படம் | DailyFT

ஒரு வாரமாக உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் நடாத்திய போராட்டம் பற்றிய படங்கள் கடந்த வாரம் முழுவதும் செய்திகளாக வெளிவந்தவண்ணம் இருந்தன. அத்துடன், அவை உடுவில் மகளிர் கல்லூரியின் சமூகத்தினையும் தாண்டி, பல்வேறு தரப்புக்களின் கவனத்தினையும் ஈர்த்துள்ளன. பரந்துபட்ட சமுதாயத்தினால் அக்கறையுடன் நோக்கப்படும் இந்த விடயம் கல்வியிலே தனியார் பாடசாலைகளின் பங்கு பற்றியும், இலங்கையில் கல்வியின் எதிர்காலம் பற்றியும் பல உரையாடல்களைத் தூண்டியுள்ளது.

மாணவர்களின் போராட்டத்தினைக் கல்லூரியின் முகாமைத்துவம் உதாசீனம் செய்தாலும், கல்லூரியின் பெற்றோரும், பழைய மாணவர்களும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தார்கள். பதற்றம் அதிகரித்ததனை அடுத்து இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளடங்கலாகப் பல அமைப்புக்களும் கல்லூரியில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பாகத் தமது கரிசனையினை வெளியிட்டதுடன், பாடசாலை மாணவர்களின் எதிர்ப்பினை அடக்குவதற்கு அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையினைக் கடுமையாகக் கண்டனமும் செய்தனர். இதனை அடுத்துப் பாடசாலை மாணவர்கள் தமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பல்வேறு தரப்புக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட போது மாணவர்கள் அவரைச் சந்தித்து மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

போராட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடகப் பதிவுகள் மிகவும் அரசியல் மயமாக்கப்பட்டவையாகவும், உணர்ச்சியூட்டப்பட்டவையாகவும் அமைந்தன. இதன் காரணமாகப் பெற்றோரினதும் மாணவர்களினதும் பல்வேறு கரிசனைகள் வெளியில் தெரியவராமல் போன நிலைமையும் ஏற்பட்டது. பாடசாலை மாணவர்களதும், பெற்றோரதும் கோரிக்கைகள், பாடசாலையினால் வழங்கப்படும் கல்வியின் தரம் பற்றியும், மாணவர்களுக்கு எதிராக இளைக்கப்படும் அநீதிகள் பற்றியும், கல்லூரியின் உயர் முகாமைத்துவத்தினர் தமது பொறுப்புக்கூறல் கடமையில் இருந்து தவறியமை பற்றியும், திருச்சபையின் அரசியல் பாடசாலையினைப் பாதிப்பது பற்றியும், பாடசாலை முகாமைத்துவத்தினை ஜனநாயகப்படுத்துவது பற்றியதாகவும் இருந்தன.

தமிழ் அரசியலில் நிகழும் குழுவாதத்தின் காரணமாகப் பல்வேறு தரப்புக்களும் உடுவில் மகளிர் கல்லூரியின் பிரச்சினையைத் தமது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் நிலையில், பாடசாலை மாணவர்களினாலும், பெற்றோரினாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் மீது நாம் இந்தக் கட்டுரையிலே கவனஞ் செலுத்த விரும்புகிறோம். மாணவியரின் எதிர்ப்பு நடவடிக்கைகளை நாம் இங்கு ஒரு பரந்துபட்ட சமூகத்தளத்திலே வைத்து நோக்க முயற்சி செய்கிறோம். மாணவர்களின் போராட்டமானது கல்வியின் அரசியல், தனியார் மயமாக்கல், பெண்களின் கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற விடயங்கள் பற்றிப் பொதுத்தளத்திலே சிந்திப்பதற்கும், விவாதிப்பதற்குமான ஒரு தருணத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உடுவில் மகளிர் கல்லூரியும் திருச்சபையும்

19ஆம் நூற்றாண்டிலே பல கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகள் யாழ்ப்பாணத்திலே நிறுவப்பட்டன. அவற்றிலே அமெரிக்கன் சிலோன் மிஷன் பல்வேறு மிஷனரிப் பாடசாலைகளினையும், உயர் கல்விக்கான ஒரு நிறுவனத்தினையும் முதலிலே ஆரம்பித்திருந்தனர். இந்த நிலையங்களிலே இருந்து தீவிரமான சமூக விசுவாசம் மிக்க, சமூக நலனிலே அக்கறையும் பற்றுறுதியும் கொண்ட பல தனிநபர்களும், மாணவ சமுதாயங்களும் உருவாகினர். இவற்றில் இருந்து உருவாகிய பல மாணவர்கள் கல்வியலாளர்களாகவும், அரச உத்தியோகத்தர்களாகவும், சமயத் தலைவர்களாகவும், வைத்திய அலுவலர்களாகவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலே ஆழமான புலமை பெற்ற புத்திஜீவிகளாகவும் விளங்கினர்.

இந்தக் கல்வி நிறுவனங்களிலே பயின்று வெளியேறிய பலர் சமுதாயத்திலே மறக்க முடியாத மனிதர்களாகவும், போற்றுதற்குரிய தலைவர்களாகவும் பலரினால் பார்க்கப்பட்டனர். யுத்தத்தினாலும், உள்ளக மற்றும் வெளிநாடு நோக்கிய மக்களின் இடம்பெயர்வுகளாலும், இந்தக் கல்வி நிலையங்கள் பாதிப்புக்கு உட்பட்டாலும், தற்கால சமூகப் பொருளாதார, அரசியல் சூழ்நிலைக்குத் தம்மை இசைவாக்கம் செய்துகொண்டு இவை தொடர்ந்தும் சமூகத்திற்குப் பங்களிப்புச் செய்தவாறு இருக்கின்றன.

உடுவில் மகளிர் கல்லூரி அமெரிக்கன் சிலோன் மிஷனினால் 1824ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவில் விடுதியுடன் கூடியதாக அமைக்கப்பட்ட முதலாவது பெண்கள் பாடசாலையாக இந்தப் பாடசாலை விளங்கியது. அமெரிக்கன் சிலோன் மிஷனினால் பரிபாலிக்கப்பட்ட பல பாடசாலைகள் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆதீனத்துடன் தொடர்புபட்ட பாடசாலைகளாக மாற்றம் பெற்றன. தற்போது யாழ்ப்பாணக் கல்லூரியும், உடுவில் மகளிர் கல்லூரியும் தனித்தனியான ஆளுநர் சபைகளைக் கொண்டிருக்கின்றன. இந்த ஆளுநர் சபைகளிலே தென்னிந்தியத் திருச்சபையின் யாழ். ஆதீனத்தினைச் சேர்ந்தோர் பெரும்பான்மையான உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால், இந்தக் கல்லூரிகளை நிருவகிப்பதற்கான நிதி அமெரிக்காவின் பொஸ்டன் நகரிலே இருக்கின்ற அமெரிக்கன் சிலோன் மிஷனின் தாய் நிறுவனத்தினால் தொடர்ந்தும் வழங்கப்படுகிறது.

தற்போது தென்னிந்தியத் திருச்சபையின் பேராயராக இருக்கும் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜா அவர்கள் திருச்சபையின் பேராயராக நியமிக்கப்பட்டமையினால் ஏற்பட்ட அதிருப்திகள் காரணமாகத் திருச்சபையினுள் ஏற்பட்ட பிளவு மற்றும் சிலோன் அமெரிக்கன் மிஷன் திருச்சபை என்ற திருச்சபையினை அதிருப்தியாளர்கள் தோற்றுவித்தமை, பாடசாலை நிருவாகக் கட்டமைப்பிலே மேலும் பல சிக்கல்களை உருவாக்கியது. மிஷனரிப் பாடசாலைகளின் வரலாற்றினை எடுத்துப் பார்த்தால் அவற்றிலே பிரச்சினைகளும் முரண்பாடுகளும் பல காலங்களாக இருந்து வந்திருக்கின்றன என்பதனை நாம் அறியலாம். இந்தச் சூழ்நிலையிலேயே உடுவில் மகளிர் கல்லூரியின் தற்போதைய நெருக்கடியினை நாம் நோக்க வேண்டும்.

உடுவில் மகளிர் கல்லூரியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினைக் கல்லூரியின் முகாமைத்துவ சபையானது முன்னைய அதிபர் திருமதி ஷிராணி மில்ஸ் 60 வயதினை அடைந்ததனைக் காரணங்காட்டிக் கல்லூரிக்குப் புதிய அதிபரினை நியமித்தது தொடர்பாக ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளுடன் தொடர்புபட்ட ஒன்று எனவும், பழைய அதிபரினை மீள் நியமிக்கும்படி கோருவதே போராட்டத்திலே ஈடுபடும் தரப்புக்களின் அபிலாசை எனவும் பொதுத் தளங்களிலே பலர் குறுக்கப்பட்ட முறையிலே விளங்கப்படுத்தி வருகிறார்கள்.  ஆனாலும், பாடசாலையின் உண்மையான பிரச்சினைகள் பாடசாலையின் கட்டமைப்பிலும் அதன் முகாமைத்துவத்திலும் நிலவும் ஆழமான வேரூன்றிய பிரச்சினைகளாக இருக்கின்றன. அதிபரின் பதவிக் காலம் நீடிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பின்னணியாக அதிபரினால் கல்லூரிக்கு வழங்கப்பட்ட மிகவும் உன்னதமான சேவைகளிற்கு மதிப்பளிக்க வேண்டியதன் தேவை இருக்கும் அதேவேளை, புதிய தலைமையின் கீழ் பாடசாலை நிலைகுலைந்து வீழ்ச்சிப் பாதையிலே செல்லக்கூடும் என்ற பயமும் பலர் மத்தியில் இருக்கின்றது என்பதனை நாம் இங்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

தனியார் பாடசாலைகளும் பொறுப்புக்கூறலும்

இலங்கை தனது கல்விக் கட்டமைப்பின் எதிர்காலத் திசையினைத் தீர்மானிப்பதற்கான ஒரு முக்கியமான கட்டத்திலே தற்போது இருக்கிறது. தற்போதைய அரசாங்கம் கல்விக்கான அரச செலவினைப் படிப்படியாகக் கூட்டுவதாக அறிவித்துள்ள அதேவேளை, மறுபுறத்திலே கல்வியினைத் தனியார் மயமாக்கும் முயற்சிகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலவசக் கல்வியினைப் பாதுகாப்பதற்காக மாணவர்களின் தலைமையிலான போராட்டங்கள் நாட்டிலே தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், அரசாங்கம் தனியார் கல்வி நிறுவனங்களை நிறுவுவதில் பெரிய அளவில் முனைப்புக் காட்டி வருகிறது. இந்த நிலையில், தனியார் கல்வி நிலையங்கள் எதிர்கொள்ளக்கூடிய சில சவால்களை உடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற போராட்டங்கள் வெளிக்காட்டியுள்ளன.

பாடசாலையின் முகாமைத்துவக் குழு இடையூறுகள் ஏதும் இல்லாத வகையில் பாடசாலையினை நடாத்துவதற்கும், பாடசாலையின் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் பொறுப்பான ஓர் அமைப்பாக இருக்க வேண்டும். ஆனால், முகாமைத்துவச் சபையானது பாடசாலையில் தோன்றிய நெருக்கடி நிலையினைக் கையாளுவதற்கான ஆற்றலைக் கொண்டிராதவிடத்து அல்லது மாணவர்களின் நலனிலே அக்கறை காட்டத் தவறும்போது பெற்றோரும் மாணவர்களும் மிகவும் இடர்பாடான ஒரு நிலைமையினை எதிர்கொள்ளுகிறார்கள்.

பாடசாலையின் முகாமைத்துவமானது ஒரு சில தனிநபர்களின் கைகளிலே விடப்படும் போது அவர்களின் தனிப்பட்ட நலன்கள் மாணவர்களினதும் ஒட்டுமொத்தப் பாடசாலையினதும் எதிர்காலத்தினை மழுங்கடிக்கக் கூடும். ஊழலும், நிதியினைத் தவறான முறையில் முகாமைத்துவம் செய்வதுவும் அந்தப் பாடசாலையினைத் தீவிரமாகப் பாதிக்கக் கூடும். மேலும், தனியார் பாடசாலைகளுக்குப் போதுமான அளவு நிதியினைச் சேகரிப்பது என்பதுவும் ஒரு முக்கியமான சவாலாக இருக்கிறது. ஆசிரியர்களுக்கான சம்பளத்தினை வழங்குவதற்கான பொறுப்பும் இந்தப் பாடசாலைகளினாலேயே சுமக்கப்படுவதனால் பாடசாலைகளின் நீண்டகால நலன்கள் பாதிக்கப்படுகின்றன.

தனியார் பாடசாலைகளின் நிலைமைகளை மதிப்பீடு செய்து கண்காணிப்பதற்கும் அவற்றின் பொறுப்புக்கூறலினை உறுதிப்படுத்தவும் வெளியிலிருந்தான ஒரு தலையீடு அவசியம் என்பது எமக்குப் புலனாகிறது. ஆனாலும், அண்மையில் உடுவில் மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட நெருக்கடியினை எடுத்து நோக்குகையில் தனியார் பாடசாலைகளிலே தலையீடு செய்வதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதிலே தெளிவற்ற தன்மை நிலவுகிறது. பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை பாடசாலையின் இயக்கத்தினை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் இடைக்காலத் தலையீடு ஒன்று அவசியமா என்ற கேள்வியும் இங்கு எழுந்துள்ளது.

தனியார் பாடசாலைகளில் தோன்றும் நெருக்கடிகளை மாகாண மட்டத்திலே அல்லது தேசிய அரச மட்டத்திலே சிறப்பான முறையிலே கையாள முடியுமா என்பது பற்றி நாம் கவனமாக ஆராய வேண்டும். இந்தப் பாடசாலைகளினால் வழங்கப்படும் கல்வியின் தரத்தினைப் பேணுவதில் கல்வி அமைச்சின் கீழ் வரும் தனியார் பாடசாலைகளுக்கான பிரிவு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களையே கொண்டிருக்கிறது. பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலே மாகாண அரசுகள் ஓர் ஆக்கபூர்வமான பங்கினைத் தனியார் பாடசாலைகளிலே ஆற்றமுடியும். உதவிபெறும் பாடசாலைகள் தொடர்பான விதிமுறைகள் கூடிய அளவு அரச கண்காணிப்பினை இவ்வாறான பாடசாலைகள் மீது வைத்திருக்க வழி செய்கின்றன. ஆனால், அரசின் தலையீடு இந்தப் பாடசாலைகளின் மீது அளவுக்கதிகமாக இருப்பதாகச் சிலர் விசனம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறான எல்லாக் கரிசனைகளும் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் பாடசாலைகள் கூடிய அளவு பொறுப்புச் சொல்லலினை உறுதிப்படுத்தும் வகையில், உரையாடல்களும் விசாரணைகளும் ஏற்படுவதற்கு வழிசெய்யக் கூடியனவாக இருக்க வேண்டும்.

பெண்களின் கல்விக்கான ஒரு நிலையம்

யாழ்ப்பாணத்திலே காலனித்துவக் காலத்தின்போது உருவாக்கப்பட்ட மிஷனரிப் பாடசாலைகள் அதுவும் குறிப்பாகப் பெண்களின் கல்விக்காக உருவாக்கப்பட்ட பாடசாலைகள் போரினால் ஏற்பட்ட சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்களின் செல்வாக்குக்கு உட்பட்டனவாக இருக்கின்றன. உடுவில் மகளிர் கல்லூரியும் இவ்வாறான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த மாற்றத்தினை அங்கு வழங்கப்படும் கல்வியிலும் அங்கு பயிலும் மாணவிகளின் சமூகப் பொருளாதாரப் பின்புலத்திலும் நாங்கள் அவதானிக்க முடியும். தற்போது பரந்துபட்ட ஒரு சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலே செயற்படுகிறது. இங்கு பயிலுவோரில் கூடிய சதவீதம் கீழ் மத்தியதர வர்க்கத்தினைச் சேர்ந்தவர்களாகவும் இந்துக்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறான கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகளினால் வழங்கப்படும் கல்வியின் நோக்கமானது ஆரம்ப காலத்திலே சமூகத்தின் நன்மதிப்பினைப் பெறக்கூடிய பெண்களையும், வினைத்திறன் மிக்க குடும்பப் பெண்களை உருவாக்குவது பற்றியுமே கவனஞ் செலுத்தியது. சமூகத்திலே ஏற்பட்ட பாரதூரமான மாற்றங்களினை அடுத்து இந்த நோக்குகளிலும், விழுமியங்களிலும் இந்தப் பாடசாலைகள் பாரிய மாற்றங்களைக் கொண்டுவந்தன.

அண்மையில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது மிஷனரிக் கல்வி மூலம் உருவாக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட பொதுமைப்படுத்தப்பட்ட சில குணாம்சங்களினைக் கொண்ட பெண்களின் செயற்பாடுகளில் இருந்து மாறுபட்டதாகவும், புரட்சித் தன்மை கூடியதாகவும் அமைந்தது. மாணவிகள் வீதிக்கு இறங்கியமையும், பாடசாலை நுழைவாயிலில் படுத்திருந்து மறியற் போராட்டம் மேற்கொண்டமையும், தமது கோரிக்கைகளினை சமுதாயத்துக்கும் சம்பந்தப்பட்டோருக்கும் தெளிவாகக் கேட்கும் வகையில் ஆணித்தரமாக முன்வைத்தமையும் மாணவிகளின் இந்தப் புரட்சித்தன்மை மிக்க மனோநிலைக்கு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், ரோட்டிலே நிற்காதீர்கள், ஒழுக்கமாக நடவுங்கள் என மாணவிகளுக்கு எதிராக ஆசிரியர்களும் சமூகத்தின் பிற்போக்கான சக்திகளும் வெளியிட்ட கருத்துக்கள் போராட்டம் சமூகத்தின் பல பிற்போக்கான, ஆண்மையவாதக் கருத்துக்களினை கேள்விக்குட்படுத்தியமையினை எமக்குக் காட்டுகிறது.

யாழ்ப்பாண சமூகத்தின் பெரும்பாலான தரப்புக்களும், தலைமைகளும் மாணவிகளின் புரட்சிகர மனோநிலையினையும் அதிலிருந்து வெளிப்பட்ட செயற்பாட்டியக்கத்தினையும் விளங்கிக்கொள்ளுவதற்கு முடியாதவர்களாக இருந்தார்கள். பாரம்பரிய யாழ்ப்பாண சமூகத்தின் விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்துவதற்கு அப்பாலும், போராட்டத்தின் சக்தி பலம் மிக்க ஒன்றாக இருந்தது. பாடசாலையின் முகாமைத்துவத்தினைத் தீர்மானிப்பதிலே தமக்கும் ஒரு பங்கு உண்டு என்பதனை மாணவிகள் முரசு கொட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.

14212836_1163476980378347_3771422380977482932_n
Via: Colombo Gazette

மாணவிகளின் போராட்டம் சிறுவர்கள் பற்றியும் சிறுவர்களின் தீர்மானம் எடுக்கும் ஆற்றல் பற்றியும், தனியார் பாடசாலைகளின் முகாமைத்துவத்தில் அவர்களின் பிரதிநிதித்துவ வகிபங்கு பற்றியும் எம்மத்தியிலே பாரம்பரியமாக இருக்கும் சில கருத்துக்களுக்கு சவாலாக அமைந்திருந்ததுடன், அவ்வாறான பாரம்பரியமான கருத்துக்களை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியதன் அவசியத்தினையும் எமக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. தமது அதிபர் இளைப்பாறச் செய்யப்பட்டமையினை மாணவிகள் எதிர்த்தமை தமது கல்வி முகாமைத்துவத்திலே தீர்மானங்களை மேற்கொள்ளுகையில், மாணவர்கள் தமது குரல்களும் கேட்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துவதாக அமைந்தது.

இலங்கையின் மத்திய பகுதியிலே உள்ள மாவட்டம் ஒன்றிலே அமைந்துள்ள ஒரு கிறிஸ்தவ தனியார் பாடசாலை அதனது ஆளுநர் சபையிலே மாணவர் பிரதிநிதி ஒருவரை உள்ளடக்கியிருக்கிறது என்பதனை நாம் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இது உலகளாவிய ரீதியில் திருச்சபைகளிலும் திருச்சபைகளுடன் தொடர்புபட்ட நிறுவனங்களிலும் பிள்ளைகளுக்கும் மாணவர்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகரித்து வருவதனைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு பாடசாலையின் நோக்கம் அங்கு வரும் பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதாக இருப்பின் அந்தப் பாடசாலையினை இயக்குவதற்கான ஜனநாயகச் செயற்பாடுகளில் பிள்ளைகளை உள்ளடக்குவதிலே என்ன தவறு இருக்க முடியும்? அரசியல் ரீதியிலான புரிதலுடனும், பாடசாலையின் நலன் மீதான புரிதலுடன் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் இந்தப் போராட்டத்தின் போது செயற்பட்டமை, பிள்ளைகள் மற்றும் சிறுவர்களின் ஜனநாயக செயற்பாடுகளின் மூலமாக மாற்றத்தினைக் கொண்டுவரக் கூடிய சக்தி பற்றி எமக்குப் பாரம்பரியமாக இருந்து வந்த சில கற்பிதங்களை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியதன் அவசியத்தினை எமக்குக் கோடிட்டுக்காட்டுகிறது.

யாழ்ப்பாணப் பாடசாலைகளினைத் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கம் மழுங்கடிக்கத் தொடங்கிய நிலையில், பெரும்பாலானோரின் கவனம் பரீட்சைகளிலே உயர்ந்த பெறுபேறுகளை யார் பெறுகிறார்கள் என்பதனையே நோக்கி இருந்த வேளையிலே, மாணவர்களின் கல்வி, கலை, விளையாட்டுத் துறை, ஆக்கத் துறை குறிப்பாக இசைத்துறை எனப் பாடசாலையின் நீண்ட பாரம்பரியத்துக்கு அமைவாகப் பலதரப்பட்ட துறைகளிலும் அவர்களை மிளிரச் செய்யும் வகையிலும், அவர்களின் ஆளுமையினை விருத்தி செய்யும் வகையிலும், ஒரு முழுமையான கல்வியினைத் தனது மாணவிகளுக்கு உடுவில் மகளிர் கல்லூரி வழங்கிவந்திருக்கிறது. மாணவர்களின் போராட்டம் உச்சக் கட்டத்தினை அடைந்து கல்லூரியின் வளாகம் போர்க்கோலம் கொண்டிருந்த வேளையிலும் மாணவிகளின் சங்கீதம் பாடசாலை வளவினுள்ளே ஒலித்துக் கொண்டிருந்தது. ஆசிரியர்களினதும் ஏனையோரினதும் வாய் மூலமான மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு மத்தியிலும் போராடும் மாணவிகள் கிறிஸ்தவ இறையியற் பாடல்களைப் பாடியவாறு இருந்தனர்.

எதிர்காலம் பற்றிய நம்பிக்கை

நீண்டகால யுத்தமானது நாட்டில் உள்ள சமூகங்கள் ஒன்றில் இருந்து ஒன்று அந்நியப்பட்டுப் போவதற்கு மட்டுமல்லாது, தமிழ் சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையின்மை வளர்வதற்கும், சமூகம் பல வழிகளிலே சிதைவடைவதற்கும் காரணமாக அமைந்தது. துப்பாக்கியின் அச்சமூட்டும் நீண்ட நிழலின் கீழ் வாழ்ந்த இந்த சமூகத்தில் இருந்து மிகவும் குறைந்த அளவிலேயே எதிர்ப்புணர்வுகள், அகிம்சை முறையில் வெளிப்பட்டிருந்தன. இந்த வகையிலே உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள், ஆயுதம் அற்ற, அகிம்சை ரீதியான கூட்டு எதிர்ப்புப் போராட்டங்களின் தற்கால முக்கியத்துவத்தினை எமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். இது ஒரு வேறுபட்ட எதிர்காலத்தின் சாத்தியம் பற்றி எமக்கு ஒரு நம்பிக்கையினைத் தந்துள்ளது. சமூக உணர்வு, தமது கல்வி நிறுவனத்தின் பொருட்டு மாணவிகள் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, அதிகார வெறியினை நிராகரித்து அதனை ஜனநாயகமாக எதிர்கொண்டமை உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் போராட்டத்தின் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இந்தப் போராட்டத்துக்கு மாணவிகளின் பெற்றோரும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கியமை போராட்டத்தினை மேலும் சிறப்பாக்கியது. உடுவில் மகளிர் கல்லூரி எதிர்கொள்ளும் சவால்கள், சமூக நிறுவனங்களுக்கும் சமூகம் ஜனநாயகமயப்படுவதற்கும் இடையிலான தொடர்பினைப் பற்றி நாம் ஆழமான முறையில் சிந்திக்க எம்மைத் தூண்டியுள்ளன.

பெற்றோர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், திருச்சபைகள், சமுதாயம் எனப் பல தரப்பினரும் இந்த மாணவிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டியது அவசியம். அதுவே அவர்களது கல்வியும் எதிர்காலமும் பாதுகாக்கப்படுவதற்கு உத்தரவாதமாக அமைவதுடன், அவர்களது கல்வியினதும் எதிர்காலத்தினதும் ஊடாகச் சமூகத்திலே சிறப்பான மாற்றங்களை உருவாகவும் வழி செய்யும். உடுவில் மகளிர் கல்லூரியின் பிரச்சினையானது முற்போக்கான சிந்தனைகளையும், செயற்பாட்டுத் திறன்களையும் கொண்ட மாணவிகளினது கல்வி பற்றியது என்பதனையும், அந்தக் கல்வியினை வழங்கும் பாடசாலை, அதன் முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவம் என்பன பற்றியதும் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.

நியந்தினி கதிர்காமர் மற்றும் எஸ்தர் சுரேந்திரராஜ்

நியாந்தினி கதிர்காமர் மற்றும் எஸ்தர் சுரேந்திரராஜ் ஆகியோர் கல்வி தொடர்பான ஆய்வுகளிலே ஆர்வம் கொண்டுள்ள ஆய்வாளர்கள் ஆவர்.