படம் | @Budumalli, மரிச்சுக்கட்டி பகுதியில் 1980ஆம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவால் (அமைச்சராக இருந்தபோது) ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை குறிக்கும் அறிவிப்பு

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வில்பத்து தேசிய வன பிரதேசத்தின் நில எல்லையை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அந்தப் பிரதேச முஸ்லிம்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. தமது வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தமது பழைய இடங்களில் குடியேறி சிதறடிக்கப்பட்ட தமது வாழ்க்கையைத் தொடங்கத் தயாரான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமையே இதற்கு முக்கிய காரணம்.

இந்த அறிவிப்பானது வில்பத்துவை அண்மித்த கிராமங்களான முஸ்லிம்கள் ஒரு காலத்தில் தமது சொந்த நிலங்களில் செழுமையோடு வாழ்ந்த மருச்சிக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குழி ஆகிய கிராமங்களையும் பாதிக்கும் என முஸ்லிம்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்தக் கிராமங்களில் பல தலைமுறைகளாக முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்த போதுதான் விடுதலைப் புலிகளால் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.

இங்கு மீளக்குடியேறி வாழ முடியும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் முஸ்லிம்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு பற்றி குறிப்பிடுகையில், “வில்பத்துவில் இருந்தோ அல்லது அதனோடு தொடர்புடைய இடங்களில் இருந்தோ நாம் ஒரு அங்குலம் காணியைக் கூட ஆக்கிரமிக்கவில்லை. நாம் எமது சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டும் என்றே விரும்புகின்றோம். முஸ்லிம்கள் வில்பத்து தேசிய வனப் பூங்காவை ஆக்கிரமிக்கின்றனர் அல்லது அழிக்கின்றனர் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு எமது சொந்த இடங்களில் நாம் மீளக் குடியேறுவதைத் தடுப்பதற்காகக் கூறப்படும் திட்டமிட்ட பொய்கள்” என்கின்றனர்.

இவை முஸ்லிம்கள் காலாகாலமாக வாழ்ந்த கிராமங்கள் என்பது சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளுக்கும் ஏனைய தரப்பினருக்கும் நன்கு தெரிந்த உண்மைகளாகும். இங்கு அவர்களது சிதைவடைந்த பாடசாலைகள், பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் நிர்மாணங்கள் அவ்வாறே இன்னமும் காணப்படுகின்றன. 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவடைந்த பிறகு இனவாத சக்திகள் இது தொடர்பாக பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன. இந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதை தடுக்கும் நோக்கில் உண்மையான பல தகவல்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன, மறைக்கப்பட்டும் உள்ளன.

இவ்வாறான இனவாத சக்திகளின் செல்வாக்கில் மறைந்து கொண்டுதான் 2016 டிசம்பர் 30இல் ஜனாதிபதி மேற்படி வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தமது சொந்த மண்ணில் மக்கள் மீள்குடியேற முனைவதற்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அந்த மக்களின் அடிப்படை உரிமையாகும். ஊடகங்கள் தான் அரசியல் நோக்கில் அமைச்சரை இந்தப் பிரச்சினைக்குள் இழுத்து வருகின்றன. அந்த வகையில் ஜனாதிபதியின் அண்மைய அறிவிப்பானது முழுக்க முழுக்க இனவாதிகளை திருப்திபடுத்தும் ஒரு நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. இந்தக் கிராமங்களில் முஸ்லிம்கள் மீளக்குடியேறக் கூடாது என்பதுதான் இனவாதிகளின் ஒரே நோக்கமாக உள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாஹுல் எச் ஹஸ்புல்லாஹ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட ஒரு கல்வியிலாளர்கள் குழு மன்னார் மாவட்டம் முசலி தெற்கு பிரதேசத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றி “முசலி தெற்கில் வில்பத்து சர்ச்சை காரணமாக சொந்த இடம் திரும்புவதற்கும் மீளக் குடியேறுவதற்குமான உரிமைகள் மறுக்கப்படல்” எனும் தலைப்பில் மிக விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். நாங்கள் மீண்டும் எமது சொந்த இடம் திரும்ப உதவுங்கள் என்பதுதான் இதன் மூலம் அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையாகும். சுய கௌரவத்தோடும் தன்மானத்தோடும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி கடந்த சுமார் மூன்றரை தசாப்தங்களுக்கு மேலாக தாம் அனுபவித்த துன்பங்களுக்கு முடிவு காண உதவுமாறு அந்தப் பிரதேச மக்கள் இதன் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கையில் தான் எழுதியுள்ள குறிப்பில் பேராசியர் ஹஸ்புல்லாஹ், “வில்பத்து சர்ச்சை கொழுந்து விட்டு எரிந்தபோது முன்வைக்கப்பட்ட தர்க்கங்கள் என்னை ஆச்சரியமடைய வைத்தது. இந்த சர்ச்சைகளின் போது சுட்டிக்காட்டப்பட்ட இடம் வில்பத்து வனப் பிரதேசத்துக்குள் வரவில்லை என்பதை நான் நிச்சயமாக நன்கு அறிவேன். பத்திரிகை ஒன்றில் வெளியான ஒரு கட்டுரையில் சொந்த இடங்களுக்கு திரும்புகின்றவர்களின் பிரச்சினைகளை நான் குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய கருத்தின்படி அவைதான் முக்கியமான பிரச்சினைகள். ஆனால், இந்த விவாதங்களில் ஒருபோதும் அவற்றில் கவனம் செலுத்தப்படவில்லை. மாறாக பொதுவான இந்த விவாதங்களின் போது மீளக்குடியேறும் மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டன” என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அந்தக் குறிப்பில்,

இந்த மங்களான நிலைமைதான் உண்மையைத் தேடும் பணியில் என்னை ஈடுபடத் தூண்டியது. முசலி தெற்கில் அதன் வரலாறையும் அந்த மக்களின் வரலாறையும் அறிந்துகொள்ள, காணி உரிமை கோரல்கள், அதற்கான எதிர்ப்புக்கள் என்பனவற்றைத் தெரிந்துகொள்ள எல்லா மூளைகளுக்கும் நான் சென்றேன். விவசாயம் செய்வோர், சேனைப்பயிர் செய்வோர், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர், களப்பு கடல் ஆறுகள் என மீன்பிடியில் ஈடுபடுவோர், ஆசிரியர்கள், சமய முக்கியஸ்தர்கள், சகல சமயங்களையும் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் முதியவர்கள் என சகல பிரிவு மக்களிடம் இருந்தும் பல விடயங்களை நான் கற்றுக் கொண்டேன்.

நாம் அறிந்து கொண்டதன் பிரகாரம் முசலி பிரதேசத்தில் மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்துள்ளனர். பல்வேறு வகையான வாழ்வாதார வசதிகளோடு எந்த விதமான இடையூறுகளும் இன்றி அந்த மக்கள் இந்தப் பிரதேசங்களில் அலைந்து திரிந்து வாழ்ந்துள்ளனர். காடுகளையும் தாம் வாழும் சூழலையும் பாதுகாக்கும் பழக்க வழக்கங்களோடும் அவற்றுக்கான மரபுகளைப் பின்பற்றியும்தான் இந்த மக்கள் பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்துள்ளனர். அவர்கள் இந்தப் பிரதேசத்தின் இயற்கையோடும் கலாசாரத்தோடும் ஒன்றிய, பிரிக்க முடியாத ஒரு பிரிவினராகவே இருந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசுகளோடு இடம்பெற்ற அழிவை ஏற்படுத்தும் இனவாத யுத்தத்தோடு முஸ்லிம்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லை. அவர்கள் அதற்கு எந்த வகையிலும் காரணமாக இருக்கவும் இல்லை. ஆனால், இந்த யுத்தத்தின் நடுவில் சிக்குண்டு அவர்கள் சொல்லொணா துன்பங்களுக்கு முகம் கொடுத்தனர். இதில் முசலி தெற்கு முஸ்லிம்களுக்கு எந்த விதிவிலக்கும் இல்லை. அவர்களும் இரண்டு மணிநேர காலக்கெடுவில் புலிகளால் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டார்கள். அதன் பிறகு அவர்களின் வாழ்வு அகதி முகாம்களிலும் தற்காலிக கூடாரங்களிலும் முடங்கிப் போனது. தமது பாரம்பரியமான பழைய வாழ்வை மீண்டும் தொடங்கும் கனவுகளோடு அவர்கள் காத்திருந்தனர்.

முசலி தெற்கு மக்கள் அகதி முகாம்களில் முடங்கிக் கிடந்தபோது அவர்களின் பாரம்பரிய நிலங்களில் பெரும்பாலானவற்றை ராஜபக்‌ஷ அரசு கையகப்படுத்திக் கொண்டது. இனவாத யுத்தம் முடிவடைந்த பிறகு இந்தக் காணிகளின் சொந்தக்காரர்கள் அவற்றுக்கு உரிமை கோருவார்கள் என்பதை நன்கு தெரிந்துகொண்டே ராஜபக்‌ஷ அரசு பல்வேறு போர்வைகளின் கீழ் இந்தக் காணிகளை கபளீகரம் செய்தது.

முதல் கட்டமாக முசலி தெற்கில் உள்ள காணிகளில் 40%மானவை கையகப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மேலும் 30 வீதமான காணிகள் எந்த விதமான ஆலோசனைகளும் இன்றி பாதுகாப்புப் படைகளின் தேவைக்கு என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்டன. இவ்வாறு முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் கடற்படையினரின் விவசாயத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இவற்றுக்கு மேலதிகமாக இன்னும் இரண்டு முக்கியமான முஸ்லிம் கிராமங்களில் கடற்படையின் பிராந்திய கட்டளையிடும் தலைமையகங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு முஸ்லிம்கள் தமது பூர்வீக பூமியில் மீண்டும் குடியேறுவது திட்டமிட்டு தடுக்கப்பட்டது.

இவ்வாறு முசலி தெற்கு மக்கள் ஏமாற்றப்பட்டனர். தமது பாரம்பரிய மண்ணில் அவர்களை குடியேற விடாமல் மிகப் பாரிய அளவில் ஏமாற்றப்பட்டனர். இந்தக் காணிகளுக்கான சகல சட்டபூர்வமான ஆவணங்களும் அனுமதிப் பத்திரங்களும் அவர்களிடம் இருந்தும் கூட, அவர்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டனர் என்பதே உண்மையாகும்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து ராஜபக்‌ஷ அரசில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரசாரங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு முடிவு கட்டுவதை இலக்காகக் கொண்டு அமைந்திருந்தன. இந்த இனவாத பிரசாரங்களின் ஒரு அங்கமாகத்தான் முசலி தெற்கில் முஸ்லிம்கள் தமது பாரம்பரிய இடங்களில் குடியேறுவதும் திட்டமிடப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது என்பதை தற்போது சகலரும் மிக இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் உள்ளது.

நாம் மேலே குறிப்பிட்ட அந்த ஆவணத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“முசலி – வில்பத்து பிரதேசத்தில் மீள்குடியேற்ற விடயமானது முற்போக்கு குழுக்கள் மத்தியில் இது​வரை ஏனைய தேசிய விடயங்களில் கட்டி எழுப்பப்பட்ட உறவு முறைகளை பிளவுபடுத்தி நாசப்படுத்தி உள்ளது. சுற்றாடலியல் செயற்பாட்டாளர்கள் இந்த விடயத்தை குறுகிய நோக்கில் இனவாதப்படுத்தி இந்த நிலைமைக்கு வழியமைத்துள்ளனர். வில்பத்துவை காப்பாற்றும் போர்வையில் அரசியல் ரீதியாக அவர்கள் செயற்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை பற்றிப் பேசும் ஒரு சிறிய அளவிலான பேராசிரியர்களும் கல்வியியலாளர்களும் இடம்பெயர்ந்த மக்களின் விடயங்களைக் கையாண்ட போது அரசியல் தலைமைகளின் பிடியில் இருந்து அவற்றை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றாடலியலாளர்கள் இந்த விடயத்தை எவ்வாறு கையாண்டார்களோ குறைந்தபட்சம் அதே அளவில்தான் அரசியல்வாதிகளும் இதைக் கையாண்டுள்ளனர்.

ஊடகங்கள் இவை அனைத்தையும் வெளிப்படுத்தின. பொதுவாக ஒரு புறத்தில் சுற்றாடலியலாளர்கள் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் எதிர்வலைகளைத் தூண்டிவிட இந்த விடயத்தை தூக்கிப் பிடித்தனர். இதன் விளைவாக வனங்களைப் பற்றியோ வன ஜீவராசிகள் பற்றியோ எந்த விதமான அக்கறையும் கவலையும் இல்லாதவர்கள் கூட இது தொடர்பான தீவிர பிரசாரகர்களாக தங்களைக் காட்டிக் கொண்டனர். அதன் விளைவாக சூழலோடு சம்பந்தப்பட்ட இந்த விடயம் இரவோடு இரவாக இனவாத தேசிய விடயமாக உருவானது. இவை எல்லாம் நடந்தும் கூட தமக்காக குரல் கொடுக்க யாருமே அற்ற உண்மையான பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது குரல்கள் நசுக்கப்பட்டவர்களாகவே காணப்பட்டனர். அவர்கள் தொடர்ந்தும் நசுக்கப்பட்டவர்களாகவும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவுமே காணப்பட்டனர்.

இந்த அறிக்கையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை சிவமோகன் சுமதி தனது கருத்தில், “முசலி தெற்கிற்கு திரும்பும் மக்கள் கஷ்டமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் தமக்கான வாழ்க்கையைக் கட்டி எழுப்ப முயன்று வருகின்றனர். பெரும்பாலும் இதற்குத் தேவையான அரச ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இந்தப் பிராந்தியம் அத்தியாவசியமற்ற முறையில் சுற்றாடல் தொடர்பான ஒரு சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது.”

“கடற்படையினர் இந்தப் பிராந்தியத்தில் தமது சொந்தத் தேவைக்காக மிகப் பாரிய அளவில் ஏக்கர் கணக்கான காணிகளை கைப்பற்றியுள்ள நிலையில் சுற்றாடலியலாளர்கள் குடியேற வந்துள்ள மக்கள் மீது குற்றம்சுமத்தி உள்ளனர். உள்நாட்டில் இடம்பெயர்ந்த இந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வந்து மீளக்குடியேறும் உரிமைகளைக் கோரியுள்ளனர். ஆனால், அவர்கள் காடுகளை நாசப்படுத்துபவர்கள் என்று குற்றம் சாட்டப்படுகின்றனர். இங்கு முசலி தெற்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இந்தச் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினராகக் காணப்படுகின்றனர். இவர்கள் இயற்கையை சூறையாடுபவர்களாகத் தான் ஊடகங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில்தான் வில்பத்து தேசிய வனப்பிரதேசத்தின் கீழ் வரும் காணிகளின் எல்லைகளை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வர்த்தமானி உத்தரவும் அமைந்துள்ளது. தற்போது வனபரிபாலன திணைக்களத்தின் கீழ் வராத காணி பகுதிகளையும் சேர்த்து வில்பத்து வன சரணாலயத்துக்கு உட்பட்ட பிரதேசமாகப் பிரகடனம் செய்யுமாறு ஜனாதிபதியின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக முஸ்லிம்கள் கூறும் விடயங்கள்:

  • விடுதலைப் புலிகளால் விரட்டி அடிக்கப்பட்ட எந்தவொரு முஸ்லிமும் வில்பத்து தேசிய வன பிரதேசத்துக்குள்ளோ அல்லது அதனை அண்டிய பகுதிகளுக்குள்ளோ குடியேறவில்லை.
  • வில்பத்து தேசிய வனப் பூங்கா வட மேல் மாகாணத்திலும், வட மத்திய மாகாணத்திலும் அமைந்துள்ளது. ஆனால், மீளக் குடியேறும் பகுதிகள் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ளன.
  • மன்னார் மாவட்டத்தின் தென் பகுதி எல்லையில் மோதரகம ஆறு (உப்பாறு) அமைந்துள்ளது. இந்த ஆற்றின் தென் பகுதியில் வில்பத்து அமைந்துள்ளது. அது புத்தளம் மாவட்டத்துக்கு உரியது.
  • மீளக் குடியேறிய சகல மக்களும் மன்னார் மாவட்டத்தில் உள்ள தமது சொந்தக் காணிகளிலேயே குடியேற்றப்பட்டுள்ளனர்.
  • மீள்குடியேற்றப்பட்ட இந்த அகதிகள் அனைவருக்குமே அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட வருடாந்த அனுமதிப் பத்திரங்களும் உள்ளன. LDO எனப்படும் இந்த அனுமதிப் பத்திரங்களும் அவற்றோடு சேர்த்து தமது காணிகளுக்கான சட்டபூர்வமான உறுதிப் பத்திரங்களும் உள்ளன. இவற்றுள் சில 1905ஆம் ஆண்டு பழமையானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • இந்தப் பகுதியில் 1940ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1970ஆம் ஆண்டில் புனரமைக்கப்பட்ட பள்ளிவாசல் ஒன்றின் சிதைவுற்ற பகுதிகள் இன்னமும் காணப்படுகின்றன. இந்தப் பள்ளிவாசலின் முகப்பு மற்றும் அதில் பொறிக்கப்பட்டுள்ள கட்டப்பட்ட ஆண்டு என்பன மிகத் தெளிவாகக் காணப்படுகின்றன.
  • நூற்றாண்டு கால பழமையான நீர் பாசனத்துக்கான நீர் விநியோக தாங்கிகளும் இங்கே காணப்படுகின்றன.
  • இந்தப் பகுதிகளுக்கு மீளக் குடியேற சென்ற மக்கள் தாங்கள்26 வருடங்களாக அகதி முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்தபோது பற்றைக் காடாக மாறிய தமது சொந்தக் காணிகளை துப்புரவு செய்யும் பணியில் மட்டுமே ஈடுபட்டனர்.

இவ்வாறுதான் மருச்சிக்கட்டி கரடிக்குளி உட்பட ஏனைய முஸ்லிம் கிராமங்களையும் சேர்ந்த துரதிஷ்டசாலிகளான முஸ்லிம் மக்கள் வில்பத்து வன பிரதேசத்தில் இருந்தோ அல்லது அதனை அண்டிய பகுதியில் இருந்தோ தமக்கு ஒரு அங்குலமேனும் காணி தேவையில்லை, அவற்றைத் தாங்கள் ஆக்கிரமிக்கவும் இல்லை என்று அடித்துக் கூறுகின்றனர். இவர்களது மீள் குடியேற்றம் வில்பத்து தேசிய பூங்காவோடு எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை.

தாங்கள் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதை அரசாங்கம் எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது என்பதே முஸ்லிம்கள் முன் வைக்கும் ஒரே கோரிக்கையாகும். மாறாக இந்த மீள்குடியேற்றத்துக்கு அரசு தன்னால் இயன்ற அனைத்து ஆதரவையும் வழங்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

லத்தீப் பாரூக்