மற்றுமொரு வயதான பெண்ணொருவர்.

“அங்குதான் ஒருகாலத்தில் எங்கள் வீடு இருந்தது” என்று தூர இருந்த ஒரு இடத்தைக் காண்பித்தபடி கூறினார் மற்றுமொரு வயதான தாய். “இராணுவம் அங்கிருந்து அதிகளவு மண்ணைத் தோண்டி எடுத்ததால் அது ஒரு சதுப்பு நிலமாக மாறிவிட்டுள்ளது. அதில் புள்ளும் சகதியும் நிறைந்துள்ளதால் அதற்குச் செல்ல இப்போது எம்மால் முடியாது. வீடும் அழிக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கவலையுடன் கூறினார்.


“பிரபாகரன் இருந்தா கேட்பியலோ?

“செல்லம்மாவின் இறுதி ஆசை”

“காணி அபகரிப்பும் பொறுப்புக்கூறலும்”

“நல்லாட்சியின் பிடியில் ஒரு சிங்கள கிராமம்”


செல்லம்மாவின் போராட்டமும் அவர் அடைந்த வெற்றியும் உற்சாகமளிப்பதாக இருந்தாலும் அவர் தனது சொந்த இடத்திற்குத் திரும்பி வந்தவுடன் காணக்கிடைத்த அவலங்கள் நல்லிணக்கச் செயற்பாட்டில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகின்றது.

முதலாவது – இராணுவம் கைப்பற்றிய இடங்களை விடுவிப்பதாக மக்களுக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கும் இலங்கை அரசு உறுதி அளித்திருக்கும் நிலையில் செல்லம்மா போன்ற வயதானவர்கள் அதே விடயத்திற்காக ஏன் மாதக்கணக்கில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவேண்டும்?

இரண்டாவது – இந்த வீடுகளையும் சொத்துக்களையும் அதன் உரிமையாளர்களுக்குத் திருப்பிக்கொடுப்பதற்கு முன் இராணுவம் அவற்றை அழித்து நாசமாக்கியது ஏன்?

மூன்றாவது – இராணுவம் முற்றுகையிட்டதால் தமது இடங்களைவிட்டு வெளியேற நேர்ந்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்களது நிலங்களுக்குத் திரும்பும் மக்களுக்கு அரசு ஏன் எதுவித உதவியும் வழங்கவில்லை?

நான்காவது – இராணுவம் அபகரித்து வைத்திருந்ததன் காரணமாகவும், மரங்கள், காணிகள் உட்பட சொத்துக்களுக்கு ஏற்படுத்திய சேதங்களுக்காகவும் இந்த மக்களுக்கு எப்போது இழப்பீடு கிடைக்கும்?

கடைசியாக – இதுவரை நடைபெற்றுள்ள காணி/ வீடுவிடுவிப்புக்கள் எதுவும் முழுமையான விடுவிப்புக்கள் அல்ல. உதாரணமாக, புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் பிடியில் உள்ள 19 ஏக்கர் காணியில் இருந்து 7 ஏக்கரே விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கும் பல ஆண்டுகள் போராடவும் இறுதி காலகட்டத்தில் ஒருமாத காலம் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இன்னும் 3 மாதகாலத்தில் மேலும் 10 ஏக்கர் காணியையும் இன்னும் 6 மாதகாலத்தில் மேலும் ஒரு ஏக்கரையும் விடுவிப்பதாக இராணுவம் கூறியுள்ளதாக கிராமவாசிகள் எம்மிடன் கூறினர். ஆனால், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

செல்லம்மாவின் போராட்டமானது, இராணுவத்தின் பிடியில் இருந்த தமது வீடுகள் மற்றும் காணிகளை மீளப்பெறும் நோக்கில் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்கள் பலவற்றில் ஒன்று மட்டுமே. தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக பிலக்குடியிருப்பு மற்றும் பரவிபாஞ்சான் பகுதிகளிலும் சில இடங்கள் விடுவிக்கப்பட்டன. இவை புதுக்குடியிருப்பில் இடங்கள் விடுவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே விடுவிக்கப்பட்டன. நாம் இந்தக் கிராமங்களுக்கு விஜயம் செய்தபோது முற்றுகையிட்டிருந்தவர்கள் அதாவது, விமானப் படையினரும் இராணுவமும், விட்டுச் சென்றிருந்த பேரழிவின் சுவடுகளை கண்கூடாகக் கண்டோம். மீள்குடியேறும் செயற்பாட்டிற்கு அரசு எந்த ஒத்துழைப்பையும் வழங்கவில்லை எனவும் அறிந்தோம். அதுமட்டுமின்றி விமானப் படையினர் இப்பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதோடு அச்சுறுத்தல்கள் மேற்கொண்டுவருவதையும் நாம் கண்டோம், செவியுற்றோம். இதேவேளை, இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கேப்பாபிலவு போன்ற பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீளக்கிடைத்த தமது வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் இராணுவத்தினர் செய்துள்ள அழிவு, மீள்குடியேறுபவர்களுக்கு அடிப்படை வசதிகள், வாழ்வாதார உதவிகள் என அரசு எதுவித உதவியும் வழங்காதது, பல இடங்களில் தமது காணிகளை இராணுவத்தின் பிடியில் இருந்து மீளப்பெற தொடர்ச்சியாகப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் உண்ணாவிரதங்கள் மற்றும் ஏனைய போராட்டங்கள் மூலம் செல்லம்மா மற்றும் அவர் போன்றவர்கள் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவது என்பது சிரமமான விடயமாகவே இருக்கிறது.

ருக்கி பெர்னாண்டோ மற்றும் மரிசா டி சில்வா எழுதி “Sellamma returns home after army occupation” என்ற தலைப்பில் கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. தமிழுக்கு மொழி பெயார்த்தவர் H.M. முஹமத் ஸலீம்.


சமூக ஊடகங்களில் மாற்றம்:

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்

ருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்

இன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்