“எனது வீட்டிற்குள் நுழையும்போது தாய் தந்தையின் அன்பான பராமரிப்பினையே நான் உணருகிறேன்…”

மீண்டும் வீட்டிற்கு செல்லும் எதிர்பார்ப்புடன் இருக்கும் கேப்பாப்பிலவு வயோதிபர் ஒருவரே இவர்.

இந்த வருடம் மார்ச் மாதம் 24ஆம் திகதி கேப்பாப்பிலவு மக்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்துபோயிருக்கும் இரு மாதங்களாக புதிய அரசாங்கம் காணிகளை விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தமது சொந்த ஊருக்குச் செல்ல இன்றும் காத்திருக்கின்றனர். மே மாதம் இடம்பெற்ற கோவில் திருவிழாவை முன்னிட்டு இராணுவம் பாதைகளை திறந்து விட கேப்பாப்பிலவு மக்களுக்கு தமது வீடுகளை கண்ணுக்கெட்டிய தூரத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. “ஒவ்வொரு வருடமும் எமது காணிகளில் மாற்றங்கள் இடம்பெறுகின்றன. சில வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, கிணறுகள் மூடப்பட்டுள்ளன, வேறு கட்டடங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன, காணி எல்லைகள் வேறு வகையில் அடையாளமிடப்பட்டுள்ளன. ஆனால், நாங்கள் நட்டுவைத்த தென்னை மற்றும் பலா என்பன இன்று பலன் தரத் தொடங்கியுள்ளன” என தனது வாழ்விடத்தினை கண்டதன் பின்னர் சமூக செயற்பாட்டாளரான சந்திரலீலா கூறினார். “எவ்வாறாயினும் அனைவருக்கும் தமது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், எமது காணிகள் விடுவிக்கப்படவேண்டியது அவசியமாகிறது. நாங்கள் மீண்டும் வருவோம், அவர்கள் எமது வீடுகளை அழித்திருந்தாலும் பரவாயில்லை, எமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்” என சந்திரலீலா குறிப்பிடுகின்றார்.

வரலாறு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்டதே கேப்பாப்பிலவு. சூரியப்புரம், சீனிமோட்டை, கேப்பாப்பிலவு மற்றும் பலகுடியிருப்பு ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கியதே கேப்பாப்பிலவு கிராம சேகவர் பிரிவு. விவசாயமும் மீன் பிடியும் வாழ்வதாரமாகக் கொண்ட இந்தப் பகுதி மக்கள் 6 தசாப்தகாலமான வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளதுடன், மேலும் சிலர் காணிகள் அற்ற நிலையில் விடுதலை புலி இயக்கத்தினரால் மீள் குடியமர்த்தப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வளமான செம் மண், சுத்தமான குழாய் நீர் மற்றும் கடல் வளம் என செழிப்பான ஊரே கேப்பாப்பிலவு ஆகும்.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது பல இலட்ச மக்களுடன் கேப்பாப்பிலவு மக்களும் இடம்பெயர்ந்ததுடன் மெனிக்பாம் முகாம்களில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டும் இருந்தனர்.

தமது வீடுகளுக்கு மீண்டும் திரும்பவேண்டும் என வலியுறுத்திவரும் மக்கள் தாங்கள் இடம்பெயர்வதற்கு முன்னர் எந்தளவு காணி தம்வசம் வைத்திருந்தார்கள் என்பதனை கவனத்தில் கொள்ளாமல் ஒரு குடும்பத்திற்கு தலா கால் (1/4) ஏக்கர் வீதம் 150 குடும்பங்களுக்கு புதிய காணிகள் ஒதுக்கப்பட்டன. தமது சொந்தக் காணிகளுக்கு அண்மையில் காணப்பட்ட சூரியப்புரம் என்ற பகுதியில் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் இடம்பெயர்த்தப்பட்டனர். இதனை தற்போது கேப்பாப்பிலவு மாதிரி கிராமமாக அடையாளப்படுத்துகின்றனர். வெகுதொலைவில் தாங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளது போன்று உணர்வதாக அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர். வீடுகளை அமைத்துக்கொள்வதற்கு அதிகாரிகள் எவ்விதமான உதவிகளையும் செய்யாத நிலையில் மெனிக்பாம் முகாமிலிருந்து கொண்டு வரப்பட்ட சிதைந்த பொருட்களைக் கொண்டு தற்காலிக கூடாரங்களை அமைத்து அதில் வாழும் நிலையே ஏற்பட்டுள்ளது.

புதிய காணிகளை பெற்றுக்கொண்டமைக்கான ஆவணத்தில் 150 குடும்பங்களிடமிருந்தும் கையொப்பத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் கூறியிருக்கிறார். 150 குடும்பங்களில் இரண்டு குடும்பங்கள் ஆவணத்தில் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்த நிலையில் அவர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொள்வதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், பின்னர் மாற்று காணிகளுக்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. முகாமிலிருந்த திரும்பியவுடன் 146 குடும்பங்கள் உறவினர்களுடன் தங்கியிருந்த நிலையில் 2013ஆம் ஆண்டில் சூரியப்புரத்தில் குடியேறியுள்ளனர். அவர்களின் வரும்போது எவ்விதமான காணி அனுமதிப்பத்திரத்திலும் கைச்சாத்திடுமாறு போரப்படவில்லை. சூரியபுரத்தில் 59 குடும்பங்கள், பிலாவுக்குடியிருப்பில் 55 குடும்பங்கள், தவிர இன்னும் 159 குடும்பங்களுக்கும் சொந்தமான காணிகளில் இராணுவம் உள்ளமையினால் இன்று இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் இன்று கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் வாழ்கின்றனர். 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 16 குடும்பங்களுக்கு சீனிமோட்டை கிராமத்திற்கு செல்ல அனுமதி கிடைத்துள்ளது.

மக்களுக்கு உரித்தான காணிகள்

சுமார் 520 ஏக்கர் மக்கள் நிலப்பரப்பை இராணுவம் தன்வசம் கொண்டுள்ளது. இராணுவத்தினருக்கும் அவர்களின் குடும்பத்தவர்களின் தேவைக்காகவுமே மக்களின் காணிகள் மற்றும் வீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. வீடுகள், பாடசாலை மற்றும் தேவாலயங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு அப்பால் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக தற்போது வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

2014ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட மக்கள் காணிகள் மற்றும் கட்டங்களுக்காக தற்காலிகமாக 287 வீடுகள் கட்டப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன (கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகளின் நிர்மானப் பணிகள் பூர்த்தி). முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்த வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், தற்காலிக இருப்பிடங்கள் என்பதால் மரங்களை நடவேண்டாம் என மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதேவேளை, 2014ஆம் ஆண்டில் இப்பிரதேசத்தில் இராணுவ கட்டளையதிகாரியும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் சூழல் மாற்றமடையும் பட்சத்தில் காணிகளை மக்களுக்கு மீள் வழங்கும் நிலை ஏற்படலாம் என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இராணுவம் அமைத்துக் கொடுத்த தற்காலிக வீடுகள் காணப்படும் பிரதேசத்தில் போதிய குடிநீர் வசதியின்மையால் 25 – 30 குடும்பங்கள் வரை இங்கு வாழ்வதில்லை. “எமக்கு குளிர்மையான நீர் உள்ள பாரிய கிணறுகள் இருந்தன. தாகத்தை தீர்த்துக் கொள்வதற்கு குனிந்து கோப்பையில் நீர் எடுக்கும் அளவில் அந்த கிணறுகள் காணப்பட்டன. ஆனால், முகங்களை கழுவிக் கொள்வதற்கு வாலிகளை எடுத்து நீண்டதூரம் நடக்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது” என தமது அவலங்களை கூறி கடந்த கால நினைவுகளை முதியவர்கள் கூறுகிறார்கள்.

புதிதாக குடியமர்த்தப்பட்ட பிரதேசத்தில் இருந்து அவர்களின் சொந்த வீடுகளுக்கு அண்மையில் அமைந்துள்ள வயல் நிலங்களுக்கு சுமார் 7 – 10 கிலோ மீற்றர் வரை நடந்து செல்ல வேண்டியுதுள்ளது. இதனால், அவர்களின் விவசாய நடவடிக்கைகள் பெரும் சவாலுக்கு உட்பட்டதாகவே உள்ளது.  விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்ட நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபட்ட போதிலும் தற்போது காணப்படுகின்ற தூரம் காரணமாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு இருப்பிடத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது.

“கடலில் இருந்து மூன்றரை கிலோ மீற்றர் பரப்பளவை இராணுவம் கையகப்படுத்திக் கொண்டுள்ளமையினால் அந்தப் பகுதியைப் பயன்படுத்த எமக்கு அனுமதியில்லை” என கமநல அமைப்பின் தலைவர் காலியப்பன் மகேஷ்வரன் கூறுகிறார். மீனவர்களுக்கு தமது மீன்பிடிப் படகுகளை கரையில் நிறுத்திவைக்க முடியாத நிலை காணப்படுகின்றது. கைப்பற்றப்பட்டுள்ள பகுதியில் இருந்து கடலை நோக்கி 50 மீற்றர் வரையில் மீன் பிடிக்கவோ வலை வீசவோ தடை செய்யப்பட்டுள்ளது. இடம்பெயர்வதற்கு முன்னர் 150 மீற்றர் தொலைவிலேயே கடற்கரை காணப்பட்டதாகக் கூறும் மக்கள், தற்போது 700 மீற்றர் தொலைவில் கடல் காணப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தடைகளினால் மீனவர்கள் மூன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையே கடலுக்கு செல்கின்றனர். அதனால், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கேப்பாப்பிலவில் மரமுந்திரிகை பயிர்செய்கையில் ஈடுபட்டதாகவும் அதனால், மேலதிக வருமானத்தை ஈட்ட முடிந்ததாகவும் மகேஷ்வரன் கூறுகிறார். ஆனால், மாதிரி கிராமத்தில் நீரை பொதுக் கிணறுகளில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதனால், அதனை செய்ய மேற்கொள்ள முடியாத நிலையே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் தொழிலின்மையினால் இளையோர் சோர்வுற்று இருப்பதாக கிராமத்தின் முதியவர்கள் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் பயன்பாடு என்பன அதிகரித்துள்ளதாவும், பொலிஸார் முற்றுகையிட்டு கைதுசெய்யப்படுகின்ற நிலையில் தண்டனைக்கான தண்டப்பணம் சிறிய தொகை என்பதால் அதனை செலுத்தி விட்டு மறுநாள் வழமைப்போல் செயற்படுகின்றனர் என்றும் மக்கள் கூறுகிறார்கள். அதேபோன்று பெண்களுக்கும் குடும்ப பொருளாதாரத்தில் ஒரு பகுதியை சுமக்க நேர்ந்துள்ளது. இதனால், இளைய பெண்கள் ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை தேடி கொழும்பு வருவதுடன் ஏனையோர் வேலைத்தேடி அலைகின்றனர். இதேவேளை, பெண்கள் இரவு நேரங்களில் வீடு திரும்புவதால் பிரச்சினைகளும் ஏற்படுகின்றது. இங்கு இரண்டு பெண்கள் இராணுவத்திலும் இணைந்துள்ளனர் எனவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எதிர்ப்பும் – வேண்டுக்கோளும்

IMAG3191

2012 மற்றும் 2016 ஆண்டு காலப்பகுதிற்குள் கேப்பாப்பிலவு மக்கள் காணிகளை விடுவிக்குமாறு கோரி 5 பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 2015ஆம் ஆண்டிற்குள் சொந்தக் காணிகளை வழங்குமாறு வலியுறுத்திய மக்கள் கோரிக்கைகள் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோர் சந்தித்திருந்தனர். அதேபோன்று அவர்கள் 60 காணி உறுதி பத்திரங்கள் உள்ளடங்களாக எழுத்து மூல கோரிக்கையை ஜனாதிபதி செயலகத்திற்கு கையளித்துள்ளதுடன், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.

கேப்பாப்பிலவில் உள்ள தனது நிலத்துக்கு உறுதியைக் கொண்டிருக்கும் பரமேஸ்வரன்.
கேப்பாப்பிலவில் உள்ள தனது நிலத்துக்கு உறுதியைக் கொண்டிருக்கும் ஒருவர்.

ஆரம்பத்தில் காணியை மீண்டும் வழங்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதிலும் காணியை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயே தனிமையாகப் போராடுகின்றார். இவர் தனிமையில் இருப்பது அச்சுறுத்தல் என்பதால் தற்காலிக வீட்டில் இருப்பது இல்லை. அப்போதைய பிரதேச கட்டளையதிகாரியான சமரசிங்க என்பவரால் குறித்த பெண் மீது அச்சுறுத்தல் மற்றும் கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இன்றும் அவர் வழக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றார்.

கேப்பாப்பிலவில் இவருக்கு 5 ஏக்கரில் காணியுள்ளது. இந்தக் காணியில் இராணுவம் பேக்கரி, சமயலறை, வைத்தியசாலை மற்றும் கிணறு என்பவற்றை அமைத்துள்ளது. சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் வந்தால் தனது காணியில் தான் தங்க வைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்றமும் பிரதேச செயலகமும் மாற்றுக்காணியைக் பெற்றுக் கொள்ளுமாறு கோரியிருந்த நிலையில் அதனை நிராகரித்துள்ள இவர் தன்னுடைய காணியைப் பெற்றுத்தருமாறு உறுதியாகப் போராடுகிறார். “பலரும் வழக்கு தாக்கல் செய்திருந்தால் அது பலன் மிக்கதாக அமைந்திருக்கும். அச்சம் காரணமாக அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு நான் செல்வதில்லை என அந்தப் பெண் கூறுகிறார்.

இந்த மக்களுக்கு தமது சொந்தக் காணிகளைப் பெற்றுக் கொள்ளும் ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். தனது மக்களுக்காக கடினமாகப் போராடிய சமூக செயற்பாட்டாளரான சந்திரலீலா, மூன்று நாட்கள் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் அரசியல்வாதிகள் கேட்டறிந்ததாகக் கூறுகிறார். மூன்றாம் நாள் வட மாகாண முதலமைச்சர் பிரச்சினை தொடர்பில் கவனத்தில் கொண்டு மூன்று மாதத்திற்குள் தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். இந்த உறுதிமொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டு மூன்றாவது வாரத்தில் மக்களைச் சந்திக்க முதலமைச்சர் குழு ஒன்றை அனுப்பினார். அந்தக் குழுவினர் மக்களின் பொதுவான பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன் காணிகளை விடுவிப்பது தொடர்பில் எவ்விதமான உறுதியும் வழங்கவில்லை என சந்திராலீலா கூறுகிறார்.

வட மாகாண முதலமைச்சரால் மூன்று மாதத்திற்குள் தீர்வை வழங்குவதாகக் கூறி உண்ணாவிரப் போராட்டத்தை நிறுத்துமாறு வழங்கப்பட்ட கடிதம்
வட மாகாண முதலமைச்சரால் மூன்று மாதத்திற்குள் தீர்வை வழங்குவதாகக் கூறி உண்ணாவிரப் போராட்டத்தை நிறுத்துமாறு வழங்கப்பட்ட கடிதம்

காணிகளுக்கு மீள் உரிமை கோரும் போராட்டம்

பல வருடகால போராட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் அம்பாறை, பானம பகுதியைச் சேர்ந்த மக்கள், 2010ஆம் ஆண்டு முதல் கடற்படை, விமான படை மற்றும் விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட காணிகளுக்குள் கடந்த மார்ச் மாதம் சென்று உரிமைக்கோரினர். நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்ற போர்வையில் சட்டவிரோதமாக காணிகள் சுவீகரிக்கப்படுகின்ற நிலையில் அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் போராடி வருகின்றனர். சட்டவிரோதமான முறையில் பெற்றுக் கொண்ட காணிகளில் சிறிய அளவை புதிய அரசாங்கம் விடுவிக்கின்ற நிலையில், பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சொந்த ஊரில் அநாதைகளாக வாழும் மக்களுக்கு அவர்களின் காணிகளை மீள அளித்து அந்த மக்களின் எதிர்காலத்திற்கு புதிய அரசாங்கம் உத்தரவாதமளிக்குமா?

ருகி பெர்ணான்டோ, மரிஸா த சில்வா மற்றும் சுவஸ்திகா அருலிங்கம்