படம் | DailyNews
முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய கட்சியான ஶ்ரீலங்கா மக்கள் முன்னணி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) இலங்கை அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமானதொரு கேள்வியாகும். இரு பிரதான அரசியல் கட்சிகளையும் விட்டு கடந்த காலங்களில் வெளியேறி புதிய கட்சிகளை அமைத்துக் கொண்டவர்கள் தங்கள் நோக்கங்களில் வெற்றிபெற முடியாத நிலையில் மீண்டும் தாய்க்கட்சிகளுடனேயே இணைந்து கொண்டதை இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல தடவைகள் கண்டிருக்கின்றோம். இந்த வரலாற்று அனுபவங்களின் தொடர்ச்சியாக ஶ்ரீலங்கா மக்கள் முன்னணிக்கும் அதே கதிதான் நேரும் என்று கூறுவதற்கு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அவதானிகள் தயங்குவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
பேராசிரியர் பீரிஸ் என்னதான் பெரிய மேதையாக இருந்தாலும் அவரின் அரசியல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இவர் தலைமையில் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டு அது நாட்டு மக்களின் ஆதரவைப் பெறக்கூடியதாக இருக்குமென்று எவரும் நினைத்துப் பார்க்கவோ நம்பவோ மாட்டார்கள். மக்கள் முன்னணியின் தோற்றத்தின் பின்னணியில் யார் யாரெல்லாம் இருக்கின்றார்கள் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது எல்லோருக்கும் தெரியும். தலைநகர் கொழும்புக்கு வெளியே பத்தரமுல்லையில் அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அலுவலகத்தில்தான் மக்கள் முன்னணியின் முதன் முதலான முறைப்படியான செய்தியாளர் மாநாடு அதுவும் அவரது பிறந்த தினத்துக்கு முதல்நாள் நவம்பர் 17ஆம் திகதி நடைபெற்றது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பேராசிரியர் பீரிஸ் சகிதம் அந்தச் செய்தியாளர் மாநாட்டில் தங்களது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தபோது தனது மூத்த சகோதரரான முன்னாள் ஜனாதிபதியே தங்களது கட்சியின் (ஆன்மீகத் தலைவர்) என்று சொன்னதைக் காணக்கூடியதாக இருந்தது. மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் போன்றே பசில் ராஜபக்ஷ நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறார். கட்சிக்கு நாடு பூராகவும் உறுப்பினர்களைச் சேர்க்கும் பிரசாரங்களை அவர் தீவிரமாக முன்னெடுத்திருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷ மக்கள் முன்னணியின் உறுப்பினராக இன்னமும் சேர்ந்து கொள்ளவில்லை என்றும், அவரை கட்சியில் இணைந்துகொள்ள இணங்கவைப்பதில் வெற்றிபெறமுடியும் என்பதில் முழுமையான நம்பிக்கை இருக்கிறது என்றும் பசில் ராஜபக்ஷ செய்தியாளர்களிடம் கூறினார். 1951ஆம் ஆண்டு ஜக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆரம்பித்த நிகழ்வுடன் தங்களது மக்கள் முன்னணியின் தோற்றத்தை ராஜபக்ஷ ஒப்பிட்டுப் பேசினார். புதிய கட்சியின் தலைவராகியதை அடுத்து உடனடியாகவே சுதந்திரக் கட்சியில் இருந்த நீக்கப்பட்டுவிட்ட பேராசிரியர் தங்களது மக்கள் முன்னணியே உண்மையில் சுதந்திரக் கட்சியின் அடையாளத்தையும் குணாதிசயத்தையும் உருவகப்படுத்தி நிற்கிறது என்று குறிப்பிட்டார்.
மக்கள் முன்னணிக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளை பசில் ராஜபக்ஷ தீவிரப்படுத்தியிருப்பதை அடுத்து சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது கட்சிக்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளும் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. புதிய கட்சியினால் சுதந்திரக் கட்சிக்கும் நீட்சியாக தனது அரசியல் அதிகார இருப்புக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பை உணர்ந்துகொண்டவராகவே இவர் தனது அணுகுமுறைகளை வகுக்க வேண்டியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் தற்போது சீனாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் பேராசிரியர் பீரிஸ் அந்நாட்டின் செம்செம்சாங் என்ற பகுதியில் மக்கள் முன்னணியின் முதன் முதலான வெளிநாட்டுக் கிளையை அங்குள்ள இலங்கையர்கள் மத்தியில் திறந்து வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. வேறு நாடுகளில் மக்கள் முன்னணியின் கிளைகளைத் திறக்க விரும்புகின்ற இலங்கையர்கள் தங்களுடன் தொடர்புகொள்ளலாம் என்று பேராசிரியர் பீரிஸ் வேண்டுகோள் விடுத்ததாகவும் அந்தச் செய்திகள் தெரிவித்தன. ஆனால், சீனாவில் கட்சிக் கிளை திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி பங்கேற்றாரா இல்லையா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.
தற்போதைய நிலையில் புதிய கட்சியில் இருக்கக்கூடிய பிரபலமான அரசியல்வாதிகள் என்றால் அதன் தலைவர் என்று சொல்லப்படுகின்ற பேராசிரியர் பீரிஸும் பசில் ராஜபக்ஷவும்தான். நாடாளுமன்றத்தில் (கூட்டு எதிரணி) என்று தங்களை அழைத்துக்கொள்கின்ற ராஜபக்ஷ விசுவாசிகளான எம்.பிக்களில் எவரும் இதுவரையில் மக்கள் முன்னணியில் வந்து இணையவில்லை. சுதந்திரக் கட்சியில் ஒரு பிரிவினரையும் அக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்ற சிறிய கட்சிகளையும் சேர்ந்தவர்களையும் கொண்ட 50 எம்.பிக்கள் ராஜபக்ஷ ஆதரவாளர்களாக இவ்வாறு தனியாக இயங்குகிறார்கள். புதிய கட்சியில் இவர்கள் இணைந்துகொள்வார்களேயானால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்க வேண்டியிருக்கும். அதனால், இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் இப்போதைக்கு புதிய கட்சியில் இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லை. மஹிந்த ராஜபக்ஷவும் கூட அதை எதிர்பார்ப்பார் என்று கூறுவதற்கில்லை.
புதிய கட்சி அமைக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள வியூகம் என்னவென்றால் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களில் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்பாளர்களாக களமிறங்குவதற்கு ராஜபக்ஷ விசுவாசிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பது நிச்சயம், அத்தகைய சூழ்நிலையில் அந்த விசுவாசிகளுக்குத் தேர்தலில் தனியாகக் களமிறங்குவதற்கு வாய்ப்பைக் கொடுப்பதே புதிய கட்சியின் முதல் நோக்கம். கடந்த வருட முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு மைத்திரிபால சிறிசேனவினால் சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை தன்வசமாக்கிக் கொள்ள முடிந்தபோதிலும் கட்சி இன்னமும் முழுமையாக அவரின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்தில் இருக்கின்றபோதிலும் கூட அவரால் முன்னாள் ஜனாதிபதி விசுவாசிகள் கட்சிக்குள் தனக்கு தோற்றுவிக்கின்ற சவால்களை சமாளிக்க முடியவில்லை என்பது உண்மையே. சுதந்திரக் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் ஆதரவாளர்கள் மத்தியில் ராஜபக்ஷவிற்கு பெருமளவு ஆதரவு இன்னும் தொடரவே செய்கிறது. இந்த ஆதரவையே பிரதான தளமாகக் கொண்டு புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
உள்ளூராட்சி தேர்தல்களை தொடர்ச்சியாக ஒத்திவைத்துக்கொண்டு போவதற்கு வட்டார எல்லைகள் மீள்நிர்ணயம் உட்பட பல நடைமுறைக் காரணங்களை அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கின்ற போதிலும் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய அரசியல் காரணங்கள் ஒன்றும் இரகசியமானவையல்ல.
தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படுமானால் அது ராஜபக்ஷ விசுவாசிகள் புதிய கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிடும்போது ஏற்படக்கூடிய பிரதானமான மும்முனைப் போட்டியில் (ஐக்கிய தேசியக் கட்சி – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஶ்ரீலங்கா மக்கள் முன்னணி) சுதந்திரக் கட்சிக்கு கணிசமான பின்னடைவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அத்தகைய பின்னடைவு சுதந்திர கட்சிக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அத்தகையதொரு சூழ்நிலை ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியதான அணுகுமுறையை வகுக்கவேண்டியவராக ஜனாதிபதி இருக்கின்றார். அதேவேளை, இதுவரையில் சுதந்திரக் கட்சியை தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலாதவராக இருக்கும் ஜனாதிபதியை தேர்தல் ஒன்றின் மூலமாக பலவீனமான கட்சித் தலைவராக காண்பிப்பதற்கான வாய்ப்பொன்றிற்காகவே முன்னாள் ஜனாதிபதி காத்துக் கொண்டிருக்கிறார்.
புதிய கட்சியுடன் தன்னை முறைப்படியாக அடையாளம் காட்டிக்கொள்வதில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எந்தவிதமான அவசரமும் இல்லை. ஆனால், அதன் பின்னணியில் விளங்குகிறார் என்பதை தென்னிலங்கைக்குக் குறிப்பாக சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கு உணர்த்துவதில் இவர் எந்தவிதமான தயக்கத்தையும் காட்டுவதாக இல்லை. அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவின் தந்திரோபாயம் ஶ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை மீண்டும் கைப்பற்றுவதேயாகும். தனக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய ஆதரவு குறித்து இவர் மிகையான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார். தனது ஆசிர்வாதத்துடனான ஒரு கட்சி ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சிக்குப் பெரிய சவாலாக அமைவதை உறுதிப்படுத்தினால், தன்னையே மீண்டும் கட்சியின் தலைவராக்குமாறு உள்கட்சிக் கிளர்ச்சியொன்றை ஏற்படுத்த முடியும் என்பதே அவரின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஜனாதிபதி உண்மையில் ஒரு திரிசங்கு நிலையில் இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஐக்கிய தேசியக் கட்சியுடன் சுதந்திரக் கட்சி சேர்ந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றபோதிலும் தேர்தல் அரசியல் என்று வரும்போது ஆட்சிப் பங்காளிகள் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ள வேண்டிய நிலையே இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு விசுவாசமான கட்சிகளுக்கு எதிராக மாத்திரமல்ல தன்னுடன் சேர்ந்து ஆட்சி செய்துகொள்ளவிருக்கும் கட்சிக்கு எதிராகவும் வியூகத்தை வகுக்க வேண்டியவராக ஜனாதிபதி இருக்கிறார்கள். அடுத்து வரும் நாட்கள் குறிப்பாக அடுத்த வருடம் விசித்திரமான திருப்பங்கள் நிறைந்ததாக இலங்கை அரசியல் இருக்கப் போகிறது.
ஸ்பார்ட்டகஸ்