படம் | jdsrilanka
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரும் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்திய தேர்தலும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இலங்கை அரசு மாகாண சபைத் தேர்தல்களிலும் வெற்றிபெற வேண்டும், ஜெனீவா மனித உரிமைச் சபையிலும் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற இரு வகையான சிந்தனைகளுடன் செயற்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் செயலாளர்களான அமைச்சர் மைத்திபால சிறிசேன, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தேர்தல் ஏற்பாடுகளை செய்கின்றனர்.
அமைச்சர் குழுக்கள்
அமைச்சர்களான பேராசிரியர் பீரிஸ், மஹிந்த சமரசிங்க ஆகியோர் ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுக்கின்றனர். அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார, அமைச்சர் திஸ்ஸவிதாரனவின் ஆலோசணையுடன் வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் இருந்து அரசுக்கு சாதகமாக பேசக்கூடிய தமிழ் உயர் அதிகாரிகளை ஜெனீவாக்கு செல்லும் குழுவில் சேர்ப்பது குறித்து நடவடிக்கை எடுக்கிறார்.
அதற்காக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள அரச செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களில் பணிபுரியும் பல தமிழ் அதிகாரிகளுடன் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார கலந்துரையாடி உள்ளார் என்றும் தெரியவருகின்றது. அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் செல்வாக்குள்ள உறுப்பினர்களை அரசின் பக்கம் இழுத்து மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றன. அரசுக்கு ஆதரவான முறையில் பேசக்கூடிய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களையும் ஜெனீவாவுக்கு அழைத்துச் செல்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் நிபந்தனை
ஜெனீவாவில் அரசுக்கு சார்பாக நேரடியாகவோ மறைமுகமாகவோ பேச வேண்டுமானால் ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கின்ற மூத்த உறுப்பினர்களை அரசு பக்கத்துக்கு உள்வாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட செல்வாக்குள்ள உறுப்பினர்களை அரசின் பக்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க மூத்த அமைச்சர் ஒருவரிடம் நேரடியாகவே எதிர்ப்பை வெளியிட்டார். அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டது எனவும் கட்சித் தகவல்கள் குறிப்பிட்டன.
தென்பகுதி அரசியல் கட்சிகள் தூரநோக்குடன் செயற்பட்டு ‘இலங்கையின் இறைமை’, ‘ஒற்றை ஆட்சி’ என்பதை தக்கவைக்க சர்வதேசத்துடன் போராடுகின்றன. மேலும் ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய தேசிய கட்சி நிபந்தனைகளை முன்வைத்துள்ளது? ஆனால், தமிழர்தரப்பு முன்நகர்வுகள் தேக்கநிலையில்…
எதிர்க்கட்சி அரசியலை இல்லாமல் செய்கின்ற ஒரு நிலையில் ஜெனீவாவில் இலங்கையின் இறைமையை காப்பாற்றுவது என்ற போர்வையில் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாது என்ற கருத்து கட்சியின் மூத்த உறுப்பினர்களினால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆனால், சஜித் பிரேமதாச போன்றவர்கள் ஜெனீவாவில் இலங்கையின் இறைமையை நேரடியாகவே காப்பாற்றவேண்டும் எனறும் கருதுகின்றனர். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு எதிராக செயற்படுவதற்கு ஜெனீவாவை ஒரு கருவியாக பயன்படுத்த சஜித் அணி முற்படுகின்றது என்ற கருத்துக்களும் நிலவுகின்றன. ரணில்-சஜத் என்ற இரு முரண்பாடுகளை பயன்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமக்கு சாதகமான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றார் என்பது கண்கூடு.
லக்ஸ்மன் கிரியெல்ல மறுப்பு
இந்த நிலையில், ஜெனீவாவுக்கு செல்லவுள்ள அரச குழுவில் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவும் செல்லவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அதனை அவர் மறுத்துள்ளார். இருந்தாலும் ஜெனீவா செல்வது தொடர்பாக லக்ஸ்மன் கிரியெல்ல அரச அதிகாரி ஒருவருடன் கலந்துரையாடினார் என சிங்கள இணையதளம் ஒன்று கூறியுள்ளது. எவ்வாயினும் ஜெனீவா, மாகாண சபைத் தேர்தல்கள் என்ற இரண்டு அவதானிப்புகளில் அரசு தமது நேரத்தை தற்போது கூடுதலாக செலவிடுகின்றது.
ஜெனீவாவில் மனித உரிமைச் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை தனியே மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கான குற்றப் பிரேரணை அல்ல, இது இலங்கையின் இறைமைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்ற கருத்தை அரசு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கூறி வருகின்றது. இலங்கை அரசுக்கும் இலங்கை மக்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தக்கூடியது. ஆகவே, ஜெனீவா பிரேரணையை முறியடிக்க கட்சி அரசியலுக்கு அப்பால் ஒத்துழைப்பு அவசியம் என்ற கருத்துக்கள் மூத்த அமைச்சர்களினால் முன்வைக்கப்படுகின்றன.
ஏற்றுக்கொள்ளும் நிலையில் ரணில்
அரசு முன்வைக்கின்ற மேற்படி கருத்துக்களை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமங்க ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்பதை ஐக்கிய தேசிய கட்சியின் சில உறுப்பினர்களின் கருத்துகள் எடுத்துக்கூறுகின்றன. ஏற்கனவே, போர் நடைபெற்றபோது விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டும் என்பதில் ஐக்கிய தேசிய கட்சி உறுதியாக இருந்தது. அந்த அடிப்படையில் இம்முறை ஜெனீவா பிரேரணை தொடர்பிலும் அரசுக்கு ஏதோ ஒரு வழியில் ஒத்துழைப்பு வழங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. லக்ஸ்மன் கிரியெல்ல மறுத்தாலும் அவர் ஜெனீவாவுக்கு செல்லவுள்ளார் என்பதும் அரச குழுவில் இல்லாது விட்டாலும் அங்கு சென்று இலங்கையின் இறைமையை காப்பாற்றக்கூடிய கருத்துக்களை மனித உரிமைச் சபை பிரதிநிதிகளிடம் முன்வைப்பார் எனவும் அறிய முடிகின்றது.
இலங்கை அரசை பொறுத்தவரை அரச குழுவில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்காது விட்டாலும் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு எதிராக ஜெனீவாவில் மறைமுகமாகவேனும் பேசினால் போதும் என்ற நிலைப்பாடு உள்ளது. அதற்கு ஏற்பவே தற்போது முன்நகர்வுகள் இடம்பெறுகின்றன. ஜே.வி.பி இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்காது விட்டாலும் சர்வதேச நாடுகள் இலங்கை மீதும் கடும் அழுத்தம் கொடுத்து வடக்கு கிழக்கில் ஏதேனும் ஒரு தீர்வு வழங்கப்படுவதை விரும்பமாட்டார்கள். நேரடியாக அரசுக்கு சார்பாக பேசாது விட்டாலும் மறைமுகமாக மனித உரிமைச் சபையின் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையின் இறைமையை காப்பாற்றக்கூடிய வகையில் விளக்கமளிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இறைமை – ஒற்றையாட்சி
எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி. ஆகியவற்றை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ஷ அரசை கவிழ்க்க வேண்டும் அல்லது அதற்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடுகள் இருந்தாலும் வடக்கு-கிழக்கு பிரச்சினை விடயத்தில் ‘இலங்கையின் இறைமை’, ‘ஒற்றையாட்சி’ என்ற கோட்பாடுகளை காப்பாற்றி தனிச் சிங்களம் என்ற சுயமரியாதைக்கு வலுச்சேர்க்கின்றனர். அந்த அடிப்படையில்தான் அவர்களின் அரசியல் நகர்ந்து செல்கின்றது. இதன்காரணமாவே 13ஆவது திருத்தச் சட்டத்தை கூட ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்த அரசு விரும்பவில்லை. ஏனெனில், சிறிய தீர்வு ஒன்று அமைந்தாலும் எதிர்க்கட்சிகள் அதனை முன் நிறுத்தி பிரச்சாரம் செய்து சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுவிடுவார்கள் என்ற அச்சம் அரசுக்கு உள்ளது. இந்த சுழற்சி முறையிலான அச்சம் 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து மாறி மாறி பதவிக்கு வருகின்ற ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசுகளிடம் இருந்து வருகின்றது.
யுத்தம் கூட அந்த சிந்தனையின் அடிப்படையிலேதான் 30 ஆண்டுகள் நடத்தப்பட்டது. பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழத் தேசிய கூட்டமைப்பு பட்டறிவை இன்னமும் பெறவில்லை என்ற முடிவுக்கு வரலாம். 2012-13ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம் இலங்கை அரசுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போவதில்லை என்பதும் யாவருக்கும் தெரிந்த கதைதான். ஆனாலும், அதனை எதிர்கொள்ள அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தூர நோக்கம் கொண்டவை. ஆனால், தமிழத் தேசிய கூட்டமைப்பு முடிந்தவரை ஜெனீவாவை சாதகமாக பயன்படுத்த இதுவரை எடுத்த தீர்மானம் என்ன? பெரியளவில் ஜெனீவா எதனையும் தராது என்பது வேறு. ஆனால், அதை கொண்டு இனப்பிரச்சினையின் வரலாற்றை சர்வதேச மட்டத்தில் பதிவு செய்யலாம் அல்லவா? சிங்கள அரசியல் கட்சிகளின் மேற்படி நகர்வுகள் கூட்டமைப்புக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
நேற்றைய ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.