படம் | Selvaraja Rajasegar Photo, Vikalpa Flickr

இலங்கையிலே ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் வடக்கு மற்றும் கிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவ்விதமாகத் தமக்கென தனியார் காணிகளை அபகரிப்பது பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்துக்கு உலைவைத்து அவர்களின் முழு சமூகங்களையுமே நிரக்கதிக்கு உள்ளாக்கியுள்ளது. நேர்மையான நல்லிணக்க முயற்சிகளை இது வெகுவாகப் பாதித்துள்ளது மட்டுமன்றி, அரசாங்கத்துக்கு எதிரான விசனத்துக்கும் தூபங்காட்டியுள்ளது. ஆனாலுங்கூட, இலங்கையிலே நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான கலந்துரையாடல்கள் சர்வதேசச் சட்டத்தின்கீழ் காணி அபகரிப்பின் பாரதூரமான தன்மையினை முழுவதுமாக அடையாளப்படுத்திக்கொள்ளத் தவறியுள்ளன.

பல ஆயுதப் போராட்டங்களின்போது காணிகளை அபகரிப்பது என்பது பொதுவான ஒரு தன்மை மட்டுமன்றி சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான பாகுபாட்டுக் கொள்கைகளின் ஒரு பகுதியாக இருந்தாலுங்கூட, அது யுத்தத்துக்குப் பிற்பட்ட காலகட்டத்திலோ அல்லது நிலைமாற்றுக்கால நீதிப் பொறுப்புக்கூறல் செயன்முறையின்போதோ போதுமான அளவுக்கு கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. உண்மை அறியும் ஆணைக்குழுக்கள், குறிப்பாக எல்சல்வடோர் நாட்டின் உண்மை அறியும் ஆணைக்குழுவானது காணிகளை அபகரிப்பதானது அநேகமாக ஆயுதப்போரின் நீடியகால விளைவுக்கான மூலாதாரக் காரணிகளுள் ஒன்றாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தாலுங்கூட, இத்தகைய செயல்கள் சர்வதேசக் குற்றச்செயல்களாகப் பொதுவாகக் கருதப்படுவதில்லை என்பதால், அவைகளையிட்டு குற்றவியல் வழக்குத்தாக்கல்கள் செய்யப்படுவதும் கிடையாது. இதனால் இதனைச் செய்பவர்களுக்கு தண்டனை வழங்காமை நிலவிவந்துள்ளது. ஆனால், அண்மைய விருத்தியாக்கங்களைப் பார்த்தால், காணியை அபகரிப்பதே சர்வதேசக் குற்றச்செயலாகக் கருதப்படலாம் என்பதையிட்டதான வளர்ந்துவரும் ஏற்புடைமை உருவாகிவருவதாகத் தோன்றுகிறது. இந்த விடயமானது கம்போடியா மற்றும் இலங்கை போன்ற இடங்களில் தளராதிடம்பெற்று வந்த செயற்பாடுகளின் விளைவாகும்.

2014 இலே கம்போடியாவிலே இராணுவத்தின் காணி அபகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக ICC இன் வழக்குத் தாக்கல் அலுவலகத்துக்கு ஒரு தொடர்பாடலை ஒரு சட்ட நிறுவனம் சமர்ப்பித்திருந்தது. கம்போடியாவானது ICC இன் ஒரு அங்கத்தவ நாடாக அமைகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடர்பாடலானது குடிமக்களை பலவந்தமாக இடம் மாற்றுவது, கொலை செய்வது, சட்டபூர்வமற்ற விதத்திலே சிறை வைப்பது, சித்திரவதை செய்வது மற்றும் ஜூலை 2002 முதல் இடம்பெற்றுவரும் இதர மனிதாபிமானமற்ற செயல்கள் ஆகியவை பெருமளவிலே சட்டத்துக்குப்புறம்பாக காணிகளை அபகரிப்பதன் பின்புலத்திலே மனுக்குலத்துக்கு எதிரான குற்றச்செயல்களாகும் என வாதித்தது. அந்த சமர்ப்பிப்பானது சொத்துக்களை அபகரித்தல் எனும் செயலுக்கு எதிராக அவை மனுக்குலத்துக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு அடித்தளமாய் உள்ளதெனக் குற்றஞ்சுமத்தாவிட்டாலுங்கூட, காணிகளை அபகரிப்பதை இழைக்கப்பட்ட சர்வதேசக் குற்றச்செயலுடன் தொடர்புபடுத்தியது. இதனால், சட்டபூர்வமற்ற விதத்திலே பலவந்தமாக இடம்பெயர்க்கப்பட்ட 77,000 மக்களின் கதிபற்றிய விடயத்திலே சர்வதேசத்தின் கவனத்தை அதனால் ஈர்க்க முடியுமாயிருந்தது.

கம்போடிய விடயத்திலே ICC இற்கு இந்த தொடர்பாடலானது சமர்ப்பிக்கப்படச் சில மாதங்களுக்கு முன்பதாக இலங்கை தொடர்பான ஒரு அறிக்கையானது மேலும் ஒரு படி மேலே சென்று, இலங்கையின் வடக்கு மாகாணத்திலே தனியார் காணிகளை சட்டபூர்வமற்ற விதத்திலே ஆக்கிரமிப்பதும் பறிமுதல் செய்வதும் மனுக்குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் என வாதித்திருந்தது. மார்ச் 2014 இலே தெற்காசிய சட்ட கல்விக்கான மையகத்தின் ஆசிரியத்துவத்தால் சமாதானத்துக்கும் நீதிக்குமான இலங்கையின் பரப்புரை (Sri Lanka Campaign for Peace and Justice) எனும் ஸ்தாபனத்தால் பதிப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையானது 2014 வரைக்கும் இராணுவத்தால் சட்டபூர்வமற்ற விதத்திலே பறிமுதல் செய்யப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுவந்த தனியார் காணிகள் அந்த மாகாணத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் அடிப்படை உரிமைகளின் மீறல்களுக்கு வழிவகுத்தன என வாதிக்கிறது. திட்டமிட்டதும் பரவலானதுமான விதத்திலே தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள விதம்பற்றி சுட்டிக்காட்டும் அந்த அறிக்கையானது, அந்த அபகரிப்புக்கள் இனப்பாகுபாட்டின் அடிப்படையிலும் அரசாங்கக் கொள்கைக்கு இணங்கவும் மேற்கொள்ளப்பட்டன எனவும் வாதிக்கிறது. இதனால், அந்த அறிக்கையானது இந்த மாகாணத்திலே இராணுவத்தால் தனியார் காணிகளை அபகரித்தமையானது துன்புறுத்தி வதைக்கப்படும் மனுக்குலத்துக்கு எதிரான குற்றச்செயல்களாகக் கருதப்படலாம் என முடிவுசெய்கிறது.

இலங்கை தொடர்பாக அந்த அறிக்கை விடுத்த கோரிக்கையானது அந்தக் காலகட்டத்துக்கு சட்டத்தின் நீடிப்பாக தென்பட்டாலும் கூட அது ஒரு சட்டபூர்வ முன்னோடியால் ஆதரிக்கப்பட்டது. உண்மையிலே, பிளாஸ்கிக் (Blaskic) இலுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றங்களும் மற்றும் இதர வழக்குகளும் தனியார் வதிவிடங்கள் அல்லது வியாபாரங்களின் அத்துமீறிய பறிமுதல்கள் அல்லது அழிப்புக்கள் எனும் குற்றப்பத்திரிகை வடிவினை உள்ளடக்கலாம் என்பதை அடையாளப்படுத்திக்கொண்டன. இந்த மாதத்திலே ICC இலே இடம்பெற்ற புதிய விருத்தியாக்கங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு மேலும் நம்பிக்கை அங்கீகாரம் வழங்கின. “வழக்குத் தெரிவும் முன்னுரிமைப்படுத்தலும்” (Case Selection and Prioritization) எனும் ஒரு கொள்கை அறிக்கையிலே ICC இன் வழக்குத்தாக்கல் அலுவலகமானது “சட்டபூர்வமற்ற விதத்திலே காணியைச் சொந்தம் இழக்கச் செய்வதை வழிமுறையாகக் கொண்டோ அல்லது அதனை விளைவாகக் கொண்டோ அவற்றுக்கிடைநிலையாகவோ […] இழைக்கப்படுபவை ரோமப் பிரமாணக் குற்றச்செயல்களாக (Rome Statute crimes) வழக்குத்தாக்கல் செய்வதற்குக் குறிப்பான கரிசினை வழங்க” அர்ப்பணித்துள்ளதைத் தெரிவிக்கிறது. அதனால், இந்தக் கொள்கை அறிக்கையானது சர்வதேசக் குற்றச்செயல்கள் என்பன சரீரக மாண்பினைப் பாரிய அளவுக்கு மீறும் செயல்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல், காணிகளை சட்டபூர்வமற்ற வழியிலே சொந்தம் இழக்கச் செய்வதனூடாகவும் சர்வதேசக் குற்றச்செயல்கள் இழைக்கப்படலாம் என்பதை இனங்கண்டுகொள்கிறது. இப்படியான குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்காமைக்கு எதிராகப் போரிடுவதன் முக்கியத்துவத்தையும் அது மேலும் வலியுறுத்தித் தெரிவிக்கிறது. காணியைச் சொந்தம் இழக்கச்செய்வது என்பது வெறுமனே ஒரு உரிமை மீறல் எனவும், அது ஒரு குற்றச்செயலாகக் கருதப்பட முடியாதது எனவும் கண்ணோட்டம் கொண்டுள்ளதால், நடைமுறையிலே அந்தச் செயல்கள் தண்டிக்கப்படாது போவதுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருக்கும் இலங்கை போன்றதான நாடுகளுக்கு இந்த நிலைப்பாடானது குறிப்பாக முக்கியத்துவமானதாகும். முன்னர் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்த தனியார் காணிகளுள் சில 2015 முதல் விடுவிக்கப்பட்டு வந்திருந்தாலுங்கூட, வடக்கிலும் கிழக்கிலும் இராணுவம் அபகரித்துள்ள பல்லாயிர ஏக்கர் கணக்கான தனியார் காணிகள் இன்னமும் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. எனவே, இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதியானது காணி அபகரிப்பு விடயத்தைக் குறிப்பாகக் கையாளவேண்டியது முக்கியமானதாகும். அத்தகைய நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதையும், மற்றும் அந்தக் குற்றச்செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் அவற்றுக்கு பொறுப்புகூற செய்வதையும் வெளிப்படையான நோக்கங்களாகக் கொண்டே அது இடம்பெறவேண்டும்.

isabelle_lassee-portraitகலாநிதி இஸபெல் லஸீ