படம் | Sri Lanka Guardian

கொழும்பு பொது நூலகத்தில் ஜனவரி 18ஆம் திகதி சமூக நீதிக்கான தேசிய இயக்கமும் மக்கள் சக்தி அமைப்பும் சேர்ந்து “புதிய அரசியலமைப்பொன்றுக்கு யார் பயப்படுகிறார்கள்?” என்ற தொனிப் பொருளில் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அக்கூட்டத்தில் உரையாற்றியவர்கள் தெரிவித்திருக்கக்கூடிய கருத்துக்கள் எவையாக இருந்தாலும், அந்தத் தொனிப் பொருள் புதிய அரசியலமைப்பொன்றை வரையும் செயன்முறைகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசியல்வாதிகளினதும் ஏனைய பொதுப் பிரமுகர்களினதும் திருகுதாளங்கள் தொடர்பில் சாதாரண மக்களின் மனதில் இருக்கின்ற எண்ணத்தை கச்சிதமாக பிரதிபலிக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை. அதனால், எனது இக்கட்டுரைக்கு அத்தொனிபொருளை நான் பயன்படுத்த விரும்புகிறேன். யார் பயப்படுகிறார்கள்? ஏன்?

மீண்டும் மீண்டும் வழங்கப்பட்ட ஆணை

பதிய அரசியலமைப்பொன்றை வரைய வேண்டுமென்ற ஆணையை இந்நாட்டு மக்கள் 1994 தேர்தலில் இருந்து தங்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு திரும்பத் திரும்ப வழங்கியிருந்தார்கள். தற்போதைய அரசியலமைப்பின் கீழ் அதிகார கட்டமைப்புக்கு இருக்கின்ற எதேச்சாதிகார தன்மையே இதற்குப் பிரதானமான காரணமாகும். 1994 தேர்தலில் பொதுஜன முன்னணிக்கே அந்த ஆணையை வழங்கினார்கள். பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக தற்போது இருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னோடியே அந்த பொதுஜன முன்னணியாகும். தற்போதைய நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னோடியான ஐக்கிய தேசிய கட்சியும் 2000ஆம் ஆண்டளவில் புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கு இணங்கியது.

பிரதான தமிழ் அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பும் பிரதான முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய சிறுபான்மை கட்சிகளும் தங்களின் பிரச்சினைகள் பலவற்றை தீர்த்துக் கொள்வதற்காக நீண்டகாலமாக அரசியலமைப்பு மாற்றமொன்றுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை இக்கட்சிகள் ஆதரித்தே நிற்கின்றன.

2000 ஆகஸ்டில் புதிய அரசியலமைப்பொன்றை நோக்கி நாடு நெருக்கிவந்த போதிலும் கூட, இந்த நோக்கங்களும் உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு பிறகு இப்போது 17 வருடங்கள் கடந்து விட்டன. அந்த வரைவு சமகாலத்துக்கு பொருத்தமல்லாததாகிவிட்டது. அப்போது புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்படுவதைத் தடுத்தது என்ன? புதிய அரசியலமைப்பை போர் தாமதப்படுத்தியது என்று எவரும் வாதிடலாம். ஆனால், சில அரசியல்வாதிகளிடம் இருக்கின்ற போர் மனநிலையைத் தவிர மற்றும்படி 2009 மேயில் போர் முடிவிற்கு வந்துவிட்டது. அதற்குப் பிறகு 8 வருடங்கள் உருண்டோடிவிட்டன. போர் மனநிலைதான் சிலருக்கு புதிய அரசியலமைப்பொன்று தொடர்பில் பீதியை தருகின்றதா? அவர்கள் கூறுகின்றவற்றையும் செய்கின்றவற்றையும் பார்க்கின்றபோது அந்தப் போர் மனநிலைத்தான் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அவர்களுக்குப் பீதியை கொடுப்பது சாத்தியம் என்று கருத வேண்டியிருக்கின்றது.

புதிய அரசியலமைப்பொன்றுக்கான ஆணை தனியொரு தேர்தல் மூலமாக மக்களால் வழங்கப்பட்டதல்ல. தொடர்ச்சியாக பல தேர்தல்களில் மக்கள் அந்த ஆணையை வழங்கியிருக்கிறார்கள். இது ஒரு ஜனாதிபதிக்கு மாத்திரம் கொடுக்கப்பட்ட ஆணையல்ல. நாடாளுமன்றத்துக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட ஆணையாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, நாடாளுமன்றமும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்து சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்களுமே புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வரவேண்டும்.

வேறு காரணிகளும் இருந்தன. இருந்து வருகின்றன. புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதோ அல்லது வரைவதோ கூட சுலபமான பணியல்ல. அரசியலமைப்பொன்றை திருத்துவது ஒப்பீட்டளவில் சுலபமானது என்ற கூறலாம். திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை பொறுத்தவரை தற்போதைய அரசியலமைப்பு மிகவும் இறுக்கமான ஒன்றாகவே இருக்கிறது. புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்கு மாத்திரமல்ல, அடிப்படையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கும் கூட நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு  பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பொன்றும் தேவைப்படுகிறது. அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றும் முழுதாக மாற்றியமைக்க முடியாமல் போனதற்கான ஒரு காரணம் அதுவாகும். சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்குச் செல்லாமல் அடிப்படையான திருத்தங்களைக் கொண்டு வருவது குறித்து யோசனை கூறுபவர்கள் வேறு பல காரணிகளுக்கு மத்தியில் இந்த உண்மையையும் புரிந்த கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.

புதிய யுகமொன்றுக்கான புதிய அரசியலமைப்பு

அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் முற்றும் முழுவதுமாக ஜனநாயக ரீதியானவையாக இருக்க வேண்டும். சூழ்ச்சித்தனமான செயற்பாடுகளும் திருகுதாளங்களும் இருத்தலாகாது. செயன்முறைகள் ஒழிவுமறைவு அற்றவையாகவும் மக்களுக்கு பொறுப்புக்கூறும் தன்மையுடையவையாகவும் இருக்க வேண்டும். அரசியலமைப்பை உருவாக்குபவர்கள் நாட்டு மக்களுக்கு நேர்மையானவர்களாகவும் வெளிப்படையானவர்களாகவும் இருக்க வேண்டும். நாட்டுக்குப் பொருத்தமான சர்வதேச நியமங்களையும் போக்குகளையும் கருத்தில் எடுத்ததாக புதிய அரசியலமைப்பு இருக்க வேண்டும். புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் செயன்முறைகள் உகந்த முறையில் கையாளப்பட்டு தொடர்புபடுத்தப்படுமேயானால், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி தொடர்பில் மக்களுக்கான ஒரு அறிவூட்டல் அனுபவமாகவும் அமைய முடியும். இது விடயத்தில் பல அனுகூலங்களும் இருகின்றன. இலங்கையை பெருமாற்றத்திற்கு உள்ளாக்கவும் நவீனமயப்படுத்தவும் முடியும்.

ஜனவரி மாற்றம் அல்லது 2015 புரட்சி இப்போது பல பின்னடைவுகளை, தடைகளை, மயக்கங்களை எதிர்கொண்டிருக்கின்றது. உகந்த ஒரு புதிய அரசியலமைப்பு செயன்முறையை மீண்டும் நலம் வாய்ந்ததாக்கவும் மீண்டும் ஜனநாயக தடத்தில் பயணிக்கச் செய்யவும் முடியும் என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய அரசியலமைப்பு தாறுமாறான சட்டக் குவியலாக இருக்கிறது. அது மிகவும் முதியதொன்றாக இருப்பதனால் மாத்திரமல்ல, ஆரம்பத்தில் இருந்தே முழுமையாக ஜனநாயகத் தன்மைக் கொண்டதாக இல்லாமல் இருந்ததாலும் கூட, பழமைப்பட்டு போன ஒன்றாக விளங்குகிறது. இது முன்னும் பின்னுமாக தாறுமாறான திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு முரண்பாடுகள் நிறைந்ததாக இப்போது இருக்கிறது.

புதியதொரு அரசியலமைப்பு வேறுபல முற்போக்கான மாற்றங்களுக்கு வழிவகுக்க முடியும் என்பதுடன் வெறுமனே தனவந்தர்களுக்கு அல்ல, வரிய மற்றும் மத்தியதர வர்க்கத்தவர்களுக்கு நன்மைத்தர கூடியதான நிலைபேறான பொருளாதார அபிவிருத்திக்கான பாதையையும் திறந்துவிடும். நீதியான பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பெருமளவுக்கு இதனால் பிரகடனம் செய்யக்கூடியதாக இருக்கும். அத்தகைய வாய்ப்புக்கள் தற்போதைய அரசியலமைப்பில் கிடையாது. புதியதொரு அரசியலமைப்பு வெளியாக ஏதாவது ஒரு வல்லரசில் தங்கியிருக்காது எமது வெளியுறவுக் கொள்கையில் உகந்ததொரு சமநிலையைக் கொண்டு வரவும் முடியும். மிகவும் முக்கியமாக, இனப்பிரச்சினையையும் கலகங்களையும் முடிவுக்கு கொண்டுவரக் கூடியதாக அரசியல் தீர்வொன்றுக்கு வழிவகுக்க முடியும். இவையெல்லாம் நடந்தேறுவதற்கு புதியதொரு அரசியலமைப்பே தேவை. தற்போதைய அரசியலமைப்புக்கு ஒட்டு வேலைகளைச் செய்து அவற்றை சாதிக்க முடியாது.

யார் பயப்படுகிறார்கள்?

இயல்பாகவே மாற்றங்களுக்குப் பயப்படுகின்ற சில ஆட்கள் இருக்கிறார்கள். நெடுகவுமே பழமைவாதிகளாக இருக்கும் சிலர் மாற்றங்களுக்கு உள்ளாவதில் தயக்கத்தை காட்டக்கூடும். இந்தத் தயக்கமும் சோம்பலும் உயர்மட்ட அதிகாரிகள் அல்லது அரசாங்க உத்தியோகத்தர்கள் குறிப்பாக சட்டத்துறை நிறுவனங்களில் இருக்கின்ற உயரதிகாரிகள் மத்தியில் காணப்படலாம். ஏனென்றால், புதிய அரசியலமைப்பொன்று கொண்டவரப்பட வேண்டுமென்றால் இவர்கள் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இவர்களின் தகுதியின்மை ஆற்றலின்மையும் அம்பலப்படுத்தப்பட்டுவிட கூடும். புதியதொரு அரசியலமைப்பு கொண்டுவரப்படும் பட்சத்தில் கூட, அவர்களது பொறுப்புக்கள் மேலும் கடுமையாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு. இத்தகைய பேர்​வழிகளைக் கொண்ட குழு சில அமைச்சர்கள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் செல்வாக்கு செலுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

தாங்கள் அனுபவிக்கின்ற அதிகாரத்தையும் நேரடிவசதி வாய்ப்புக்களையும் சிறப்புரிமைகளையும் இழக்கவேண்டிவருமே என்ற காரணத்தினால், ஜனநாயக மாற்றங்களுக்குப் பயப்படுகின்றவர்களும் இருக்கிறார்கள். சுரண்டிவாழும் அரசியல்வாதிகளே இவர்கள். அதனால், இவர்கள் புதியதொரு அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்குப் பதிலாக தற்போதைய அரசியலமைப்பிற்கு ஒட்டு வேலைகளைச் செய்யவே பெரிதும் விரும்புவார்கள். எந்தவகையானதொரு மாற்றத்தையும் இவர்களால் இப்பொழுது முற்றுமுழுதாக எதிர்க்க முடியாது. அதனால், புதிய அரசியலமைப்புக்குப் பதிலாக திருத்தங்களைக் கொண்டுவர வேண்டுமென்று இப்பொழுது வாதிடுகிறார்கள். 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான செயன்முறைகள் முன்னேற்றம் காண முடியாமல்போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். அந்த வருடத்துக்குப் பின்னரும் முயற்சிகள் தடங்களுக்குள்ளானதற்கு காரணம், பதவியில் இருந்த ஜனாதிபதி மேலும் சில காலத்துக்கு அதிகாரத்தில் தொடருவதற்கு விரும்பியதே என்று அறியமுடிகிறது.

அதிகாரத்தைக் கைவிடுவதற்குக் காட்டப்படுகின்ற தயக்கமே புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான செயன்முறைகளுக்கு உதவுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதையுமே செய்ய மறுப்பதற்கான முக்கிய காரணமாகும். அரசியலமைப்பு மாற்றம் குறித்து 2000ஆம் ஆண்டிலேயே வாக்குறுதி தரப்பட்டது. 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் போரைக் காரணம் காட்டி இவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்தார். மற்றும்படி ‘மனித உரிமைகளுக்காக’ போராட்டம் நடத்திய நாட்களில் ஜனாதிபதி ஆட்சி முறையை கடுமையாகக் கண்டனம் செய்தார். போரின் முடிவுக்குப் பிறகு ராஜபக்‌ஷ எதிர்திசையில் பயணிக்க ஆரம்பித்தார். அதாவது, அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை மேலும் அதிகரித்தார். அது இப்போது வரலாறாகிவிட்டது. இந்த அனுபவம் எந்த ஒரு தலைவர் மீதும் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைக்கக்கூடாது என்பதற்கு மக்களுக்கும் ஜனநாயக உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு நல்ல படிப்பினையாகும். மைத்திரிபால சிறிசேனவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ யாறென்றாலும், மிகையான நம்பிக்கையை அவர்கள் மீது வைத்தலாகாது. அவர்கள் அனைவரும் வஞ்சகத்தனமான பிறவிகளே. ஆட்களை நம்புவதை விட கோட்பாடுகள் மீதும் கொள்கைகள் மீதும் நம்பிக்கை வைப்பது நல்லது. ஜனநாயக செயற்பாட்டாளர்கள் அல்லது மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைப் பொறுத்த வரையில் கூட இது பொருந்தக்​கூடியதே ஆகும். மஹிந்த ராஜபக்‌ஷவோ, மைத்திரிபால சிறிசேனவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ யாராக இருந்தாலும், அவர்கள் நல்ல காரியங்களைச் செய்தால் மாத்திரமே அவர்களுக்குரிய மதிப்பைக் கொடுக்க வேண்டும்.

ஏன் பயம்?

அரசிலமைப்புக்கான 19ஆவது திருத்தச்சட்டம் முன்மொழியப்பட்ட போது தனது அதிகாரங்கள் பலவற்றை விட்டுக்கொடுப்பதற்கு இணங்கியதன் மூலமாக மைத்திரிபால சிறிசேன முன்னென்றும் இல்லாத வகையிலான தியாகத்தைச் செய்திருந்தார் என்பது வெளிப்படையானது. ஆனால், அதுவே இறுதியானதல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஜனாதிபதியின் எண்ணப்பாங்கில் மெதுமெதுவாக மாற்றம் ஏற்படத் தொடங்கியது போலத் தோன்றுகிறது. புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதா அல்லது தற்போதைய அரசியலமைப்புக்குத் திருத்தங்களைக் கொண்டுவருவதா என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான கொள்கை வேறுபாடு அந்த எண்ணப்பாங்கு மாற்றத்துக்கான காரணமாக இருக்கவும் முடியும். அதை விடவும் வேறு காரணங்களும் இருக்கக்கூடும். ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றுமுழுதாக ஒழிப்பதைத் தாங்கள் விரும்பவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் இப்போது வெளிப்படையாகவே கருத்துத் தெரிவிக்கின்றார்கள். இது தொடர்பில் இரு பிரதான கட்சிகளும் தங்களுக்கிடையில் கலந்துபேசி இணக்கப்பாடொன்றுக்கு வரமுடியும். சாத்தியமான மாற்றுத் தீர்வொன்றுக்கு அவர்கள் வரவேண்டும். இந்த விவகாரத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் மௌனமாக இருக்கக்கூடாது. இரட்டை அதிகாரங்களுடன் எந்த ஒரு அமைப்பு முறையையும் நீண்ட காலத்துக்கு நிருவகிக்க முடியாது. தடுப்புகளும் சமப்படுதல்களும் (Checks and Balance) இருக்கலாம். இரண்டுக்கும் இடையே வேறுபாடொன்று இருக்கிறது.

ஜனாதிபதி ஆட்சி முறை அல்லது ஜனாதிபதி பதவி ஏதோவொரு வகையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யோசனை முன்வைக்கிறதென்றால், அதற்கான காரணம் அல்லது காரணங்கள் எவையாக இருக்க முடியும். மாற்றம் தொடர்பில் உள்ள பயமா காரணம்? ஜனாதிபதி சிறிசேன வேறு சில விவகாரங்கள் தொடர்பில் மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் என்றாலும், இது விடயமாக அவர் தனது கருத்தை இன்னமும் வெளிப்படுத்தவில்லை. வேறு விவகாரங்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கக் கூடிய கருத்துக்கள் ஒன்றும் எதிர்மறையானவையல்ல. தற்போதைய அமைப்பு முறையில், பரஸ்பர ஒத்துழைப்புடன் கூடிய ஆரோக்கியமான கட்டமைப்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே தடுப்புகளும் சமப்படுத்தல்களும் இருக்கலாம். பிரதமர் விக்கிரமசிங்க நியாயப்படுத்தி வருகின்ற ‘லிச்செவி கொள்கைளின்’ (Lichchevi Policies) வழியில் இது செல்லலாம். ஆனால், புதியதொரு அரசியலமைப்பைக் கைவிட்டு அதற்குப் பதிலாக தற்போதைய அரசியலமைப்புக்கு சில ஒட்டு வேலைகளைச் செய்ய முயற்சிப்பதற்கு இவற்றில் எந்த ஒன்றுமே காரணமாக இருக்கலாகாது.

அயர்லாந்தில் இருப்பதை போன்று நாடாளுமன்ற ஜனநாயகமொன்றிற்குள் தெரிவு செய்யப்படுபவராக ஜனாதிபதி இருக்கலாம் என்றும், தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக கடைமைகளை அவர் ஆற்றலாம் என்றும் கடந்த வருடம் ஏப்ரலில் பொதுமக்கள் பிரதிநிதித்துவ குழுவிடம் நான் யோசனை முன்வைத்தேன். ஜனாதிபதிக்குரிய ஏனைய கடைமைகள் சம்பிரதாய பூர்வமானவையாக இருக்கவேண்டும். ஆனால், இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி சுதந்திரமானவராகவும் சகல கட்சிகளுக்கும் சகல சமூகங்களுக்கும் நேர்மையானவராக இருப்பதை உறுதிசெய்து கொள்வதற்காக அவர் கட்சிப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும். மைத்திரிபால சிறிசேனவை மனதில் கொண்டு நான் இதைச் சொல்லவில்லை. தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதிப் பதவியை மனதில் கொண்டு பொதுவில் சொல்கிறேன். அதேபோன்றே, மாகாணங்களின் ஆளுநர்கள் பிரதமரின் ஆலோசனையின் போதும் மாகாண சபைகளுடனான கலந்தாலோசனையின் போதும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுபவர்களாக இருக்கலாம். அவர்களது பொறுப்புக்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஆலோசணையின் பேரில் அமையலாம். அவர்களின் மற்றைய கடமைகள் நிச்சயமாக சம்பிரதாய பூர்வமானவையாகவே இருக்க வேண்டும்.

அதிகாரபரவலாக்கத்தை விரிவுபடுத்துவதற்கோ அல்லது ஆழமாக்குவதற்கோ அஞ்சுவதற்கான காரணம் தேசிய பாதுகாப்பு தொடர்பானதென்றால் அதை மேற்கூறப்பட்ட ஏற்பாடொன்றின் கீழ் கணிக்க முடியும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. நான் மும்மொழிந்தது ஒத்துழைப்பு அடிப்படையிலான அதிகாரப்பரவலாக்கமே (Cooperative Devolution). அதில் பரந்தளவிலான ஒற்றையாட்சிக் கட்டமைப்பொன்றின் கீழ் மாகாண சபைகள் அவற்றுக்கான அதிகரித்த அதிகாரங்கள் அல்லது பொறுப்புக்களுடன் செயற்பட முடியும். அதேவேளை, தேசிய நன்மைக்கான மத்தியுடனும் தேசிய அரசாங்கத்துடனும் ஒத்துழைத்துச் செயற்படவும் முடியும்.

மத்திய அரசுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான உறவுகளுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து ஆராய்ந்த உப குழுவினால் கையளிக்கப்பட்ட அறிக்கையும் வேறு சில அறிக்கைகளும் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. சிலர் அதை தெரிந்தோ தெரியாமலோ ‘அரசியலமைப்பு வரைவு’ என்று வர்ணிக்கிறார்கள். வழி நடத்தல் குழு அல்லது பிரதமரின் அலுவலகம் சில காரணங்களுக்காக அந்த விடயத்தைத் தெளிவுப்படுத்தவில்லை. அவர்களும் தங்களுடைய சொந்த வரைவை இன்னமும் முன்வைக்கவில்லை. அரசியலமைப்பு வரைவை இல்லாவிட்டாலும், புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான அடிப்படைக் கோட்பாடுகளையாவது குறைந்தபட்சம் மக்கள் முன்னிலையில் இப்போது சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றவர்களே அத்தகைய அரசியலமைப்புக்கு பயப்படுகிறார்கள் என்பதாகத்  தோன்றக்கூடும்.

கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ