படம் | HEMMATHAGAMA

இலங்கை 2015ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட ஜனநாயக ரீதியான ஆதாயங்களை மேலும் பலப்படுத்த வேண்டுமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பிரதமர் விக்கிரமசிங்கவும் தமக்கிடையிலான வேறுபாடுகள், பகைமைகள் மற்றும் கருத்தியல் ரீதியான வேறுபாடுகள் என்பவற்றை மறந்து மூன்றாவது குடியரசு அரசியலமைப்பை அறிமுகம் செய்துவைப்பதற்கு அவர்கள் கூட்டாக தலைமைத்துவத்தை வழங்குதல் வேண்டும். 1972 மற்றும் 1978 ஆகிய வருடங்களில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அரசியலமைப்புக்களில் காணப்படும் தவறுகளிலிருந்து படிப்பினைகளை பெற்றுக்கொள்ளும் ஒரு புதிய அரசியலைமப்பு, சர்வதேசத்தின் மிகச் சிறந்த நடைமுறைகளிலிருந்து அதற்குத் தேவையான கூறுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த அரசியலமைப்பு, அரசியலமைப்பியலின் அடிப்படை கோட்பாடுகளுடன் பொருந்திச் செல்ல வேண்டும். நல்லாட்சி, மனித உரிமைகளின் பாதுகாப்பு, தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை என்பவற்றை அறிமுகம் செய்து வைப்பதற்கு இத்தகைய ஓர் அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவைப்படுகின்றது.

எமக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவைப்படுவது ஏன்?

முதல் இரு அரசியலமைப்புக்களும் பக்கச் சார்பானவையாக இருந்து வந்ததுடன், அவை அதியுத்தம தன்மையையும் கொண்டிருக்கவில்லை. ஒரே விதமான அடிப்படை குறைபாடுகளை அவை கொண்டிருந்தன.

அ)   அதிகாரத்தில் இருந்த கட்சியின் நோக்கு மற்றும் கருத்தியல் என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன.

ஆ)   அவை பெருபான்மைவாதத்தை எதிர்பார்பத்றகுப் பதிலாக அதனை வேரூன்ற செய்தன மற்றும்

இ)   அவற்றின் முதன்மைச் செயலூக்கி அல்லது தர்க்க நியாயம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சியாளரின் சௌகரியமாகவே இருந்து வந்தது. மக்களுக்கு வலுவூட்டும் விதத்தில் அவை வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை.

1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு அவசியமாகவே ஐக்கிய முன்னணி அரசின் ஒரு அரசியலமைப்பாக இருந்து வந்தது. தமது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்துச் செல்வதற்கென அரசாங்கங்கள் அரசியல் அமைப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு “கருவியை” அது வழங்கியதாக நீலன் திருச்செல்வம் குறிப்பிடுகின்றார். 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு அதன் முக்கியமான விமர்சகர்களில் ஒருவரான சானக அமரதுங்க எடுத்து விளக்கியதை போல, அதன் பிதாமகராகிய ஜே.ஆர். ஜயவர்தனவின் எதேச்சாதிகார அரசியல் சாணக்கியத்தை அறிமுகம் செய்து வைத்தது. இந்த இரு அரசியல் அமைப்புக்களும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைகளை கொண்டிருந்த அரசாங்கங்களினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தன. அதன் காரணமாக அரசியல் கட்சிகளுக்கிடையிலும், இனக் குழுக்களுக்கிடையிலும் ஒரு கருத்தொற்றுமையை பெற்றுக் கொள்வதற்கான தேவை அவற்றுக்கு இருந்து வரவில்லை. இவ்விரு அரசியல் அமைப்புக்களும் தனியொரு நிறுவனத்திடம் அதிகாரத்தை குவியச் செய்தன (1972 அரசியல் அமைப்பின் கீழ் தேசிய அரசுப் பேரவை அல்லது நாடாளுமன்றத்தின் கைகளில் முழு அதிகாரமும் ஒன்று திரண்டிருந்தது. 1978 அரசியல் அமைப்பின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் அனைத்தும் கையளிக்கப்பட்டிருந்தன). இந்த இரு அரசியல் அமைப்புக்களும் பயனுள்ள விதத்திலான பொது மக்களின் பங்களிப்பு எவையுமில்லாத விதத்திலேயே வரைவு செய்யப்பட்டு, நிறைவேற்றி வைக்கப்பட்டன. குறைபாடுகள் ஒரே தன்மையானவையாக இருந்து வந்த போதிலும், ஒரு அரசியல் அமைப்பை மிக கடுமையாக விமர்சனம் செய்த ஒருவர் இரண்டாவது அரசியல் மூல கர்த்தாகவாக இருந்து வந்தார்.

இலங்கை 2015ஆம் ஆண்டில் ஈட்டிக் கொண்ட ஜனநாயக ரீதியான சாதனைகளைப் பலப்படுத்திக் கொள்வதிலும், நாடு 1982 தொடக்கம் அனுபவித்து வந்த எதேச்சாதிகார ஆட்சி முறை மீண்டும் தலை தூக்குவதை தடுத்துக் கொள்வதிலும் உண்மையில் ஆர்வம் காட்டுவதாக இருந்து வந்தால், அது அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும், தாக்கமான விதத்திலான பரீட்சிப்புக்கள், கட்டுப்பாடுகள் என்பவற்றை கொண்டிருப்பதுடன், மக்களுக்கு வலுவூட்டும் புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகம் செய்து வைத்தல் வேண்டும். அப்பொழுது மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல்வாதிகள், இரு தேர்தல்களுக்கிடையிலான காலப் பிரிவின்போது மக்களுக்கு பொறுப்புக் கூறக் கூடியவர்களாக இருந்து வருவார்கள். மக்களுக்கு பதிலிறுக்கக் கூடிய வகைப் பொறுப்புடன் கூடிய ஆட்சியை ஏற்படுத்துவதற்கு பக்கச்சார்பற்ற, கருத்தொற்றுமையுடன் கூடிய ஆவணமொன்றாக ஒரு அரசியல் அமைப்பு தேவைப்படுகின்றது.

ஒரு அரசியலமைப்பை மதிப்பீடு செய்வதற்கான அளவுகோல்

ஓர் அரசியலமைப்பு, அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி வரும் ஆட்களிடமிருந்து பொது மக்களை பாதுகாத்துக் கொள்வதனையும், மக்கள் எதிர் ஆட்சியாளர்கள் என்ற நிலையில் மக்களுக்கு வலுவூட்டுவதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “விடுதலை அரசியலமைப்பு” என்ற தனது முக்கியமான நூலில் பிரீட்ரிக் ஹேக் இந்த அடிப்படை குறிக்கோளை பின்வரும் விதத்தில் எடுத்துக் காட்டியிருந்தார்:

அரசியலமைப்பை உருவாக்கும் ஒரு கூட்டு என்ற முறையில் தமது பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் சட்டவாக்க சபையின் அதிகாரங்களை நிர்ணயிப்பதற்கான பிரத்தியேக உரிமையை மக்கள் கொண்டுள்ளார்கள் என்ற விடயம், அனைத்து அதிகாரங்களும் மக்களிடமிருந்தே வருகின்றன என்ற சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால், மீண்டும் மீண்டும் இடம்பெறும் தேர்தல்களில் இது பெருமளவுக்குக் குறிப்பிடப்படுவதில்லை. அந்த வகையில், நாடாளுமன்றத்திலிருந்தும், அதேபோல, அரசாங்கத்தின் ஏனைய பிரிவுகளிலிருந்தும் தோன்றக்கூடிய தான்தோன்றித்தனமான செயல்களிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளும் கருவியொன்றாகவே அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

ஒரு அரசியலமைப்பு அந்தக் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால், அரசியலமைப்பை உருவாக்கும் செயன்முறையில் மக்கள் முனைப்பான விதத்தில் பங்கேற்று, அதில் ஈடுபாடு கொண்டிருத்தல் வேண்டும். 1972 மற்றும் 1978 ஆகிய வருடங்களில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்களில் ஆட்சியாளருக்குச் சார்பான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குச் சார்பான பாரபட்ச நிலைகள் காணப்பட்டன. அவை அரசியலமைப்பின் மக்களுக்கு வலுவூட்டும் அம்சங்களை புறக்கணித்திருந்தன. இந்த அரசியலமைப்புக்கள் அரசாங்கத்தினால், அரசாங்கத்திற்கென உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்களாக இருந்து வந்தன. அதே தவறு 2016ஆம் ஆண்டிலும் இடம்பெறாதிருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும்.

அரசியலமைப்புவாத கோட்பாடு, ஒரு அரசியல் அமைப்பின் குறிக்கோள்கள் என்னவாக இருந்து வர வேண்டுமென்பதனை எடுத்துக் காட்டுகின்றது.

  1. அது சமூகத்திற்கான ஒரு அரசியல் சட்டகத்தை வழங்குதல் வேண்டும். அல்லது நாட்டின் ஆளுகைக்கான நிறுவன ரீதியான ஒரு கட்டமைப்பை வழங்குதல் வேண்டும்.
  2. அது தனி நபரின் சுதந்திரம் மற்றும் சுயாதீனம் என்பவற்றையும், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை – இனத்துவ மற்றும் சமயச் சிறுபான்மை சமூகங்களின் மட்டுமன்றி அனைத்து சிறுபான்மை சமூகத்தவரின் உரிமைகளை – பாதுகாத்தல் வேண்டும்.
  3. சமூகம் ஆளப்பட வேண்டிய விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கியதாக அது இருந்து வருதல் வேண்டும்.

ஒரு அரசியலமைப்பு இந்த 3 குறிக்கோள்களையும் எவ்வாறு சாதித்துக் கொள்கின்றது என்ற விடயத்தின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றது. இலங்கையில் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பாக இடம்பெற்று வரும் விவாதம் முழுவதுமாக முதலாவது குறிக்கோளின் மீதே கவனம் செலுத்தி வந்துள்ளது. அதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அமைப்பு ஜனாதிபதியாக இருந்து வர வேண்டுமா அல்லது நாடாளுமன்றமாக இருந்து வர வேண்டுமா என்ற விடயத்திலேயே அது கவனம் செலுத்தியுள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முறை, ஆகக் கூடிய வாக்குகளை பெறுபவர் வெற்றியீட்டும் முறையை கொண்டிருக்க வேண்டுமா அல்லது விகிதாசார முறையை கொண்டிருக்க வேண்டுமா போன்ற விடயங்களே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இவை முக்கியமான பிரச்சினைகளாக இருந்து வரும் அதேவேளையில், ஏனைய இரு குறிக்கோள்களும் முக்கியமானவை என்ற விடயத்தை நாங்கள் அங்கீகரிப்பது அவசியமாகும்.

எமக்கு ஒரு அரசியலமைப்பு தேவைப்படுவது ஏன்? அரசியலமைப்பின் வரலாற்றை நாம் நோக்கினால், அதாவது பெரும்பான்மைவாதத்தின் மீது ஒரு கட்டுப்பாட்டை எடுத்துவரக் கூடிய ஒரு கருவியாகவே அரசியலமைப்பு நோக்கப்பட்டு வந்திருப்பதனை காண முடியும். ஜனநாயக அமைப்பொன்றில் பெரும்பான்மையின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வது மிக முக்கியமான கோட்பாடுகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக, மனித உரிமைகள் போன்ற ஒரு சில விடயங்கள் தொடர்பாக பெரும்பான்மை மூலம் முடிவுகளை எடுக்கும் செயன்முறை பொருத்தமற்றது என்ற விடயம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அதன் விளைவாக ‘பெரும்பான்மை கொடுங்கோன்மை” தோன்ற முடியும். எனவே, அத்தகைய பிரச்சினைகள் பெரும்பான்மையின் மூலம் முடிவுகளை எடுக்கும் சட்ட சபையின் பரப்பெல்லைக்கு வெளியில் எடுத்து வரப்பட வேண்டும் எனவும், மக்களினால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தின் நியாயாதிக்க எல்லையிலிருந்து அகற்றப்பட வேண்டுமென்றும், அவை அரசியலமைப்பொன்றின் பரப்பெல்லைக்குள் எடுத்து வரப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஓர் உதாரணம், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தும் கூட மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கென அரசியலமைப்பில் உரிமைகள் தொடர்பான சாசனமொன்றை உள்ளடக்குவதாகும். எனவே, அரசியலமைப்பு, ஒரு சில முக்கியமான விடயங்களை நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் நிறைவேற்று பிரிவுகள் என்பவற்றின் கரங்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஹார்வட் சட்டக் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதியான யூஜின் ரொஸ்டோ அதனை “பெரும்பான்மைவாதத்தை எதிர்கொள்ளும் ஆவணம்” என எடுத்து விளக்கியிருந்தார்.

அண்மைய வருடங்களில் அரசியலமைப்பொன்றின் விழுமியங்கள், கோட்பாடுகள் மற்றும் தர நியமங்கள் என்பன எடுத்து விளக்கப்பட்டிருந்தன. உலகின் மிக முற்போக்கான அரசியலமைப்புக்களில் ஒன்றாகக் கருதப்பட்டு வரும் தென் ஆபிரிக்காவின் 1996ஆம் ஆண்டின் அரசியலமைப்பு இதற்கான ஒரு மிகச் சிறந்த உதாரணத்தை வழங்குகின்றது. அந்த அரசியலமைப்பின் உறுப்புரை 1 பின்வருமாறு பிரகடனம் செய்கின்றது: “தென் ஆபிரிக்கா பின்வரும் விழுமியங்களின் மீது உருவாக்கப்பட்ட ஒரு குடியரசாகும்”. அதன் பின்னர் அது அத்தகைய விழுமியங்களின் ஒரு பட்டியலை முன்வைக்கின்றது. அது மானிட கண்ணியம், இனவாத எதிர்ப்பு, ஆண் – பெண் பாலினப் பாகுபாடு காட்டாமை, சட்டத்தின் ஆட்சி, பல்கட்சி ஜனநாயகம், பொறுப்புக்கூறுதல், திறந்த தன்மை, மக்களுக்கு பதிலிறுத்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றது. உறுப்புரை 2 பின்வருமாறு குறிப்பிடுகின்றது: “அரசியலமைப்பு அதி உயர்வானதாகும்.                 அரசியலமைப்புடன் பொருந்திச் செல்லாத அனைத்துச் சட்டங்களும் செல்லுபடியற்றவையாகும்.”

தென் ஆபிரிக்க அரசியலமைப்பு மற்றும் இலங்கையின் அரசியலமைப்பு என்பவற்றின் முதல் இரு உறுப்புரைகளுக்கிடையில் காணப்படும் வேறுபாடு ஆச்சரியமூட்டத்தக்கதாகும். தென் ஆபிரிக்க அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகள் என்பவற்றை எடுத்துக் காட்டுவதுடன், அவை அதி உயர்வானவை எனக் குறிப்பிடுகின்றது. இலங்கையின் அரசியலமைப்பு அதிகாரம் குறித்தும், அதிகாரத்தை பிரயோகிப்பவர் யார் என்பது குறித்தும் முழுமையாக கவனம் செலுத்துகின்றது.

அரசியலமைப்பு உண்மையிலேயே அதி உயர்வானதாக இருந்து வருதல் வேண்டும்

ஓர் அரசியலமைப்பு ஒரு நாட்டின் அதியுயர் சட்டமாக இருந்து வருகின்றது. ஆனால், இந்த அடிப்படை கோட்பாடும், முதன்மையான கோட்பாடும் இலங்கையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்களின் மூல கர்த்தாக்களினால் நிராகரிக்கப்பட்டிருந்தன. 1978ஆம் ஆண்டின் அரசியல் சட்ட அமைப்பு ஒரு அரசியலமைப்பின் அதியுயர் நிலையை புறக்கணிப்பது மட்டுமன்றி, அரசியலமைப்புடன் கூடிய ஜனநாயக நாடுகளில் முன்னொருபோதும் இருந்து வராத விதத்திலான 3 உறுப்புரைகளைக் கொண்டுள்ளது. அந்த உறுப்புரைகள் 16, 80 (3) மற்றும் 84 என்பனவாகும்.

இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 16, தென்னாபிரிக்க அரசியலமைப்பின் உறுப்புரை 2க்கு நேர்மாறான ஒரு கூற்றினை முன்வைக்கின்றது. தற்போதைய சட்டங்கள் அனைத்தும் – எழுத்து மூலமான சட்டங்கள் மற்றும் எழுதப்படாத சட்டங்கள் அனைத்தும் – இலங்கையின் அதியுயர் சட்டமான அரசியலமைப்புக்கு முரணானவையாக இருந்து வந்தாலும் கூட, செல்லுபடியானவையாகும்.

உறுப்புரை 80 (3), நாடாளுமன்றம் அரசியலமைப்புக்கு முரணான ஒரு சட்டத்தை உருவாக்கியுள்ளது என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தினால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு மக்கள் சவால் விடுப்பதனை தடுக்கின்றது. இது இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, ஐக்கிய அமெரிக்க, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் கொண்டிருக்கும் ஓர் உரிமையாகும். அனைத்து அரசியலமைப்பு ரீதியான ஜனநாயகங்களும் இதனை கொண்டிருப்பதுடன், இது மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அவர்களுடைய அரசியலமைப்பின் அதியுயர் தன்மையை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் மிக முக்கியமாகத் தேவைப்படுகின்றது. சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இருந்து வந்த இந்த உரிமை, 1972ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பை உருவாக்கியவர்களினால் அகற்றப்பட்டதுடன், தற்போதைய     அரசியலமைப்பின் கீழும் அது அவ்வாறே இருந்து வருகின்றது.

நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 84, நாடாளுமன்றம் அரசியலமைப்புக்கு முரணான சட்டங்களை எவ்வாறு அறிமுகம் செய்து வைக்க முடியுமென்ற விடயம் தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்குகின்றது.

அரசியலமைப்பு அதியுயர்வானது என்ற கோட்பாடு தொடர்பாக, இலங்கையின் அரசியலமைப்புக்களை உருவாக்கியவர்கள் எத்தகைய அர்ப்பணிப்புணர்வையும் கொண்டிருக்கவில்லை என்ற விடயத்தை இந்த 3 உறுப்புரைகளும் எடுத்துக் காட்டுகின்றன. புதிய அரசியலமைப்பு சர்வதேசத்தின் மிகச் சிறந்த நடைமுறைகளுடனும், அரசியல் அமைப்பு வாதத்தின் அடிப்படை கோட்பாடுகளுடனும் பொருந்திச் செல்வதாகவும், நல்லாட்சி மற்றும் பொறுப்புக் கூறும் நிலை என்பவற்றை மேம்படுத்தக் கூடியதாகவும் இருந்து வர வேண்டுமானால், இந்த 3 உறுப்புரைகளும் புதிய அரசியலமைப்பின் பாகங்களாக இருந்து வரக்கூடாது.

மேலே எடுத்துக் காட்டப்பட்ட மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எத்தகைய ஒரு ஆர்வத்தையும் காட்டியிருக்கவில்லை என்ற விடயம் வியப்பூட்டுவதல்ல. இந்த உறுப்புரைகள், அரசியல்வாதிகளின் செலவில் மக்களின் அதிகாரங்களை பலப்படுத்துவதுடன், அரசாங்கத்தின் அதிகாரம் எவ்வாறு பிரயோகிக்கப்பட வேண்டுமென்பது குறித்த அரசியலமைப்பு ரீதியான நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளை விதிக்கின்றது.

(தொடரும்)

ரொஹான் எதிரிசிங்க