படம் | @garikaalan
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டு மாணவர்களின் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு கருத்தாடல்களும் பதிவுகளும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இடம்பெற்று வருகின்றன. பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்செயல் கண்டிக்கப்பட வேண்டிய அதேவேளை, பிரச்சினையினை நாம் சரியான முறையில் விளங்கிக்கொள்வது இதுபோன்ற பிரச்சினைகள் மேலும் இடம்பெறாது தடுப்பதற்கு வழிசெய்யும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பிரச்சினை ஒரு மட்டத்திலே நாட்டில் நிலவும் தேசிய இனப் பிரச்சினையுடனும், சமூகங்கள் என்ற ரீதியிலும், பல சமூகங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் என்ற ரீதியிலும் எமது உரித்து, எமது அடையாளங்கள், எமக்கிடையில் ஏற்படும் தொடர்புகள், விரிசல்கள் போன்றவற்றின் வரலாற்றுடனும் தொடர்புபட்டதாகவே இருக்கிறது. எமது சமூகங்களினை ஆக்கிரமித்து நிற்கும் தேசியவாத சிந்தனைகளிற்கும் பல்கலைக்கழகத்திலே நடந்த சம்பவங்களுக்கும் நிறையத் தொடர்புகளும் ஒற்றுமைகளும் இருக்கின்றன. எமது நிலம் – எமது தேசம் – எமது அரசு என்ற சட்டகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒரு அரசியல் வடிவமாகவே தேசியவாதம் பெரும்பாலான தளங்களிலே செயற்படுகிறது. ஒரு பிராந்தியத்தின் கடந்த காலம் பற்றிய பெரும்பாலும் திரிபுபடுத்தப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறுகளின் அடிப்படையிலேயே இந்த அரசியல் கட்டமைக்கப்படுகிறது. மனிதர்களினதும், அவர்கள் சார்ந்த கலாசாரங்களினதும் அசைவு தேசியவாதங்களுக்குப் பிரச்சினையாகவே உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருக்கிறது. மனிதர்களும் அவர்களின் கலாசாரங்களும் அசைவுக்குட்பட்டுத் தமக்கென வரையறுக்கப்பட்ட எல்லைகளினைத் தாண்டும் போது நிலம் – தேசம் – அரசு என்ற சட்டகத்தில் ஒரு பிளவு உருவாகுகிறது. இந்தப் பிளவினைத் தடுக்கத் தேசியவாதம் புறமொதுக்குதலை மேற்கொள்ளும். இதன்போது சில அடையாளங்கள் அரசின் விளிம்புகளை நோக்கித் தள்ளப்படும். இதனை ஒத்த ஒரு பிளவும், புறமொதுக்கலுமே அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டது. தேசியப் பிரச்சினையும், அரசினால் மேற்கொள்ளப்படும் இனரீதியான பாகுபடுகளும், தமிழ்த் தேசியவாதமும் கூர்மைப்பட்டுப் போயிருக்கும் ஒரு சூழலிலே பல்கலைக்கழகத்தின் அமைவிடம் காரணமாகவும், கிட்டத்தட்ட 20 வருடங்கள் அங்கு ஒரே ஒரு இனத்தவர்கள் (தமிழர்கள்) மாத்திரம் கல்வி பயின்றதன் காரணமாகவும், அதனை ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகமாகப் பார்க்கும் ஆதிக்க மனப்பான்மையினை நாம் எம்மத்தியிலே இயல்பாக்கிக் கொண்டிருக்கிறோம். இதுவே சிங்கள மாணவர்கள் தமது அடையாளம் சார்ந்த கண்டிய நடனத்தினை வரவேற்பு விழா ஊர்வலத்தில் உள்ளடக்கக் கோரிய போது அதனைத் தமிழ் மாணவர்கள் நிரகரித்தமைக்குரிய பின்னணியாக அமைகிறது. இந்த மனநிலையினைப் பல்கலைக்கழகங்களைத் தேச அரசுகளாகப் (nation-states) பார்க்கும் ஒரு மனநிலை எனவும் கூட நாம் சொல்லலாம்.
இன்றைய தமிழ்ச் சூழலில் கொன்ஸ்பிரஸி தியேறிகள் (conspiracy theories) மிகவும் மலிந்து போயிருக்கின்றன. ஒருவர் தன்னுடைய கருத்தைச் சொல்லும்போது அவர் எந்த உள்நோக்கத்துடன் ஒரு கருத்தினைச் சொல்லுகிறார், அவர் யாருடைய ஆளாக இருக்க முடியும், எந்த அதிகார வர்க்கத்தின் உளவாளி போன்ற விடயங்கள் பற்றிய எமது ஊகங்கள், கட்டுக்கதைகளின் அடிப்படையிலேயே நாம் அவரின் கருத்துக்களை அணுகுகிறோம். கருத்துக்களை அவற்றின் சொந்தப் பெறுமதியிலே நோக்கும் தன்மை எமது சமூகத்திலே அரிதாகிச் செல்கிறது. சிங்கள மாணவர்கள் தமது கண்டி நடனத்தையும் ஊர்வலத்திலே சேர்க்கச் சொன்னமை பற்றிக் கலந்துரையாடும் போது நாம் அவர்கள் சிங்கள மேலாதிக்க அரசின் உளவாளிகளாக இருப்பார்களா அல்லது இராணுவத்தினரால் தூண்டப்பட்டிருப்பார்களா அல்லது மஹிந்த ராஜபக்ஷவுடன் இயங்கும் கூட்டு எதிரணியின் ஆதரவாளர்களாக இருப்பார்களா என்பது பற்றி நாம் கொண்டுள்ள எண்ணங்களின் அடிப்படையிலேயே எமது பதில்கள் அமைகின்றன. இது அவர்களது கோரிக்கை நியாயமானதா என்பதனை நாம் சரியான முறையிலே பரிசீலிப்பதில் இருந்து கூட எம்மை விலத்தியிருக்கிறது என்பதே உண்மை. உதாரணத்துக்குச் சொன்னால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினைப் பல்கலைக்கழகத்தினுள் செய்யக்கூடாது என சிங்கள மாணவர்கள் சொல்லுவார்கள். ஆயின், அதனை நாம் ஏற்கத் தேவையில்லை. ஆனால், கண்டிய நடனத்தினை ஊர்வலத்திலே சேருங்கள் எனக் கோரும் போது அதனை நாம் நிராகரிப்பது என்பது எம்மத்தியில் கலாசார ஒருமைத்துவச் சிந்தனைகள் வேரூன்றி இருப்பதனையே காட்டுகிறது. கொன்ஸ்பிரஸி தியேரிகளின் அடிப்படையில் நாம் எமது தீர்மானங்களையும் பதில்களையும் வழங்கப் போகிறோமாயின், இலங்கையில் இனப் பிரச்சினை என்று ஒன்று இல்லை, இந்தியாதான் தமிழர்களை இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுடன் போராடுங்கள் என்று தூண்டிவிடுகிறது என்று சொல்லும் தென்னிலங்கையில் உள்ள சிங்கள பௌத்தத் தேசியவாதத் தரப்புக்களுக்கும் எமக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்றே கருத வேண்டி இருக்கிறது.
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினை, கொடிய யுத்தத்தினால் ஏற்பட்ட இனத்தூரப்படுத்தல்கள் போன்றவற்றின் காரணமாக இலங்கையில் பொதுவெளிகளிலே கலாசார ரீதியிலான ஆற்றுகைகளும், வெளிப்படுத்தல்களும் மிகவும் கவனமான முறையிலே கையாளப்பட வேண்டிய விடயங்களாக மாறியுள்ளன. பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் பயிலும் ஒரு அரச பல்கலைக்கழகத்திலே கலாசாரம் பற்றி எவ்வாறான கொள்கைளும் நடைமுறைகளும் பின்பற்றப்படல் வேண்டும் என்பது பற்றி ஆசிரியர்களும் மாணவர்களும் நிருவாகிகளும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தைக் கடந்த வாரச் சம்பவம் எமக்குச் சொல்லிச் சென்றுள்ளது. ஒரு குறித்த இனக்குழுவினைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு பல்கலைக்கழகத்திலே பயில்கிறார்கள் எனின் அவர்கள் எந்தப் பிராந்தியத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்றிருந்தாலும், பல்கலைக்கழகத்தினைத் தமது பல்கலைக்கழகம் என நினைத்து அங்கு தமது கல்விச் செயற்பாடுகளிலும், ஆய்வுகளிலும் ஈடுபடக்கூடிய சூழல் பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டும். இந்த விடயம் குறித்து சிந்திக்காது இராணுவம்தான் சிங்கள மாணவர்களைத் தூண்டுகிறது, அரசுதான் சிங்கள மாணவர்களைத் தூண்டுகிறது என்று கருத்துச் சொல்வது எமக்கு அடியில் புதைந்து போயிருக்கும் மதவாத, இனவாதச் சிந்தனைகளையே வெளிக்கொண்டு வருகிறது. இந்த வகையிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் பெரும்பான்மையினராக இருக்கும் பிரதேசத்திலே இருக்கின்றது, அல்லது பெரும்பான்மையாகத் தமிழ் மாணவர்களைக் கொண்டுள்ளது என்ற வாதங்களுக்கு அப்பால் அங்கு கல்வி பயிலும் எந்த ஒரு மாணவக் குழுவினரையும் கலாசார அடிப்படையில் புறமொதுக்காத வகையிலே அது செயற்படல் வேண்டும்.
ஒரு பல்கலைக்கழகமும் அங்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் மாணவர்களும் அப்பல்கலைக்கழகம் அமைந்திருக்கின்ற பிரதேசத்தினதும் அங்கு வாழும் மக்களினதும் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றிக் கரிசனை உடையவர்களாக இருக்க வேண்டும் என நாம் விருப்பப்படுவதிலே தவறில்லை. இந்த வகையிலே இலங்கையின் தேசிய இன முரண்பாடு மற்றும் அதனால் வட பகுதி வாழ் மக்கள் படும் கஷ்டங்கள் பற்றி மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலும் வட பகுதியிலும் நிகழும் சாதி வேற்றுமைப்பாடுகள், ஊழியச் சுரண்டல்கள், பொருளாதாரப் பிரச்சினைகள், வட புல முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், வட இலங்கையின் சூழற் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் யாழ்ப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளிலும் கலந்துரையாடல்களிலும் இடம்பெற்றால், அல்லது இந்த விடயங்கள் தொடர்பான செயற்பாட்டியக்கங்களிலே யாழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் பங்குபற்றினால் அவை வரவேற்கத்தக்க விடயங்கள். இந்த விடயங்களிலே வட பகுதித் தமிழ் மாணவர்கள் மட்டுமல்லாது நாட்டின் வேறு இடங்களில் இருந்து வரும் தமிழர் இல்லாத இனத்தவர்களும் தமது விருப்பத்துடனும் அக்கறையுடனும் பங்குபற்றுவதற்கான சூழலினை அமைத்துக் கொடுக்கக் கூடிய நிலையமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இருக்குமாயின் அது இன்னும் சிறப்பாக இருக்கும். 1970களின் பிற்பகுதியில் யாழ்ப் பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறை விரிவுரையாளராக இருந்த தர்மசேன பத்திராஜாவின் இயக்கத்தில் 1977இல் வெளிவந்த யாழ்ப்பாணச் சமூகத்திலே காணப்படும் சாதி வேற்றுமைப்பாடுகளையும், சீதனப் பிரச்சினைகளையும் பற்றிப் பேசும் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படமான பொன்மணியினை நாம் ஒரு உதாரணமாக இங்கு பார்க்கலாம். ஒரு பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆய்வாளர்கள், அறிவுஜீவிகளுக்கும், அப்பல்கலைக்கழகத்தினைச் சூழவுள்ள சமூகத்துக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு தர்மசேனப் பத்திராஜாவும் அவர் இயக்கிய பொன்மணி திரைப்படமும் எடுத்துக்காட்டு. இதுபோன்ற உதாரணங்களை முன்னிறுத்தி பல்கலைக்கழகத்துக்கும் அது அமைந்துள்ள பிரதேசத்துக்கும் இடையிலான உறவுகள் பற்றி சிந்திக்காது, பல்கலைக்கழகம் அது அமைந்துள்ள பிரதேசத்தினுடைய கலை கலாசார அம்சங்களை மாத்திரம் தான் முதன்மைப்படுத்த வேண்டும், ஏனையவர்களும் வெளியாரும் விரும்பினால் வந்து படித்து விட்டு மட்டும் போகலாம் என வாதிடுவது மிகவும் பிற்போக்கானது. இந்த வாதமானது, வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களுக்கு மாத்திரமே சுயநிர்ணய உரிமை/ ஆளும் உரிமை இருக்கிறது, ஏனையவர்களுக்கு வாழும் உரிமை மாத்திரமே இருக்கிறது என்ற வரட்டு வாதத்தினை ஒத்தது.
நாட்டின் இனப் பிரச்சினை தொடர்பான உரையாடல்கள் இனப் பன்மைத்துவத்தினைப் பற்றிச் சிந்திக்க எம்மைத் தூண்டி இருப்பினும், தேசிய இனப் பிரச்சினைக்கு நாம் முன்வைக்கும் தீர்வுகளிற்கு ஊடாக வெளிப்படும் நிலம் பற்றிய சிந்தனைகள் எம்மை ஒரு வரட்டுப் பன்மைத்துவத்தின் பிடியில் வைத்திருக்கச் செய்திருக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனம் இடம்பெற வேண்டுமா இல்லையா என்பதற்குச் சிலரால் வழங்கப்பட்ட விளக்கங்களிலே இந்த வரட்டுப் பன்மைத்துவம் வெளிப்படுகிறது. இன முரண்பாடுகளுக்குத் தற்போது உள்ள வரலாற்றுத் தருணத்தின் நிலைமைகளுக்கு இணங்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குக் கூடியளவு தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று (வடக்கும் கிழக்கும் சேர்ந்திருக்க வேண்டுமா, அல்லது பிரிந்திருக்க வேண்டுமா, கிழக்கில் முஸ்லிம்களுக்கெனத் தனியான நிலத் தொடர்ச்சியற்ற அலகு தேவையா என்ற விடயங்கள் தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு வருவதனை நாம் கருத்தில் எடுக்க வேண்டும்). ஆனால், அந்தத் தீர்வின் அர்த்தம் வடக்கு மாகாணமோ அல்லது இணைந்த வட கிழக்கு மாகாணமோ தமிழர்களுக்கு உரியது என்றும், நாட்டின் ஏனைய மாகாணங்கள் சிங்களவருக்கு உரியது என்பது அல்ல. தமிழ்த் தேசியவாதிகளில் பெரும்பாலானோரின் சிந்தனையில் இந்த மாதிரியான ஒரு வரட்டுப் பன்மைத்துவமே காணப்படுகிறது. தெற்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் கண்டிய நடனம் மட்டுமே வரவேற்பு நிகழ்வுகளில் இடம்பெறுவதனைத் தாம் ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை, எனவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே நாதஸ்வரமும் தவிலும் மாத்திரம் வரவேற்பு ஊர்வலங்களில் இசைக்கப்படுவதனை அங்கு கற்கும் சிங்கள மாணவர்கள் ஒரு பிரச்சினையாக எடுக்கக் கூடாது எனத் தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களிலே கல்வி கற்ற சில வட புலத்தினைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். இவர்களினது இந்தக் கருத்துக்கள் ஒரு வரண்ட பன்மைத்துவத்தினதும், ஒரு குறுகிய இன ரீதியிலான தேசியவாதச் சிந்தனையினதும் பிடியிலே இவர்கள் இருக்கிறார்கள் என்பதனையே காட்டுகிறது.
கடந்த 16ஆம் திகதி இடம்பெறவிருந்த நிகழ்விலே இரண்டு மாணவர் சமூக மாணவர்களுக்கும் இடையில் நெருடல்கள் ஏற்படாது தவிர்க்கும் வகையிலே நாதஸ்வர – தவில் நிகழ்வு, கண்டிய நடன நிகழ்வு இரண்டையுமே வைக்க வேண்டாம் என விஞ்ஞான பீடத்தினைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் பரிந்துரைத்ததாகவும், ஆனால், இறுதியில் அந்தப் பரிந்துரையினை மாணவர்கள் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்தப் பரிந்துரை பிழையானது எனவும், முன்னர் எப்போதும் நடைபெறாத ஒரு நிகழ்வு (கண்டிய நடனம்) இப்போது நடைபெறுவது இயலாது என்ற நிலையில், பாரம்பரியமாகப் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு நிகழ்வினை (நாதஸ்வரம் – தவில் இசை) நிறுத்துவது என்ற முடிவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (தமிழ்ப்) பாரம்பரியத்தினை அழிக்கும் ஒரு முயற்சி எனவும் ஒரு சிலரால் கூறப்பட்டது. இந்தக் கருத்திலே இருக்கின்ற பிரச்சினைகள் பற்றியும் இங்கு சிந்திப்பது பொருத்தமானது. விஞ்ஞான பீட வரவேற்பு நிகழ்வுகளிலே கடந்த 3 – 4 வருடங்களாகவே நாதஸ்வரம் -தவிலுடன் கூடிய வரவேற்பு வைபவங்கள் இடம்பெற்று வருகின்றன. எனவே, இந்த நிகழ்வினை நீண்ட பாரம்பரியம் கொண்ட நிகழ்வாகக் கருத முடியுமா என்பது ஒரு கேள்வி. அவ்வாறே கருதினாலும் கூடப், பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் வாழும் இலங்கை நாட்டின் அரசியல் அமைப்பில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருக்கும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் சரத்தினை நாட்டில் மத சமத்துவத்தினை ஏற்படுத்தும் ஒரு படியாக நீக்கும்படி கேட்க முடியுமாயின், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே பல்வேறு மாணவர் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையினையும், சமத்துவ உணர்வினையும் தோற்றுவிக்கும் வகையிலே 3 – 4 வருடங்களாக இடம்பெறும் நாதஸ்வர – தவில் இசை வரவேற்புப் பகுதியினை நிறுத்தக் கோருவதில் என்ன தவறு இருக்கிறது? மதச்சார்பற்ற அரசு ஒன்று உருவாக வேண்டும் எனக் கோரும் எம்மத்தியில், சமூகங்களுக்கு இடையில் சுமுகமான உறவுகள் ஏற்பட வேண்டுமாயின் சில சமயங்களில் நாம் அடையாளங்களை அரசில் இருந்து மாத்திரமின்றி பல்கலைக்கழகம் போன்ற பொது நிலையங்களில் இருந்தும் தூரப்படுத்துதல் (disidentification) அவசியம் என்ற புரிதல் இல்லாமல் இருக்கிறது.
ஏ. ஆர். ரஹ்மான் தமிழ்த் திரை இசைச் சூழலில் பல்வேறு மேலைத்தேய இசை வடிவங்களையும், இசைக் கருவிகளையும் அறிமுகப்படுத்தி இசையில் பல்வேறு பன்முகமான புரட்சிகளை மேற்கொண்டு வரும் இன்றைய யுகத்திலே நாதஸ்வரமும் தவிலும் தான் தமிழ்க் கலாசாரத்தினைப் பிரதிபலிக்கின்றன எனத் தமிழ் மாணவர்கள் சொல்வதும், கண்டிய நடனம் தான் சிங்களக் கலாசாரத்தினைப் பிரதிபலிக்கிறது என்று சிங்கள மாணவர்கள் சொல்வதும் ஒரு வகையில் வேடிக்கையானது. குறித்த கலை வடிவங்கள் இன ரீதியாக அரசியற் பெறுமானம் பெற்றுப் போயுள்ள இனமுரண்பாடுகள் நிறைந்த இன்றைய நிலையிலே அவை பொதுத்தள அரசியலிலே சமூகங்களுக்கு இடையிலே பிளவுகளை ஊக்குவிப்பதில் வகிக்கும் பங்கினை நாம் விமர்சிக்க வேண்டிய அதேவேளை, இனங்களுடன் இந்தக் கலை வடிவங்கள் எவ்வாறு ஒரு அடிப்படைவாத (foundationalist), எசன்ஸலிஸப் (essentialist) பார்வையில் தொடர்புபடுத்தப்படுகின்றன என்பதனையும் நாம் விளங்கி வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் கலையும் கலாசாரமும் அகரீதியாகப் பன்மையானவை என்பதனையும், கால ஓட்டத்துடன் மாறுதலுக்கு உள்ளாகக் கூடியவை என்பதனையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே அண்மையில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து இடம்பெறும் உரையாடல்களில் பல்கலைக்கழகத்தின் வரலாற்றினை தமிழ்த் தேசியவாதம் என்ற ஒற்றைச் சட்டகத்தின் ஊடாக மட்டும் விளக்கும் முயற்சிகளும் பலரால் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாறு ஏனைய இடங்களினது வரலாறுகள் போன்று மிகவும் சிக்கலானதாகவும், பல்வேறுபட்ட தரப்புக்களின் செயற்பாடுகளினால் நிரம்பியதாகவும் இருக்கிறது. பல்கலைக்கழகம் 1970களில் ஆரம்பிக்கப்பட்ட போது அது பல்லின, பன்மத சமூகங்களும் கல்வி பயிலும் ஒரு இடமாகவும், கைலாசபதி, இந்திரபாலா, ஏ.ஜே.கனகரட்ண, சீலன் கதிர்காமர், மு.நித்தியானந்தன், நிர்மலா ராஜசிங்கம், தயாபால திராணகம், ஹர்ஷ குணவர்தன, எம்.ஏ.நுஃமான், சித்ரலேகா மௌனகுரு போன்ற பல்வேறு இனங்களைச் சேர்ந்த இடதுசாரி முற்போக்குப் புலமையாளர்களும், செயற்பாட்டாளர்களும் கல்வி கற்பித்த ஒரு நிலையமாகவும் இருந்தது. அதேவேளை, பல்கலைக்கழகத்திலே தமிழ் மேலாதிக்க மனநிலையுடன் இயங்கிய மாணவர் குழுக்களும் அன்றைய காலத்தில் இருந்தனர் என்பதற்கு 1976இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு ஆதரவாகச் செயற்பட்ட மாணவர்களால் மலையகத் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் சான்றாக அமைகிறது. இது பற்றிய விபரங்களினை ராஜன் ஹூல் அண்மையில் எழுதிய விழுந்த பனை நூலிலே நாம் காணமுடியும். 1970களில் பல்கலைக்கழகத்திலே நிலவிய மற்றொரு சிறப்பம்சங்களிலே மற்றொன்று இலங்கையின் பல்கலைக்கழகங்களிலே இருந்த சிங்களத் துறைகளிலே யாழ்ப் பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறை மிகவும் முற்போக்கான துறையாகப் பலராலும் கருதப்பட்டதனைக் குறிப்பிட வேண்டும். பேராசிரியர் சுச்சரித்த கம்லத், தர்மசேன பத்திராஜா போன்றோர் இந்த சிங்களத் துறையிலே கல்வி கற்பித்தார்கள். இவர்கள் பிற்பட்ட காலங்களிலே தென்னிலங்கையில் வாழ்ந்த போதிலும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தனர். 1977இல் தென்னிலங்கையில் இன வன்முறை வெடித்த போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கல்விகற்றுக் கொண்டிருந்த சிங்கள மாணவர்களினைப் பல்கலைக்கழக ஆசிரியர்களும், தமிழ் மாணவர்களும், பல்கலைக்கழகச் சுற்றாடலில் வாழ்ந்த தமிழ் மக்களும் பாதுகாப்புக் கொடுத்துத் தெற்கிற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். ஆனால், தெற்கு சென்ற மாணவர்களில் ஒரு பிரிவினர் தாம் தமிழர்களால் தாக்கப்பட்டோம் என்ற பொய்யான தகவல்களைப் பரப்பினர். அன்றைய அரசாங்கமும் தென்னிலங்கையில் வெளியாகிய இனவாதப் பத்திரிகைகளும் இந்தப் பொய்ப் பரப்புரைக்கு முண்டு கொடுத்ததுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டமையினாலேயே 1977 கலவரம் வெடித்தது என்ற பொய்ச் செய்தியினையும் வெளியிட்டனர். அதனை அடுத்து சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டது.
1977 கலவரத்தினை அடுத்தும், தமிழர் மீதான ஒடுக்குமுறைகள் மேலும் அதிகரித்த சூழலிலே, பல தமிழ் இடதுசாரிகள் தமிழ்த் தேசியவாதத்துக்குச் சார்பான அரசியல் நிலைப்பாட்டினை எடுத்து ஆயுதப் போராட்டத்திற்குப் பங்களிப்புச் செய்தனர். பல்கலைக்கழகத்தின் தமிழ்த் தேசியவாத அரசியல் இவ்வாறு தீவிரமாக வளர ஆரம்பித்தது. ஆனாலும் 1980களின் நடுப்பகுதிகளில் ஆயுதக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறைகளினை அடுத்து ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும், தமிழ்த் தேசியவாதம் தொடர்பாகவும் விமர்சனங்களை முன்வைக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலரைக் கொண்ட இடமாக யாழ்ப் பல்கலைக்கழகம் அமைந்தது. 1988இல் தமிழ் மக்கள் அப்போதிருந்த சூழலிலே தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாண சபையினுடைய தேர்தலிலே பங்குபற்ற வேண்டியதனை வலியுறுத்திப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் கையொப்பமிட்டு ஓர் அறிக்கையினை வெளியிட்டனர். இதே காலப்பகுதியில், தென்னிலங்கையில் ஜே.வி.பியினரின் இரண்டாம் எழுச்சியுடன் ஏற்பட்ட வன்முறைகளினை அடுத்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் மனித உரிமைகளுக்கான ஆசிரியர் சங்கங்கள் தோற்றம் பெற்றன. அந்த வகையில் யாழ்ப் பல்கலைக்கழகத்திலும் மனித உரிமைகளுக்கான ஆசிரியர் சங்கம் உருவாகியது. இந்திய இராணுவம், விடுதலை இயக்கங்கள், இலங்கை அரசு போன்ற பல்வேறு தரப்பினர்களாலும் தமிழ் மக்கள் எதிர்கொண்ட சொல்லொணாத் துயரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக் ஆசிரியர் சங்கத்தினைச் சேர்ந்த மறைந்த ராஜனி திராணகம, ராஜன் ஹூல், கே. சிறீதரன், தயா சோமசுந்தரம் ஆகியோர் இணைந்து முறிந்த பனை என்ற நூலினை எழுதினர். இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் விடுதலைப் புலிகள் பல்கலைக்கழகத்தில் ஆதிக்கம் மிக்க தரப்பாக வளர ஆரம்பித்தனர். இதனால் முற்போக்குச் சிந்தனையுடன் செயற்பட்ட சில மாணவர்களும் ஆசிரியர்களும் புலிகளால் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் இருந்தார்கள். வேறு பலர் தென்னிலங்கைக்கும், வேறு பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர். 1990களிற்குப் பின்னர் பல்கலைக்கழகத்தில் நிலவிய மாணவர் சார் அரசியல் பொதுவாகப் புலிகளின் அரசியல் நிலைப்பாடுகளுக்குச் சாதகமாக அமைந்தன. 1990களிற்குப் பின்னர் கூட மாற்றுக் கருத்துள்ள மாணவர்கள் சில வேளைகளிலே விளிம்புகளில் இருந்து செயற்பட்டிருக்கக் கூடும். அந்த வரலாறுகள் பற்றியும் நாம் அறிய வேண்டும். இந்த வகையிலே பல்கலைக்கழகத்தின் அரசியற் செயற்பாடுகளின் வரலாற்றின் பல்வேறு பக்கங்களையும், பல்வேறு நிலைப்பாடுகளையும் பற்றி நாம் அறிந்து கொள்ளுவதன் மூலமும், எழுதுவதன் மூலமுமே பல்கலைக்கழகத்தினைத் தமிழர்களுடனும், தமிழ்த்தேசியவாத அரசியலுடனும், விடுதலைப் புலிகளுக்குச் சார;பான அரசியலுடனும் மாத்திரம் அடையாளப்படுத்த மேற்கொள்ளப்படும் ஆதிக்கச் செயன்முறைகளை நாம் கேள்விக்குட்படுத்தலாம்.
2009இல் சிவில் யுத்தத்தின் முடிவின் பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சிங்கள மாணவர்களை யாழ்ப் பல்கலைக்கழகத்தின் சில பீடங்களுக்கு அனுப்பி வருகிறது. பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கு அண்மைய சில வருடங்களாக பெருமளவிலான மாணவர்கள் அனுப்பப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டினை அண்மைய வன்முறைச் சம்பவம் பற்றி எழுதிய சிலர் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், இவ்வாறு பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் என்ன அடிப்படையில் அனுப்பப்படுகிறார்கள் என்பது பற்றிய புரிதல் இல்லாது இதனைப் பற்றி எழுந்தமானமாக அரசு திட்டமிட்டு சிங்கள மாணவர்களால் பல்கலைக்கழகத்தினை நிரப்புவதன் மூலம் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினை நசுக்கப் பார்க்கிறது எனச் சொல்வதும் இந்த முயற்சியினை வடக்கிலும் கிழக்கிலும் கடந்த காலங்களில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்களுக்கு ஒப்பிடுவதும் அபத்தமானது. இது நாட்டிலே ஏற்பட்ட இனக் குரோதங்களை மேலும் கூர்மைப்படுத்துவதாகவே அமையும். கடந்த 20/7/2016 அன்று வெளியாகி உள்ள டெய்லி நியூஸ் பத்திரிகையில் இது குறித்த விளக்கம் ஒன்றினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் தெளிவாக வழங்கியுள்ளார். அதன் மொழி பெயர்ப்பு: “எங்களுடைய விஞ்ஞான பீடத்திலே மேலதிகமான இடம் இருக்கும் போது நாங்கள் அது குறித்துப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதுண்டு. அவர்கள் எமது பீடத்திற்கான புள்ளியினைக் குறைவாக்கி கூடிய அளவு மாணவர்களை அந்த வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு அனுப்புவார்கள். எமது நாட்டின் பெரும்பான்மையான சனத்தொகையினர் சிங்களவர்களாக இருக்கின்ற நிலையிலே இயல்பாகவே எமது பீடத்துக்குக் கூடிய அளவிலான சிங்கள மாணவர்கள் வருகிறார்கள். இது ஒரு பிரச்சினை இல்லை.” மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தினால் வழங்கப்படும் கல்வியின் தரம் தொடர்பாகவும், அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான கல்விசார் பிரசுரங்கள் (academic publications) தொடர்பாகவும் மிகவும் உயர்ந்த அபிப்பிராயம் தென்னிலங்கையில் உள்ள கல்வியாளர்கள் மத்தியில் நிலவுவதனையும் பலரும் அறிவர். சிங்கள மாணவர்களிற் சிலர் ஆங்கில மொழியிலே போதனைகள் இடம்பெறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தினை தமது முதல் சில தெரிவுகளில் ஒன்றாக வரிசைப்படுத்த இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். இதனாலும் பல்கலைக்கழகத்துக்கு வரும் சிங்கள மாணவர்களின் தொகை அதிகமாக இருக்கக்கூடும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் போன்ற சம்பவங்கள் அங்கோ அல்லது நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் மீளவும் நடைபெறாது நாம் தவிர்க்க வேண்டுமாயின் நாட்டின் எல்லா சமூகத்தவரும் எம்மத்தியில் பொதிந்து போயுள்ள, இயல்பாக்கம் செய்யப்பட்டுப் போயுள்ள இனவாதமான, மேலாதிக்கத் தேசியவாதக் கருத்துக்களை விமர்சிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் தமிழர்களானாலும் சரி, முஸ்லிம்கள் ஆனாலும் சரி, சிங்களவரானாலும் சரி புறமொதுக்கப்படும் நிலைகள் இருப்பின் அந்த நிலைகளைக் களையும் வகையில் நிருவாகம் பாரபட்சம் காட்டாது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் இனவிகிதாசாரம் தொடர்பாகப் பரப்பப்பட்டு வரும் கட்டுக்கதைகளையும் மாயைகளையும் ஆதாரங்களுடன் தகர்க்க வேண்டும். தமிழ் மேலாண்மைவாதத்துடனும் சைவ மேலாண்மைவாதத்துடனும் பல்கலைக்கழகத்தினைத் தொடர்புபடுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் எழுச்சி பெற்ற முற்போக்கான விடுதலைச் சிந்தனைகளையும், அவற்றையொட்டி நிகழ்ந்த செயற்பாடுகளையும் பற்றிய வரலாறுகளை நாம் வெளிக்கொணரவும் நினைவுகூரவும் வேண்டும்.
மகேந்திரன் திருவரங்கன்
(மகேந்திரன் திருவரங்கன் இலங்கையில் உள்ள பொருளாதாரத்தினை ஜனநாயக மயமாக்குவதற்கான கூட்டு என்ற அமைப்பிலே உறுப்பினராக இருக்கிறார்)