படம் | SELVARAJA RAJASEGAR & SAMPATH SAMARAKOON Photo, FLICKR
தமிழ் மக்களுக்கும் தெற்குக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கம் விரும்புவதாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளான நிமலரூபன் மற்றும் டெல்றொக்ஷன் பாதுகாப்புத் தரப்பினால் கொலைசெய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடாத்த விசேட ஆணைக்குழுவொன்றை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்திக் கூறும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் வண. சத்திவேல், இருவரும் கொல்லப்பட்ட விதம், யார் கொலை செய்தார்கள், எவ்வாறு கொலை செய்தார்கள், ஏன் கொலை செய்யப்பட்டார்கள் என்ற விடயங்கள் ஆராயப்பட்டு தயாரிக்கப்படும் அறிக்கை மக்கள் முன் கொண்டுவரப்படவேண்டும் என்றும் கூறுகிறார்.
இவர்கள் இருவரின் கொலை தொடர்பில் சட்டத்துறை, சிறைச்சாலை திணைக்களம், பாதுகாப்புத் துறை, வைத்தியத்துறை (நிமலரூபன், டெல்றொக்ஷன் வைத்தியசாலையில் இருந்தபோது நடந்துகொண்ட விதம்/ மரண பரிசோதனை) விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்காக விசேட ஆணைக்குழுவொன்று இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார் வண. சத்திவேல்.
“நான்கு வருடங்களுக்கு முன்னர் வவுனியா சிறைச்சாலையில் கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு தமிழ் அரசியல்கைதிகள் தாக்கப்பட்டார்கள். பலத்த தாக்குதலுக்கு உள்ளான நிமலரூபன், டெல்றொக்ஷன் என்ற இரு தமிழ் அரசியல்கைதிகளும் கொல்லப்பட்டார்கள்.
“அன்று இந்தச் சம்பவத்துக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் இன்று நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அமைதியாக இருக்கிறார்கள்.
“27 பேர் கொல்லப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிமலரூபன், டெல்றொக்ன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை எதுவித விசாரணைகளும் இடம்பெறவில்லை” என்கிறார் அவர்.
‘மாற்றம்’ தளத்துக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் வண. சத்திவேல் வழங்கிய நேர்க்காணலை முழுமையாக கீழே பார்வையிடலாம்.
தொடர்புபட்ட கட்டுரைகள்:
நிமலரூபன்: சித்திரவதை மாரடைப்பான கதை