படம் | Facebook

ஜனநாயகம் தொடர்பான விவாதங்கள் முடிவின்றி தொடர்கின்றன. ஜனநாயகம் தொடர்பில் பலவாறான பார்வைகள் உண்டு. இதில் எது சரி? எது தவறு? என்பதெல்லாம் அவரவரது அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்பானது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னரான உலக ஒழுங்கில் அமெரிக்காவே பிரதான சக்தியாக நிலைபெற்றது. அதன் பின்னர் உலகெங்கும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்காவே அனைவருக்கும் வகுப்பெடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அனைத்து நாடுகள் தொடர்பான மனித உரிமைகள் நிலவர அறிக்கையொன்றை வெளியிட்டு வருகின்றது. ஒரு உலக வல்லரசு என்னும் தகுதி நிலையில் இருந்தே அமெரிக்கா இதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இத்தகைய அமெரிக்க ஜனநாயகத்தையே குழந்தைத்தனமான ஒன்று என்கிறார் அமெரிக்க அரசியல் விஞ்ஞானியான பெஞ்சமின் பாபர். ஸ்ரோங் டெமொக்கிரசி (Strong Democracy: Participatory Politics for a New Age) என்னும் நூலின் ஆசிரியரான பெஞ்சமின் ஒரு நேர்காணலின் போதே இவ்வாறு கூறுகின்றார். அவர் சொல்கிறார் – “நான் சில நேரங்களில் யோசித்துப் பார்க்கிறேன் – அமெரிக்க ஜனநாயகம் என்பது குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறது” என்று.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நூல் வெளியீடு ஒன்றின் போது நிகழ்ந்த சில சம்பவங்களை அடியொற்றி ஜனநாயகம் தொடர்பில் சிலர் விவாதிக்க முற்பட்டிருந்தனர். அந்த விவாதங்களை பார்த்தபோது மேற்படி பெஞ்சமினின் கூற்றே இந்தப்பத்தியாளரின் நினைவுக்கு வந்தது. அமெரிக்க ஜனநாயகமே குழந்தைப் பருவத்தில் இருக்கிறதென்றால் எங்களைப் போன்றவர்களின் நிலை என்ன? ஜனநாயகம் என்பது உலகெங்குமே அதிகாரத்தால் முகைமை செய்யப்படும் ஒன்றாகவே இருக்கிறது. ஜனநாயகம் ஒருபுறம் அனைவராலும் போற்றப்பட்டாலும் கூட, பிறிதொரு புறமாக அது கட்டுப்படுத்தப்படவும் செய்கிறது. உலக ஜனநாயகத்தின் வகைமாதிரி என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவிலிருந்து, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறப்படும் இந்தியா வரையில், ஆளும் தரப்பினால் ஜனநாயகம் முகைமை செய்யப்படும் ஒன்றாகவே இருக்கிறது. ஒரு கட்டுப்பாட்டுடன் கூடிய ஜனநாயகமே மக்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசிய வாதம் எழுச்சியடைந்த காலத்திலிருந்து பின்னர், அது முற்றிலுமாக ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த காலம் வரையில், தமிழ்த் தேசியத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இடைவெளி என்பது மிகவும் சுருங்கிய ஒன்றாகவே இருந்தது. நாங்கள் ஜனநாயகம் என்று பொதுவாக வரையறுத்திருக்கும் ஒன்றைப் பற்றியே இப்பத்தி குறிப்பிடுகிறது. அதாவது, மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளித்தல், பல்கட்சி செயற்பாடுகளுக்கான சூழலைப் பாதுகாத்தல், கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுதல் ஆகியவற்றையே நாம் பொதுவாக ஜனநாயகத்தின் அளவுகோல்களாக வைத்திருக்கிறோம். அந்த அடிப்படையில் பார்த்தால் மிதவாதிகளும் சரி, அதன் பின்னர் வந்த ஆயுத இயக்கங்களும் சரி எவையுமே (அந்த) ஜனநாயகத்திற்கு பெரியளவில் மதிப்பளித்திருக்கவில்லை என்பதே வரலாறு. உண்மையில் இதற்கு குறித்த அமைப்புக்கள் மட்டுமல்ல பொறுப்பு, அவர்களை ஆதரித்துநின்ற புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள் என்போரும் பொறுப்புக்கூற வேண்டியவர்களே! 2009இற்குப் பின்னரான அரசியலைப் பார்த்து சிந்திக்க முற்பட்டவர்களைத் தவிர்த்து பார்த்தால், விடுதலைப் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்டத்தை முழுமையாக ஆதரித்து நின்றவர்கள்தான் இன்று ஊடகங்களிலும், சிவில் சமூக தளங்களிலும் பிரதானமாக இயங்கிவருகின்றனர். தமிழ் அரசியல் கருத்துருவாக்கமும் இவர்களாலேயே பிரதானமாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரனை பொறுத்தவரையில் அவர் மிகவும் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கின்றார்: தனக்கு நாடாளுமன்ற நடைமுறையில் நம்பிக்கையில்லையென்று. ஆரம்ப காலங்களில் அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் யூகோஸ்லாவிய அதிபராக இருந்த டிட்டோவின் பாணியிலான தனிநபர் சர்வாதிகார ஆட்சியையே தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அதனை அரசியல் சொல்லாடல்களில் பினவலன்ட் டெஸ்பொட்டிஸம் (Benevolent Despotism) என்பார்கள். அதாவது, மக்கள் நலனுக்கான அல்லது நாட்டு நலனுக்கான ஒரு தனிநபர் சர்வாதிகார ஆட்சி. உண்மையில் விடுதலைப் புலிகளை கருத்தியல் தளத்தில் ஆதரித்து நின்றவர்கள் (இப்பத்தியாளர் அடங்கலாக) அனைவரும் இந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்தவர்களே! அவ்வாறாயின் இப்போது அனைவருமல்லவா மன்னிப்புக் கேட்க வேண்டும். எனவே, ஜனநாயகம் தொடர்பில் கட்சிகளை நோக்கி மட்டும் விரல்நீட்டுவதில் எவ்வித பொருளுமில்லை. உண்மையைச் சொல்வதானால் கட்சிகள் மற்றும் இயக்கங்களை விடவும் கருத்தியலாளர்களுக்கே இவ்விடயத்தில் அதிக பொறுப்புண்டு. தவிர ஒரு குறிப்பிட்ட சூழலில் சரியென்று கருதப்படும் ஒரு அரசியல் நிலைப்பாடு எல்லா காலத்திலும் சரியாக இருப்பதில்லை – அப்படி இருக்க வேண்டும் என்னும் அவசியமும் இல்லை. ஆனால், அதற்காக ஒவ்வொன்றுக்காவும், ஒவ்வொரு காலத்திலும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டும் இருக்க முடியாது. ஆனால், சொந்த மக்கள் தொடர்பில் ஒரு கட்சி அல்லது இயக்கம் தவறு செய்திருப்பதாக முழுமையாக நம்புமாயின், அவ்வாறானவர்கள் மன்னிப்புக் கோருவது தொடர்பில் சிந்திக்கலாம்.

எனவே, ஒரு நூல் வெளியீட்டின் போது எதேச்சையாக இடம்பெற்ற சில சம்பவங்களின் அடிப்படையில் நாம் பெரிய முடிவுகளுக்கு வந்துவிட வேண்டியதில்லை. மேலும், குறித்த நூல் வெளியீடு இடம்பெற்ற சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. குறித்த நூல் அறிமுகமானது ‘எழுக தமிழ்’ நிகழ்வு தொடர்பான சர்ச்சைகளுக்கு பின்னர் இடம்பெற்ற ஒரு நிகழ்வாகும். ‘எழுக தமிழ்’ நிகழ்வை மிகவும் கடுமையாக எதிர்த்து நின்றவரான சுமந்திரனும், ‘எழுக தமிழ்’ நிகழ்வு இடம்பெற்றபோது அதன் அரசியல் பெறுமதியை குழப்பும் நோக்கில் பிறிதொரு எழுக தமிழை ஒழுங்குசெய்திருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரான தவராசாவும் ஒரே மேடையில் இருத்திருக்கின்றனர். ஆனால், கிடைக்கும் தகவல்களின்படி தவராசா பிறிதொரு எழுக தமிழை குறித்த திகதியில் மேற்கொள்வது தொடர்பில் தனது கடசியுடன் முரண்பட்டதாகவே அறிய முடிகிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மேற்படி நிகழ்வில் சில சலசலப்புக்கள் ஏற்பட்டிருந்தன. ஏற்கனவே ‘எழுக தமிழ்’ தொடர்பில் தமிழரசு கட்சியின் முடிவு குறித்து கோபம் கொண்டிருந்த சிலர் நிகழ்வில் அதிருப்தியாளர்களாக குறுக்கிட்டிருக்கின்றனர். இது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே. ஆயினும், நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்க வேண்டும் ஆனால், அது நிகழவில்லை. மேலும், மேடையில் இருந்தவர்கள் சிலர் நூலுக்கு வெளியில் சென்று குறித்தவொரு கட்சியைத் தாக்கும் நோக்கில் பேசியதே, சபை குழப்பமடைந்தற்கான காரணமாகும். நிகழ்வில் பங்குகொண்ட பலரதும் தகவல்களின் அடிப்படையிலேயே இவ்வாறானதொரு முடிவுக்கு இப்பத்தி வருகிறது.

ஆனாலும், ஒருவர் பேசும் போது அவர் என்னதான் முரண்பாடான கருத்துக்களை குறிப்பிட்டாலும் அதனை அவர் முழுமையாக தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டியது கட்டாயமானதே!

இந்த இடத்தில் இப்பத்தியாளர் கவனம் கொள்ளும் பிறிதொரு முக்கியமான விடயம் ஒன்றுண்டு. அதாவது, இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் ஜனநாயகம் தொடர்பில் விவாதிக்க எவரேனும் முற்பட்டால், அவர்கள் முதலில் ஒரு கேள்விக்கு பதிலளிக்க வேண்டியவர்களாவர். அதாவது, ‘எழுக தமிழ்’ போன்ற ஒரு மக்கள்திரள் ஜனநாய செயற்பாட்டை நிராகரிப்பது எந்தவகையில் ஜனநாயகத்தை மதிப்பதாக அமையும்? குறித்த நூலின் ஆசிரியரான மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு தன்னுடைய ‘ஒற்றைமைய உலக அரசியலில் போரும் சமாதானமும்’ என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “ஒடுக்கப்படும் இனங்களைப் பொறுத்தவரையில் மக்கள் திரள் ஜனநாயகமே முதலில் ஸ்தாபிதம் பெறவேண்டியதாகும். அந்த ஜனநாயகத்திற்கு அரசுகள் பணிய நேர்கிறது. ஏனெனில், மக்கள் திரளில்தான் அரசுகள் உயிர்வாழவேண்டி இருப்பதால் ஒடுக்கப்படும் மக்கள் தமது இன அடையாளத்தின் பெயரால் ஆன ஜனநாயக உருவாக்கத்தின் மூலமே அரசுகளை பணியவைக்க முடியும்.” இந்தக் கருத்தின் வழியாக சிந்திப்பதானால் ‘எழுக தமிழ்’ என்பது ஒரு மக்கள்திரள் ஜனநாயக நடவடிக்கையாகும். அவ்வாறாயின், எழுக தமிழை நிராகரித்தவர்களை எவ்வாறு ஜனநாயகவாதிகள் என்று கூறமுடியும்? திருநாவுக்கரசின் பார்வையில், ‘எழுக தமிழ்’ என்பது விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது மக்கள் திரள் ஜனநாயக நடவடிக்கையாகும். அதனை எதிர்த்தவர்கள் எந்த வகையிலும் ஜனநாயகம் தொடர்பில் விவாதிக்கத் தகுதியற்றவர்களாவர். இவ்வாறானதொரு முடிவுக்கு வருமாறுதான் திருநாவுக்கரசின் வாதம் வலியுறுத்துகின்றது.

பல்வேறு கருத்துக்கள் செவிமடுப்பதற்கான சூழல் பேணிப்பாதுக்காக்கப்பட வேண்டுமென்பதில் இப்பத்திக்கு எவ்வித முரண்பாடும் இல்லை. ஆனால், எங்களுக்கு வசதியான ஒன்றை ஜனநாயகம் என்பதும் பின்னர் ஒன்றில் எங்களுக்கு உடன்பாடில்லை என்றால் அதனை குழப்பகரமான நடவடிக்கையாக காண்பிக்க முற்படுவதையே இப்பத்தி தவறான அரசியல் நடத்தையாக காண்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நாட்டம் கொள்வோர் அனைவரும் முதலில், தங்களின் ஜனநாயகம் தொடர்பான புரிதலை மதிப்பீடுசெய்து கொள்வது அவசியம். அதுவே ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான அவர்களது ஆகச் சிறந்த பங்களிப்பாக இருக்க முடியும்.

யதீந்திரா