செப்டெம்பர் 17ஆம் திகதி புஸ்ஸல்லாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு 18ஆம் திகதி காலை தனது ரீசேர்ட்டைக் கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நடராஜா  ரவிச்சந்திரனின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாகத் தெரிவிக்கும் மலையக சமூக ஆய்வு மையத்தின் ஏற்பாட்டாளர் வண. மா. சத்திவேல், இது தொடர்பாக சுயாதீனமான விசாரணை ஒன்று நடத்தப்பட்டு ரவிச்சந்திரனின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை செய்திருப்பதாகவும் கூறுகிறார்.

தனது முறைப்பாட்டில் 5 விடயங்களை தான் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பாக வண. மா. சத்திவேல் கூறியதை வீடியோ வடிவில் கீழே காணலாம்.

முழுமையான முறைப்பாட்டை கீழே வாசிக்கலாம்,


வண. மா. சத்திவேல்

மலையக சமூக ஆய்வு மையம்

கொழும்பு

28.09.2016

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இல. 165, கிங்ஸி வீதி

கொழும்பு – 08

எதிராக,

பொலிஸ்மா அதிபர்,

பொலிஸ் தலைமையகம்,

கொழும்பு

புஸல்லாவை பொலிஸ் தடுப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நடராஜா ரவிச்சந்திரனின் மரணம் தொடர்பாக நீதியை பெறல்

  1. நான் மலையக ஆய்வு மையத்தின் இணைப்பாளராகப் பணி செய்கின்றேன்.
  2. மலையக ஆய்வு மையம் அரசியல் கட்சிகளைச் சாராத, சுயாதீனமான அமைப்பாக செயற்படுகிறது. அதேவேளை, அது அடிப்படையில் மனித உரிமை பிரச்சினைகளையிட்டு தனது கவனத்தைச் செலுத்தி வருகிறது.

நடராஜா ரவிச்சந்திரனின் மரணம் தொடர்பான எமது அவதானிப்பு

நீதிமன்ற உத்தரவுக்கமைய 2016.09.17ஆம் திகதி கைது செய்யப்பட்டு புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நடராஜா ரவிச்சந்திரன் 2016.09.17ஆம் திகதி இரவு தனது ரீசேர்ட்டைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இச்சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களை மட்டுமன்றி நாட்டு மக்கள் மத்தியிலும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பொது மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் நிலையத்திற்குள்ளே இவ்வாறானதோர் சம்பவம் இடம்பெற்றமை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இலங்கையின் சட்டத்தின் ஆட்சி ரவிச்சந்திரன் சம்பவத்தில் தெளிவாகியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

சில மாதங்களுக்கு முன்னர் அனுமதியின்றி கள் வைத்திருந்த குற்றத்திற்காக ரவிச்சந்திரன் புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார். தண்டனையாக பொது வேலையில் ஈடுபடுமாறு நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதை மீறிய குற்றத்திற்காக மீண்டும் நடராஜா ரவிச்சந்திரன் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அடுத்த நாள் (2016.09.18) காலை ரவிச்சந்திரன் புஸ்ஸல்லாவை வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. சிறையினுள் தான் அணிந்திருந்த ரீசேர்ட்டைக் கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரவிச்சந்திரன் கைதுசெய்யப்படும்போது பொலிஸாரால் தாக்கப்பட்டார் என்று உறவினர்கள் கூறுகிறார்கள். அத்தோடு, பொலிஸ் நிலையத்தில் வைத்தும் தாக்கப்பட்டதை தான் கண்டதாக ரவிச்சந்திரனின் சகோதரர் கூறுகிறார். பொலிஸார் நடத்திய தாக்குதலினால்தான் ரவிச்சந்திரன் கொல்லப்பட்டுள்ளார் என அவரது உறவினர்கள் தற்போது குற்றம் சுமத்துகிறார்கள்.

இதனைக் கண்டித்து புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றிரவே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்தால் இரு பொலிஸ் அதிகாரிகள் (ரவிச்சந்திரன் தூக்கிலிட்டு உயிரிழந்ததாகக் கூறும் 18ஆம் திகதி இரவு கடமையில் இருந்தவர்கள்) இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

மலையக சமூக ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை,

  • சுயாதீனமான ஒரு விசாரணை குழுவை ஏற்படுத்தி விசாரணை துரிதப்படுத்தப்படல் வேண்டும்.
  • நடராஜா ரவிச்சந்திரனின் உயிரிழந்தமையுடன் தொடர்புடைய புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்யப்படவேண்டும்.
  • நடராஜா ரவிச்சந்திரனின் உறவினர்களுக்கு முக்கியமாக குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கப்படல்வேண்டும்.
  • தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகின்ற நடராஜா ரவிச்சந்திரனின் உடலை விரிவான தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், அதனை சுயாதீனமான சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் மேற்கொள்ளவேண்டும் என்பதேயாகும். மேலும், அவர் கைதுசெய்யப்படும் போதும், சிறைச்சாலையினுள்ளும் தாக்கப்பட்டிருந்தால் அதனையும் தடயவியல் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும் என்பதே எமது கருத்து.
  • நடராஜா ரவிச்சந்திரனின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படல்வேண்டும்.

வண. மா. சக்திவேல்

மலையக சமூக ஆய்வு மையம்