படம் | oxfam
வடக்கு மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பு என்பது சிக்கல் மிக்க நிலைக்குள் சென்றுள்ளது. வடக்கில் பருவமழை பொய்த்துப் போனதனால் தண்ணீரின்றி நெல் வயல்கள் அழிவடைந்துள்ளன. இதன் நட்டத்தினை குறிப்பாக விவசாயிகள் இன்று சுமந்து நிற்கின்றனர். இவ்வாறாக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள சுமை, எதிர்வரும் மாதத்தில் அனைத்து மக்களையும் மேலும் பாதிக்கும் துர்ப்பாக்கியமாக மாற்றமடைவதற்கான சாத்தியங்களே அதிகமாகவுள்ளன.
பொதுவாக வடக்கு மாகாணம் இன்று காய்கறிவகைகளில் கூட தன்னிறைவை இழந்து சகலவற்றிற்கும் தென்னிலங்கையில் தங்கியிருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது. போரின் பின்பான நிலைமைகள் வடக்கின் உற்பத்தியினை வெகுவாகப் பாதித்துள்ளன. தற்போது வடக்கின் பிரதேசங்களில் நுகர்வுக்கான கலாசாரம் ஒன்றே வளர்க்கப்படுகின்றது. எனவே, வடக்கு மக்களிடத்தில் உற்பத்திகள் தோன்றக்கூடியதாகவும் அவை சந்தையில் நிலைத்து நிற்கத்தக்கதாகவும் பாதுகாப்புகள் அவசியமாகவுள்ளன. இதற்கு வடமாகாண சபை தனது மேலதிக முழுக்கவனத்தினையும் செலுத்தவேண்டியுள்ளது. இதேவேளை, அரசியல் சூழ்நிலைகள் வடக்கு மக்களை நிர்க்கதிக்கு உள்ளாக்குகின்ற நிலையில் காலநிலையும் எமது உற்பத்திகளுக்கு எதிராகவே திசை திரும்புகின்றது என்பது வருந்தத்தக்கதாகும்.
வடக்கு மாகாணத்தில் இம்முறை மழை பொய்த்துப் போனமையினால் ஏராளமான ஏக்கர் வயல்கள் கருகிவிட்டன. இத்தாக்கம் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு என சகல பிரதேசங்களையும் தாக்கும் பிரச்சினையாகவுள்ளது. உதாரணத்திற்கு இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 14,984.7 ஏக்கர் நெல்வயல்கள் நீரின்றி அழிவடைந்துள்ளதாக மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இவ் அழிவுக்கு பருவமழை போதாமை காரணமாகும். குளத்து நீரை நம்பி செய்கை செய்யப்பட்ட வயல்களும் குளங்கள் வற்றிப் போனதால் விவசாயம் அழிவைச் சந்தித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில், பாரிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழுள்ள 3,530 ஏக்கர்கர் வயல்களும், சிறிய நீர்ப்பாசனக்குளங்களின் கீழுள்ள 815.5 ஏக்கர் வயல்களும், மானாவாரி செய்கையில் செய்கை பண்ணப்பட்ட 10639.20 ஏக்கர்களும் வரட்சியினால் அழிவடைந்துள்ளன. இது போன்றே மன்னாரிலும் வயல் நிலங்கள் கருகிப் போயுள்ளன. யாழ் மாவட்டத்திலும் விவசாயிகள் நெல்விதைப்பிற்காக செலவிட்ட பணத்தினையேனும் பெறமுடியத நிலையில் உள்ளனர் எனத் தெரிவிக்கின்றனர். இவ்வாறாக மாவட்டங்கள் தோறாகவும் விவசாயிகள் அழிவுகளையே சந்தித்து நிற்கின்றனர்.
அழிவடைந்த நெல்லின் பெறுமதியுடன் மாத்திரம் நெற்செய்கை இம்முறை எதிர்கொண்டுள்ள நிலையினை நாம் வரையறுத்துவிட முடியாது. காரணம், அழிவடையாது தப்பிப் பிழைத்துள்ள வயல்களிலும் விளைச்சல் என்பது இம் முறை மிகவும் குறைவாகவே உள்ளமையினையும் கண்டுகொள்ள வேண்டும். வழமையில் ஒரு ஹெக்டேயரில் 3.5 மெற்றிக் தொன் நெல்விளையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், இம்முறை ஏக்கருக்கான விளைச்சல்கள் வெகு குறைவாகவே உள்ளன.
தற்போது வடக்கில் அரிசியின் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது. எனவே, இவ் அறுவடையினைத் தொடர்ந்த காலப்பகுதியில் வடக்கில் அரிசியின் விலை மேலும் எகிறலாம் என்ற நிலையே உள்ளது. எனவே, இது தொடர்பில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன. மழை பொய்த்துவிட்டது, அறுவடையில் இலாபமின்மை போன்ற பிரச்சினைகளிடையே அறுவடை செய்யப்பட்ட புதிய நெல்லினை சந்தைப்படுத்துவதிலும் வடக்கில் விவசாயிகளின் நிலை பெரும் திண்டாட்டமாகவேயுள்ளது. வடக்கு மாகாணத்தில் விளைந்துள்ள விளைநெல்லை கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகக் கொள்வனவு செய்வதற்கான தீர்மானம் ஒன்று கடந்த வாரத்திற்கு முன் ஏற்கனவே விவசாயிகளை பாதுகாக்கும் முகமாகவும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவுத் தட்டுப்பாட்டினைத் தணிக்கும் முகமாகவும் எடுக்கப்பட்டிருந்தது. எனினும், அதனை செயற்படுத்தவதில் சிக்கல்கள் உள்ளதாகவே தெரிகின்றது.
இக்கட்டுரைக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை கடந்த செவ்வாய்க்கிழமையன்று சந்தித்து நிலைமைகள் அறியப்பட்டன. அக்கராயன்குளம், ஸ்கந்தபுரம், கண்ணகிபுரம் போன்ற வயல்கள் நிறைந்த பகுதிகளுக்குச் சென்றே நிலைமைகள் அவதானிக்கப்பட்டன. இங்கு விவசாயிகள், அறுவடை செய்யும் நெல்லை உரிய விலைக்குச் சந்தைப்படுத்த முடியாதவர்களாக தனியார் நெல் கொள்வனவாளர்களிடம் திண்டாடுகின்றனர். அறுவடை நிறைவுறும் நிலையில் நெல் மூட்டைகளை வீதிகளில் வைத்த வண்ணம் யாராவது வியாபாரிகள் வருவார்களா என விவசாயிகள் எதிர்பார்த்திருக்கின்றனர். குறித்த பிரதேசத்தில் தனியார் வர்த்தகர்களின் பார ஊர்திகள் சிற்சில இடங்களில் நெற் கொள்வனவில் ஈடுபடுகின்றன. இம்முறை நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏன் விவசாயிகள் அவ்வாறாக விளை நெல்லை விற்பனை செய்யத் திண்டாட வேண்டும் என்ற கேள்வி இவ்விடத்தில் இயல்பானது.
வன்னியில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை உரிய விலை கிட்டும் வரையில் பாதுகாத்து விற்பனை செய்ய முடியாதவர்களாக உள்ளனர். நெல்லை உலர விடுவதற்கோ அதனை பாதுகாத்து களஞ்சியப்படுத்தி விற்பனை செய்வதற்கோ அவர்களிடம் எவ்வித வசதிகளும் இல்லை. இந்நிலையில் ஏதோ தென்பகுதி பார ஊர்திகளுக்கு விற்றுத் தீர்ப்பதே அவர்கள் முன்னுள்ள இன்றைய தெரிவாகவுள்ளது.
விவசாயிகளை பொருத்தளவில் ஆண்டு தோறும் அறுவடை நெல்லினை சந்தைப்படுத்துவதில் இடர்பாடுகளை எதிர்கொண்டேயாகவேண்டியுள்ளது. கடந்த வருடமும் நெல் விற்பனை நிலையங்கள் ஊடாக நெல் கொள்னவு செய்யப்படும் என அரசு அறிவித்திருந்த போதும் அவை பெருந்தாமதங்கள், இழுபறிகளின் மத்தியிலேயே நடைபெற்று முடிந்தன.
கூட்டுறவுச் சங்கங்கள் அரச அதிபர்களினால் வட்டியின்றி வழங்கப்படும் பணத்தினைக் கொண்டே வழமையில் நெல் கொள்வனவுகளில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் இம்முறை அரச அதிபர்களால் கூட்டுறவுக்கு வழங்கப்படும் கடன்களை விரைவுபடுத்துவதற்கும் அது போதாத பட்சத்தில் வங்கிகளில் இருந்தாவது கூட்டுறவு சங்கங்கள் கடன்களைப் பெற ஆவன செய்யவேண்டும் எனவும் வட மாகாணத்தில் ஏற்கனவே முடிவுகள் எட்டப்பட்டு இருந்தன. இந்த இடத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் தாம் கொள்வனவு செய்யவுள்ள நெல்லை உலர விடுதல், களஞ்சியப்படுத்தல் போன்றன வசதிகள் இன்மை தமது நடவடிக்கையினைப் பாதிக்கும் என வட மாகாண விவசாய அமைச்சர் பெ. ஐங்கரநேசன் உடன் முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் சங்கங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. எனினும், வட மாகாண விவசாய அமைச்சர் இருக்கின்ற வசதிகளைப் பயன்படுத்தி உச்சபட்ச அளவில் நெல்லைக் கொள்வனவு செய்யவே பணித்திருநதார். எனினும், நடைமுறையில்தான் இவைகள் பலனளிக்கவில்லை என்றே வயல்களுக்குச் செல்லும் போது தெரிகின்றது.
அறுவடை என்பது ஏற்கனவே அறியப்பட்ட ஒரு விடயம். காலநிலை போன்று கூறுவதற்கு நிச்சயமற்ற விடயமன்று. எனவே, அதிகாரிகளும் அரசியல் தலைமைகளும் விளைநெல்லைக் கொள்வனவு செய்யும் விடயத்தில் பல நாட்களுக்கு முன்னரே கொள்கைகளை வகுத்து தீர்மானங்களை எடுத்திருக்க முடியும். அதற்கு ஏற்றால்போல் செயல் வடிவங்களும் அவர்களால் வழங்கப்பட்டிருந்தால் அறுவடையின் பின்பாக இவ்வாறாக விவசாயிகள் திண்டாடும் நிலைமையினைத் தவிர்த்திருக்கலாம். அதன் மூலம் விவசாயிகளின் நலன்களை அதிகளவில் பாதுகாத்திருக்கலாம்.
இக்கட்டுரைக்கு விவசாயிகள் இன்று எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து கருத்துரைத்த கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்பின் செயலாளர் ம.புவனேந்திரன், இங்கு விளையும் நெல்லுக்கு உரிய விலை கொடுத்து கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் அரசிடம் இருந்து கிடையாது. அதேவேளை, கூட்டுறவுத்துறையும் எம்மிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதில் பிரச்சினைகளை எதிர்கொண்டே உள்ளன என்கிறார். அவர் மேலும், கூட்டுறவுத்துறையிடம் களஞ்சிய வசதி, நெல்லை கொள்வனவு செய்து அரிசியாக்குவதற்கான ஆலைகள் இல்லை. நெல் சந்தைப்படுத்தும் சபையின் வரையரைக்கு ஏற்ப விளை நெல்லை காயவைத்து பதப்படுத்தி விவசாயிகளான எம்மாலும் விற்பனை செய்ய வசதிகள் இல்லை. நடைபெற்ற யுத்தம் எம்மை சகலவழியிலும் நிர்க்கதியாக்கியுள்ளது. இந்நிலையில் நாம் பாடுபட்டு விதைத்த நெல்லை நட்டத்தில் தான் விற்கின்றோம் என்கின்றார்.
இவ்வாறான நிலைமைகளால் யுத்தத்தின் பின்னர் விவசாயத்திற்காக தாம் பெற்ற கடன்களைக் கூட செலுத்த முடியாதவர்களாகவுள்ளதாகவும் விவசாயத்திற்காக தவணைக்கட்டண முறையில் கொள்வனவு செய்த வாகனங்களுக்குக் கூட தவணைக் கட்டணம் செலுத்த வழியின்றி அவற்றினை தாம் இழந்து வருகின்றோம் எனவும் குறித்துக்காட்டுகின்றார். இவ்வாறாக விவசாயிகளின் பிரச்சினைகள் நிறைந்துள்ள இடத்தில் அவற்றிற்கான தீர்வுகள் விரைவாக வேண்டப்பட்டனவாகவே உணரப்படுகின்றன.
வடக்கினைப் பொருத்தளவில் விவசாயத்துறையிலும் ஏனைய துறைகளைப் போலவே பல்வேறுபட்ட பிரச்சினைகள் நிறைந்துள்ளன. கடந்த காலத்தில் வயல்களில் கூலி வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் இன்று வேலையற்றுள்ளனர். இதில் பெண்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம், வடக்கில் வியாபாரத்தினை விஸ்தரித்த லீசிங் கம்பனிகள் தமது வியாபாரத்தினை மாத்திரம் கருத்தில் கொண்டு அனேக நில உடமையாளர்களிடம் இயந்திரசாதனங்களை விற்றுத் தீர்த்துள்ளன. இதன் தாக்கம் கூலி வேலைசெய்யும் தொழிலாளர்கள் வேலையற்றவர்களாக்கப்படடுள்ளனர். எனவே, விவசாயத்தில் தொழில்நுட்பங்களை ஏற்படுத்துவது வரவேற்கத்தக்க அதேசமயம் விவசாயத்தினை இயந்திர மயமாக்கலில் சரியான ஒரு கொள்கையும் பிரதேசங்களுக்கு ஏற்றவாறு வகுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறான பட்சத்திலேயே எம்மால் எதிர்காலத்தில் தொழிலாளர் வளத்திற்கும் இயந்திர வளத்திற்குமிடையில் ஒரு சமநிலையைப் பேணமுடியும்.
உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் பாதிக்காதவாறு நெல் உட்பட ஏனைய விவசாய விளை பொருட்களுக்கு விலைக்கொள்கையும் அவசியம் தேவையாகவுள்ளன. போரினால் பாதிக்கப்பட்டவர்களது பிரதேச உற்பத்திகள் தென்னிலங்கை உற்பத்திகளுடன் போட்டியிடுவதிலும் சலுகைகள் தேவையாகவுள்ளன. மேலும், எமது பிரதேசங்களில் காலநிலை அதிகபடியாக விவசாயத்தினை பாதிக்கின்றது. இந்நிலையில் விவசாயிகள் சகலரும் பாதிக்கப்படாதவாறு விவசாயத்தில் ஈடுபடத்தக்கதான பாசன வசதியும் தண்ணீர் முகாமை பற்றியும் சிந்திக்கவேண்டியுள்ளது.
விவசாயத்திற்கான ஆற்றல் இருந்தும் காணி இன்றி கூலிவேலைகள் தேடி அலையும் மக்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களை தொழில் வருமானம் உள்ளவர்களாக பாதுகாக்கவேண்டிய தேவையும் எம்மிடத்தில் உள்ளது. விவசாயத்தின் தன்னிறைவு எமக்குத் தேவையாகவுள்ள அதேயிடத்தில், தன்னிறைவு அடைவதில் ஏற்படும் செலவுகளையும் நலன்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து சிக்கனமற்ற வகையில் மேற்கொள்ளப்படும் விவசாய முறைகளை முகாமைசெய்ய வேண்டிய தேவைகளும் எம்மிடத்தில் கணிசமாக உள்ளன.
தியாகராஜா நிரோஷ்