படம் | HEMMATHAGAMA

(நேற்றைய முதலாம் பாகத்தின் தொடர்ச்சி…)

அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் 2015ஆம் ஆண்டின்போது நிறைவேற்றப்பட்ட விதம், அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறையில் பொது மக்கள் தொடர்ச்சியாக பங்கேற்பதன் முக்கியத்துவத்தை எங்களுக்கு நினைவூட்டுகின்றது. 19ஆவது திருத்தத்தின் கீழ் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களின் உள்ளடக்கம், 17ஆவது திருத்தத்தில் இருந்ததைப் பார்க்க மிக மோசமானதாகும். பொது மக்களுடன் எத்தகைய கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படாத நிலையில் இரட்டை பிரஜா உரிமை போன்ற பல்வேறு பிரிவுகள் அதில் சேர்க்கப்பட்டிருந்தன. அவை அரசியல் ரீதியான நோக்கங்களைக் கொண்டிருந்தவையாகும். அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தகைய வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் மூடிய கதவுகளுக்குப் பின்னால் “அரசியல் பேரங்களில்” ஈடுபட்டிருந்தார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் அரசியலமைப்பு உருவாக்கத்தின் முதல் கோட்பாடுகளை மீறியிருந்தார்கள். இலங்கையின் 3ஆவது குடியரசு அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறையை இதே நாடாளுமன்றமே மேற்கொள்ளவுள்ளது. நாங்கள் எவ்வாறு அதனை நம்ப முடியும்?

தற்போதைய அரசியலமைப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒரு சில அவதானிப்புக்கள்

  1. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை

இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பிலிருந்து கிடைத்த மிக முக்கியமான ஒரு படிப்பினை, முழு நாட்டினாலும் தெரிவு செய்யப்படும் ஒரு நபர் தனது சொந்த முக்கியத்துவம், சட்டபூர்வத் தன்மை மற்றும் அதிகாரம் என்பன தொடர்பான மிகை அளவிலான ஓர் எண்ணத்தை கொண்டிருக்க முடியும் என்பதாகும். 1970களின் தொடக்கத்தின்போது ஜனாதிபதி ஆட்சி முறை குறித்த விடயம் கலந்துரையாடப்பட்ட போது, டட்லி சேனாநாயக்க இந்த விடயத்தை முன்னுணர்ந்திருந்தார்:

“ஜனாதிபதி ஆட்சி முறை ஐக்கிய அமெரிக்காவில் சாத்தியமாகியுள்ளது. ஏனெனில், அது அங்கு ஒரு விசேட வரலாறின் விளைவாகவே தோன்றியிருந்தது. அதே காரணங்களினால் அது பிரான்ஸில் சாத்தியமாகியுள்ளது. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் அது அழிவுகரமான விளைவுகளையே எடுத்து வர முடியும். அது ஒரு சீசரிஸ பாரம்பரியத்தை உருவாக்க முடியும். அது ஒரு தலைவரின் கையில் அதிகாரங்கள் அனைத்தையும் ஒன்று குவிப்பதுடன், நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகளின் கட்டமைப்பு என்பவற்றை உதாசீனம் செய்ய முடியும்.”

மேலே குறிப்பிடப்பட்ட விதத்தில் முன்னுணர்ந்து கூறப்பட்டதை போல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது தொடக்கம் நிறைவேற்று அதிகாரத்தை போஷித்து வளர்த்து வந்திருப்பதுடன், அரச சபை, நாடாளுமன்றம் மற்றும் நீதித் துறை போன்ற ஏனைய ஜனநாயக நிறுவனங்களை உதாசீனம் செய்துள்ளது. 1982இல் இடம்பெற்றதனை போல, மக்கள் தீர்ப்பு என்ற முறைக்கூடாகத் தேர்தல்கள் மற்றும் பல்கட்சி ஜனநாயக முறைகளும் கூட உதாசீனம் செய்யப்பட்டிருந்தன. அதிகார மையம் நாடாளுமன்றத்திலிருந்து நகர்த்தப்பட்டிருந்தது. நாடாளுமன்றம் அதன் அனைத்து குறைபாடுகளுடனும், சார்பு ரீதியில் திறந்த தன்மை கொண்டதாகவும், வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் இருந்து வந்தது. தெரிவு செய்யப்படாத, ஆனால், அதிகாரமிக்க ஜனாதிபதி ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரினால் சூழப்பட்டு மூடப்பட்டிருந்த ஜனாதிபதி அலுவலகத்திலும் பார்க்க நாடாளுமன்றம் சார்பு ரீதியில் சிறந்ததாக இருந்து வந்தது (குறிப்பாக ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தின்போது அமைச்சரவை அமைச்சர்களிலும் பார்க்க அதிகாரமிக்கவர்களாக இருந்து வந்த ஜனாதிபதி ஆலோசகர்கள் பொது மக்களுக்கு வகைப் பொறுப்புக் கூறுபவர்களாக இருந்து வரவில்லை).

தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட “சர்வ வல்லமை பொருந்திய” ஜனாதிபதி ஒருவர், சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற குறுகிய கூட்டாட்சியின் போது அவதானிக்கப்பட்டதை போல, கூட்டு அரசாங்கம் மற்றும் அதிகாரப் பகிர்வு என்பவற்றை திரிபுபடுத்தக் கூடியவராக இருந்து வருகின்றார். ஜே.ஆர்.ஜெயவர்தனவும், அவருக்குத் துதிபாடுபவர்களும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி ஆட்சி முறை நாட்டின் ஸ்திர நிலையை மேம்படுத்தி வருவதாகக் கூறி, அதற்குச் சார்பாக வாதிட்டு வந்துள்ளனர். இலங்கையின் பின்புலத்தை பொறுத்தவரையில், ஸ்திர நிலை என்பது, அதிகாரம் தனியொரு நபரின் கைகளில் குவிந்திருப்பதைப் பார்க்கிலும், சித்தாந்த ரீதியிலும், இனத்துவ அடிப்படையிலும் வேறுபட்ட பல அரசியல் கட்சிகளைக் கொண்ட ஒரு அரசாங்கத்தில் காணப்பட முடியும். இலங்கையின் அரசியல் கலாசாரத்தின் பின்புலத்தில் ஸ்திர நிலை என்ற சொல்லுக்கான பொருளை மிகவும் நுட்பமான விதத்தில் நாங்கள் புரிந்து கொள்வது அவசியமாகும். 1982இல் அவதானிக்கப்பட்டதைப் போல, ஸ்திர நிலை மற்றும் சர்வாதிகாரப் போக்கு என்ற பதங்களுக்கான எளிமையான வரைவிலக்கணம் மற்றும் என்பவற்றிற்கிடையில் ஒரு மெல்லிய இழை மட்டுமே இருந்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் அமரக்கூடிய தேசிய ரீதியில் தெரிவு செய்யப்படும் ஒரு பிரதமர் குறித்து அரசாங்கத்தின் ஒரு சில பிரிவுகள் முன்வைத்து வரும் கருத்துகள் கவலைக்குரியதாகும். பிரதமர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட முடியும். ஆனால், அது மறுபுறத்தில் நாடாளுமன்ற கலைப்புக்கு வழிகோலும். ஏற்றுக்கொள்ள முடியாத             அளவுக்கு தனிநபரின் கைகளில் அதிகாரங்களை குவிக்கும் அடிப்படை தவறுகளை கொண்டிருக்கும் இந்த பிழையான கருத்து, 1990 களின் நடுப்பகுதியில் இஸ்ரேலில் பின்பற்றப்பட்டு தோல்வியடைந்ததுடன், பின்னர் அது கைவிடப்பட்டது.

  1. தேர்தல் முறை

ஜேர்மனி, ஸ்கொட்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் பின்பற்றி வரும் தேர்தல் முறையை ஒத்த உண்மையில் கலப்பு முறையான தேர்தல் முறையை இலங்கையும் பின்பற்ற வேண்டுமென்ற விடயத்தில் 1994ஆம் ஆண்டு தேர்தலின்போது ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டிருந்தது. அத்தகைய ஒரு தேர்தல் முறை எளிமையான பெரும்பான்மை முறையின் (ஆகக் கூடிய வாக்குகளை பெறும் நபர் வெற்றியீட்டும் முறை) சிறந்த பண்புக் கூறுகளையும், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் அடிப்படை கோட்பாட்டினையும் கொண்டதாக இருந்து வருகின்றது. அதாவது, வெற்றியீட்டியவர் “அனைத்தையும் அபகரித்துக் கொள்ளும்” கோட்பாட்டுக்கு மாறாக, கட்சிகள் பெற்றுக் கொண்டிருக்கும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தீர்மானிக்கப்பட வேண்டுமென்பதனையே விகிதிசார பிரதிநிதித்துவ முறை எடுத்துக் காட்டுகின்றது. எளிமையான பெரும்பான்மை முறை கட்சிகளுக்கு கிடைத்திருக்கும் வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் நாடாளுமன்றத்தில் அவற்றுக்கு ஒதுக்கப்படும் ஆசனங்களின் எண்ணிக்கை என்பவற்றுக்கு மத்தியில் ஒரு பொருத்தமின்மையை எடுத்து வருகின்றது.

மேலும், இந்தக் கலப்பு தேர்தல் முறை மக்கள் எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடியதாக இருப்பதுடன், அது இலகுவானதாகவும் உள்ளது. அது பெண்களின் பிரதிநிதித்துவத்தைக் (இலங்கை நாடாளுமன்றம் தென்னாசியாவில் ஆகக் குறைந்தளவிலான பெண்களின் பிரதிநிதித்துவம்) கொண்டுள்ளது என்ற முக்கியமான விடயத்தின் அடிப்படையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கப்படுவதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான பொறிமுறைகளையும் கொண்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு தாவுவதனை தடுத்துக் கொள்வதற்கும் அது உதவ முடியும். மேலும், இந்தக் கலப்பு தேர்தல் முறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சித் தலைமைத்துவத்திலிருந்து ஓரளவுக்கு சுதந்திரத்தை கொண்டிருப்பதனையும் உறுதிப்படுத்த முடியும்.

அரசியல் அமைப்புக்கான உத்தேச 20ஆவது திருத்தம் இந்த அம்சங்கள் அனைத்து தொடர்பாகவும் குறைபாடுகளை கொண்டிருந்தது. எனவே, அது முற்றாக புறமொதுக்கப்படுதல் வேண்டும். சட்டத்தரணிகளாலும் கூட புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக அது இருந்து வந்தது. பெரிய அரசியல் கட்சிகளுக்கு அனுகூலமான விதத்தில் அது உருவாக்கப்பட்டிருந்ததுடன், எளிமையான பெரும்பான்மை முறை மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவம் என்பவற்றுக்கிடையிலான ஒரு பொருத்தமான கலவையை வழங்குவதற்கும் அது தவறியிருந்தது. ஏனெனில், அது விகிதாசார பிரதிநிதித்துவதற்குப் பதிலாக எளிமையான பெரும்பான்மை முறைக்கு சாதகமானதாக இருந்து வந்தது.

  1. உரிமைகள் சாசனம்

இலங்கையின் உரிமைகள் சாசனம் சர்வதேச ஒழுங்குகள் மற்றும் தரநியமங்கள் என்பவற்றிலும் பார்க்க குறைந்த மட்டத்திலேயே இருந்து வருகின்றது. எடுத்து விளக்கப்பட்டிருக்கும் உரிமைகள் தொடர்பாக அடிப்படை குறைபாடுகள் காணப்படுகின்றன. கட்டுப்படுத்துதல், வரையறை செய்தல் பிரிவு, அரசியல் பிரிவுகள் அத்தகைய உரிமைகளை கட்டுப்படுத்துவதனை இலகுவாக்குகின்றது.

அ)   உரிமைகள் மற்றும் அவற்றின் வீச்செல்லை என்பன குறைந்தபட்சம் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயங்களுடன் பொருந்திச் செல்லுதல் வேண்டும்.

ஆ)   கட்டுப்படுத்துதல் அல்லது வரையறை செய்யும் பிரிவு (உறுப்புரை 15), சீர்த்தூக்கிப் பார்த்தல் மற்றும் விகிதாசார நிலை என்பவற்றைக் கொண்ட எத்தகைய அளவுகோல்களும் இல்லாத விதத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றம் ஆகிய தரப்புக்கள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடிய சாத்தியப்பாட்டுடன் கூடிய விதத்தில் வரையப்பட்டுள்ளது. பல வருட காலம் இந்தக் குறைப்பாடு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 1990களின் தொடக்கத்தின் போது ஜனாதிபதி பிரேமதாசவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துக் கட்சி மாநாடு கலந்தாராய்வுகளிலும் இது எடுத்துக் காட்டப்பட்டிருந்தது.

இ)   முதலாவது மற்றும் இரண்டாவது குடியரசு அரசியலமைப்புக்கள் இரண்டும் உரிமைகள் சாசனம் மற்றும் தற்போதைய அரசியலமைப்பின் உறுப்புரை 16 என்பவற்றுடன் இணங்கிச் செல்லாத சட்டங்களையும் கூட செல்லுபடியாக்கும் ஒரு சில ஏற்பாடுகளை கொண்டிருந்தன. அரசியலமைப்புவாதத்தின் முதலாவது கோட்பாடுகளுடன் இணங்கிச் செல்லாத இந்த முரண்படும் அம்சம் அகற்றப்படுதல் வேண்டும்.

ஈ)   நிறைவேற்று அதிகாரத் தரப்பினாலும் மற்றும் நிர்வாக தரப்பினராலும் உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமைகள் தொடர்பான விண்ணப்பம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டுமென்ற ஏற்பாட்டினைக் கொண்டிருக்கும் (உறுப்புரை 126), நீதியை அணுகுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளுக்கு முரணானதாக இருந்து வருகின்றது. கொழும்புக்கு வெளியில் வாழ்ந்து வரும் நபர்கள் இந்த நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லையைப் பயன்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த ஏற்பாடு, உச்ச நீதிமன்றம் நாட்டின் இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றம் என்ற முறையில் வகித்து வரும் பாத்திரத்தை உதாசீனம் செய்கின்றது. அதாவது, உச்ச நீதிமன்றம் விடயங்களிலும் பார்க்க சட்டம் தொடர்பான கேள்விகளை கவனத்தில் எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அது நீதித்துறையின் ஒரு முக்கியமான ஒரு துறையில் மேன் முறையீடு செய்யும் ஒரு வாய்ப்பினை வழங்காத முரண்பாட்டினையும் உருவாக்கின்றது. அது சட்டத்தின் ஆட்சியை மீறும் ஒரு செயலாகக் கருதப்பட முடியும். மாகாண உயர் நீதிமன்றங்களில் அடிப்படை உரிமை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதியளித்தல், அத்தகைய பலவீனங்களை போக்குவது மட்டுமன்றி, மனித உரிமைகள் பெரும்போக்குப்படுத்தப்படுவதற்கு உதவ முடியும்.

  1. நீதித்துறை மற்றும் ஏனைய நீதி நிறுவனங்கள் என்பவற்றின் சுயாதீனம்

நீதித் துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகள், குறிப்பாக ஒழுக்காற்று கட்டுப்பாடு மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்றங்களின் நீதிபதிகளை நீக்குதல் என்பன தொடர்பாக மேலும் பலப்படுத்துதல் வேண்டும். எவ்வாறிருப்பினும், கடந்த 20 வருட காலத்திற்கும் மேலாக மிக முக்கியமான நிறுவனத்தின் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் சேதம், இந்த நிறுவனத்தின் நற்பெயர் மற்றும் நம்பகத் தன்மை என்பவற்றை மீள ஸ்தாபிப்பதற்கு அரசியலமைப்பு சீர்த்திருத்தத்திலும் பார்க்க மேலும் பட விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதனை எடுத்துக் காட்டுகின்றது.

நம்பகத் தன்மை குறைந்திருக்கும் மற்றொரு நிறுவனம் சட்டமா அதிபர் திணைக்களமாகும். அது குறிப்பாக சட்ட வரைவுகள் அரசியலமைப்புடன் இணங்கிச் செல்பவையா என்பதனை மீளாய்வு செய்யும் அதன் பாத்திரத்தையும், அரசின் செயல்பாடுகளின் அரசியலமைப்பு பொருத்தப்பாடு குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் பாத்திரத்தையும் வகிப்பதற்கு தகுதியற்றது என்பதனை நிரூபித்துக் காட்டியுள்ளது. உண்மையிலேயே சட்டமா அதிபர் திணைக்களம் அரசியலமைப்பை பாதுகாத்து, அரசியலமைப்புக்கு முரணான சட்டங்களையும், செயல்களையும் நியாயப்படுத்தி வரும் ஒரு நிறுவனமாக நோக்கப்படுகின்றது. பொதுமக்களின் முன்முயற்சிக்கு ஊடாக நீதிமன்றங்களினால் சட்டவாக்கங்களின் அரசியலமைப்பு ரீதியான பொருத்தப்பாடு தொடர்பான மீளாய்வு முறையை மீண்டும் அறிமுகம் செய்து வைப்பதானது, அரசியலமைப்பின் அதியுயர் தன்மையைப் பாதுகாப்பது மட்டுமன்றி, இத்துறை தொடர்பான தனது செயலாற்றுகையை விருத்தி செய்து கொள்வதற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு ஒரு தூண்டுகோலாகவும் இருந்து வர முடியும்.

  1. அதிகார பகிர்வு

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அதிகார பகிர்வு பலவீனமானதாக இருந்து வருவதுடன், வலுவற்றதாகவுமுள்ளது. அதன் காரணமாக மத்திய அரசாங்கம் அதனை பொருட்படுத்தாதிருக்கும் ஒரு நிலையும் காணப்படுகின்றது. இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் முக்கியமான ஏற்பாடுகள் அது அறிமுகம் செய்து வைக்கப்பட்டு 28 வருடங்கள் கடந்த பின்னரும் கூட இன்னமும் அமுல் செய்யப்படாதிருந்து வருகின்றன. எமது அரசியலமைப்பு அதியுயர்வானதா என்ற கேள்வியை மீண்டும் எழுப்புகின்றது. நாடெங்கிலும் மாகாண சபைகள், முதல் அமைச்சர்கள், மாகாண அமைச்சரவைகள் ஆகிய தரப்பினர் இந்தப் பலவீனங்களை அனுபவித்து வந்துள்ளார்கள். பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக, மத்திய அரசாங்கம் அதன் அதிகாரத்தை புறக்கணித்தல் அல்லது மீள பெற்றுக் கொள்ளுதல் என்ற நிலைமை இல்லாத விதத்தில், மாகாண சபைகள் அத்தகைய அதிகாரங்களை பிரயோகிப்பதற்கான வாய்ப்பினைக் கொண்டிருப்பது முக்கியமாகும். ஆனால், 1987இன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் மத்திய அரசாங்கத்தினால் அந்த அதிகாரங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. அல்லது திரும்ப பெறப்பட்டுள்ளன. நாட்டின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பன தொடர்பாக எவையேனும் அச்சுறுத்தல்கள் இருப்பின், அவற்றை தாக்கமான விதத்தில் எதிர்கொள்வதற்கான மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள், எனது அபிப்பிராயத்தை பொறுத்தவரையில் அரசியலமைப்பில் ஏற்கனவே இருந்து வருகின்றன. அவற்றைத் தக்க வைத்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோல்வியை அடுத்து போருக்கான மூல காரணங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு, அதிகாரத்தை உண்மையாக பகிர்ந்தளிக்கும் செயல்முறையும், அதிகாரப் பகிர்வும் மிக முக்கியமான கூறுகளாக இருந்து வருகின்றன. ஜனவரி மற்றும் ஆகஸ்ட் தேர்தல்களில் தமிழ் மக்கள் ஒரு மிதவாத நிலைப்பாட்டிலிருந்து தமது வாக்குகளை அளித்துள்ளார்கள் என்ற விடயத்தை அங்கீகரிப்பதும் மிக முக்கியமாகும். மேலும், தமிழ் மக்கள் தமிழ்த் தேசியவாத கட்சிகள் மற்றும் குழுக்கள் என்பவற்றை அத்தேர்தலில் நிராகரித்திருந்தார்கள். அதிகாரப் பகிர்வு மற்றும் சமத்துவம் தொடர்பான நியாயமான கோரிக்கைகளுக்கு போதியளவில் எதிர்வினையாற்றத் தவறினால் அது தமிழ்த் தீவிரவாத சக்திகளை பலப்படுத்த முடியும்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் காணப்படும் பலவீனங்களை போக்குவதன் மூலம் மாகாணங்களுக்கு உண்மையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுப்பது, சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சமூகத்தினர் ஆகியோருக்கு மத்தியில் நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்புவதற்கான ஒரு சிறந்த வழியாக இருந்து வருகின்றது. உண்மையான அதிகார பகிர்வுக்கூடாக அந்த நல்லெண்ணத்தை உருவாக்குவது, நாட்டின் ஐக்கியம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பன எதிர்கொண்டு வரும் அச்சறுத்தல்களுக்கான மிகச் சிறந்த ஓர் உத்தரவாதமாக உள்ளது.

ஒரு புதிய அரசியல் யாப்பு எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும்? செயன்முறை சவால்

அண்மைய வாரங்களில், அரசியலமைப்பு சீர்திருத்த செயன்முறை தொடர்பான ஒரு விவாதம் இடம்பெற்று வந்துள்ளது. தற்போதைய அரசியலமைப்பில் (உறுப்புரை 82 மற்றும் 83) எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் விதத்தில், அரசியலமைப்பில் ஒரு சீர்திருத்தச் செயன்முறையை முன்னெடுக்கப் போவதனை அரசாங்கம் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்படுதல் வேண்டும். அதன் பின்னர் அந்த அரசியலமைப்பு தேசிய சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்களின் ஒப்புதலைப் பெறுதல் வேண்டும்.

மேலே எடுத்து விளக்கப்பட்டவாறு ஒரு அரசியலமைப்புக்கான தர்க்க நியாயத்தின் பின்புலத்தில், ஓர் அரசியலமைப்பை வரைவு செய்து, நிறைவேற்றும் பொறுப்பினை நாடாளுமன்றத்திடம், நாடாளுமன்ற அரசியல் அமைப்பின் ஒரு படைப்பாக இருந்து வருவதுடன், அது அரசியல் அமைப்புக்கு அல்லது ஒரு தெரிவுக் குழுவிடம் ஒப்படைப்பது இலட்சியபூர்வமான ஒரு செயலாக மாட்டாது. நாடாளுமன்றம் அரசியலமைப்பின் ஒரு சிருஷ்டியாக இருந்து வருவதுடன், அது அரசியலமைப்புக்கு கீழ்ப்படிவதாக இருந்து வருதல் வேண்டும். அதாவது, அரசியலமைப்பு மக்களின் விருப்பினைப் பிரதிபலிக்கும் ஒரு கருவியாக இருந்து வருவதுடன், அது அரசியல்வாதிகளிடமிருந்து மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு வலுவூட்டல் வேண்டும். பொது மக்களின் முனைப்பான தாக்கமான பங்கேற்பு இல்லாத விதத்தில் ஒரு நாடாளுமன்ற குழு அரசியலமைப்பை வடிவமைப்பது மிக மோசமான நலன்களின் மோதல் நிலைமையை எடுத்து வர முடியும். அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது மிகவும் விரிவான அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிக் கொள்ளும் ஒரு அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டிய தேவை இருந்து வருகின்றது என்ற விடயத்தை நன்கு உணர்ந்திருக்கும் தென்னாபிரிக்கா மற்றும் நேபாளம் ஒரு சில நாடுகளில் ஒரு புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கென அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் ஒரு அரசியல் அமைப்புச் சபையை தேர்ந்தெடுத்தல் போன்ற விசேட வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. ஒரு அரசியல் அமைப்புச் சபை, ஒரு புதிய அரசியலமைப்பை தயாரித்து, அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கான அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் அரசியல் அமைப்புக்கு அத்தகைய ஒரு செயன்முறைக்கு ஆதரவளிப்பதற்கு மக்களின் ஆணை இல்லாத நிலையில் அந்த பொருள் இலங்கைக்கு கிடைக்கவில்லை. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் யாப்புகளை தயாரித்தல் தொடர்பான கோட்பாட்டு ரீதியான முரண்பாடுகள் ஒருபுறுமிருக்க, நடைமுறை நிலைமைகள் மற்றும் அரசியல் யதார்த்தங்கள் என்பன நாடாளுமன்றம் அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைக்கு தலைமைத்துவம் வழங்க வேண்டும் என்ற தேவையை எடுத்து வருகின்றன. இந்நாடாளுமன்றம் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் நிலையில் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. அவர்கள் அவ்விதம் செய்யும் பொழுது அரசியலமைப்புக்களை உருவாக்குவதுடன், சம்பந்தப்பட்ட விசேட பொறுப்புக்களை புரிந்து கொள்வார்கள் என்றும், தமது சாதாரண நாடாளுமன்ற கடமைகளிலும் பார்க்க, அவற்றை மேலாக புரிந்து கொள்வார்கள் என்றும் எம்மால் எதிர்பார்க்க முடியும்.

எனவே, அரசியல் அமைப்பு உருவாக்கச் செயன்முறையில் பொதுமக்களின் தாக்கமான பங்கேற்புக்கு ஏற்பாடு செய்யக் கூடிய விதத்திலான ஒரு செயன்முறையை அரசாங்கம் முன்வைத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறையின் போது தமது விசேட பொறுப்பினை உணர்ந்து கொள்ளும் விதத்தில் செயற்படுவதனையும், அதேநேரத்தில் தற்போதைய அரசியலமைப்பை திருத்துதல் மற்றும் ரத்து செய்தல் என்பன தொடர்பான ஒழுங்குமுறைகளை மேற்கொள்வதனை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்றம் ஒரு அரசியல் அமைப்புச் சபையாக (அதற்கென உருவாக்கப்பட்ட ஒரு சபையாக அல்ல) அமர்வுகளை நடத்தி,   ஒரு புதிய அரசியலமைப்பின் சாராம்சத்தில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டுமென உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உச்ச மட்ட பரிசீலனை, பங்கேற்பு என்பவற்றுக்கு வசதி செய்து கொடுக்கும் விதத்தில் இந்தக் கலந்தாராய்வுகள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும். அதனையடுத்து, அரசியல் அமைப்புச் சபை அரசியலமைப்பின் வரைவினை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும். நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் அதனை நிறைவேற்றும். இது இவ்வாறு இடம்பெற்றால், அதனையடுத்து அரசியலமைப்பின் வரைவுக்கு மக்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொள்வதற்கென ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட செயன்முறைக்கு ஒரு சில எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் விடயம் கவலைக்குரியதாகும். ஒரு மாற்றுவழியை முன்வைக்காது, அவர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது தொடக்கம் அதனை எதிர்த்து வந்தவர்கள் ஆவார்கள். மேலும், அவர்கள் அரசியலமைப்பு ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக ஒரு புதிய அரசியல் அமைப்பு தேவை என்ற விடயத்தை முன்னர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரசாங்கம் உத்தேசித்திருக்கும் அரசியலமைப்பு உருவாக்க செயன்முறை குறித்து சந்தேகங்கள் இருந்து வந்தால் மேலே எடுத்து விளக்கப்பட்ட அரசியல் அமைப்பு உருவாக்க முதன்மை கோட்பாடுகளுடன் பொருந்திச் செல்லக் கூடிய மிகச் சிறந்த மாற்று வழிகளை முன் கொண்டு வருவது அவர்களது பொறுப்பாக இருந்து வருகின்றது.

அடிப்படையான அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகள் என்பவற்றை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் உருவாக்கப்பட்டிருக்கும் அடிப்படை பண்புக்கூறுகள் கோட்பாடு இலங்கைக்கும் பொருந்தக்கூடியது என்ற வாதம் நகைப்புக்குரியதாகும். இந்திய அரசியலமைப்பு அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் ஒரு அரசியல் ஜனநாயகத்தை உருவாக்கும் செயன்முறையாக அரசியலமைப்பின் சபையொன்றின் மூலம் இந்திய சுதந்திரத்தையடுத்து உருவாக்கப்பட்டது. இந்திய அரசியல் அமைப்பானது, அச்சந்தர்ப்பத்தில் ஆட்சியிலிருந்த கட்சிக்கு சேவகம் செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பக்கச்சார்பான ஓர் ஆவணம் அல்ல. அது கட்சி அரசியலுக்கு அப்பால் நிற்கும் ஓர் உயர் நிலை ஆவணமாக இருந்து வருவதுடன், பெருமளவுக்கு கருத்தொற்றுமையுடன் உருவாக்கப்பட்ட ஒரு ஆவணமாகவும் உள்ளது. அத்தகைய ஒரு பின்புலத்திலேயே அரசியல்வாதிகளிடமிருந்து மக்களையும், அவர்களது அரசியலமைப்பையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்திற்கென அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு என்ற அமைப்பை இந்திய உச்ச நீதிமன்றம் உருவாக்கியது. இந்த அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டினை பக்கச்சார்பான அடிப்படைகளில் குறைபாடுகளுடன் கூடிய ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் நலன்களை பிரதிபலிக்கும் ஒரு அரசியலமைப்புடன் பொருத்திப் பார்ப்பது எந்த வகையிலும் பொருத்தமான ஒரு செயலாக இருந்து வர முடியாது. மேலும், இலங்கையில் அக்கருத்தை ஆதரிப்பவர்கள், இந்தக் கோட்பாட்டின் அடிப்படை நியாயத்தை சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்பதனையும் அது காட்டுகின்றது.

முடிவுரை

அரசியலமைப்புவாதத்தின் முதன்மை கோட்பாடுகளுடன் பொருந்திச் செல்வதுடன், இத்தகைய பண்புக் கூறுகளையும் உள்ளடக்கக் கூடிய ஒரு அரசியலமைப்பு ஜனாதிபதியும் அவரது கட்சியும், பிரதமரும் அவரது கட்சியும், எதிர்கட்சித் தலைவரும் அவரது கட்சியும் இணைந்து செயற்பட்டு, சிறுபான்மை கட்சிகளின் ஆதரவையும், மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவையும் பெற்றுக்கொண்டால் மட்டுமே நிறைவேற்றிக் கொள்ள முடியும். இந்தக் கட்சிகள் மற்றும் சக்திகள் என்பன அடுத்து வரும் சில மாதங்களில் கருத்து வேறுபாடுகளையும், பகைமைகளையும் கொண்டிருக்கும் என்பது தவிர்க்க முடியாததாகும். எவ்வாறிருப்பினும், அரசியலமைப்பு உருவாக்க செயன்முறைக்கு தலைமைத்துவத்தை வழங்கும் மிக முக்கியமான பொறுப்பை ஏற்கும் விடயம் தொடர்பாக அக்கட்சிகளும், குழுக்களும் தமக்கிடையில் இருக்கும் வித்தியாசங்களை மறந்து, செயற்பட வேண்டிய தேவையுள்ளது. இது புதிய அரசியலமைப்பு நடைமுறைச் சௌகரியத்திற்கென மேற்கொள்ளப்பட்ட ஒரு அரசியல் செயற்பாடாக இருந்து வராதிருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், கடந்த காலத்தின் படிப்பினைகளிலிருந்து கற்றுக் கொள்வதற்கான ஒரு உண்மையான வாய்ப்பாக இருந்து வருவதனையும் உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு பொது மக்களுக்கு அறிவூட்டுதல் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்படுதல் என்பவற்றுடன் கூடிய செயன்முறையுடன் இணைந்து இது முன்னெடுக்கப்படுதல் வேண்டும். மேலும், அரசியலமைப்பு உருவாக்கம், ஜனநாயகம் என்பவற்றை பலப்படுத்துவதற்கும், பல்வேறு அரசியல், இனத்துவம் மற்றும் சமயக் குழுக்களுக்கிடையில் பரந்துபட்ட ஒரு கருத்தொற்றுமையை கொண்டிருக்கக் கூடிய சமூக குழுக்களை உருவாக்குவதற்கும் இது அவசியமாக உள்ளது. 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவிருக்கும் அரசியலமைப்பு மாற்ற செயன்முறை 1995 – 2000 அரசியலமைப்புச் செயன்முறை எதிர்கொண்ட அதே தலைவிதியை எதிர்கொள்ளக் கூடாது. அச்சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதுடன், இச்செயன்முறைக்கு தாக்கமான விதத்தில் ஊறுவிளைவித்தது. எமது அரசியல்வாதிகள் அரசியலமைப்புடன் ‘பகிடி விடுவதனை’ நிறுத்திக் கொள்ள வேண்டும். உண்மையிலேயே பக்கச்சார்ப்பற்ற, கருத்தொற்றுமையுடன் கூடிய உச்சமட்ட சட்டமாக இருந்து வரக்கூடிய ஒரு புதிய அரசியலமைப்பு இலங்கைக்குத் தேவையாக உள்ளது.

(முற்றும்)

இக்கட்டுரையின் ஆங்கில வடிவம் ‘கிரவுண்விவ்ஸ்’ தளத்தில் The Need For a New Constitution For Sri Lanka என்ற தலைப்பில் வௌியாகியுள்ளது.

ரொஹான் எதிரிசிங்க