படம் | srilankaguardian

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது அமெரிக்கா மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவரலாமென்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியங்ஹோ (Wu Jianghao) இலங்கைக்கான, சீனாவின் ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையின் முன்னேற்றங்களை வரவேற்றிருக்கும் சீனா, இலங்கை அதன் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு அவகாசம் கொடுக்கப்பட வேண்டுமென்றும் தெவித்திருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையில் சீனா மீண்டும் உறுப்புரிமையை பெற்றிருக்கின்ற பின்புலத்தில் சீனாவின் மேற்படி அறிவிப்பானது, இலங்கையின் மீதான எந்தவொரு புற அழுத்தங்களின் போதும் சீனா எப்போதும் இலங்கையின் பக்கமாகவே நிற்கும் என்னும் செய்தியையே வெளிப்படுத்தியிருக்கிறது. சமீபகாலமாக இலங்கையின் மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவருகின்றது என்னும் பார்வையே அரசியல் நோக்கர்கள் மத்தியில் காணப்படுகிறது. மேற்படி சீனச் செல்வாக்கை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கிலேயே அமெரிக்காவின் தலைமையிலான அழுத்தங்களும் தொடர்க்கின்றன என்பதே அவ்வாறான அரசியல் நோக்கர்களின் கணிப்பாகும். ஆனால், நிலைமைகளை உற்றுநோக்கும்போது ஒரு விடயம் தெளிவாகிறது. அதாவது, மேற்குலக அழுத்தங்கள் தொடருமானால் இலங்கை விரும்பியோ, விரும்பாமலோ அதிகம் சீனாவை நோக்கிச் சாய வேண்டியதொரு நிலைமையே உருவாகலாம். ஏனெனில், இன்றைய அரசின் மீதான ஒரு பாதுகாப்பு கவசமாக சீனாவே தொழிற்பட்டுவருகிறது. ஏனைய பலம்பொருந்திய சக்திகள் தங்களின் நலன்சார்ந்து காய்களை நகர்த்திவருவது போலவே சீனாவும் தனது மூலோபாயத் தேவைகளை கருத்தில் கொண்டு இயங்குகின்றது.

சீனா அடிப்படையிலேயே மனித உரிமை விடயங்களுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்கும் ஒரு மரபை கொண்டிருக்கவில்லை. மேற்குலகின் மனித உரிமைசார் தலையீடுகளை ஒரு நலன்சார் அரசியல் தலையீடாகவே சீனா புரிந்து வைத்திருக்கின்றது. 1949ஆம் ஆண்டு அறிமுகமான, அனைத்துலக மனித உரிமைகள் பட்டயத்தை உருவாக்குவதில் சீனாவின் அறிஞர்கள் இருவரும் இடம்பெற்றிருந்தனர். ஆனால், காலப்போக்கில் சீனா, மனித உரிமைசார் விடயங்கள் தமது சமூக அமைப்பிற்கு பொருத்தமான ஒன்றல்ல என்னும் பார்வையே வெளிப்படுத்தி வந்திருக்கிறது. குறிப்பாக சீனாவின் ஒரு மாநிலமான திபெத் பிரச்சினையில் மேற்குலகு காட்டிவரும் அக்கறையை தமது இறையாண்மையின் மீதான தலையீடாகவே சீனா கருதுகிறது. ஒரு வகையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது அத்தியாவசியமானது என்றுரைக்கும் உலகிற்கு, அமெரிக்கா தலைமை வகித்து வருகின்றதெனின் மாறாக, தேசிய நலன்களுக்கு முன்னால் மனித உரிமைகள் இரண்டாம் பட்சமானவை என்றுரைக்கும் நாடுகளுக்கு சீனாவே தலைமை தாங்கிவருகின்றது எனலாம். உண்மையில், மனித உரிமைசார் விடயங்களில் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில் ஒரு பணிப்போர் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவருகின்றது. இது தற்போது இலங்கை விடயத்தில் வெளிப்படையாகவே தெரிகிறது.

சீனாவிற்கும், இலங்கைக்குமான உறவிற்கு நீண்டகால வரலாறு இருப்பினும் கூட, உள்நாட்டு யுத்தம் நிறைவுற்ற பின்னனியில்தான் கொழும்பிற்கும், பீஜிங்கிற்கும் இடையிலான உறவில் அதிக நெருக்கம் ஏற்பட்டது. ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் வழிநடத்தப்பட்ட இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தீர்மானகரமான இறுதி யுத்தத்தின்போதுதான் மேற்படி நெருக்கத்திற்கான அடித்தளம் போடப்பட்டது. பெருந்தொகையான ஆயுத உதவிகளை சீனா இக்காலப்பகுதியில் வழங்கியிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பு பலவீனப்படுத்தப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டுமென்பதில் அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தபோதும், அதனை செயல்படுத்துவதற்கான அதிக ஆயுத உதவிகளை செய்த நாடாக சீனாவே இருந்தது. இறுதி யுத்தத்தின்போது ஆயுத ரீதியாக உதவிகளை வழங்கியதன் மூலம் நெருக்கமடைந்த சீனா, யுத்தத்திற்கு பின்னரான சூழலில், பொருளாதார ரீதியாகவும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. இந்த பின்னனியில்தான், அதுவரை இலங்கையின் முதல்நிலை கொடையாளராக விளங்கிவந்த ஜப்பானின் இடத்தை சீனா சுவீகரித்துக்கொண்டது. எனவே, இந்த பின்புலத்திலேயே தனது நட்பு நாடான, பொருளாதார பங்காளியான இலங்கை அரசை பாதுகாக்கும் முயற்சியிலும் சீனா முதலிடத்தை வகித்துவருகின்றது.

இலங்கையின் மீதான சீனாவின் அதிக நெருக்கம் என்பது, அதன் முதல் இலக்கில் இந்தியாவின் உடனடி அயல்நாடொன்றின் மீதான செல்வாக்காகவே அமையும். இந்தியாவைப் பொருத்தவரையில மேற்படி நிலைமையானது சற்று நெருடலானதொரு விடயமாகவே நோக்கப்படும் என்பதே பரவலான கருத்து. இந்திய தேசிய பாதுகாப்பு ஆய்வாளர்கள் பலரும், இது குறித்து சுட்டிக்காட்டியிருக்கின்றனர். ஆனால், இலங்கையின் புரிதலில் இது தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத ஒரு விடயமாக நோக்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகம் எனலாம். யுத்த வெற்றிக்கு சொந்தமான ஆளும் அரசின் மீது அமெரிக்கா அழுத்தங்களை தொடர்ந்துவரும் நிலையில், இந்தியாவும் அதற்கு முண்டுகொடுத்துவருவதே இதற்கான பிரதான காரணம் ஆகும். ஆனால், இலங்கையின் மீது கொண்டுவரப்பட்ட அமெரிக்க பிரேரணைகளை ஆரம்பம் முதலே எதிர்த்துவரும் சீனா, மேற்படி பிரேரணையை திணிக்கப்பட்ட பிரேரணை (Impose Pressure) என்று வர்ணித்துவருவதுடன், தங்களின் சொந்த விடயங்களை கையாளும் ஆற்றல் இலங்கை மக்களுக்குண்டு என்பதே சீனாவின் வாதமாக இருந்துவருகிறது. இதுவே கொழும்பு மற்றவர்களைக் காட்டிலும் சீனாவையே அதிகம் நம்பியிருக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது. உலகின் பலம்பொருந்திய சக்தியான அமெரிக்காவின் அனுசரனையில் கொண்டுவரப்படும் பிரேரணைகள், பிராந்திய சக்தியும், இலங்கையின் உடனடி அயல்நாடுமான இந்தியாவினால் ஆசீர்வதிக்கப்படுகின்ற நிலையில், கொழும்பு அதிகம் பீஜிங்கை நோக்கி சாய்வது தவிர்க்க முடியாதவொன்றாகவே அமையலாம்.

இந்த இடத்தில் பிறிதொரு விடயத்தையும் நோக்க வேண்டியிருக்கிறது. 2013 கொமன்வெல்த் மாநாட்டின்போது டேவிட் கமரோன், மேற்குலகின் சார்பில் இலங்கையை எச்சரித்தபோது சீனாவும் மனித உரிமை விடயத்தில் இலங்கை முன்னேற்றங்களை காண்பிக்க வேண்டுமென்று அறிவித்திருந்தது. மேற்படி அறிக்கை, அந்த நேரத்தில் பலராலும் ஆச்சரியத்துடன் நோக்கப்பட்டது. அதுவரை இலங்கைக்கு உறுதியான அதரவை வெளிப்படுத்திவந்த சீனா, ஏன் அத்தகையதொரு அறிவித்தலை வெளியிட்டது? சிறிய நாடுகளுடன் நட்புறவு கொள்வதை தனது பிரதான வெளிவிவகார இலக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் சீனா, அந்த சந்தர்ப்பத்திலும் இலங்கையை பாதுகாக்கும் நோக்கிலேயே மேற்படி அறிவித்தலை வெளியிட்டிருந்தது. இதன்போது கருத்து தெரிவித்திருந்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குயின் கங் (Qin Gang) இது கொமன்வெல்த் மாநாட்டுக்குள் பேசப்படும் ஒரு விடயம். ஆனால், மனித உரிமை விடயங்கள் தொடர்பான உரையாடல்கள் மற்றும் அது தொடர்பான தொடர்பாடல்கள் என்பவை குறித்த நாடுகளிள் அளவில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். குறித்த நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு அமைவாகவே. அந்த நாடுகளின் மனித உரிமைகளுக்கான பாதுகாப்பும் அமைந்திருக்கும். எனவே, குறித்த நாடுகள் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்குமான நடவடிக்கைளை மேற்கொள்ளும்போது ஏனைய நாடுகள் அதற்கான உதவிகளை வழங்க வேண்டும் என்றவாறு குறிப்பிட்டிருந்தார். உண்மையில் இங்கு அடிகோடிட வேண்டிய விடயம், மேற்படி சீனாவின் அறிவிப்பானது, டேவிட் கமரோனின் கடும்தொனி அறிவித்தல் மீதான நாசுக்கான கண்டனம் என்பதேயாகும்.

எனவே, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் அழுத்தங்கள் இறுதியில் இலங்கை, அதிகம் சீனாவை நோக்கித் தள்ளுவதாகவே முடிவுறலாம். எனவே, அத்தகையதொரு இக்கட்டு நிலைக்குள் கொழும்பை தள்ளிவிடும் சூழலை இந்தியா விரும்புமா? அத்தகையதொரு தவிர்க்க முடியாத கையறுநிலைக்குள் கொழும்பு செல்வதை, அமெரிக்கா உடனடியாக விரும்புமா? அவ்வாறானதொரு இக்கட்டு நிலைமை தோன்றுமிடத்து அதன் அடுத்த கட்டம் எவ்வாறாக அமையலாம்? எனவே, இன்றைய சூழலில் மேற்படி கேள்விகளின் ஊடாகவே நிலைமைகளை உற்று நோக்க வேண்டியிருக்கிறது.

யதீந்திரா

DSC_4908