படம் | The Japan Times
தமிழர்களுக்கு எப்படியானதொரு அரசியல் தீர்வு வரப்போகிறது? இப்படியொரு கேள்வியை எழுப்பினால் இரண்டு விதமான பதில்களை காணலாம். ஒரு சாரார் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்பார்கள். இன்னொரு சாராரோ ஏதோ ஒன்று வரத்தான் போகிறது. ஆனால், அது என்னவென்றுதான் தெரியவில்லை என்பார்கள். ஒப்பீட்டடிப்படையில் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று சொல்வோரே அதிகம். இலங்கையின் கடந்தகால வரலாற்றின் அடிப்படையில் நோக்கினால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று சொல்வோரின் வாதம் தர்க்கரீதியில் வலுவுடையதாகும். ஏனெனில், கடந்த காலத்தில் இலங்கைத் தீவை வெற்றிகரமாக ஆட்சிசெய்த எந்தவொரு அரசாங்கங்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை. முயற்சிக்கவில்லை என்பதையும் விட அதற்கான அரசியல் திடசங்கற்பம் (Political will) எந்தவொரு சிங்களத் தலைவரிடமும் இருந்திருக்கவில்லை.
1949இல் இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த 67 வருடகால அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் மாகாண சபை முறைமை ஒன்றுதான் தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட தீர்வாலோசனைகளில், அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட்ட ஒரேயொரு விடயமாகும். அதற்கு முன்னர் பண்டா – செல்வா, டட்லி – செல்வா போன்ற உடன்பாடுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவை எவையும் அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அவைகளை அரசியல் யாப்பில் உள்வாங்கச் செய்வதற்கான நிர்பந்தங்களை கொடுத்திருக்கக் கூடிய ஆற்றலும் அன்றைய மிதவாதத் தலைவர்களிடம் இருந்திருக்கவில்லை. அந்த வகையில் நோக்கினால் கடந்த 67 வருடங்கங்களில் அரசியல் தீர்வு என்று ஓரளவாவது சொல்லக் கூடிய ஒன்று இருக்கிறதென்றால் அது இந்த மாகாண சபை முறைமை ஒன்றுதான். ஆனால், அதுவும் சிங்கள ஆட்சியாளர்களின் பெருந்தன்மையினாலோ அல்லது நல்லெண்ணத்தினாலோ நிகழ்ந்த ஒன்றல்ல. மாறாக, ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களின் போராட்டங்களினாலும் அர்ப்பணிப்புக்களாலும்தான் அது கிடைக்கப்பெற்றது. இதில் அனைத்து இயக்கங்களிற்கும் அளப்பரிய பங்குண்டு. அந்த வகையில் நோக்கினால் கடந்த முப்பது வருட போராட்டத்தின் விளைவாகத்தான் மாகாண சபையைக் கூட தமிழ் மக்கள் தரிசிக்க முடிந்தது. அதுவும் கூட பிராந்திய சக்தியான இந்தியாவின் ஆதரவில்தான் சாத்தியமானது. இவ்வாறான அனுபவத்தின் வழியாக சிந்திக்கும் ஒரு தமிழ் மகன் அல்லது மகள், பெரிதாக ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று சலித்துக்கொள்வார்களானால், அது அவர்களின் தவறல்ல. மாறாக, அது சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த தவறுகளின் விளைவாகும்.
இவ்வாறான அனுபவங்களின் நீட்சியாகத்தான் ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் விவாதங்களை உற்றுநோக்க வேண்டியிருக்கிறது. ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, பெருமளவிற்கு ஏனைய நாடுகளின் வரலாற்றில் கூட காணக்கிடைக்காத ஒரு அதிசயம் இலங்கைத்தீவில் நிகழ்ந்தது. அதாவது, இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆளுங்கட்சியாக அல்ல எதிர்க்கட்சியாக மட்டுமே இருந்த இரண்டு பிரதான கட்சிகளும் ஒரணியில் இணைந்து ஒரு அரிதான ஆட்சியை அமைத்தன. இந்தப் பின்னணியில்தான் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்னும் கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கான பதிலாகத்தான் நான் மேலே குறிப்பிட்ட இருவிதமான விடைகள் எம்மத்தியில் உலாவுகின்றன. இப்படியானதொரு சந்தர்ப்பத்தில்தான் அரசியல் தீர்வு தொடர்பான இடைக்கால அறிக்கையொன்று வரவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் சார்பில் அரசியல் தீர்வு தொடர்பான உரையாடல்களில் பங்குகொண்டு வருபவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் இவ்வாண்டுக்குள்ளேயே எப்படியானதொரு தீர்வுத்திட்டம் வரப்போகிறது என்பது, பகிரங்கமாகிவிடும் என்றும் தெரிவித்திருக்கின்றார். அண்மையில் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். அரசியல் யாப்பு தொடர்பில் இருவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஒருவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, மற்றையது எங்கட சுமந்திரன். அவர் கூறியது போன்றே சுமந்திரன் மிகுந்த நம்பிக்கையுடன்தான் இருக்கிறார். ஒரு விடயத்தை நம்புவதை எவரும் தவறென்றும் கூறிவிட முடியாது. ஆனால், தாம் நம்பும் விடயம் ஒருவேளை நடைபெறாது போனால் அடுத்த திட்டம் என்ன என்பது குறித்த எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டியதும் அவசியம். ஆனால், அந்த எச்சரிக்கை உணர்வு சுமந்திரனிடம் மட்டுமல்ல சம்பந்தனிடமும் மிகவும் குறைவாகவே தெரிகிறது. ஒரு வேளை இது, அவர்களது அளவுக்கதிகமான நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
சுமந்திரன் சொல்லுவது போன்று ஒரு இடைக்கால அறிக்கை வரவுள்ளது உண்மைதான். அந்த அறிக்கையைத் தொடர்ந்து அடுத்த மாதம் 10ஆம் திகதி, அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயங்களையும் உள்ளடக்கிய இரண்டாவது இடைக்கால அறிக்கை ஒன்றும் வரவுள்ளது என்பதும் உண்மைதான். ஆனால், இந்த அறிக்கைகளில் அரசியல் தீர்வு தொடர்பில் விவாதிக்கப்படும் அனைத்து விடயங்களும் இறுதித் தீர்வில் உள்வாங்க்கப்படும் என்றில்லை. சிலது ஏற்றுக் கொள்ளப்படலாம் சிலது நிராகரிக்கப்படலாம். அந்த வகையில் சுமந்திரன் கூறும் அறிக்கைகள் எத்தகையவை என்பதை மக்கள் விளங்கிக்கொள்வதும் அவசியம். புதிய அரசாங்கம் ஜ.நாவிற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவரும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி இலங்கையின் நாடாளுமன்றத்தை ஒரு அரசியல் அமைப்பு பேரவையாக (Constitution Assembly) மாற்றியது. இதன் மூலம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் அமைப்பு பேரவையின் உறுப்பினர்களாவர். இதனைத் தொடர்ந்து அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பேரவைக்கென ஏழு துணைத் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் ஒருவர்.
இதே காலப்பகுதியில் அரசியல் யாப்பு விவகாரங்களை கையாளுவதற்கென 21 பேர் அடங்கிய வழிகாட்டுக் (steering committee) குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இதனை வழிநடத்தும் பொறுப்பு பிரதமருடையது. இக்குழுவில் கூட்டமைப்பின் சார்பில் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். மேற்படி வழிகாட்டும் குழுவின் தீர்மானத்திற்கமைய புதிய அரசியல் யாப்பிற்கான விடயங்களை ஆராய்வதற்கென ஆறு உப குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதனடிப்படையில் அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டமும் ஒழுங்கும், பொது நிதி, பொதுச் சேவைகள் மற்றும் மத்திக்கும் மாகாணங்களுக்குமான உறவுநிலை (Centre-Periphery Relations) ஆகிய விடயதானங்களின் கீழ் மேற்படி ஆறு குழுக்களும் உருவாக்கப்பட்டதுடன், ஒவ்வொரு குழுவிற்கென தலைவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு உப குழுவிலும் 11 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். மேற்படி குழுக்கள் (கட்டுரையில்) வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் ஒழுங்கில் முறையே, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சுமந்திரன், மாவைசோனாதிராஜா, சரவணபவன், ஞானமுத்து சிறினேசன், சித்தார்த்தன் ஆகியோர் மேற்படி ஆறு குழுக்களிலும் அங்கம் வகிக்கின்றனர். இதில் சித்தார்த்தன் குறித்த உப குழுவின் தலைவராக செயற்பட்டுவருகின்றார். புதிய அரசியல் யாப்பில் மேற்படி தலைப்புக்களில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களை ஆராய்வதும் அதனை அறிக்கையிடுவதுமே மேற்படி ஆறு குழுக்களினதும் பிரதான பணியாகும். மேற்படி உப குழுகள், தங்களது கலந்தாலோசனைக்கும் கற்றலுக்குமாக ஏற்கனவே இருக்கின்ற 1972ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு, 1978 அரசியல் யாப்பு, 2000 இல் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு வரைபு (Draft Constitutional Bill of 2000) மற்றும் அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய குழுவின் தீர்வாலோசனை (Proposals the All Party Representative Committee (APRC) ஆகியவற்றை பரிசீலித்திருக்கின்றன. மேலும், புதிய அரசியல் யாப்பிற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையும் மேற்படி குழுக்கள் பரிசீலித்திருக்கின்றன. இதனடிப்படையில் மேற்படி குழுக்கள் ஒவ்வொன்றும் தங்களது அறிக்கைகளை தயார் செய்திருக்கின்றன. இந்த அறிக்கைகளே எதிர்வரும் 19ஆம் திகதி அரசியல் அமைப்புப் பேரவையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அவைகள்தான் சுமந்திரன் குறிப்பிடும் இடைக்கால அறிக்கை. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் உப குழுக்களின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் அமைப்புப் போரவையானது அதனுடைய இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் – எதை வெட்டுவது எதனை பிடுங்கியெடுப்பது என்பது தொடர்பான விவாதங்களின் பின்னர் எஞ்சும் விடயங்களைக் கொண்டே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எத்தகையது என்பதை ஒருவர் காணலாம்.
ஒரு சிறிய இனமான தமிழ் மக்கள் கொடுத்த விலைக்கு ஈடான ஒரு அரசியல் தீர்வு வராது என்பதில் எவருக்குமே சந்தேகமிருக்காது ஆனால், வரவுள்ள தீர்விலாவது ஓரளவாவது, தமிழ் மக்கள் சுயாதீனத்துடன் வாழ்வதற்கான ஏற்பாடுகள் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்தே நோக்க வேண்டும். ஆனால், உப குழுக்களின் ஊடாக முன்வைக்கபடவுள்ள அறிக்கைகள் அனைத்திலும் கூட்டமைப்பின் பங்குபற்றல் உண்டு. எனவே, அதனடிப்படையில் ஒரு இறுதி வரைபை முன்வைக்கும் போது அதில் தங்களின் பங்களிப்பு இல்லையென்று கூட்டமைப்பால் வாதிடவும் முடியாது. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்ந்த அனைத்து கட்சிகளும் உப குழுக்களில் பங்குபற்றியிருக்கின்றன. சித்தார்த்தன் தலைமையிலான உப குழுவின் அறிக்கை ஏற்கனவே சிங்கள உறுப்பினர்களால் ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே தேசிய பிக்குகள் முன்னணி அதனை கடுமையாக விமர்சித்திருக்கின்றது. முக்கியமாக சித்தார்த்தன் தலைமையிலான உப குழுவின் அறிக்கையின் சித்தார்த்தன் ஒற்றையாட்சியை நீக்க வேண்டுமென்னும் வாதத்தை முன்வைத்திருக்கின்றார். ஆனால், இதனை நீக்குமாறு ஏனைய சிங்களத் தரப்பினரால் கோரிக்கைவிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, ஒரு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்விற்கு ஒற்றையாட்சி தடையாக இருக்கிறது என்றவாறு சொற்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதுவும் வழிகாட்டும் குழுவின் அறிக்கையில் எவ்வாறு மாற்றம் காணும் என்பதையும் பொறுத்திருந்தே நோக்க வேண்டும்.
மன்னாரில் இடம்பெற்ற “தடம்மாறுகிறதா தமிழ்த் தேசியம்” – கூட்டத்தில் பேசும் போது யுனிட்டறி பெடரலிசம் என்னும் புதிய வகையில் தாம் சிந்தித்துவருவதாக சம்பந்தன் தெரிவித்திருந்தார். பின்னர் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவராக கடமையாற்றிய லால் விஜயநாயக்கவோ பெரும்பான்மை மக்கள் சமஸ்டியில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதேபோன்று யுனிடறியும் இல்லாத பெடரலிசமும் இல்லாத ஒரு வகைமாதிரி தொடர்பிலும் சிலர் விவாதிக்கின்றனர். ஆனால், இவைகளெல்லாம் ஒவ்வொருவரது அபிப்பிராயங்கள் மட்டுமே. ஆனால், லால் விஜயநாயக்க சொல்லுவது போன்று பொரும்பான்மையான மக்கள் பெடரலிசத்தில் ஆர்வம் காடவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஏனெனில், இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் சிங்களவர்களாவர். எனவே, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், தமிழ் நோக்கு நிலையில் சரியென்று திருப்திகொள்ளக் கூடிய அரசியல் யாப்பொன்று வரப்போவதில்லை. இதற்கு சித்தார்த்தன் தலைமை வகித்த உப குழுவின் அறிக்கையே சான்று. அரசியல் அமைப்பு பேரவையென்பது சிங்களப் பெரும்பான்மையின் பேரவைதான். எதை விவாதித்தாலும் இறுதியில் பெரும்பான்மையான சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவின்றி எதனையும் செய்ய முடியாது. ஆக மொத்தத்தில் ஓரளவு அரசியல் தீர்வை ஊகிக்க முடியுமானால் – அது 13ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, மாகாண சபையை மேலும் கொஞ்சம் பலப்படுத்துவதாகத்தான் இருக்கும் போல்தான் தெரிகிறது. சுமந்திரன் கூறுவது போன்று இப்போது பொறுமையாக அவதானிப்பதைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை. ஆனால், இந்த அரசியல் யாப்பின் மூலம் சம்பந்தன் அதி உச்சமாக எதனை எதிர்பார்க்கிறார்? அதற்கு பதில் அவரிடமும் சுமந்திரனிடமும் மட்டுமே உண்டு. ஒருவேளை அது வராது போனால் கூட்டமைப்பின் முடிவு என்னவாக இருக்கும்? நாடாளுமன்றத்தில் அரசியல் யாப்பை எதிர்த்து வாக்களிக்குமா? அல்லது அந்த வெட்டிக் குறைக்கப்பட்ட ஒன்றுதான் தங்களின் எதிர்பார்ப்பு என்று வாதிடுவார்களா?
யதீந்திரா