படம் | Hiru News
இலங்கையின் மத மற்றும் இன ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சமீபத்திய சம்பவங்கள் குறித்து கடும் கரிசனை கொண்டுள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, அங்கவீனமுற்ற படையினரை சிலர் தங்கள் அரசியல் நோக்கங்களிற்காக பயன்படுத்த முனைந்துள்ளமை, ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே அவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள், பௌத்த மதகுருமார் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக அதிகளவிற்கு வெறுப்பைத் தூண்டும் கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளமை மற்றும் சமூக ஊடகங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்கள் பரந்துபட்ட அளவில் காணப்படுவது போன்றவையே குறிப்பிட்ட சம்பவங்களாகும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்திருக்கும் அந்நிலையம், எமது ஜனநாயகத்தையும், ஆட்சிமுறையையும் சீர்த்திருத்துவதற்கான நடவடிக்கைகள் இனவாத மற்றும் சகிப்புத்தன்மையற்ற சக்திகளால் மீண்டும் ஒருமுறை பலவீனப்படுத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அறிக்கையின் முழு வடிவத்தைக் கீழ் காணலாம்,
சில பௌத்த துறவிகளால் பயன்படுத்தப்படும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய வார்த்தைகள் – சந்தேகத்திற்கு இடமின்றி வன்முறையையும் பௌத்த உணர்வினைக் கொண்டிராதவையும் – குறிப்பாக சமூக ஊடகங்களில் பரவலாக காணமுடிபவை – கலக்கமளிப்பவையாகவும் கண்டிக்கப்படவேண்டியவையாகவும் காணப்படுகின்றன. இந்த வன்முறைக்கு பழகிப்போன, அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தும், சிறிய எண்ணிக்கையிலான பௌத்த மதகுருமார் அமைதி, சமாதானத்தை அடிப்படையாக கொண்ட மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதுடன், நல்லிணக்கம், ஒழுக்கம் போன்றவற்றிற்காக அயராது குரல்கொடுத்தவரும், தற்போது இடம்பெறும் சீர்த்திருத்தங்களின் சிற்பியுமான மாதுலுவாவே சோபித தேரருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றனர். இதேவேளை, பல பௌத்த மதகுருமார் நல்லிணக்க மற்றும் சமாதான முயற்சிகளில் சமூகமட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் அது மையநீரோட்ட ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை.
இவ்வாறான சம்பவங்கள் பல, நாடு அமைதி, சமாதானம், நல்லிணக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை நோக்கி மேற்கொண்டிருக்கும் பயணத்தை சீர்குலைப்பதற்காக, ஆழமான அரசியல் உள்நோக்கங்கள் கொண்ட சக்திகளின் தூண்டுதலுடனேயே இடம்பெறுகின்றன என்று தோன்றுகின்றது. இன மற்றும் மத பகைமை உணர்வு என்ற மோதல் மற்றும் அரசியல் சூழ்ச்சி குறித்த சந்தேகங்கள் மற்றும் வதந்திகளால் மேலும் தீவிரமடைகின்றது. குறிப்பாக சட்டத்தின் ஆட்சியை அச்சமின்றி பக்கச்சார்பின்றி அமுல்படுத்த முடியாத கவலை தரும் நிலையில் அல்லது அலட்சிய நிலையில் அரச ஸ்தாபனங்கள் காணப்படுவதும் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம்.
அவ்வாறான வதந்திகள் ஆதாரமற்றவையாகக் காணப்பட்டாலும், அரசாங்கத்தின் கையாலாகத்தனம், அலட்சியம் அல்லது பலவீனம் குறித்த அபிப்பிராயம் உருவாவதற்கு வழிவகுப்பது பிரிவினையும் வெறுப்புணர்வையும் விதைக்க நினைப்பவர்களை பலப்படுத்துவதாக அமையும். அதிகரிக்கப்பட்ட அதிகாரங்களையும், ஸ்தாபனங்களின் சுயாதீனத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான திறனோ அல்லது விருப்பமோ இல்லாத பட்சத்தில் அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் அர்த்தமற்றவையாகிவிடும், குறிப்பாக சட்டமொழுங்கு குறித்த தீர்மானங்கள்.
சிறியளவு குழப்பச்செயல்களும் ஒத்திசைவின்மையும் சமூக ஊடகங்களின் இன்றைய காலத்தில் அளவுக்கதிகமாக முக்கியத்துவம் பெறுகின்றன என்பது உண்மை. எனினும், கடந்த வருடம் இலங்கையின் அனைத்து சமூகங்களும் ஆட்சி மாற்றத்திற்காகவும் யுத்தத்திற்கு பிந்திய சீர்த்திருத்தங்களிற்காகவும் ஒருமித்து வாக்களித்து தேசத்தின் மனோநிலையில், மிகச்சிறந்த மாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தது. மக்களால் ஆணை வழங்கப்பட்ட அரசமைப்பு மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை நோக்கிய எங்கள் பயணம் இன்னமும் அரைவாசி தூரத்தைக் கூட சென்றடையாத தருணத்தில் மேற் குறிப்பிட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எமது எதிர்கால சமாதானம், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றிற்கு மிகவும் அவசியமான நல்லிணக்கம், நீதி மற்றும் நல்லாட்சி போன்றவற்றுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. நாங்கள் தற்போது மீண்டுவந்துள்ள இருண்ட யுகத்திற்கு மீண்டும் எங்களை கொண்டு செல்ல அவை முயல்கின்றன.
வெறுப்பூட்டும், இத்தகைய சக்திகளிற்கு எதிராக உறுதியான, கொள்கைபிடிப்புள்ள தலைமைத்துவத்தை வழங்கவேண்டிய, ஜனநாயக விழுமியங்களான பன்முகத்தன்மை மற்றும் சகிப்புதன்மை ஆகியவற்றிற்கான தங்கள் அர்ப்பணிப்பினை மீள வலியுறுத்தியவேண்டிய, அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகளிற்கு மத்தியில் தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை பொலிஸ் மற்றும் சட்ட ஒழுங்கை அமுல்படுத்தும் அதிகாரிகளிற்கு வழங்கவேண்டிய கடப்பாடு ஜனாதிபதி மற்றும் பிரதமரிற்குள்ளது. அரசியல் கலாச்சாரம் மற்றும் பின்பற்றுதல்கள் இல்லாதபட்சத்தில் நீதி மற்றும் ஸ்தாபன சீர்திருத்தங்கள் அர்த்தமற்றவையாகிவிடும் என்பதை நாங்கள் மீண்டும் நினைவுபடுத்துகின்றோம். ஆகவே, இதனடிப்படையில் உறுதியான அரசியல் தலைமைத்துவம் என்பது அவசியமானது. குழப்பத்தை ஏற்படுத்தும் இந்த தனிநபர் மற்றும் குழுக்களின் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையை மத மற்றும் சமூக தலைவர்களும், பிரஜைகளும் பகிரங்கமாக கண்டிக்கவேண்டும்.
இத்தைகைய சம்பவங்கள் மற்றும் அதனைத் தூண்டுபவர்களிற்கு எதிராக (அவர்கள் எத்தகைய சமூக அந்தஸ்த்தைக் கொண்டிருந்தாலும்) உறுதியான மற்றும் நேர்மையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இவை கட்டுக்கடங்காத நிலைக்கு செல்லலாம். ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் சீர்த்திருத்தத்திற்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் வாக்களித்த தீர்க்கமான பெரும்பான்மையான விவேகமுள்ள எந்தவொரு இலங்கையரும் எமது நாடு மீண்டும் மோதல் மற்றும் பகைமையுணர்வை நோக்கி மீண்டும் திரும்புவதை விரும்பவில்லை. எமது அனைத்து மக்களினதும் ஜனநாயக ஆட்சிக்கான விருப்பம் மற்றும் அதனை தக்கவைப்பதற்காக தற்போது இடம்பெறும் முயற்சிகள் ஆகியன வெறுப்பு மற்றும் தீயநோக்கங்களைக் கொண்ட சக்திகள் குறித்த அலட்சியம், பலவீனங்கள் காரணமாக வீணாகிப்போவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.