படம் | Newsok

இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்னும் வகையில் தனது அயல்நாடுகளின் உள்ளக விடயங்களை உன்னிப்பாக அவதானிப்பதுண்டு. அந்த அவதானங்களின் அடிப்படையில், தேவையேற்படுமிடத்து தலையீடு செய்வதும் உண்டு. தனது அயல்நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இந்தியாவின் கையை மீறிச் சென்றுவிடக் கூடாது என்பதில், இந்தியா எப்போதும் விழிப்பாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தனது கொல்லைப்புறத்திலிருக்கும் இலங்கையில் ஏற்படும் மாற்றங்கள் உடனடியாகவே இந்தியாவை பாதிக்கக் கூடியது. இதுவரை, இந்த அடிப்படையில்தான் இந்தியாவின் நேரடி மற்றும் மறைமுக தலையீடுகள் இடம்பெற்றிருக்கின்றன. இனியும் அவ்வாறுதான் இருக்கும். இந்த இடத்தில் எழும் கேள்வி – அவ்வாறாயின் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இந்தியாவின் கரிசனைகள் என்ன?

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவில் பாரியளவு விரிசல் ஏற்பட்டிருந்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததில் இந்தியாவின் பங்கு கணிசமாக இருந்ததாகவே மஹிந்த தரப்பு இப்போதும் நம்புகிறது. சில தினங்களுக்கு முன்னர் கூட, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ நிகழ்வொன்றில் பேசுகின்ற போது, இவ்வாறு கூறியிருக்கிறார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜத்குமார் டோவல் தனிப்பட்ட ரீதியில் தன்னுடன் பேசுகின்ற போது சீனாவின் கொழும்பு – துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு கூறியதாக கோத்தபாய தெரிவித்திருக்கின்றார். மேற்படி திட்டம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்னும் அடிப்படையிலேயே டோவல் மேற்படி வேண்டுகோளை முன்வைத்ததாக குறிப்பிட்டிருக்கும் கோத்தபாய, ஆனால் அதே நெருக்கடி, மைத்திரிபால – ரணில் கூட்டரசாங்கத்திற்கும் உரித்தானது என்றும் தெரிவித்திருக்கின்றார். இந்தக் கருத்தின் உண்மைத் தன்மை பற்றி அறிய முடியாவிட்டாலும் கூட, சீன – மஹிந்த நெருக்கம் இந்தியாவின் சகிப்புணர்வின் எல்லையை தாண்டியிருந்தது என்பது உண்மையே. ஆனால், புதிய அரசாங்கமும் சீனாவுடனான நெருக்கத்திலிருந்து விடுபட்டுவிடவில்லை. இதனை பிறிதொரு வகையில் சொல்லப் போனால், முன்னைய அரசாங்கம் உரிய சட்டவிதிகளுக்கு அமைவாக செயற்படவில்லை என்று கூறிய புதிய அரசாங்கம், சீனாவுடனான ஒப்பந்தங்களை வலுவாக்கி மீளவும் சீனாவிடமே ஒப்படைத்திருக்கிறது. இது ஆட்சியில் எந்த அரசாங்கம் இருந்தாலும் சீனாவுக்கும் இலங்கைக்குமான நெருக்கம் பாதிக்கப்படப் போவதில்லை என்பதையே தெளிவுபடுத்துகின்றது. இது சீன வெளிவிவகார அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகும். மேலும் முன்னைய அரசாங்கத்தை விடவும் புதிய அரசாங்கம் சீனாவிற்கு மேலும் சலுகைகளை வழங்கியிருக்கிறது. இது தொடர்பில் இந்தியா எவ்வளவு தூரம் சகிப்புணர்வை கடைப்பிடிக்கப் போகிறதோ!

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான நிலைமை இவ்வாறிருக்கின்ற சூழலில்தான், மைத்திரி – ரணில்  அரசாங்கம் புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆனால், மோடி – இந்தியா இது தொடர்பில் இதுவரை எவ்வித கரிசனையும் வெளிப்படுத்தியதாகத் தகவல்கள் இல்லை. இந்த இடத்தில் பிறிதொரு கேள்வியையும் கேட்கலாம்! மோடி – இந்தியா கரிசனை காண்பிக்கவில்லையா அல்லது அவ்வாறானதொரு கரிசனையை காண்பிப்பதற்கான வேண்டுகோள்கள் இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படவில்லையா?

இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பான விடயங்களில் மௌனமாக இருக்கும் மோடி – இந்தியா, நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியல் யாப்பு விகாரங்களில் தலையீடு செய்தது. அப்போது புதிய அரசியல் யாப்பு எவ்வாறிருக்க வேண்டுமென்னும் ஆலோசனைகளை முன்வைத்தது. நேபாளம், இந்தியாவிற்கு ஒரு அயல்நாடாக இருப்பது போலவே இன்னொரு புறமாக சீனாவிற்கான அயல் நாடாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையிலேயே மாவோயிச கிளர்ச்சியாளர்களின் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து, அங்கு ஒரு அரசியல் மாற்றத்திற்கான நடுநிலையாளராக இந்தியா தொழிற்பட்டது. இவ்வாறானதொரு நிலையில்தான் மாவோயிச கிளர்ச்சியாளர்களுக்கும் நேபாளத்தின் ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இந்தியாவின் மேற்பார்வையில் 12 அம்சங்களை உள்ளடக்கிய உடன்பாடொன்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்தே நேபாளத்துக்கான புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த யாப்பு உருவாக்கத்தில் மோடி கூடுதல் கரிசனை எடுத்துக் கொண்டார். ஏனெனில், புதிய அரசியல் யாப்பு நேபாளத்தில் மீளவும் பதற்றங்களை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் இந்தியா கூடுதல் கவனம் எடுத்தது. புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் போது நேபாள மக்கள் தொகையில் 40 வீதமான மதேசி மற்றும் தெறாய் இனக்குழு மக்கள் அரசியல் யாப்பில் தங்களது உரிமைகள் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்னும் அடிப்படையில் போராட்டங்களில் இறங்கினர். அது வன்முறையாக விரிவுபெற்றது. இந்த நிலையில், இந்திய எல்லைப்புறம் ஒன்றில் பதற்றங்கள் அதிகரிப்பது தங்களுடைய தேசிய பாதுகாப்பில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்னும் அடிப்படையில் இந்தியா அதில் தலையீடு செய்தது.

இதனை முன்னிறுத்தி சிந்திப்பதாயின், இந்தியாவின் கொல்லைப்புற நாடான இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இந்தியா கடுமையான அமைதியை காண்பித்துவருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, தான் ஒத்துழைப்புடன் கூடிய சமஸ்டி (cooperative federalism) முறைமை தொடர்பில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அதேவேளை, இலங்கையின் ஜக்கியமும் மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், மோடி அவ்வாறான ஒன்று இலங்கைக்குப் பொருத்தமானது என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அப்படியான ஒன்றின் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்னும் கருத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியிருந்தார். அவ்வாறு குறிப்பிட்ட மோடியின் தலைமையிலான இந்திய வெளிவிவகாரக் குழு, இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் கரிசனை கொள்ளாமல் இருக்க முடியுமா?

பொதுவாக தமிழ் தேசியவாதிகள் மத்தியில் ஒரு பார்வையுண்டு. காங்கிரஸ் புலிகளை அழிப்பதில் உறுதியாக இருந்தது. ஆனால், பி.ஜே.பி. அப்படியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இறுதி யுத்தம், விடுதலைப் புலிகளின் குரல்வளையை நசிக்கத் தொடங்கியிருந்த வேளையிலும் கூட, புலிகளின் தமிழ் நாட்டு ஆதரவாளர்களால் இப்படியொரு நம்பிக்கையே அதன் தலைமைக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. 2009இற்குப் பின்னரான கலந்துரையாடல் ஒன்றின் போது, இந்திய பத்திரிகையாளர் நாராயணசாமி கூட அப்படியானதொரு கருத்துப்படவே பேசியிருந்தார். விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது, இந்தியாவில் பி.ஜே.பி. அரசாங்கமே இருந்தது. ஆனால், பேச்சுவார்த்தை முறிவடைகின்ற சூழலில் இந்தியாவின் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தது. 2004இல் ஆட்சி பீடமேறிய காங்கிரஸின் ஆட்சி 2009இல் இரண்டாவது தவணைக்கான தேர்தலை எதிர்கொண்டிருந்தது. இதே 2009இல் தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தமும் முடிவுற்றது. இந்த யுத்தம் முடிவுறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் இந்தியாவில் தேர்தலும் இடம்பெற்றது. அந்தத் தேர்தலில் பி.ஜே.பி. வெற்றிபெறுவற்கான வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பொறுமை காக்குமாறும்தான் மேற்படி தமிழ் நாட்டு ஆதரவாளர்கள் புலிகளுக்கு ஆலோசனை தெரிவித்திருந்தனர். ஆனாலும், மேற்படி தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே மீளவும் ஆட்சியைக் கைப்பற்றியது. இவ்வாறானதொரு நிலையில்தான் விடுதலைப் புலிகள் இலங்கைத் தீவிலிருந்து முற்றிலுமாக இல்லாமலாக்கப்பட்ட நிலையில், 20014இல் மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சியைக் கைப்பற்றியது. பி.ஜே.பி. ஆட்சியை கைப்பற்றி சில மாதங்களில் மஹிந்தவின் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. இப்போது இந்தியாவிற்கு நெருக்கடியான விடுதலைப் புலிகள் இல்லாத – இந்தியாவிற்கு நெருக்கடியான மஹிந்த ராஜபக்‌ஷ அதிகாரத்தில் இல்லாத இலங்கைத் தீவில் புதிய அரசியல் ஒழுங்கொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் இந்தியா மௌனமாக இருக்க முடியுமா?

எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைத் தீவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கவுள்ளதாக சொல்லப்படும் அரசியல் யாப்பு தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்படவுள்ளன. மோடி நம்பும் ஒத்துழைப்புடன் கூடிய சமஸ்டி என்னும் இலக்கிற்காக அவர் இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பாரா? இதில் பிறிதொரு விடயமும் உண்டு. நேபாளத்தின் புதிய அரசியல் யாப்பில் தங்களின் உரிமைகள் முறையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை முன்னிறுத்தி அதிருப்தியாளர்கள் பேராடியதால் இந்திய எல்லைப்புறத்தில் பதற்றம் அதிகரித்து. இதன் விளைவாகவே இந்தியா தலையிட வேண்டியேற்பட்டது. இந்தியாவின் கொல்லைப்புறமான வடக்கிலிருந்து அப்படியான போராட்டங்கள் எதுவும் நடக்கப் போவதில்லை. அதனை முன்னெடுப்பதற்கான வலுவான தலைவர்களும் இல்லை, எந்தவொரு முன்னணிகளும் இல்லை. இந்த நிலையில், ஜக்கிய இலங்கை என்னும் சட்டகத்திற்குள் முன்வைக்கப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் இந்தியாவிற்கு இணக்கமான தீர்வாக பார்க்கப்படக் கூடிய வாய்ப்பே உண்டு. சம்பந்தனும் இந்தியாவின் தலையீடு தொடர்பில் எவ்வித கரிசனையையும் காண்பிக்கவில்லை. இந்த நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் மற்றும் நீண்டகால நோக்கிலான மூலோபாய நலன்களுக்கு பாதிப்பில்லையெனின் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் உள்ளக மாற்றங்கள் தொடர்பில் மோடி – இந்தியா பெரியளவில் கரிசனை கொள்ள வாய்பில்லை போலவே தெரிகிறது. வாய்ப்புக்கள் இல்லையெனின் வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பிலேயே அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும். ஆனால், அதற்கான வெளிச்சம் தமிழ்ச் சூழலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. உண்மையில் இப்போது செய்ய வேண்டியது, சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் புதுடில்லியுடன் பேச வேண்டும். மோடி வலியுறுத்திய ஒத்துழைப்புடன் கூடிய சமஸ்டி தொடர்பில் பி.ஜே.பி. தலைமையிலான இந்தியாவின் கரிசனைகளை வெளிப்படுத்துமாறு கோர வேண்டும். ஆனால், சம்பந்தனோ ஜனவரி 9ஆம் திகதி இடம்பெறவுள்ள யாப்பு தொடர்பான விவாதத்திற்கு முதல் நாள்தான் கூட்டமைப்பையே சந்திக்கவுள்ளார். இதுதான் நிலைமை.

யதீந்திரா