படம் | Sampath Samarakoon Photo, Vikalpa

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக்கி அவர் கடத்தப்பட்டதை நியாயப்படுத்த இராணுவத்தினர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரகீத் எக்னலிகொட இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கசிந்துகொண்டிருக்கும் நிலையில் புலனாய்வுப் பிரிவு ஊடகவியலாளர்கள் சிலரையும் இணைத்துக்கொண்டு வேலைத்திட்டம் ஒன்றை தொடங்கியது. பிரகீத் விடுதலைப் புலி என்று மக்கள் மயப்படுத்துவதான் அதன் பிரதான நோக்கமாக இருந்தது. அதன் மூலம், “அவனைத் தூக்கத்தான் வேண்டும், அவனுக்கு அப்படித்தான் நடக்கவேண்டும்” என்ற வார்த்தைகளை மக்களின் வாயால் கேட்பதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது.

புலனாய்வுப் பிரிவினரின் வேலைத்திட்டத்தை சரிவர அமுல்படுத்த ஊடகவியலாளர்கள் சிலர் அதிக சிரத்தை கொண்டு செயற்பட ஆரம்பித்தனர். சில பத்திரிகைகள் பிரகீத்தை விடுதலைப் புலியாக்கும் சதியில் முன்னணி வகித்தன. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஒப்பந்தக் கொலைகளை நியாயப்படுத்திய போதிலும் தேர்தலின் போது தோல்வியடைந்தவர்கள் – நல்லாட்சி அரசாங்கத்தினூடாக வாய்ப்பைப் பெற்று அமைச்சர்களாகியவர்கள் – இந்த சதி நடவடிக்கைக்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கினர்.

பிரகீத் ஊடக சந்திப்புக்களில் கலந்துகொண்டிருக்கவில்லை, அதனால், அவரை ஊடகவியலாளர் என ஏற்றுக்கொள்ள முடியாது என சில ஊடகவியலாளர்கள் கூறினார்கள். ஆனால், ஆசிரியர் சங்கத்தினால் நடத்தப்படும் விருது வழங்கும் விழாவில் எழுதத் தெரியாத, எழுதாத ஊடகவியலாளர்களுக்கும் விருது வழங்கப்படுவதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

10 அரசாங்க நிறுவனங்களின் தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் பிரகீத் எக்னலிகொட விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புபட்டதாகவோ அல்லது ஆதரவு வழங்கியதாகவோ எவ்வித சாட்சியங்களும் கிடைக்கவில்லை என்றும், அவருக்கு எதிராக எந்தவொரு நிறுவனமும் வழக்குத்தாக்கல் செய்திருக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த 23ஆம் திகதி ஹோமாகம நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் மேலதிக நீதவான் சரோஜா வணிகசேகர முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அன்றைய தினம், இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 8 பேரும் எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

பிரகீத் தொடர்பாக சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிடுவதில் இருந்து தள்ளியிருந்தன. பிரகீத் விடுதலைப் புலி அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று குற்றத்தடுப்புப் பிரிவினரின் விசாரணை மூலம் உறுதியானது இந்த ஊடகங்களுக்கு பலத்த அடியாக அமைந்தது.

பிரகீத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதுடன் தொடர்புடைய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களை வீரர்களாக்கி (ரணவிருவோ), அவர்களை விடுதலை செய்வதற்காக இனவாதிகளும் போரை விற்று வாழ்ந்தவர்களும் மேற்கொண்டு வந்த முன்னெடுப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அறிவிப்பின் மூலம் தோல்வியில் முடிந்தது. பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார உட்பட காவி உடை தரித்த பிக்குகள் ஹோமாகம நீதிமன்றின் முன்னால் மகாவீரர்களாக நடித்தனர். காவியுடை தரித்தவர்களின் நடிப்பும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அறிவிப்போடு முடிவுக்கு வந்தது.

பிரகீத் எக்னலிகொட விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து பணம் பெற்றதாகவும், தற்கொலை அங்கிகளை மறைத்து வைக்க உதவியதாகவும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பாரதூரமான குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தியிருந்தது. அதேநேரம், கிரிதல இராணுவ முகாமில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்களை மறைப்பதற்கும் அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.

போரை காரணமாகக் கொண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள், காணாலாக்கப்படுதல்கள், கொலைகள் மற்றும் கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கசிந்து கொண்டிருக்கின்றன. பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய புலனாய்வுப் பிரிவினரை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சிறைச்சாலைக்குச் செல்வதன் மூலம், இந்தச் சம்பவத்தை மறைப்பதற்கு அவர் கொண்டிருக்கும் அக்கறை தெளிவாகிறது. அதற்கு இராணுவ வீரர் (ரணவிருவோ) என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்.

அத்துடன், இந்தச் சம்பவத்தை மறைக்க ஒரு சில நீதவான்களும், நீதிபதிகளும் கூட தொடர்புபட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்து  கொண்டிருக்கின்றன. நீதியை உறுதிப்படுத்துவதற்காக கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் நீதி தேவதை மீண்டும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறார் என்பதே இதன் மூலம் தெளிவாகிறது.

அதனால், மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு சரியான பாதையில் செல்ல வேண்டிய கடமையிருக்கிறது. போரை காரணமாகக் கொண்டு கூலிக்காக கொலை செய்தவர்களை விடுதலை செய்ய இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வருபவர்களை விரட்டியடிக்க வேண்டும். மக்களால் நிராகரிக்கப்பட்ட போதிலும், அவர்களது வாக்குரிமையை கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளாமல் நல்லாட்சியில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டவர்களே அதில் முன்னணியில் இருக்கிறார்கள்.

ஜனநாயகம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்காக தங்களது வாக்குகளைப் பயன்படுத்துமாறு மக்களை வற்புறுத்திய பிரகீத் எக்னலிகொட, லசந்த விக்கிரமதுங்க போன்றவர்கள் நாளையும் இதே இலக்குக்காக கைக்கோர்ப்பார்கள் என்பதை நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளவது சிறந்தது.

Shalika

ප‍්‍රගීත් එක්නැලිගොඩ එල්ටීටීඊකාරයෙක් නොවේ, හමුදා මිනීමරුවන් ගේ රෙදි ගළවන්නෙකි  என்ற தலைப்பில் விகல்ப தளத்துக்காக சாலிக்க விமலசேன எழுதிய கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.