படம் | EelamView

எழுந்த பின்? எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1)

###

உள்நோக்கம்: ஏன் இந்த எழுச்சி?

2009ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற போது தமிழ் மக்கள் தமது அரசியற் போராட்ட வரலாற்றில் மிகத் தாழ்ந்த வலுவிலிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொடுத்து, மேலும் பலரை அகதிகளாக்கி எதிர்காலம் குறித்த அச்சத்துடன் தமிழினமிருந்தது. இந்த நெருக்கலான நிலைமையிலிருந்து பன் மடங்கு ஸ்திரமான நிலையில் 2015 ஆகஸ்ட் பொதுத் தேர்தலைச் சந்தித்தார்கள்.

இந்தப் பரிணாம மாற்றத்தின் பின்னால் இருந்த நிகழ்வுகளான 2012, 2013, மற்றும் 2014 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஜெனீவாத் தீர்மானங்களாகவிருக்கட்டும், 2015 இல் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தலாகவிருக்கட்டும் தமிழரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியற் தலைமையாக தமிழினத்தை வழி நடத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இந்த நிலை மாற்றங்களின் பின்னால் கூட்டமைப்பிற்கிருந்த பங்களிப்பை உணர்ந்தே கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழர் மீண்டுமொரு முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தார்கள். போரின் பின்னரான இடைவெளியில் தமிழர் தாம் பல்வேறு முனைகளிலடைந்த வெற்றிகளை இயன்றளவு விரைவாக உறுதிப்படுத்தவும், ஆக்கபூர்வமாக்கவும் தமிழ் மக்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். அடைந்த வெற்றிகளுள் தாம் இழந்திருந்த சர்வதேச சமூகத்தின் ஆதரவை மீளப்பெற்றமை, மஹிந்த ராஜபக்‌ஷவை பதவியிறக்கித் தெற்கில் ஓரளவு சாதகமான அரசாங்கத்தை நிலைப்படுத்தியமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாட்டின் எதிர்க்கட்சி நிலைக்கு உயர்த்தியமை என்பன முதன்மையானவை.

இந்த வெற்றி நிலைப்படுத்தற் (consolidation) செயன்முறையில் உச்சபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய புதிய அரசியலமைப்பின் தோற்றமும், அமுலாக்கலும் அதி முக்கியமானது. எழுக தமிழ்ப் பேரணியில் பேசியவர்களும் அரசியலமைப்பு உருவாக்கம் பற்றியே அதிகம் பேசியிருந்தார்கள். இவர்கள் தங்கள் உரைகளில் அரசாங்கம் இப்புதிய அரசியலமைப்பைத் தமிழரது பங்களிப்போ, அறிவோ இன்றி உருவாக்கி அனுமதியின்றித் தமிழர் மீது தீர்வாகத் திணிக்க முயல்வதான படத்தைப் புனைய முற்பட்டிருந்தார்கள்.

ஆனால், தமிழரது கனமான உள்ளீடோடு தான் இந்த அரசியலமைப்பு உருவாகி வருகின்றது. இவ் அரசியலமைப்பு வரைபில் தமிழரது ஜனநாயக பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை அக் கட்சியின் தலைமை தெளிவாகவே தமது தேர்தல் விஞ்ஞாபனங்களிற் சொல்லி வந்திருக்கின்றது. இது வரை கூறி வந்தவற்றிலிருந்து நழுவி விட்டு தன் மக்களிடம் சாட்டுப் போக்குச் சொல்லிப் பிழைத்துக் கொள்ள முடியாதென்பதை கூட்டமைப்புத் தலைமை நன்கேயறியும். மேலும், அரசாங்கம் இவ்வருடத் துவக்கத்திலிருந்து மாவட்டங்கள் தோறும் அரசியலமைப்புத் தொடர்பான மக்களது கருத்துக்களைக் கேட்டு வந்திருக்கின்றது. இவ் அமர்வுகளில் வடக்கிலும், கிழக்கிலும் பல்வேறு மக்கள் அமைப்புக்கள் தமது யோசனைகளை முன்வைத்திருக்கின்றன.

அரசியலமைப்புத் தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தைகள் இது வரை மூடிய கதவுகளின் பின்னாலேயே நடந்து வந்திருக்கின்றது என்பது உண்மை. இருப்பினும், இன்னும் சொற்ப நாட்களில் இதுவரை பூட்டிய கதவுகளின் பின்னால் நடந்த பேச்சுக்களின் பேறுகள் பொது வெளிக்கு வரவிருக்கின்றது. இப் பேச்சுக்களில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளிவரவிருக்கும் இடைக்கால அறிக்கை தெளிவுபடுத்தும். இது வரை அரசியலமைப்பு வரைபுப் பணிகளை முன்னெடுத்த 21 பேர் கொண்ட வழிகாட்டும் குழு தமது முன்மொழிவுகளை அரசியலமைப்பு சபையிடம் பிரேரித்து அவற்றைச் சபை ஏற்றுக்கொண்ட பின்னர், இம் முன்மொழிவுகள் மீதான பொது சன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பிற்கு செயல் வடிவம் கொடுக்கப்படும். இறுதியில், நடைபெறவிருக்கும் பொதுசன வாக்கெடுப்பில் புதிய அரசியலமைப்பினை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் தெரிவு – நாட்டின் ஏனைய மக்களோடு சேர்ந்து – தமிழர் அனைவருக்குமே கிடைக்கவிருக்கின்றது. ஆகவே, எழுக தமிழ் பேரணி ஒழுங்கமைப்பாளர்கள் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் புனைந்த படத்தில் உண்மையேதுமில்லை.

மேலும், தமிழர் எதைத் தீர்வாக எதிர்பார்க்கிறார்கள் என்பதைச் சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்லவே இந்தப் பேரணியென்றால், பேரணி கொழும்பிலோ, கண்டியிலோ, அல்லது காலியிலோ செய்யப்பட்டிருக்க வேண்டியது. மேலும், இதுதான் நோக்கமாக இருந்திருந்தால் யாழ்ப்பாணத்திலே நடாத்தியிருந்தாலும் பேரணியின் நிறச்சாயம் வேறாகவிருந்திருக்கும். தமிழரது உரிமைக் குரலின் நியாயத்தை சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின் அவர்களிடம் அதை எப்படிக் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதை நீண்ட நாட்கள் தெற்கில் வாழ்ந்து, கற்று, பணியாற்றியவரும் தனிப்பட்ட ரீதியில் சிங்களவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவருமான முதலமைச்சருக்குத் தெரியாமலிருக்கச் சாத்தியமில்லை.

சிங்களவரிடம் எடுத்துச் சொல்லிப் பயனில்லை, அழுத்திச் சொல்லவே எழுக தமிழ் என்கின்றார்கள் சிலர். ஆனால், பேரணிகளும், ஊர்வலங்களும், பிரகடனங்களும் தமிழ் அரசியலில் விந்தை மிகு நிகழ்வுகள் அல்ல. போரின் பின் கடுமையான இராணுவ நெருக்கடிகளிருந்த காலத்திற் கூட பேரணிகளும், ஊர்வலங்களும் நடந்தன. கூட்டமாகப் பெருக்கெடுத்து வந்து கண்டனம் தெரிவிப்பதெல்லாம் எமக்குக் கன்டோஸ் சாப்பிடுவதைப் போன்றது. இதைவிடப் பெரிய போராட்டங்களைத் தமிழினம் இத் தீவின் கரைகளைத் தாண்டி ஐ.நா. முன்றல் வரை செய்திருக்கின்றது. இவையேதும் தெற்கை அதட்டியதாகவோ, சர்வதேசத்தை உலுப்பியதாகவோ தெரியவில்லை. அப்படியானால், இன்றும் அரசியற் தீர்வு குறித்தும், காணி விடுவிப்புத் தொடர்பிலும் பேசிக் கொண்டிருக்கத் தேவை இருந்திராது. ஆகவே, பேரணி அரசாங்கத்தை அதிர வைத்தது, சிங்களத் தேசியவாதத்தை வெருள வைத்தது, சர்வதேச சமூகத்திடம் தமிழரது கருத்துக்களை ஓங்கி ஒலிக்கச் செய்ததது என்ற ஏற்பாட்டாளர்களின் கதைகள் யாவும் கையெழுத்து வேட்டை மூலம் சர்வதேச குற்றவியல் பொறிமுறையைத் தருவித்திட முடியும் என்று நாம் கடந்த ஆண்டில் கேட்ட புளுகுச் சங்கதிகளுக்கு ஒப்பானவை.

சில பேரவைப் புதல்வர்கள் இந்தப் பேரணி வழி தவறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை வெருட்டி வைக்கவென முன்னெடுக்கப்பட்டதாகச் சொல்கின்றனர். ஆனால், சம்பந்தனுக்குச் செய்தி சொல்வதற்கு இந்தச் சலசலப்பு அவசியமற்றது. மேலும், தமிழர் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே விரும்புவதை நேற்றுவரை தேசங்களின் இணைப்பு, ஒரு நாடு இரு தேசம் என்றெல்லாம் கதைவிட்டு மக்களைக் குழப்பி வந்தவர்கள் சொல்லித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரிய வேண்டியதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகத்திரையைக் கிழிக்கவே இந்த எழுச்சி என்ற கோஷங்களும் வலுவற்றவை. கூட்டமைப்புத் தன் அரசியல் நிலைப்பாடுகளை தெளிவாகவே முன்வைத்து வந்திருக்கின்றது. இந்த நிலைப்பாடுகளிலிருந்து விலகி தமிழருக்குக் கேடுண்டாக்கும் அரசியலமைப்பொன்றை அரசோடு சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்குமானால் தமிழ் மக்கள் கஜேந்திரகுமாருக்கும், பிரேமச்சந்திரனுக்கும் செய்ததை தமக்குச் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பதைக் கூட்டமைப்புத் தலைமை நன்கறியும்.

ஆகவே, உண்மையில் தமிழ் மக்கள் பேரவை பேரணிச் சூத்திரத்தை கையிலெடுக்கக் காரணம் தான் என்ன? எழுக தமிழ் ஏற்பாட்டாளர்களிடம், தமிழரசுக் கட்சி தயவு செய்து எமக்கு இரு மாத அவகாசம் தாருங்கள், அதன் பின்னர் மக்களை வீதிக்கிறக்குங்கள் எனக் கேட்டும் அவசர அவசரமாக ஏன் இந்தக் கிளர்ச்சி? எந்தவொரு காத்திரமான அரசியல்த் திட்டமோ, மாற்று யோசனையோ இன்றி மக்களை உசுப்பேற்றும் வீரப் பிதற்றல்களுக்கு அவசியம் தான் என்ன?

எழுக தமிழ்ப் பேரணியின் பின்னால் (i) சிங்களப் பேரினவாதிகளைத் தூண்டி விட்டு நடைபெற்று வரும் அரசியலமைப்பு உருவாக்கல் முயற்சிகளை முற்றாகக் குலைப்பது; (ii) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சிதைத்து அதற்கெதிராகப் புதுக் கட்சி ஒன்றை அடுத்த தேர்தல்களின் முன்னர் உருவாக்குவதற்கான முஸ்தீபுகளை முடுக்கி விடுவது என்ற இரண்டே நோக்கங்களே இருந்தது.

அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் யாப்பு பொதுசன வாக்கெடுப்பு வரை வருமாகவிருந்தால் அது பொன்னம்பலம் மற்றும் பிரேமச்சந்திரன் என்போரது அரசியல் வாழ்க்கைக்குச் சாவுமணியாகவே இருக்கும். இவர்கள் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதை விரும்பாதவர்கள். தமிழ் மக்களின் ஓயாத அலைக்கழிப்பிலேயே இவர்களது அரசியல் தங்கியிருக்கின்றது. 2015 ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்களைப் புறக்கணிக்கக் கோரியதே இதன் ஆகப் பெரிய உதாரணம். மேலும், 2012, 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் ஜெனீவாவில் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளும், சர்வதேச விசாரணை, உள்ளகப் பொறிமுறை, கலப்புப் பொறிமுறை முதலியன பற்றித் தொடர்ச்சியான பொய்களைக் கூறி வந்ததும் கூட இதையே காட்டி நிற்கின்றது. என்று தமிழர் சுயமரியாதையுடன் கூடிய சமாதானத்தையும், திருப்தியளிக்கும் சுயாட்சியையும் எய்துகின்றார்களோ, அன்று இவர்களது வெற்றுக் கோஷங்களும், அட்டைக் கத்தி வீச்சுக்களும் முற்றாகவே பயனற்றுப் போகும்.

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதோர் அரசியலமைப்பு பொதுசன வாக்கெடுப்பிற்கு வரும் போது அதை எதிர்த்து நேரடியாகப் பிரச்சாரம் செய்தால் தோல்வி நிச்சயம் என்பதும், அந்தச் செயலை வரலாறு எப்படி நினைவு கூரும் என்பதும் இவர்களுக்குத் தெரிந்திருக்கின்றது. பொதுசன வாக்கெடுப்பிற்கு முன்னால் அரசியலமைப்பு உருவாக்கத்தைத் தடுப்பதற்கோ, முற்றாகக் குலைப்பதற்கோ தனியாக இவர்களால் இயலாது. அதைச் செய்ய சிங்கள இனவாதிகளின் துணை வேண்டும். இதனாற் தான் எழுக தமிழ்ப் பேரணிக்கு தெற்கில் பயங்களைக் கிளறி விடும் வகையில் வடிவமைக்க வேண்டி வந்தது. இதனாற் தான் நியாயபூர்வமான தமிழர் கோரிக்கைகளை சிங்கள இனவாதிகளுக்குத் தீனி போடும் வகையில் எழுதித் தாங்கி பவனியெடுக்க நேர்ந்தது. உதாரணமாக, ‘தமிழர் தாயகத்தைச் சிங்கள மயமாக்குவதை நிறுத்து’ என்று கொட்டை எழுத்தில் வீரியமாகக் குறித்ததை, எழுக தமிழ்ப் பேரணி முடிந்த சில நாட்களுக்குள்ளேயே முதலமைச்சர் தேசிய விளையாட்டு விழாவில் வைத்து ‘அனுமதி பெற்றுவிட்டு அமைக்காததே தவறு’ என்ற தொனிப்பட சிங்களத்தில் பவ்வியமாக எடுத்தியம்பியிருந்தார். மேலும், வட தமிழ் மீனவர்கள் தென்னிலங்கை மீனவர்களால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கின்றார்களோ, அதேயளவு அல்லது அதற்கதிகமாக தென்னிந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் ஆங்கிலத்திலும், சிங்களத்திலுமிருந்த எழுக தமிழ்ப் பிரகடனத்தில் ‘தென்னிலைங்கைச் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களை நிறுத்து’ என்பது மாத்திரமே குறிக்கப்பட்டிருந்தது.

தெற்கில் இப் பேரணிக்கெதிராகக் கிளர்ந்திருக்கும் எதிர்ப்பலை அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஈடுபட்டு வரும் அரச தரப்புப் பிரதிநிதிகளை ஆட்டங்கொள்ள வைக்கும். அதிகாரப் பரவலாக்கத்திற்கெதிரான பீதியை சிங்கள மக்களுக்குள் எழ வைக்கும். ஏலவே ஏற்பட்டிருக்கும் இணக்கப்பாடுகளில் பிணக்குகளை உருவாக்கும். இது அரசியலமைப்பு உருவாக்கத்தை முற்றாக உருக்குலைக்கும் அல்லது இழிவுநிலை அதிகாரப் பகிர்வைக் கொண்ட அரசியலமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கத்தை  நிர்ப்பந்திக்கும்.

இத் தடைகளனைத்தையும் தாண்டி தமிழருக்குத் திருப்தியளிக்கக் கூடியதோர் அரசியலமைப்பு வருமாகவிருந்தால், அதையும் சிங்களப் பேரினவாதிகளின் துணையோடு சிங்கள மக்களை போதியளவு குழப்பி பொதுசன வாக்கெடுப்பில் அவ் அரசியலமைப்பைத் தோற்கடிக்கும் நிகழ்ச்சி நிரலின் முதலாவது அத்தியாயமே அன்று யாழ் முற்றவெளியில் அரங்கேறியது.

மேலும், என்னதான் விக்னேஸ்வரன் தன் எழுக தமிழ்ப் பேரணி உரையில் ‘நாம் தமிழரசுக் கட்சிக்கு எதிரானவர்களல்ல’ என்று கூறித் தன் நடுநிலைப் பூச்சாண்டி வித்தையை விஸ்தரித்திருந்தாலும், எழுக தமிழ்ப் பேரணியின் பின்னர் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களின் பேச்சுக்களில் தமிழர் ஒற்றுமையின், எமது அரசியற் பலத்தின் அடையாளமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முற்றாகச் சிதைத்துப் போடும் நய வஞ்சக நிரல் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியிருக்கின்றது. எழுக தமிழ்ப் பேரணியின் பின்னர் முன்னணித் தமிழ் நாளேடொன்றில் வெளியான ‘தமிழ்த் தேசியத்திற்குத் தலைமை தாங்க விக்னேஸ்வரன் தயாரா?’ என்ற கட்டுரையை வெகு விமரிசையாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். எழுக தமிழுக்கு ஆதரவு வழங்கிய தமிழ் அரசியல் கருத்துருவாக்கிகள், ஆய்வாளர்கள் விக்னேஸ்வரனை அடுத்த பிரபாகரனாகப் முன்னிறுத்த ஆரம்பித்து விட்டார்கள். அதாவது, எவ்வாறு அ. அமிர்தலிங்கத்தின் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் போக்கை எதிர்த்துப் பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலைத் திசை திருப்பினாரோ, அதைப் போலவே இன்று சம்பந்தன்-சுமந்திரன் என்போரின் கட்டிலிருந்து தமிழ்த் தேசிய அரசியலை விக்னேஸ்வரன் மீட்டெடுக்கப் போகிறாராம். இதே அரசியற் போராளிகள் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே தமிழரின் அடுத்த அன்ரன் பாலசிங்கம் என்றும் பிரசங்கித்து வருகின்றனர். இனியும் எம்மிடையே பேரவை கட்சி நடுநிலையான மக்கள் இயக்கமா? அது அரசியல் உள்நோக்கங்கள் அற்றதா? என்ற அர்த்தமற்ற விவாதங்களும், விடைதேடல்களும் வேண்டாமே. விடை தேடி வேறெங்கும் அலைய வேண்டியதில்லை: பேரணி மேடையில் வைத்தே சுரேஷ் பிரேமச்சந்திரன் சம்பந்தனை வலிந்து இழுத்துப் பேசி பேரவை எதற்கும், எவர்க்கும் எதிரானது என்பதை எதுவித ஐயத்திற்கும் அப்பால் நிரூபித்திருந்தார்.

நிதானமாக ஆராய்ந்தால் தமிழ் மக்கள் பேரவையின் தலைவர்களின் அரசியலுக்கு இரண்டே அம்சங்கள் தான்: (i) காலத்திற்கேற்ப ஆனதைச் செய்து – அது சர்வதேச குற்றவியல் பொறிமுறைஎதிர்கலப்புப் பொறிமுறை மற்றும் தேசங்களின் இணைப்புஎதிர்சமஷ்டி போன்ற கொள்கை முடிவுகளாகவிருக்கட்டும், கையெழுத்து வேட்டைஎதிர்பயன் தரு பேச்சுவார்த்தைகள்  போன்ற செயற்பாட்டு நிரற் தெரிவுகளாகவிருக்கட்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளின் எடுக்கும் நிலைப்பாட்டினை எதிர்ப்பதன் மூலம் தம்மை தீவிரத் தேசியவாதிகளாகக் காட்டிக் கொள்வது; (ii) தமது சுயநலங்களுக்காகவும், அரசியலிருப்பிற்காகவும் – ஜெனீவாத் தீர்மானங்களின் முன்னரும் பின்னரும், 2015 ஜனாதிபதித் தேர்தலின் போதும் செய்ததைப் போன்று – மக்களிடையே பொய்களையும், புரளிகளையும், உணர்ச்சிப் பெருவெள்ளத்தையும் கிளறிவிட்டு தமிழரின் தொடர்ந்த உத்தரிப்பின் மூலம் தம் அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்வது.

இவர்களின் இச் சுயநல அரசியல் நெறியின் புதிய வடிவமே தமிழ் மக்கள் பேரவையும், எழுக தமிழும். இவை இந்த அட்டைக் கத்தி வீரர்களின் அரசியல் இருப்பிற்கானதேயன்றி தமிழ் மக்களது விடியலுக்கானதோ, விமோசனத்திற்கானதோ அல்ல.

தொடரும்…

1379755_435957633176933_1758230978_nஇலைஜா ஹூல்