படங்கள் | கட்டுரையாளர் & Jera

96ஆம் ஆண்டு குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் உயிர்தப்பியவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி

“என்னை சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது பிள்ளைகளைக் கொல்ல வேண்டாம்”, என்று கந்தப்பொடி கமலாதேவி கிளிவெட்டி, குமாரபுரத்திலுள்ள தமது வீட்டுக்கு வெளியில் வைத்து இலங்கை இராணுவத்தால் தாம் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சற்று முன்னதாக அவரது தலைக்கு மேலாக இரு கைகளையும் கூப்பி கெஞ்சியிருந்தார்.

58ஆவது மற்றும் தெஹிவத்த முகாம்கள் மற்றும் கிளிவெட்டி சோதனை சாவடியைச் சேர்ந்த இராணுவத்தினரால் தமிழ் கிராமத்தவர்கள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட குமாரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. 6 பெண்களும், 5 ஆண்களும் மற்றும் 13 சிறுவர்களும் (18 வயதிற்கும் குறைந்தவர்கள்) இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு கர்ப்பிணித் தாயும் 15 வயது சிறுமியொருவரும் அடங்குகின்றனர். கொல்லப்படுவதற்கு முன்னதாக அந்தச் சிறுமி இராணுவ குழுவொன்றினால் கூட்டாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் 26 கிராமவாசிகளும் இந்தச் சம்பவத்தில் கடுமையாக காயமடைந்தனர்.

குமாரபுரத்திலுள்ள தங்களது வீடுகளை துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் நெருங்கி வருவதை கிராமவாசிகள் 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி கேட்கும்போது நேரமானது மாலை சுமார் 5 மணியாக இருந்திருக்கும்.

“ஆரம்பத்தில் நாம் பயப்படவில்லை. ஏனெனில், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டால் பயப்பட வேண்டாம் என்றும், பறவைகளை நோக்கி அவர்கள் சுடுவார்கள் என்றும் சில தினங்களுக்கு முன்னதாக இராணுவத்தினருடன் நடைபெற்ற கூட்டமொன்றின்போது அவர்கள் எம்மிடம் தெரிவித்திருந்தார்கள். ஆகவே, இயல்பாக இருக்குமாறும் எங்களுக்கு எந்தத் தீங்கும் வராது என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்”

– என்று கந்தப்பொடி பிரபாராணி (36 வயது) தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் நெருங்கி வர ஆரம்பித்ததும் அவரது தயார் அவரை வீட்டுக்குள் ஓடுமாறு சத்தமிட்டுள்ளார். அந்த வீட்டினுள் ஏனைய கிராமவாசிகளும் அடைக்கலம் புகுந்திருந்தனர். வீட்டு சுவர் வெடிப்பொன்றின் ஊடாக அவர்கள் எட்டிப்பார்த்தபோது சீருடையில் இருந்த பெரும் இராணுவ அணியொன்று அவர்களது வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்ததைக் கண்டனர். வெளியில் வருமாறு அவர்களது வீட்டுக்கு வெளியில் இருந்து இராணுவத்தினர் கத்தியதும் தமது பிள்ளைகளின் உயிர்களை காப்பாற்றிக்கொள்வதற்காக பிரபாராணியின் தாயார் வீட்டை விட்டு வெளியில் ஓடினார். இராணுவத்தினர் அவரது தாயாரை கொன்றதன் பின்னர் வீட்டை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் வீட்டினுள் இருந்த பெரும்பாலானோர் காயமடைந்தனர். இதில் ஒரு வயதேயான குழந்தையொன்றும் அடங்கும்.

(இடமிருந்து வலம்)

முதலாவது வரிசை: அழகுதுரை பரமேஸ்வரி, ஆனந்தன் அன்னம்மா, அருமைதுரை வள்ளிப்பிள்ளை, அருமைதுரை தனலெட்சுமி, கந்தப்பொடி கமலாதேவி

இரண்டாவது வரிசை: பாக்கியராசா வசந்தினி, ராமஜெயம் கமலேஸ்வரன், ராசேந்திரன் கருணாகரன், சண்முகநாதன் நிதந்தன், செல்லத்துரை பாக்கியராசா

மூன்றாவது வரிசை: சிவகொழுந்து சின்னத்துரை, வடிவேல் நடராசா, விநாயமூர்த்தி சுதாகரன், தங்கவேல் கலாதேவி, கனகராசா சுபதிராசா

“எனது கணவர் அப்போதுதான் வேலை முடித்து வீட்டுக்கு வந்திருந்தார். நான் அவருக்கு தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அருகிலுள்ள முகாமைச் சேர்ந்த கோப்ரல் கபில எனும் நன்கறிந்த இராணுவ உத்தியோகஸ்தர் ஒருவரும் அவருடன் வந்திருந்த இன்னுமொருவரும் எமது வீட்டின் வெளிப்புறத்தில் இருந்து எனது கணவரை அழைத்தனர். எனது கணவர் தச்சு வேலைகள் செய்பவர் என்பதால் அவரிடம் பொருட்களை பழுது பார்த்துக்கொள்வதற்கோ அல்லது புதிய பொருட்களை செய்துகொள்வதற்கோ கபில அடிக்கடி வருவார். அந்த வகையில், அவரை எமக்கு நன்கு தெரியும்”

– என்று தங்கவேல் மருதாயி (71 வயது) தெரிவித்தார். அவர் வெளியில் சென்று தமது கணவரை எதற்காக அழைக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்ட போது, அவர்கள் அவரை நோக்கி கத்திவிட்டு வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அச்சந்தர்ப்பத்தில் வீட்டினுள் இருந்த அவரது கணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் சுமார் 15 நாட்களின் பின்னர் அவர் உயிரிழந்தார். தங்கவேல் மருதாயியின் வீட்டில் மறைந்திருந்த ஏனைய பலரும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அதேநேரம், தந்தையொருவரும் 10 வயது பிள்ளையொன்றும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று அவர் நினைவுகூர்ந்தார்.

நாட்கூலித் தொழிலாளியான அரசரட்னம் நாகராசா வேலையை முடித்து வீடு திரும்பியிருந்ததுடன், 58ஆவது மைல்கல்லுக்கு அருகில் குளிக்கச் சென்றிருந்தபோது அவரது கிராமத்தின் பக்கமாகவிருந்து துப்பாக்கிச் சூட்டு சத்தங்களை கேட்டார். அதனையடுத்து உடனடியாக அவர் வீட்டுக்கு ஓடிச் சென்று பார்த்தபோது அவரது வீடு ஏனைய கிராமவாசிகளால் நிரம்பியிருந்ததைக் கண்டார். சுமார் 18 கிராமவாசிகள் அவரது வீட்டில் அடைக்கலம் புகுந்திருப்பதாக பின்னர் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

“மழை போன்று சோவென துப்பாக்கிச் சூடுகள் இடம்பெறுவதை நாம் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருந்தோம். ஆகையால், வீட்டில் இருந்து வெளியில் வருவதற்கு நாம் மிகவும் அஞ்சினோம். எமது வீட்டை நோக்கி 4 இராணுவத்தினர் வருவதை சுவரிலிருந்த  வெடிப்பொன்றின் ஊடாக நாம் கண்டோம். எமது வீட்டை அடைந்ததும், “பர தெமழு, எலியட்ட வரெங்!” (பர தமிழனே, வெளியியே வா!) என்று வீட்டுக்கு வெளியில் இருந்து அவர்கள் கத்தினர். யாரும் வெளியில் செல்லாததை அடுத்து தகரங்களினால் அமைக்கப்பட்டிருந்த வீட்டின் சுவர் பகுதி மீது இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி குண்டொன்று எனது இடக்கண்ணினூடாக சென்று மறுபுறமாக வெளியில் வந்தது. எனது அயலவர்கள் என்னை அருகிலிருந்த மருத்துவ நிலையத்திற்கு கொண்டுசெல்ல முயற்சித்தனர். எனினும், செல்லும் இடைவழியில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதை அடுத்து அருகிலிருந்த இன்னுமொரு வீட்டுக்குள் ஓடிச் சென்று ஒளிந்துகொண்டோம். எனது மனைவியும் மகனும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்ததை நான் அங்கு கேட்கக் கூடியதாக இருந்தது. எனினும், அந்த நேரத்தில் நான் உணர்வற்ற நிலையில் இருந்தமையால் அவர்கள் என்னிடம் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னால் முழுமையாக தெரிந்துகொள்ள முடிந்திருக்கவில்லை”

– என்று அவர் பழைய சம்பவங்களை நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்தார்.

“சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை நான் கேட்டேன். எனினும், துப்பாக்கிச் சூட்டு சத்தங்களை நாம் அடிக்கடி கேட்பதுண்டு என்பதனால் நான் அதை அந்த நேரத்தில் அவ்வளவாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. துப்பாக்கிச் சூட்டு சத்தம் அருகில் நெருங்கி வருவதைப் போன்று தெரிந்ததும் அருகில் இருந்த வீடொன்றுக்கு நான் ஓடினேன். அந்த வீட்டின் அருகில் வந்த இராணுவத்தினர் எம்மை வெளியில் வருமாறு கத்தினர். எம்மில் எவரும் அதை செய்யாததை அடுத்து வீட்டின் கதவை உதைத்து திறந்த அவர்கள் எம்மை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதில் பெண்ணொருவர் கொல்லப்பட்டார். எனது கணவரின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி சூடு பட்டதுடன், இன்னுமொருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளானார். அதையடுத்து எம்மை சோதித்துப் பார்க்க அவர்கள் மீண்டும் வந்தனர். நாம் அனைவரும் நிலத்தில் அசைவற்று படுத்து கிடந்தோம். ஆகவே, நாங்களும் உயிரிழந்துவிட்டோம் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்”

– என்று நடராசா தவமணி (50 வயது) அவரது பயங்கரமான அனுபத்தை விபரித்தார்.

தவமணியின் சகோதரர் வீதிக்கருகில் கடையொன்றை நடத்திவந்தார். அந்த கடையில் இருந்த மக்களை ஓடுமாறு கூறியதை அடுத்து, தவமணியின் சகோதரர் அவரது பிள்ளைகளுடன் தவமணியின் வீட்டுக்கு ஓடினார்.

“தரையில் கிடந்த எனது கணவரின் வயிற்றுப் பகுதியில் இருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. தம்மை வைத்தியசாலைக்குக் கொண்டுசென்று காப்பாற்றுமாறு அவர் எனது சகோதரரிடம் மன்றாடினார். எனினும், வெளியில் தொடர்ந்தும் துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருந்தமையால் எனது சகோதரரால் கணவரை கொண்டுசெல்ல முடிந்திருக்கவில்லை. 2 மணித்தியாலங்களின் பின்னர் எனது கணவர் இறந்துவிட்டார்”

– என்று அவர் தமது அனுபவத்தை நினைவுகூர்ந்தார்.

அருமைத்துரை புவேந்தினி (96 ஆம் ஆண்டில் அவருக்கு வெறும் 3 வயது மட்டுமே) மற்றும் அவரது சகோதரி பிரியா (அப்போது 7 வயது) ஆகிய இருவரும் தங்களது கர்ப்பிணித் தாய் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற பேரதிர்ச்சிமிக்க கதையைப் பகிர்ந்துகொண்டனர். படையினர் அவர்களது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியபோது அவர்களது தாயார் புவேந்தினியை தமது கைகளில் ஏந்தியவாறு எழுந்தார்.

“எங்களது அம்மா அந்த நேரத்தில் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி அவர் கொல்லப்பட்டார். அம்மாவின் கைகளில் இருந்த எனது சகோதரியின் இரு கால் விரல்களும் பாதத்தின் ஒரு பகுதியும் சிதறிவிட்டன. நாம் ஒளிந்திருந்த அறையில் 7 கிராமவாசிகள் கொல்லப்பட்டனர். கர்ப்பிணியாக இருந்த எமது அம்மா, அவரது சகோதரி, அக்கம்பக்கத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகள் மற்றும் அவர்களது தாயார் மற்றும் இன்னுமொரு சிறுவன் ஆகியோர் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். எனது சகோதரியும், சகோதரனும் நானும் மட்டுமே உயிர்தப்பினோம். எனினும், இந்தத் துப்பாக்கிச் சூடானது எமது சகோதரியின் பாதத்தையும் எனது சகோதரரின் காலையும் நிரந்தரமாக முடமாக்கியிருந்தது. எனது சகோதரரின் காலானது முழங்கால் பகுதியில் இருந்து கீழாக எலும்பு வழியே பிளவடைந்திருந்தது. நான் இருதய பைபாஸ் அறுவைச் சிகிச்சையொன்றை செய்துகொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், நாம் உயிர்வாழ்வதற்கு போதுமான பணமே பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் கிடைக்கிறது. ஆகவே, எம்மால் எப்படி சத்திர சிகிச்சையொன்றுக்கான செலவை தாங்கிக்கொள்ள முடியும்?”

– என்று பிரியா நம்பிக்கையின்றி கேள்வி எழுப்பினார்.

எவ்வாறிருப்பினும், கோப்ரல் குமார எனும் குறித்தவொரு இராணுவ வீரர் பற்றி மட்டும் கிராமவாசிகள் பலரும் நல்லவிதமாக பேசினர். குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 8 பேரில் அவரும் ஒருவராக இருக்கிறார். எனினும், கிராமவாசிகள் பலரது உயிர்களையும் காப்பாற்றுவதற்கு அவர் உதவியதாக கிராமவாசிகள் தெரிவித்தனர். உதாரணமாக, கோப்ரல் கபில (இன்னுமொரு இராணுவ வீரர்) பெண்ணொருவரை கொலை செய்வதற்கு கத்தியொன்றை வெளியில் எடுத்த போது குமார அவரை பிடித்து பின்னால் இழுத்துள்ளார். அதன் விளைவாக அவரது கத்தி சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த கண்ணாடியொன்றில் பட்டு அது உடைந்தது. அச்சந்தர்ப்பத்தில் சுவரில் இருந்த துளையொன்றின் ஊடாக பாய்ந்த துப்பாக்கி குண்டொன்று பட்டதில் 11 வயது சிறுமியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அத்துடன், 15 வயது சிறுமியொருவர் இராணுவ குழுவொன்றினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை தாம் பார்த்திருந்ததையும் நீதிமன்றத்தில் வைத்து குமார கிராமவாசிகளிடம் தெரிவித்துள்ளார். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்தச் சிறுமி அரிதாகவே உயிருடன் இருந்திருந்ததாகவும், ஆகையால் அந்த சிறுமியை அவ்வாறானதொரு நிலையில் பார்க்க முடியாமையினால் அச்சிறுமியை தாம் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மறுநாள் காலை சிறுமியின் உடலை கிராமவாசிகள் சடலமாக மீட்டிருந்தனர்.

தங்களது திகில் கதையை பற்றிய துணுக்குகள் ஒவ்வொன்றையும் கூறிக்கொண்டு எம்மை சுற்றியிருந்த கிராமவாசிகள் வட்டத்தில் கண்ணையா ராமஜெயம் என்ற வயதானவர் மௌனமாக காத்துக் கொண்டிருந்தார். அனைவரும் உரையாடல்களை முடித்துக் கொண்டு தங்களது கதிரைகளையும் எடுத்துக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பியதன் பின்னர் அவர் என்னை மெதுவாக நெருங்கி,

“அன்றைய தினம் நான் வேலைக்காக கிராமத்துக்கு வெளியில் சென்றிருந்தேன். நான் வீட்டுக்கு திரும்பிய போது இங்கு பெரும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. எனது சகோதரரின் வீட்டில் இருந்து எனது மகன் அதுவரை வீடு திரும்பியிருக்கவில்லை. ஆகவே, நான் அவரை தேடிச் சென்றேன். நான் எனது சகோதரரின் வீட்டுக்குச் சென்ற பார்த்தபோது எனது மகனும் சகோதரரும் நிலத்தில் இறந்து கிடந்ததைக் கண்டேன். அவர்கள் இருவருமே கொல்லப்பட்டிருந்தனர். எனது மகனுக்கு வெறும் 11 வயது தான் ஆகியிருந்தது. அவரது பெயர் கமலேஸ்வரன். தயவுசெய்து எனது மகனின் பெயரை எழுதி கொள்ளுங்கள். அவரது பெயர் கமலேஸ்வரன்” என்று தெரிவித்தார்.

சிவில் சமூக மற்றும் உள்ளூர் குழுக்களின் உதவி

தாக்குதலை அடுத்து குமாரபுரத்தில் இருந்து தப்பிச்சென்ற 126 கிராமவாசிகளுக்கு இளைஞர் இந்து அமைப்பு (The Young Men’s Hindu Association) திருகோணமலையிலுள்ள நவரட்ணம் மண்டபத்தில் உணவும் அடைக்கலமும் வழங்கியது. கிராமவாசிகளை அவர்களது வீடுகளுக்குத் திரும்பி வரச்செய்வதற்காக இளைஞர் இந்து அமைப்பின் உறுப்பினர்கள் இராணுவத்தின் கடுமையான கண்காணிப்புக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். எனினும், அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல், தங்களது கிராமத்துக்கு திரும்பிச் செல்வது பாதுகாப்பானது என்று கிராமவாசிகள் உணரும் வரை இளைஞர் இந்து அமைப்பு அவர்களுக்கு அடைக்காலம் வழங்கியது. ஏனைய உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளும் கூட அவர்களுக்கு இருந்த பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நீதிமன்ற விசாரணைகளுக்கான போக்குவரத்து மற்றும் சம்பந்தப்பட்ட செலவுகளை வழங்குதல் மற்றும் தசாப்தங்களுக்கும் மேலாக வாதிடும் நடவடிக்கைகளை தக்கவைத்தமை உட்பட கிராமவாசிகளின் நீண்டகால போராட்டத்தில் அவர்களுக்கு உதவி செய்திருந்தன. மேலும், நீதிமன்ற அழைப்பாணைகளை எதிர்கொள்ளும் வகையில் குடும்பங்களுக்கு சூழல் அமைவிப்பதிலும் நீதிமன்ற விசாரணைகள் சம்பந்தமான உபகரணங்கள் மற்றும் செலவுகள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைப்பதிலும் உள்ளூர் சிவில் சமூகக் குழுக்கள் உதவிபுரிந்தன. மனித உரிமைகள் அபிவிருத்திக்கான நிலையம் (Centre for Human Rights Development) கடந்த பல வருடங்களாக கிராமவாசிகளுக்கு சட்ட உதவிகளை வழங்கியிருந்தது.

இருபது வருட கால போராட்டம்: நீதிமன்ற வழக்கு விபரங்களும் மேம்படுத்தலும்

500இற்கும் அதிகமான படையினரின் 3 நாட்கள் நீண்ட அடையாள அணிவகுப்பு தொடங்கி, குற்றஞ்சாட்டப்பட்டவர் முதல் சில விசாரணைகளுக்குள்ளேயே பிணையில் விடுவிக்கப்பட்டமை, பொருட் சாட்சியங்கள் தீயில் அழிந்துபோய்விட்டதாக கூறப்பட்டமை[i], சகலரும் சிங்களவர்களைக் கொண்ட ஜூரி சபை அமைக்கப்பட்டமை மற்றும் சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நகரமான அநுராதபுரத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டமை வரை, தற்போது 20 வருடங்களாக நீண்டுள்ள குமாரபுரம் படுகொலைகள் வழக்கானது அதன் காலம் முழுவதும் பல்வேறு சவால்கள் நிறைந்ததாக காணப்பட்டது.

58ஆவது மைல்கல்லுக்கும் சேருநுவரவிற்கும் இடையிலான வீதியானது மாலை 5 மணியில் இருந்து மறுநாள் வரை இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. கிராமத்திற்குள் நுழையவோ அல்லது அங்கிருந்து வெளியேறவோ யாருக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. “மாலை 5 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 5 மணி வரை எமக்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது” என்று கிராமவாசிகள் பலரும் தெரிவித்தனர்.

மறுநாள் (12) காலை மூதூர் பொலிஸார் வருகை தந்து அனைத்து சடலங்களையும் காயமடைந்தோரையும் பார்வையிட்டனர். அதன் பின்னர், காலை 8 மணியளவில் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன், காயமடைந்த அனைவரையும் பஸ்ஸொன்றின் மூலம் சேருநுவர வைத்தியாசாலைக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் அனைத்தையும் ட்ரெக்டர் வண்டியொன்றிலும் கவச வாகமொன்றிலும் ஏற்றிய இராணுவத்தினர், அவற்றை மூதூர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் இராணுவத்தால் வழங்கப்பட்ட பஸ்ஸொன்றின் மூலம் மூதூர் வைத்தியசாலைக்கு பின்தொடர்ந்து சென்றனர்.

அருகிலுள்ள முகாம்கள் மற்றும் சோதனைச் சாவடிகளைச் சேர்ந்த படையினர் பலரும் கிராமவாசிகளுக்கு பரிச்சியமானவர்களாகவே இருந்தனர். ஏனெனில், முகாம்களை சுத்தம் செய்ய உதவுவதற்கும் இராணுவத்தினருக்கு விறகுகளை வெட்டுவதற்கும் அவர்கள் வாராந்தம் செல்வது வழக்கம். “ஒவ்வொருவரும் மற்றையவரின் பெயரை கூறி அழைத்துக் கொள்வதை நாம் பார்த்தும் கேட்டும் இருக்கிறோம். அதன்மூலம் நாமும் அவர்களில் சிலரது பெயரை தெரிந்துகொண்டோம்” என்று அவர்கள் தெரிவித்தனர். படையினர் கடந்து செல்லும் போது கிராமவாசிகளிடம் சோளம் மற்றும் மரவள்ளிக் கிழங்குகளை கேட்பார்கள். “நாம் அவர்கள் மீது அச்சம் கொண்டிருந்தமையால் அவர்களுக்கு எது தேவையென்றாலும் நாம் அதை வழங்குவோம்” என்று கிராமவாசிகள் தெரிவித்தனர்.

தாக்குதல் இடம்பெற்று 3 நாட்களின் பின்னர், குற்றமிழைத்தவர்களை அடையாளம் காட்டுவதற்கு மூதூர் நீதிமன்றத்திற்கு வருமாறு கிராமவாசிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தொப்பி அணிந்த சுமார் 500 இராணுவத்தினர் கிராமவாசிகள் முன்னிலையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டனர். 3 நாட்களாக இந்த அணிவகுப்பு நீண்டது. குற்றமிழைத்தவர்கள் ஒவ்வொரு பெரிய குழுவாக நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினருள் தனித்தனியாக நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், அணிவகுப்பின் போது அவர்களது தொப்பிகளை கழற்ற வேண்டும் என்று கிராமவாசிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பின்னர், 58ஆவது மற்றும் தெஹிவத்த முகாம்கள் மற்றும் கிளிவெட்டி சோதனைச்சாவடி ஆகியவற்றைச் சேர்ந்த 8 படையினரை கிராமவாசிகள் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது.

“நான் இராணுவ வீரர் ஒருவரை நோக்கிச் சென்று அவரது கையை திடீரென பற்றிப்பிடித்து எனது அம்மாவை கொன்றவர் என்று அடையாளம் காட்டினேன். அந்த இராணுவ வீரரை நான் கையால் பற்றிப்பிடித்த காரணத்திற்காக விசாரணைகள் முடியும் வரை என்னை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் எமது குடும்பத்தினரையும் நண்பர்களையும் கொன்றனர். அதற்கு தண்டனை எதுவும் கிடையாதா?”

– என்று பிரபாராணி ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினார்.

“கடந்த 20 வருடங்களாக மூதூர், திருகோணமலை மற்றும் அநுராதபுரத்திலுள்ள நீதிமன்றங்களுக்கு 25 இற்கும் மேற்பட்ட தடவைகள் நான் சென்றிருக்கிறேன்” என்று தவமணி தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாட்சியமளிக்க 108 கிராமவாசிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. எனினும், 27 பேரின் இருப்பிடத்தை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்துள்ளது. சம்பந்தப்பட்ட 8 படையினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், இந்த வழக்கின் முதல் சில விசாரணைகளுக்குள்ளேயே அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீதான குற்றப்பதிவுகளை அடுத்து அந்தப் படையினர் அனைவரும் கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். இந்த வழக்கு கவனிக்கத்தக்க ஒன்றாகும். ஏனெனில், சட்ட மா அதிபர் இந்த முன்னாள் இராணுவ வீரர்கள் ஒவ்வொருவருக்கு எதிராகவும் தனித்தனியாக 101 குற்றப்பதிவுகளை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தின் வரலாற்றில் குற்றவியல் வழக்கொன்றில் எந்தவொரு பிரதிவாதிக்கும் எதிராகவும் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பதிவுகளின் மிக நீண்ட பட்டியலாக அதுவே அமைந்திருந்தது. இந்த வழக்கில் 121 பேர் சாட்சியாளர்கள் இருந்தனர்[ii].

இந்தப் படுகொலைகள் இடம்பெற்று 20 ஆண்டுகளின் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி, எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்த போது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தின் முழு சிங்கள ஜூரர் குழாமொன்றினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கவும் பட்டனர்.

எனினும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடொன்றை செய்யுமாறு சட்ட மா அதிபருக்கு பணிப்புரை விடுக்குமாறும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது ட்ரயல்-அட்-பார் குழாமொன்றின் முன்னிலையில் மீள் விசாரணை நடத்துமாறும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விரிவான நட்டஈட்டுத் திட்டமொன்றை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள்[iii] இந்த விடுதலையின் பின்னர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தன.

அதன் பின்னர், 6 முன்னாள் இராணுவ வீரர்களையும் விடுதலை செய்தும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்தும் அநுராதபுரம் மேல் நீதிமன்ற ஜூரர் குழாம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடொன்றை செய்தார்.

“பிரதிவாதிகள் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்படுவதற்கு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யும் அநுராதபுரம் மேல் நீதிமன்ற ஜூரர் குழாமின் தீர்ப்பானது, பாதிக்கப்பாட்டோருக்கு முற்றிலும் அநீதியிழைப்பதாக அமைந்துள்ளது”[iv]

– என்று மேன்முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த 20 வருடங்களில் 3 ஜனாதிபதிகள் பதவிக்கு வந்து சென்றுவிட்டனர். குற்றம் புரிந்தவர்களும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். ஆனால், நாம் நீதிக்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நல்லாட்சி அரசாங்கமும் கூட எமக்கு எதையும் செய்யவில்லை. எமக்கு என்ன நடந்தது என்பதைக் கூட அவர்கள் அறிவார்களா என்று எமக்குச் சந்தேகமாக இருக்கிறது. கொல்லப்பட்ட எமது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நீதியும் அவர்களது குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நட்டஈடும் வேண்டும்”

– என்று குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.

இடமிருந்து வலம்

முதலாவது வரிசை: ஏ. புவனேந்தினியின் சிதைவடைந்த கால், அரசரத்னம் நடராசா, அருமைத்துரை பிரியா, நீதியை எதிர்பார்த்திருக்கும் ஒருவர்

இரண்டாவது வரிசை: கந்தப்பொடி பிரபாராணி, நடராசா தவமணி, காயமடைந்த ஒருவர், தங்கவேல் மருதாயி             

பாதிக்கப்பட்டோரின் பெயர்கள்

 1. சுப்பையா சேதுராசா
 2. அழகுராசா பரமேஸ்வரி
 3. அருமைத்துரை வள்ளிப்பிள்ளை
 4. கிட்ணன் கோவிந்தன்
 5. அருணாசலம் தங்கவேல்
 6. செல்லத்துரை பாக்கியராசா
 7. வடிவேல் நடராசா
 8. ராசேந்திரம் கருணாகரன்
 9. சண்முகநாதன் நிதந்தன்
 10. ராமஜெயம் கமலேஸ்வரன்
 11. கந்தப்பொடி கமலாதேவி
 12. சிவக்கொழுந்து சின்னத்துரை
 13. சிவபாக்கியம் நிசாந்தன்
 14. பாக்கியராசா வசந்தினி
 15. அமிர்தலிங்கம் ரஜினிகாந்தி
 16. தங்கவேல் கலாதேவி
 17. ஸ்டீபன் பத்மினி
 18. சுந்தரலிங்கம் பிரபாகரன்
 19. சுந்தரலிங்கம் சுபாஜினி
 20. கனகராசா சுவதிராசா
 21. சுப்ரமணியம் பாக்கியம்
 22. விநாயகமூர்த்தி சுதாகரன்
 23. ஆனந்தன் அன்னம்மா
 24. விஜயகாந்த் லெட்சுமி
 25. அருமைத்துரை தனலெட்சுமி
 26. குடும்பத்தினரைக் காணவில்லை என்பதால் கொல்லப்பட்டவரின் பெயரை அறியமுடியவில்லை

மரிசா டி சில்வா


[i] TamilNet, Kumarapuram massacre case exhibits destroyed in firehttps://www.tamilnet.com/art.html?catid=13&artid=15154

[ii] Ceylon Today, Acquittal of six soldiers in Kumarapuram massacre case AG appeals A’pura HC jury decision http://www.ceylontoday.lk/print20161101CT20161231.php?id=8507

[iii] Kumarapuram Massacre Appeal – https://cl.ly/gqDe

[iv] Ceylon Today, Acquittal of six soldiers in Kumarapuram massacre case AG appeals A’pura HC jury decision http://www.ceylontoday.lk/print20161101CT20161231.php?id=8507