படம் | DALOCOLLIS

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரம் அதாவது, கூட்டு ஒப்பந்த காலம் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் அந்த கூட்டு ஒப்பந்தத்தை மீள புதுப்பித்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுத்தபாடில்லை. ஆனால், இதை வைத்து மலையக அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் பிரதமர், ஜனாதிபதி என மொத்த அரசியல்வாதிகளும் அரசியல் செய்கின்றார்கள்.

கடந்த வாரம் ஹட்டன் பகுதியில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் பெருந்தோட்டத் துறையில் உள்ள தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும் என தெரிவித்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 1000 ரூபா கோரிக்கையை ஆதரிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ஆகியோர் 1000 ரூபாவை தோட்ட தொழிலாளர் சம்பளமாக வழங்குவோம் என கூறியிருந்தனர். அதேநேரம், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்களுள் பிரதமரின்  கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமும் உள்ளடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல மலையக அரசியல்வாதிகளும் தங்களது சுயநல அரசியல் லாபங்களுக்காக கூட்டு ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு நாடகமாடுகின்றனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் கூட்டு தொழிற்சங்க சம்மேளனம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் போன்ற பிரதான தொழிற்சங்கங்கள் ஒன்றுபடாதவிடத்து கூட்டு ஒப்பந்தம் சாத்தியப்படாது என்பது எல்லோரும் அறிந்த விடயம். எனவே, ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக இந்த மூன்று தொழிற்சங்கங்களும் மக்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க நினைக்கவில்லை. தங்களது பலத்தை காட்டிக்கொள்ள இந்த கூட்டு ஒப்பந்தக் காலத்தை பயன்படுத்திக்கொள்கின்றன என்றும் கூறலாம். இதனை முதலாளிமார் சம்மேளனம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது எனலாம்.

இந்தப் பின்னணியில் முதலாளிமார் சம்மேளன தலைவர் ரொஷான் ராஜதுரை ஆகஸ்ட் மாத சம்பள கொடுப்பனவுக்கு முன்னர் உற்பத்தி அடிப்படையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். எனவே சம்பள திருத்தத்தில் திருத்தம் தேவை. இது இன்றைய அவசர தேவை என அண்மையில் கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது தெரிவித்திருந்தார். இதற்கு தொழிற்சங்கங்களின் பதில் என்ன?

நிதி நெருக்கடியின் மத்தியில் தேயிலை சபையினூடாக அரச வங்கிகள் வழங்கிய 800 மில்லியன் ரூபாவைக் கொண்டே முதலாளிமார் சம்மேளனம் தற்போது தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவை வழங்கிவருகிறது. அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தொழிலாளர்களுக்கு இவ் இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஜூன் ஜூலை மாதங்களில் நாளாந்த இடைக்கால கொடுப்பனவாக 100 ரூபா வழங்கப்பட்டது. அதுவும் ஆகஸ்ட் மாத சம்பள கொடுப்பனவுக்கு முதல் உற்பத்தி அடிப்படையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை இந்த கொடுப்பனவு வழங்கப்படும். இதனை கம்பனிகளும் அரசாங்கமும் மற்றும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு அடிப்படையில் இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டது எனவும் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்தார்.

இவரது கருத்துப்படி பார்க்கும்போது செப்டெம்பர் மாதம் உற்பத்தி அடிப்படையிலான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவேண்டும். அதுவரை இந்த 100 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படாது. அரசாங்கத்தின் தலையீட்டுக்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்கியுள்ளதுடன் கூட்டு ஒப்பந்த விதிமுறையான மூன்றாம் தரப்பு நியாயத்துக்கு இடமளிக்க கூடாது என்ற விதிமுறையை முத்தலாளிமார் சம்மேளனம் மீறியுள்ளது. அதேநேரம், வங்கியில் கடன் அடிப்படையில் பெற்றுக்கொண்ட பணத்தைதான் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக வழங்குவதாக இ.தொ.கா. கூறுவது முதலாளிமார் சம்மேளனம் இதொகாவிடம் இடைக்கால கொடுப்பனவு தொடர்பாக பேசாத விடயத்தையே உணர்த்துகிறது. எனில் முதலாளிமார் சம்மேளனம் இடைக்கால கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக கலந்துரையாடிய தொழிற்சங்கங்கள் எவை? அவை தான் கூட்டு  ஒப்பந்தம் தொடர்பாக முடிவெடுப்பவையா என்ற கேள்வியும் எழுகிறது.

முதலாளிமார் சம்மேளனம் வழங்க இணக்கம் தெரிவித்த இடைக்கால கொடுப்பனவே இன்னும் பல தொழிலாளர்களின் கைக்கு சென்றடையவில்லையென பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் இனி அந்த கொடுப்பனவு இல்லை என்று தெரிந்தால் ஏமாற்றப்பட்ட அவர்கள் என்ன செய்வார்கள்? இது மக்களை தெளிவுபடுத்தாத தொழிற்சங்க அரசியல் என்று கூறுவதை தவிர வேறு ஒன்றும் கூற முடியாது.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள வடிவேல் சுரேஷ் இன்னும் கூட்டு ஒப்பந்த வரைவு குறித்து வாய் திறக்காத நிலையில் இ.தொ.கா. தனது 1000 ரூபா நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. ஆனால், முதலாளிமார் சம்மேளனம் மொத்த சம்பளம் 575 ரூபா தான் என திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது பழைய கூட்டு ஒப்பந்த அறிக்கையில் காணப்படும் தொகையைக் காட்டிலும் 45 ரூபா குறைவானது.

முன்னர் வழங்கப்பட்ட ரூபா 620 அடிப்படை சம்பளத்தை தொழிலாளர் ஒருவர் பெற்று கொள்ள வேண்டுமானால் புதிய திருத்தத்தின் படி அவர் ஒரு நாளைக்கு கட்டாயம் 12 கிலோ தேயிலை கொழுந்துகளை பறிக்க வேண்டும். பறிக்கும் ஒவ்வொரு மேலதிக கிலோவிற்கும் ரூபா 25.30 என்ற அடிப்படையில் அவர்களுக்கான சம்பள தொகை அதிகரிக்கபடவுள்ளது. அது மட்டுமின்றி 12 கிலோவிற்கு மேலதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இப்படி பார்த்தால் தற்பொழுது இ.தொ.கா. கோரும் 1000 ரூபா சம்பள தொகையை தொழிலாளர் பெற வேண்டுமானால் ஒரு நாளைக்கு தொழிலாளர்கள் 27 கிலோ கிராம் தேயிலை பறிக்க வேண்டியுள்ளது.

வாழ்க்கை  அதிகரித்து செல்லும் நிலையில் 2013ஆம் ஆண்டிலேயே தீர்மானிக்கப்பட்ட அடிப்படை சம்பளம் 620 ரூபாவில் இருந்து 575 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைப்புக்கு தேயிலை இறப்பர் ஆகியவற்றின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி, காலநிலை சீரின்மை காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது, உற்பத்தி செலவு அதிகரிப்பு, களை கொல்லிகளை தடை செய்தமை என பல காரணங்களை முதலாளிமார் சம்மேளனம் காட்டிவருகிறது. இவ்வாறு நட்டமடைவதாகக் கூறும் கம்பனிகள் தொடர்பாக நடத்திய ஆய்வுகளின் போது குறித்த கம்பனிகள் நட்டமடையவில்லை என்றே தரவுகள் கூறின. இருந்தபோதிலும் மீண்டும் நட்டம் என்ற காரணத்தை முதலாளிமார் சம்மேளனம் தெரிவிக்கிறது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் கூட்டு தொழிற்சங்க சம்மேளனம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் என்ற இந்த பிரதான தொழிற்சங்கங்கள் இது தொடர்பாக கேள்வி கேட்குமா? அரசு தலையிட்டு இடைக்கால கொடுப்பனவை வழங்கியது போல ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் இனி தன்னிச்சையாக முடிவடுக்குமா என்றும் தெரியவில்லை.

ஆதித்யன்