செல்லம்மாவுக்கு 83 வயதிருக்கும். அவருக்குச்  சொந்தமாக முல்லைத்தீவு, கிழக்கு புதுக்குடியிருப்பில் ஒரு வீடு இருக்கிறது. இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அலுவலகத்தின் முன்பே அமைந்துள்ளது. ஆனால் கடந்த இரு வாரங்களாக செல்லம்மா தனது வீட்டுக்கு முன்பாக வெயில், குளிர் பார்காமல் இரவிரவாக போராடி வருகிறார். இராணுவம் செல்லம்மாவின் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள காணியையும் ‘பாதுகாப்புத் தேவைகளுக்காக’ சுவீகரித்துக் கொண்டது. இதனை மீட்பதற்காகவே செல்லம்மா போராடிவருகிறார். தூரத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டை இராணுவ கண்காணிப்புக்கு மத்தியில் செல்லம்மா எனக்குக் காட்டினார். உரிமையாளரின் அனுமதி இருந்தும், அந்த வீட்டைப் புகைப்படமெடுக்க நான் விரும்பினாலும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் அதனைத் தவிர்த்துக் கொண்டேன்.

1985 இல் யுத்த சமயத்தில் செல்லம்மாவின் மகனும் மருமகனும் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். அன்று ஒரே தினத்தில் இந்த இருவருடன் சேர்த்து மொத்தம் 24 பேர் படையினரால் கொல்லப்பட்டனர். அதன் பின் செல்லம்மாவின் கணவர் 2014 ஆண்டில் உயிரிழந்தார். அவருடைய ஈமக்கிரியை தனது சொந்தவீட்டில், சொந்தக் காணியில் வைத்து செய்வதற்கு செல்லம்மா விரும்பினார். வீடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அதைச் செய்ய செல்லம்மாவால் முடியவில்லை. காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக மண்ணெண்ணெயை தன் மீது கொட்டிக் கொண்டு செல்லம்மா தீவைத்துக் கொள்ளவும் முயன்றுள்ளார். ஆனால், சுற்றி இருந்தவர்கள் அவரைத் தடுத்திருக்கிறார்கள்.

செல்லம்மா இப்போது பலவீனமாக இருக்கிறார். தனக்கு ஒரே ஒரு ஆசை இருப்பதாக செல்லம்மா கூறுகிறார், தான் வாழ்ந்த வீட்டிலேயேதான் உயிர்பிரிய வேண்டும் என்பதுதான் அது. “என்னுடைய தோட்டத்தில் ஏராளமான தென்னைமரங்கள் இருந்தன. ஆனால், இப்போது இராணுவத்தினர் அவற்றை பறித்து அவர்களே எடுத்துக் கொள்வதால், நான் தேங்காயை காசு கொடுத்து வாங்க வேண்டியுள்ளது” என விரக்தியுடன் கூறுகிறார் செல்லம்மா. அது மட்டுமல்ல, இராணுவம் அவருடைய வீட்டை கைப்பற்றியுள்ளதால் ரூ. 8000 மாத வாடகை கொடுத்து அவர் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகின்றார்.

68 வயதான  மார்கரட் கருணானந்தன் செல்லம்மா வசிக்கும் அதே கிழக்கு புதுக்குடியிருப்பில் வசித்துவருகிறார். இவருடைய கணவரும் 1985இல் இராணுவம் மேற்கொண்ட ஒரு தாக்குதலின் போதே உயிரிழந்தார். மார்கரட்டுக்கும் சொந்தமாக வீடு, காணி இருந்ததுடன் தனது காணியில் 42 தென்னைமரங்கள் இருந்ததாக அவர் கூறினார்.

மார்கரட்டும் செல்லம்மாவும் மட்டுமல்லாமல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என எல்லோரும் 2009ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தார்கள். பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்த அவர்கள், பிறகு மெனிக் ஃபாமில் தடுத்து வைக்கப்பட்டார்கள். பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சொந்த இடங்களுக்கு, சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. செல்லம்மா, மார்கரட் உட்பட்ட 49 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்த போது அவர்களுக்குச் சொந்தமான வீடுகளும் 19 ஏக்கர் காணியும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. இதுநாள் வரை மக்களின் நிலம் இராணுவத்தின் பிடியிலேயே இருக்கின்றது. தமது வீடு, காணிக்கான பத்திரங்கள் கூட சிலரிடம் இன்னும் இருப்பதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

செல்லம்மா உட்பட 49 பேரின் காணிகளை அபகரித்து வைத்திருக்கும் 682ஆவது படையணி. (படம்: விகல்ப)

வீடு, காணிகளை இழந்த மேற்படி கிழக்கு புதுக்குடியிருப்பு வாசிகள் அவற்றை மீட்பதற்காக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். அவர்கள் மீண்டும் ஒரு போராட்டத்தை 2017 பெப்ரவரி 3ஆம் திகதி தொடங்கியிருக்கின்றனர். இந்தத் தடவை தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு இராணுவம் இடம் தரும் வரை தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என திடசங்கற்பம் பூண்டுள்ளார்கள். இந்த அடிப்படையில் செல்லம்மா, மார்கரட் உட்பட்ட 49 குடும்பங்களின் உறுப்பினர்கள் கடந்த இரண்டு வார காலமாக பாதை ஓரத்திலேயே உணவு சமைத்து, பசியாறி, பாதை ஓரத்திலேயே பகலில் உட்கார்ந்தும், இரவில் படுத்தும் காலத்தைக் கழித்து வருகின்றனர். கண்கள் விழித்திருக்கும் போதெல்லாம் தனது கைக்கு இன்னும் எட்டாமல் இருக்கும் தமது சொந்த வீடுகளையும் காணிகளையும் ஏக்கத்துடன் பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்.

நான் அவர்களை அணுகிய போது ஆரம்பத்தில் என்னை சந்தேகத்துடனேயே பார்த்தனர். நான் இராணுவத்தைச் சேர்ந்தவனா என்றும் விசாரித்தனர். ஆனால், நான் யார் என்பது தெரிந்தவுடன் என்னுடன் நேசபூர்வமாக பேச ஆரம்பித்தனர். தமக்கு நடந்துள்ள அவலத்தைப் பற்றி வருவோர் போவோருக்கெல்லாம் திரும்பத் திரும்பக் கூறி சலித்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தமது சோகக்கதையை எனக்கும் விலாவாரியாக விவரித்தார்கள்.

கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி இவர்களில் சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு கொழும்பு வரை சென்றுள்ளனர். அதன்போது தமது வீடுகளிலும், காணிகளிலும் முற்றுகையிட்டுள்ள இராணுவத்தினர் அருகாமையில் இருக்கும் அரச காணியில் எந்தப் பிரச்சினையுமின்றி தங்கலாம் என்பதை பிரதமருக்கு எடுத்துக் கூறியுள்ளனர். அதன்போது பிரதமர் அவுஸ்திரேலியா செல்லத் தயாராகிக் கொண்டிருந்ததால், தான் திரும்பி வந்தவுடன் இந்தப் பிரச்சினை தொடர்பாக விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் என்று அங்கு சென்றுதிரும்பியவர்கள் தெரிவித்தார்கள். அது மட்டுமன்றி, முல்லைத்தீவு அரச அதிபருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இது பற்றிய தகவல்களை பிரதமர் கேட்டறிந்ததாகவும் அவர்கள் கூறினார்கள். அதேவேளை, தமது போராட்டத்தை இப்போதைக்கு கைவிடும் படி பிரதமர் கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர். ஆனால், தமது சொந்த இடங்களுக்குச் செல்ல இடம்கொடுத்தால் போராட்டத்தைக் கைவிடுவதாக சென்றவர்கள் பிரதமரிடம் கூறியுள்ளார்கள். அதற்கு பிரதமர் சற்று மௌனமாக இருந்து விட்டு வேண்டுமானால் போராட்டத்தை அமைதியாக நடத்தும் படியும் எவருக்கும் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் மேலும் கூறினர். கைப்பற்றப்பட்டுள்ள இடங்களுக்கு அவற்றின் உரிமையாளர்கள் செல்ல முயற்சித்தால் அவர்களைத் தடுக்கவேண்டாம் என இராணுவத்தினருக்குக் கூறும் அதிகாரம் பிரதமருக்கு இருக்கின்றதா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.

ஆனால், போராட்டம் ஆரம்பித்து 3 வாரங்கள் கடந்துள்ள நிலையில் – பிரதமரைச் சந்தித்து 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் சாதகமான பதில் எதுவும் அரசிடமிருந்து கிடைத்த பாடில்லை. இந்த நிலையில், போராட்டம் நடத்துபவர்கள் உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் எதையும் புதிதாகக் கேட்கவில்லை. நடந்துள்ள ஒரு அநியாயத்தை சரி செய்யுமாறே அவர்கள் கேட்கின்றனர். தமது சொந்த வீடுகளுக்கு செல்ல இடமளிக்குமாறே அவர்கள் கோருகின்றனர்.

தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச்செல்ல அனுமதி தருமாறு நடாத்தப்படும் இது போன்ற போராட்டங்கள் இங்கு பல இடங்களில் நடைபெறுகின்றன. புதிய நல்லாட்சி அரசு பதவிக்கு வந்ததன் பின் இராணுவம் கைப்பற்றியிருந்த சில இடங்கள் அதன் உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால், பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் அவ்வாறு அனுமதி கொடுக்கப்படாமல் தமது வதிவிடங்கள் மற்றும் காணிகளில் இருந்து எப்போது இராணுவம் வெளியேறும் என அறியாமல் தவித்து வண்ணம் உள்ளனர். கேப்பாபிலவு, முள்ளிக்குளம், அஷ்ரப்நகர், பாணம, யாழ்ப்பாணம் என பட்டியல் நீடித்துக்கொண்டே போகிறது. அவர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவண்ணமும், அதிகாரிகளிடம் மகஜர்களை சமர்ப்பித்த வண்ணமும், நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கிய வண்ணமும் ஆயுளை கழித்து வருகின்றனர். ஆனால், தீர்வுதான் கிடைத்தபாடில்லை.

நல்லிணக்கம் பற்றி அரசு இடைவிடாது பேசி வருகின்றது. ஆனால், செல்லம்மா போன்றவர்களுக்கு நல்லிணக்கம் என்றால் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அரசு இடம் கொடுப்பதேயாகும். சொந்த வீடுகளை இழந்து நிர்க்கதியாகி தவிப்பவர்களை அவர்களுடைய வதிவிடங்களுக்குச் செல்ல இடம்கொடுத்தாலே போதும். நல்லிணக்கத்தால் மற்றும் நிலைமாற்று நீதியால் அரசு எதிர்பார்க்கும் மன மாற்றத்தை விட கோடி மடங்கு பெறுமதியான மனமாற்றமொன்று தமிழ் மக்களிடையே ஏற்படுவதை அரசு நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆனால், அரசாங்கமோ, வதிவிடங்களை உரிமையாளர்களுக்கு திருப்பிக் கொடுப்பது சற்று சிக்கலான மற்றும் ஓரளவு காலம் தேவைப்படும் விடயம் என்று கூறுகின்றது. ஆனால், செல்லம்மாவுக்கு அதுவரை பொறுத்திருக்க காலம் இடம்கொடுக்குமோ தெரியவில்லை. உயிரிழக்கும் முன் எப்படியாவது தனது வீட்டிற்கு, காணிக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதே செல்லம்மாவின் ஆசையாக இருக்கிறது.

ருக்கி பெர்னாண்டோ எழுதி “Sellamma and her struggle to reclaim her house and land in Puthukudiyiruppu” என்ற தலைப்பில் கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. தமிழுக்கு பெயர்த்தவர், H.M. முஹமத் ஸலீம்.