படம் | Facebook

கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்ததாகக் கூறப்பட்ட நடராஜா ரவிச்சந்திரனின் கொலை தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக சமூக ஆய்வு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கமைய செப்டெம்பர் 17ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட ரவிச்சந்திரன், சிறைச்சாலையினுள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினாலே கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று குடும்பத்தினர் குற்றம்சுமத்துகிறார்கள். உடனடியாக அமுலுக்குவரும் வகையில் புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இருவர் இடமாற்றப்பட்டுள்ளனர் என பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது. இதனுடாக ரவிச்சந்திரனின் மரண விசாரணையை மூடிமறைக்க முயல்வது அப்பட்டமாகத் தெரிகிறது

அரசாங்கத்தின் விசுவாசிகளாக இருக்கும் மலையகப் பிரதிநிதிகள் நல்லாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படப்போவதில்லை எனத் தெரிவிக்கும் மலையக சமூக ஆய்வு மையம், இந்த நிலையில், எவ்வாறு ரவிச்சந்திரனுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கப் போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அறிக்கையை முழுமையாக கீழே வாசிக்கலாம்,

கண்டி புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்த வைக்கப்பட்டிருந்த இளைஞன் நடராஜா ரவிச்சந்திரனின் மரணம் தொடர்பில் மர்மம் நீடிக்கிறது. குடும்பத்தாருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, இளைஞனின் மரணத்துக்கு நீதிகேட்டு வீதிக்கு இறங்கி உணர்வு ரீதியாக போராடிய  மக்களை நாம் கெளரவிக்கின்றோம். பொலிஸ் திணைக்களம் தனது 150ஆவது ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா இந்த மரணம்.  நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க பாடுபட்ட மக்களை அரசாங்கம் இவ்வாறுதான் கவனிக்குமா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜனாதிபதி உரையாற்றுகின்ற போது நாட்டில் நடக்கும் இத்தகைய அநீதிகளுக்கு யார் பொறுப்பேற்கப் போகின்றார்கள்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் குறித்த இளைஞனின் மரணத்துக்கு கூறும் பதில் என்ன?

இந்த மரணத்துக்கு மலையக அரசியல் தலைவர்கள் நீதியைப் பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. அவர்கள் அரசாங்கத்தின் விசுவாசிகளாகவே அமைதி காக்கின்றனர். நாடாளுமன்றில் இது தொடர்பில் வாய்திறக்காதவர்களா அரசாங்கத்திடமிருந்து நீதியைப்பெற்றுக் கொடுக்க போகின்றார்கள்?

மலையக சமூக ஆய்வு மையம் சிவராஜா ரவிச்சந்திரனின் மரணத்திற்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு, குறித்த இளைஞனின் குடும்பத்துக்கும் அப்பகுதி மக்களுக்கும் பாதூகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றது.

ஜனநாயக நாட்டில் நடக்கும் காட்டு நீதியை மக்கள் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. மக்களை பாதுகாக்கவேண்டிய பொலிஸ் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் தூக்கிட்டு சாகும்வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததா? இதுதான் பொதுமக்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் இலட்சனமா? பொலிஸாரால் தனது அண்ணன் தாக்கப்பட்டதாக கூறும்  தம்பியின் கதறல் மரணம் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

சிவில் அமைப்பாகவும் மலையக சமூக ஆய்வு மையம் என்ற அடிப்படையிலும் இளைஞனின் மரணத்துக்கு வண்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். குறித்த மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை ஓய்ந்துவிடப்போவதில்லை. போராட்டமும் கண்கானிப்புக்களும் தொடரும்.