படம் | Flickr Site of U.S. Department of State

முதல் முதலாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மென்சக்தி (Soft Power) என்னும் அரசியல் எண்ணக்கருவைப் பயன்படுத்தியிருந்தார். தமிழர்கள் தங்களின் மென்சக்தி ஆற்றலை பிரயோகிப்பதன் மூலமாகத்தான் எதிர்காலத்தை கையாள முடியும் என்பதே சுமந்திரனின் பேச்சின் சாரமாக இருந்தது. இதன் பின்னர் ஒரு சில அரசியல் ஆய்வாளர்களும் இந்த எண்ணக்கருவை தங்களின் புரிதலில் தொட்டுச் சென்றிருந்தனர். ஒரு சில கட்டுரைகளும் இது தொடர்பில் வெளியாகியிருக்கின்றன. இவ்வாறு தொட்டுக்காட்டப்பட்ட, வெளியாகியிருக்கின்ற எழுத்துக்களை உற்றுநோக்கிய போது ஒரு கேள்வி எழுந்தது – சர்வதேச அரசியல் விவாதங்களில் எடுத்தாளப்படும் மென்சக்தி என்னும் சொற்பதம் நமது அரசியல் சூழலுக்கு ஏற்புடைய ஒன்றுதானா? ஏற்புடையது என்றால் எப்படி?

முதலில் மென்சக்தியென்னும் அரசியல் எண்ணக்கரு தொடர்பில் புரிந்துகொள்ள முயற்சிப்போம். மென்சக்தி என்னும் எண்ணக்கரு ஒரு அமெரிக்க சிந்தனையாகும். அமெரிக்க – சோவியத் பனிப்போர் உச்சத்திலிருந்த காலமான 1980களின் இறுதிப் பகுதியில் அமெரிக்க பேராசிரியரான ஜோசப் நெய்,  (JOSEPH S. NYE JR) என்வரால் இவ்வெண்ணக்கரு உலக அரசியல் அரங்கிற்கு அறிமுகமானது. இந்த சிந்தனையின் இலக்கு மிகவும் தெளிவானது. அதாவது, உலக அரங்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு, அதன் வன்சக்தியாற்றல் (hard power/ இராணுவ ஆற்றல்) மட்டும் போதாது. கூடவே மென்சக்தி ஆற்றலையும் கையாளுவதன் ஊடாகவே வெற்றியை முழுமையாக்க முடியும்.

ஜோசப் நெய்யின் கருத்தில் அதிகாரம் என்பது எங்களுக்குத் தேவையான ஒன்றை அடையும் நோக்கில் மற்றவர்கள் மீது நாம் செல்வாக்குச் செலுத்துவதற்கான ஆற்றலாகும். அதனை நாம் மூன்று வழிகளில் மேற்கொள்ள முடியும். ஒன்று, அச்சுறுத்தல் (threats or sticks) – இரண்டு, கொடுப்பனவு அல்லது லஞ்சம் (payments or bribes) – மூன்றாவது, மற்றவர்களைக் கவர்தல் அல்லது இணக்கப்பாட்டை (Attraction or co-option) ஏற்படுத்துதல். இந்த மூன்றாவதுதான் நெய்யின் பார்வையில் மென்சக்தி. அதற்காக வன்சக்திக்கு முக்கியத்துவம் அற்றதென்று நெய் வாதிடவில்லை. வன்சக்தியை பிரயோகிக்க வேண்டிய தருணத்தில் பிரயோகிக்க வேண்டும் ஆனால், அதனை மட்டும் கொண்டு முழுமையான வெற்றியைப் பெறமுடியாது என்பதே அவரது வாதமாகும்.

2004இல் அவர் எழுதிய மென்சக்தி (Soft Power: means to sources in world politics) என்னும் நூலின் ஆரம்பப் பகுதியிலேயே, நான்கு நூற்றாண்டுகளுக்கும் முன்னர் இத்தாலிய இராஜதந்திரியும் இராஜதந்திர அரசியலின் பிதாமகர்களில் ஒருவராகவும் கருதப்படும் மாக்கியவல்லி, அரசர்களுக்கு வழங்கியிருக்கும் ஆலோசனையை நினைவுபடுத்துகின்றார். அரசர்கள் நேசிப்பதைவிடவும் அச்சமூட்டுவதே மிகவும் முக்கியமானது என்கிறார் மாக்கியவல்லி. இதனை மேற்கோள் காட்டும் ஜோசப் நெய் இன்றைய உலகில் இரண்டும் தேவை என்கிறார். இதிலிருந்து வன்சக்தியில்லாமல் மென்சக்தி என்பது அர்த்தபுஸ்டியுள்ள ஒன்றல்ல என்பதே நெய்யின் வாதம். 2009இல் அவர் எழுதிய வெல்வெட் மேலாதிக்கம் (The Velvet Hegemony) என்னும் கட்டுரையிலும் மேற்படி தனது பார்வையை மீளவும் வலியுறுத்தியிருக்கின்றார். (Niccolò Machiavelli advised princes in Italy that it was more important to be feared than to be loved. In today’s world, it is best to be both – http://foreignpolicy.com/2009/11/02/the-velvet-hegemon)

2006இல் எழுதியிருக்கும் பிறிதொரு (Think again soft power) கட்டுரையிலும் அமெரிக்கா அதனது மென்சக்தி ஆற்றலை பெருக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் வாதிட்டிருக்கின்றார். மென்சக்தி அதிகாரத்தை பகுதியளவில் ஒரு கலாசார அதிகாரம் (Soft Power Is Cultural Power
Partly) என்று வரையறுக்கும் நெய், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் வன்சக்தியே பிரதானமானது என்றே வாதிடுகின்றார் ஆனால், அதன் பிரயோகத்தின் போதே மென்சக்தி அதிகாரத்தையும் பிரயோகிக்க வேண்டும் என்பதே அவரது வாதமாக இருக்கிறது. உதாரணமாக, பின்லேடன் முகமது அட்டா போன்றவர்களை கையாளுவதற்கு வன்சக்தியே சரியானது. ஆனால், பின்லேடன் கவர்ச்சியால் அவரை நோக்கி செல்லுபர்களை எங்கள் பக்கம் நோக்கி திருப்புவதற்கு அல்லது அங்குள்ள மிதவாதிகளை நோக்கி திருப்புவதற்கு மென்சக்தி ஆற்றலே அவசியம் என்கிறார். அதாவது, பின்லேடன் போன்றவர்களை எதிர்கொள்ளுவதற்கு வன்சக்தி ஆற்றலே சரியானது. ஆனால், பின்லேடன் தனது பிரச்சாரங்களுக்காக இலக்கு வைக்கும் மதரசாக்களை எதிர்கொள்ளுவதற்கு மென்சக்தியாற்றலே பிரயோகிப்பதே அவசியம்.

மேற்படி வாதங்களை தொகுத்து நோக்கும் போது ஒரு விடயம் தெளிவாகும். ஜோசப் நெய்யின் முழுமையான புரிதலும் அமெரிக்க நலன்களை வெறுமனே வன்சக்தி கொண்டு மட்டும் அடைய முடியாது. மாறாக, மென்சக்தி உபாயங்களையும் கைக்கொள்ளும் போதுதான் அமெரிக்கா அதன் இலக்கில் முழுமையான வெற்றியைப் பெறமுடியும். ஜோசப் நெய்யின் மென்சக்தி வாதமானது அமெரிக்கா மற்றும் பலம்பெருந்திய நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான விவாதங்களிலேயே இதுவரை எடுத்தாளப்பட்டு வந்திருக்கிறது. இப்போதும் அப்படியே விவாதிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பூகோள அரசியல் அவதானிகள் மத்தியிலேயே இது அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் அரசியல் சூழலில் இவ்வாறானதொரு வாதத்தின் பொருத்தப்பாடு என்னவாக இருக்க முடியும் அல்லது இது பொருத்தமானதுதானா அல்லது இது தொடர்பில் சரியானதொரு புரிதலின்றி, மென்சக்தி என்னும் சொற்பிரயோகம் எம்மவர்கள் சிலரால் எடுத்தாளப்படுகிறதா?

மென்சக்தி என்னும் எண்ணக்கருவை தமிழ் அரசியல் சூழலில் விவாதிக்க முற்படும் போது முதலிலேயே ஒரு விடயத்தை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதாவது, பலம்பொருந்திய அரசுகளின் விவாதப்பொருளாக அல்லது அவ்வாறான அரசுகளின் நலன்களை முன்னிறுத்தி சிந்திக்கும் அறிவுஜீவிகள் மத்தியில் விவாதிக்கப்படும் ஒரு விடயத்தை முற்றிலும் மாறுபட்டதொரு, மிகவும் சிறிய இனமொன்றின் அரசியலுக்கு பொருத்தி நோக்க விழைகின்றோம். மேற்படி புரிதல் இல்லாவிடத்து, இது எவருக்குமே விளங்காத ஒரு விடயமாகவே மாறிவிடும். தமிழ் மென்சக்தியைப் பலப்படுத்த வேண்டும் என்று எழுதப்பட்ட கட்டுரையை வாசித்துவிட்டு ஒரு சிரேஷ்ட தமிழ் தலைவர் அது என்னது? ஒண்டும் விளங்கயில்ல – என்று சொன்னதாக எனது நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். அந்தத் தலைவர் சொன்னதில் எந்தவித தவறும் இல்லை. உண்மையான நிலைமையும் அதுதான். உண்மையில் தமிழ்ச் சூழலில் மென்சக்தி தொடர்பான விவாதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ நிலையில் மிகவும் வலுவாக இருந்த காலத்தில் ஆரம்பித்திருக்க வேண்டும். ஜோசப் நெய் முன்னிறுத்தும் மென்சக்தி தொடர்பான விவாதத்தை வன்சக்தி ஒன்றில்லாமல் செய்ய முடியாது. ஆனால், அப்போது இது தொடர்பில் எவரும் பேசியிருக்கவில்லை.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமான சமாதான முன்னெடுப்பின் போது ஒருபுறம் விடுதலைப் புலிகளும் பிறிதொரு புறம் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டு, நெறிப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் இயங்குநிலையில் இருந்திருந்தது. உண்மையில் விடுதலைப் புலிகள் ‘வன்சக்தி’ என்னும் நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, ஒரு ‘மென்சக்தி’ என்னும் நிலையிலும் இயங்கியிருந்திருக்க முடியும். ஆனால், அப்படியான முயற்சிகள் எதுவும் நிகழவில்லை. ஆனாலும், விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அதனை செய்யவில்லை என்றும் கூறிவிடமுடியாது. அன்றைய காலத்தில் தெற்கிலுள்ள சில சிங்கள கலைஞர்களை கவரும் முயற்சிகளில் விடுதலைப் புலிகள் வெற்றிபெற்றிருந்தனர். இதன் விளைவாக சில சிங்கள திரைப்பட இயக்குனர்கள் விடுதலைப் புலிகளின் திரைப்படப் பிரிவான நிதர்சனத்துடன் இணைந்து செயற்படக்கூடியவாறான புறநிலைமையொன்றும் உருப்பெற்றிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட மானுடத்தின் கூடல் (கொழும்பில் இடம்பெற்ற சிங்கள – தமிழ் கலைக் கூடல்) நிகழ்வுகள் ஜோசப் நெய்யின் புரிதலில், ஒரு மென்சக்தி அனுகுமுறையென்றால் அதனை மறுத்துரைப்பது கடினம்.

ஆனால், 2009இற்கு பின்னர் தமிழ் மென்சக்தியை பலப்படுத்துதல் என்பது ஒருபுறம் கூட்டமைப்பை ஒரு வலுவான பேரம் பேசும் சக்தியாக பலப்படுத்துவதுதான். ஆனால், அது நிகழவில்லை. ஆனால், நாங்கள் அடைய விரும்பும் ஒன்றிற்காக மற்றவர்களை கவர்வதையும், அவ்வாறு கவர்வதற்காக எங்கள் பக்கத்தில் நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் திரட்சிதான் மென்சக்தியென்று வரையறுக்க முடியுமானால், சம்பந்தன் மற்றும் சுமந்திரனே அதிகம் மென்சக்தியை பிரயோகித்தவர்களாக கருதப்படுவர். சம்பந்தன் சிங்கள மக்களை கவர்வதற்காக சிங்கக் கொடியை உயர்த்தி நாங்கள் உங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று நிரூபிக்க முற்பட்டார். 40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டுவந்த சுதந்திர தினங்களில் பங்குகொண்டு அவர்களின் ஆதரவைப் பெற முயன்றார். தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று நாடாளுமன்றத்தில் உரைத்து, சிங்கள தேசியவாதிகளின் நல்லெண்ணத்தை வெற்றிகொள்ள முயற்சித்தார். ஒருவேளை விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் இவைகள் இடம்பெற்றிருந்தால் இவற்றை தயக்கமின்றி தமிழ் மென்சக்தி உபாயமென்று உரைத்திருக்கலாம். ஆனால், தமிழர்கள் அவர்களின் பேரம் பேசும் ஆற்றலை முற்றிலுமாக இழந்துநிற்கின்ற சூழலில் தமிழ் மென்சக்தியை பலப்படுத்துதல் என்பதன் பொருள் என்ன? எனவே, ஒரு மேற்குலக சிந்தனையை அதிலும் அமெரிக்க வல்லரசின் நலன்களை முன்னிறுத்தும் சிந்தனையொன்றை மிகவும் பலவீனமானதொரு அரசியல் சூழலுக்கு பொருத்தி சிந்திக்க முற்படும்பொழுது அது தொடர்பில் ஆழமான புரிதலும் உரையாடல்களும் அவசியம்.

யதீந்திரா எழுதிய இக்கட்டுரை முதலில் தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.