படம் | FORCESDZ

ஜக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் புதிய அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அதனை ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தார். உள்நாட்டு விசாரணைதான் இடம்பெறும், அதில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார். ஆனால், ரணில் எவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இதனை குறிப்பிட்டிருக்கிறார்? இலங்கையின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். புதிய அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செல்வதென்று முடிவெடுத்த போது தெற்கில் எழுந்த முதல் கேள்வி விடுதலைப் புலிகளை தோற்கடித்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கவா போகின்றீர்கள் என்பதே!

இன்றைய நிலையில் இலங்கையில் ஒரு பலமான இராணுவம் நிலைகொண்டிருக்கிறது. அது தோற்கடிக்கப்பட முடியாதென்று பல இராணுவ நிபுணர்களாலும் விதந்துரைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடித்த இராணுவம். இன்னொரு வகையில் நோக்கினால் இலங்கை இராணுவமானது தெற்காசியாவிலேயே அதிக யுத்த அனுபவத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரேயொரு இராணுவமாகும். இந்த தகுதியானது கடந்த முப்பது வருடங்களாக தொடர்ச்சியாக மோதல்களில் ஈடுபட்டதால் கிடைக்கப்பெற்ற ஒன்று. பலமான இராணுவம் என்று எழுதுகின்ற போது, சில வருடங்களுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவர் குறிப்பிட்ட விடயமொன்று நினைவுக்குவருகிறது. அந்த நண்பர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, அதன் தலைவர் பிரபாகரன் இறந்த செய்தியை நம்புவதா அல்லது இல்லையா என்று எங்களில் பலரும் தடுமாறிக்கொண்டிருந்த நாளொன்றில்தான் அவர் இதனைப் பகிர்ந்துகொண்டார். அப்பொழுது இயக்கங்களுக்கிடையில் மோதல் தோன்றாத காலம். அவர் யாழ். பலக்லைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது, அவரது பேராசிரியர் ஒருவர் இப்படிக் கூறினாராம், “தம்பி – எங்கட பொடியங்களின்ர போராட்டம் இறுதியில சிங்களவர்களுக்கு ஒரு பலமான இராணுவத்தை கொடுப்பதில்தால் போய்நிற்கப்போகுது. இருந்து பாருங்கள், இவங்கள் எல்லாரும் சேர்ந்து அதைத்தான் செய்யப் போறாங்கள்.” அன்று அவர் சொன்னதை தான் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஆனால், இன்று திரும்பிப்பார்க்கும் போது அவர் தீர்க்கதரிசனமாகத்தான் சொல்லியிருக்கிறார் என்றார் அந்த நண்பர்.

இன்றைய நிலையில், இலங்கை தெற்காசியாவிலேயே அதிகம் இராணுவமயப் படுத்தலுக்குள்ளான ஒரு நாடு. மும்பாயைத் தளமாகக் கொண்டியங்கிவரும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஆய்வகத்தின் (Mumbai-based Strategic Foresight Group (SFG) தகவல்களின் படி இலங்கையில் ஒரு மில்லியன் பேருக்கு 8,000 என்னுமளவில் இராணுவத்தினர் இருக்கின்றனர். இது இந்தியாவில் 1,300 ஆகவும், பாக்கிஸ்தானில் 4,000 ஆகவும், நேபாளத்தில் 2,400 ஆகவும், பங்களாதேசில் 1,000 ஆகவும் இருக்கின்றது. உண்மையில் இலங்கை போன்றதொரு சிறிய நாட்டில் இராணுவத்தினரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அப்படியிருக்கவில்லை – ஏன்?

இலங்கை இராணுவத்தின் விரிவாக்கமும் விடுதலைப் புலிகளின் எழுச்சிக்கும் இடையில் ஒரு பிரிக்கவியலா தொடர்புண்டு. விடுதலைப் புலிகளின் இராணுவ எழுச்சிதான் இன்னொரு புறத்தில் இலங்கை இராணுவத்தின் எழுச்சி. உலக வரலாற்றில் விடுதலைப் புலிகள் போன்றதொரு அமைப்பு இதற்கு முன்னர் இருந்ததில்லை. விடுதலைப் புலிகள் முழு இலங்கைக்கு மட்டுமன்றி தெற்காசிய இராணுவ வலுச்சமநிலையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தவல்ல ஒரு அரசுசாரா இராணுவ அமைப்பாக இருந்தனர். இந்தச் சவாலை சமாளித்தல் என்னும் இலக்கில்தான், இலங்கை இராணுவத்தின் பலம் பன்மடங்காக பெருகியது. இதன் விளைவாகத்தான் இலங்கை அதிகம் இராணுவமயப்படுத்தப்பட்டது. யுத்த வெற்றி இந்த நிலைமையை மேலும் வலுப்படுத்தியது. இராணுவம் சிவில் நிர்வாகத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட முடியாதவொரு அதிகார மையமாக உருமாறியது. இவ்வாறானதொரு நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இராணுவத்தின் தலையிடும் ஆற்றல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பினும் கூட இராணுவத்திற்கு எதிரான ஒரு விசாரணை என்றால் அது நிச்சயம் பல அதிர்வுகளை ஏற்படுத்தும். அதேவேளை, இராணுவத்திற்குள் அதிருப்திக் குழுவொன்று இருக்கிறதா என்று சந்தேகப்படுமளவிற்கும் சில நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, யாழ். கட்டளைத்தளபதி ஒருவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நேரடியாகவே வாக்குவாதப்பட்டமை, அண்மையில் பசில் ராஜபக்‌ஷவை சில இராணுவ அதிகாரிகள், இராணுவ தலைமையகத்தின் அனுமதியின்றி சந்தித்திருந்தமை. இவ்வாறான விடயங்களை தற்செயல் நிகழ்வுகளென்று ஒதுக்கிவிடவும் முடியாது. கோட்டாபய பாதுகாப்புச் செயலராக இருந்த காலத்தில், இராணுவத்தினரின் செல்வாக்கு மிகவும் உச்சநிலையில் இருந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நிச்சயம் உள்ளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும்

மேலும் பிறிதொரு பாரிய சவாலொன்றையும் புதிய அரசாங்கம் கடக்க வேண்டியிருக்கிறது. இது இலகுவில் கடக்கக் கூடிய ஒன்றாகவும் இருக்கப் போவதில்லை. அதாவது, இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பது. சில மாதங்களுக்கு முன்னர் சமாதானத்திற்கான அமெரிக்க கற்கை நிலையத்தில் (USIP) பேசுகின்ற போது மங்கள சமரவீர, தாம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்னும் அழுத்தங்களும் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எண்ணிக்கையைக் குறைப்பது என்பது பிறிதொரு பொருளில் இராணுவத்தின் பலத்தைக் குறைப்பதாகும். இலங்கை போன்றதொரு சிறிய நாட்டில் இராணுவம் மிகவும் பலமாக இருப்பது ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தலாக நோக்கப்படலாம். ஒரு புறம் இவ்வாறான வாதங்கள் முன்வைப்படும் அதேவேளை ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரும் கூட, பாதுகாப்பிற்கான செலவீனம் குறைக்கப்படவில்லை. அது ஏன்? விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவுற்ற 2009இல் இலங்கையின் பாதுகாப்பு செலவீனம் 175 பில்லியனாக இருந்தது. 2011இல் அது 194 பில்லியனாக உயர்ந்தது. 2013இல் 235 பில்லியனான அதிகரித்தது. 2016இல் அது 307 பில்லியனாக உயர்வடைந்துள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கூட அது குறைக்கப்படவில்லை. மாறாக, மேலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

இது தொடர்பில் அனா பரராஜசிங்கம் த டிப்ளமெட் (The Diplomat) இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையொன்றில் வேறுபட்டதொரு பார்வையை முன்வைக்கின்றார். அதாவது, வெளியாரிடமிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களை சமாளிக்கும் நோக்கிலேயே இலங்கை தனது இராணுவத்தை பலப்படுத்துவதாக அவர் குறிப்பிடுகின்றார். சிங்களவர்களின் பார்வையில் அந்த வெளியக அச்சுறுத்தல் இந்தியா என்பதே அனாவின் கணிப்பாக இருக்கிறது. இந்த நிலையில், உள்நாட்டிற்குள் தங்களின் எதிரிகளை வென்றிருந்தாலும் கூட பெரும்பாலான சிங்களவர்கள் எண்ணுவது போன்று, எதிர்காலத்தில் இந்தியாவிடமிருந்து எழக்கூடிய சவால்களை தடுக்கும் நோக்கிலேயே இலங்கை தொடர்ந்தும் இராணுவ ஆற்றலை கட்டியெழுப்புவதாகவும் அவர் கணிக்கின்றார். இது ஒருவரது பார்வை. ஆனால், இந்தியாவை இராணுவ ரீதியில் எதிர்கொள்ள முடியுமென்று இலங்கை கருதுமா என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாகும். ஆனால், இந்தியாவின் தூண்டுதலால் உருவாகும் கிளர்ச்சிக் குழுக்களை எதிர்கொள்ளுதல் என்னும் பொருளில் இது சரியான கணிப்பாக இருந்தாலும் கூட, அவ்வாறான தலையீடுகளை செய்யும் நிலையில் இந்தியாவும் இல்லை. தவிர, இந்தியாவை எப்போதும் தங்களுக்கு எதிர்நிலைக்கு போகாதவாறானதொரு அணுகுமுறையையே கொழும்பும் பின்பற்றி வருகிறது.

இவ்வாறான பல பார்வைகளுக்கு இடமிருப்பினும் கூட இலங்கையில் இராணுவம் என்பது தொடர்ந்தும் ஒரு சவாலாகவே இருக்கப் போகின்றது. குறிப்பாக இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படும் உள்நாட்டு பொறிமுறையின் முன்னாலுள்ள பிரதான சவாலே இலங்கை இராணுவம்தான். இராணுவத்தைக் கையாளுவதில் அரசாங்கம் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள விரும்பாது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சவால்களின்றி எவ்வாறு விடயங்களை முன்னெடுப்பது என்றே யோசிக்கும். அவ்வாறு சவால்களின்றி முன்னெடுக்கப்படும் விசாரணை நிச்சயம் ஒரு வெற்றிகரமான பொறிமுறையாக இருக்காது. அது ஒரு கண்துடைப்பாகவே இருக்கும்.

யதீந்திரா எழுதிய இக்கட்டுரை முதலில் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.