படம் | sundaytimes (யாழ்தேவி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்தை வந்தடைகின்ற காட்சி)

ஆனையிரவு புகையிரத நிலையத்தின் பெயர் சிங்களத்தில் வைக்கப்பட வேண்டுமென இன நல்லிணக்கத்தினை மேலும் துண்டாடும் வகையில் கோரிக்கை ஒன்று அண்மையில் எழுந்து சற்று அடங்கிப்போயுள்ளது. இச்சர்ச்சையில் கருத்துரைத்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாட்டில் தமிழ் மொழியின் அழுலாக்கம் மிகுந்த இடர்பாடுகளை கொண்டுள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். தமிழ்மொழி அமுலாக்கம் தொடர்பில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாலும் எதுவுமே நிறைவேறவில்லை என அவர் இந்த இடத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். அமைச்சரின் இக்கருத்து போரின் பின்பான 4 ஆண்டுகள் கழியும் நிலையில் பெரும் முக்கியத்துவமுடையாதகவுள்ளது.

அதாவது, இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடவடிக்கைகள் உள்ளன. அந் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளை விரும்பியோ விரும்பாமலோ உள்நாட்டில் மேற்கொண்டாக வேண்டியதோர் சூழ்நிலை காணப்படுகின்றது. யதார்த்தம் அவ்வாறிருக்க, குறைந்தபட்சம் நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றாகவுள்ள தமிழ் மக்களின் மொழியுரிமையினை நிலைநிறுத்துவதற்கு எனும் இடைவெளிகள் போரின் பின்பாகக் கூட நாட்டில் இல்லை என்ற துர்ப்பாக்கிய யதார்த்தமே இன்று வெளித் தொனிக்கின்றது. இனப்பிரச்சினைக்கு பல்வேறுபட்ட விடங்கள் காரணமாக இருக்கின்ற நிலையிலும் மொழிக்கொள்கை தொடர்பான அரச நிலைப்பாடு என்பது இனப்பிரச்சினையினைத் தோற்றுவிப்பதில் பெரும் பங்காற்றியிருந்தது. இது நாட்டின் சகல பிரஜைகளும் அறிந்துகொண்ட வெளிப்படை உண்மையாகும். இந்நிலையில், மக்கள் தமக்கான இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி சிந்திக்கையில், தமிழர்கள் தமது தாய் மொழியில் தம்மை ஆள்கின்ற அரசுடன் உரியவாறு தொடர்புகொள்வதிலேயே பல இடர்பாடுகள் இன்றும் இருக்கின்றன. ஆயினும், இனப்பிரச்சினைக்கான தீர்வையும் நல்லிணக்கத்தினையும் எங்குசென்று தேடுவது என்ற கேள்வியுள்ளது.

யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்து ஐந்தாண்டுகளை நெருங்குகின்ற நிலையிலும் நாட்டில் உள்ள தமிழ்பேசும் சமூகம் தாக்குதல்களுக்கு உள்ளாகியே வாழவேண்டிய நிலைகாணப்படுகின்றது. இன்றும் தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்கள் நீதிக்குப் புறம்பான நிலையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் இனங்களுக்கிடையில் சந்தேகத்தினையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தும் நோக்கில் அதிகாரத்தில் உள்ளவர்களின் பாதுகாப்போடு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இதனை விட யுத்தத்தில் படைத்தரப்பினர் அடைந்த வெற்றியே நாட்டின் இலக்கு என அடையாளப்படுத்தும் முகமாக வடக்கில் பலதரப்பட்ட போர் நினைவிடங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மற்றுமொரு அம்சமாக இன்று வடக்கின் பல இடங்களிலும் யுத்த வெற்றி வலயங்கள் அமைக்கப்படுகின்றன.

தற்போது இதற்கு மேலாக குடாநாட்டின் நுழைவாகவுள்ள ஆனையிரவு புகையிரத நிலையத்தினது பெயரினையும் சிங்கள பெயர் கொண்டதாக மாற்றியமைக்க முஸ்தீபுகள் நடைபெறுகின்றன. இதனை மொழிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கூட பாரியளவிலான உரிமை மீறலாகுமெனக் கண்டித்துள்ளார். ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கான பெயர் மாற்ற சர்ச்சையுடன் கருத்துரைத்த அமைச்சர், கொழும்பில் உள்ள உருத்திரா மாவத்தைக்கான பெயரை தமிழ்ச் சங்க வீதி என பெயர் மாற்றுவதற்று தான் மேற்கொண்ட பிரயத்தனத்தினையும் அதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையினையும் இத்தருணத்தில் ஞாபகப்படுத்தியும் இருக்கின்றார். ஆகவே, தெற்கில் சிறிய தமிழ் அடையாளத்தினை சட்டதிட்டங்கள் ஒழுங்கு விதிகளுக்கு உள்ளாகப் பெறவேண்டுமாயின் கூட இழுபறிகளால் நிராகரிப்புக்கள் காணப்படுகையில் வடக்கிலும் கிழக்கிலும் அதிகாரப் பலம் கொண்டு நீதி நியாயத்திற்குப் புறம்பாக சிங்கள அடையாளங்கள் நிறுவப்படும் நிலைமையே நாட்டில் நிலவுகின்றது. இது இனங்களிடையேயான நல்லிணக்கத்திற்கு அடிக்கப்படும் சாவு மணியாகும்.

இனப்பிரச்சினைக்குத் தோற்றுவாயாக அமைந்த தமிழ் மொழி பிரயோகத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைக்கு பரிகாரங்களோ முற்றுப்புள்ளிகளோ உரியவாறு உள்நாட்டில் ஏற்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் மொழி உரிமையினையும் அடையாளங்களையும் அரசியல் தீர்வினையும் கூட பெறுவதற்கு சட்டங்கள் ஏற்பாடுகள் பயனளிக்கப்போவதில்லை என்பதை மொழியுரிமை என்ற விடயத்தினை முன்னிறுத்தி புரிந்துகொள்ள முடியும். இப்புரிந்துகொள்கையில் இருந்து சட்டங்களின் அமுலாக்கத்துடன் இதய சுத்தியான அணுகுமுறை இனங்களுக்கிடையே அவசியம் என்பதுவே இக்கட்டுரையின் வலியுறுத்தலாகும்.

1956இல் தனிச் சிங்களச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர் பல எதிர்ப்புக்களினால் 1958இல் தமிழ் மொழியினை உபயோகிப்பதற்குமான 1958ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க தமிழ் மொழி (விசேட பிரமாணங்கள்) சட்டம் கொண்டுவரப்பட்டது. 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பிலேயே சிங்கள மொழி அரச கரும மொழி எனப் பிரகடனம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு அனுமதிக்கப்பட்டாலும் நாட்டின் நிர்வாக மொழியாகவோ அல்லது அரச கரும மொழியாகவே இருக்கவில்லை. 1972ஆம் ஆண்டு யாப்பிற்கு அமைய நீதிமன்றங்களின் மொழி கூட சிங்களமாகவே இருந்தது. 1978ஆம் ஆண்டைய யாப்பிற்கு அமையவே அரச கரும மொழியாக சிங்களம் இருந்ததுடன் சிங்களமும் தமிழும் தேசிய மொழிகளாக்கப்பட்டன. இவைகள் எல்லாம் மொழிகள் தொடர்பில் சட்டரீதியான ஏற்பாடுகளாக இருந்தபோதும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு ஏற்ற சரத்துக்களையும் அதன் நன்மைகள் எதனையும் தமிழர்கள் அனுபவித்தார்களா என்றால் இல்லை என வெளிப்படையாகவே கூற முடியும். சிங்கள மயமாக்களே மும்முரமாக எல்லை தாண்டி நடைபெற்றது. மொழி ரீதியிலும் இன அடையாளங்களைப் பேணுவதிலும் தமிழர்கள் எப்போதும் மறுக்கப்பட்டே வருகின்றனர். இந்நிலைமை போரின் பின்பாக இன்றும் தொடர்வது துர்ப்பாக்கியமானதாகும்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் 18ஆவது சரத்தினைத் திருத்தியதன் காரணமாக யாப்பில் தமிழ் மொழி அரச கருமமொழியாக்கப்பட்டது. ஆங்கில மொழி தொடர்பு மொழியாக்கப்பட்டது. இவை எல்லாம் அமுலில் இருக்கையில் தற்போதும் தனிச் சிங்களத்தில் தான் கடிதங்கள்  வடக்கில் உள்ள தமிழர்களுக்கு தெற்கிலுள்ள அரச திணைக்களங்களால் அனுப்பிவைக்கப்படுகின்றன. இவ்வருட ஆரம்பத்தில் கூட யாழ்ப்பாணத்திலுள்ளவர்களுக்கு அரச பணிநிலை நேர்காணலுக்காக கொழும்பில் இருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள் தனிச் சிங்களத்தில் இருந்தன. தனிச் சிங்களத்தில் கிடைக்கப்பெற்ற கடித்தினைப் பரிந்துகொள்ள முடியவில்லை எனத் தெரிவித்து யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் கடிதம் கிடைக்கப்பெற்ற தமிழ் இளைஞர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஆணைக்குழு தற்போது தீர்வைப் பெற்றுக்கொடுத்துமுள்ளது. எது எப்படியிருந்தபோதும் மொழியுரிமையினை இன்றும் தமிழ் மக்கள் தமது சாதாரண மொழியின் அந்தஸ்த்தினைக் கேட்டு சட்ட நடவடிக்கைக்கே செல்ல வேண்டியுள்ளது என்பது நல்லிணக்கத்தின் தோல்வியையே வெளிப்படுத்துகின்றது.

போரின் பின்பாக நல்லிணக்கம் குறித்து பலரும் பேசுகின்றார்கள். நாட்டில் இன முரண்பாடுகள் இல்லை என ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் அரசின் அதிகாரிகள் வரையில் மேடைகளில் முழங்குகின்றனர். எனினும், இன முரண்பாட்டிணைத் தோற்றுவித்த முக்கிய காரணிகளுக்கே பரிகாரம் எதுவும் காணப்படாததொரு சூழ்நிலையே யதார்த்தத்தில் காணப்படுகின்றது.

இன முரண்பாடுகளின் தோற்றத்திற்கு முன்பாகவே தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது என்ன வகையான பாதிப்பினை ஏற்படுத்தும் என அரசியல் தலைவர்களும் ஏன் அக்காலகட்டத்தில் வெளியாகிய ஊடகங்களும் சுட்டிக்காட்டியிருந்தன. தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்படுகையில் அதாவது, 1956 காலப்பகுதியின்போது உங்களுக்கு இரு மொழிகளுடனான தேசமா அல்லது ஒரு மொழியுடனான இரு தேசங்களா வேண்டும் என கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அவர் அன்றைய தனது உரையில், “எமது நாட்டின் சுதந்திரத்திற்கும் அதன் உட்கூறுகளின் ஒற்றுமைக்கும் ஆன வழி சமத்துவம் என்றே நாம் நம்புகின்றோம். இல்லையென்றால் ஒரு சிறிய நாட்டிலிருந்து இரத்தம் சொட்டுகின்ற துண்டாகிப் போன இரு நாடுகள் தோன்றும்” என கூறியிருந்ததனை மறக்க முடியாது. அன்று கொல்வின் ஆர்.டி.சில்வா நடைபெற்ற யுத்தத்தின் தீர்க்க தரிசனத்தினை எடுத்துக்கூறியிருந்தார். எனினும், அக்கருத்துக்கள் ஏதும் அன்று ஆட்சியாளர்களால் உள்வாங்கப்படவில்லை. ஏன் இன்றும் தமிழ் மக்களின் அடையாளங்கள் அழிக்கப்படுவது தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் சரியான கண்ணோட்டத்தில் அணுகப்படாத நிலைமையே தொடர்கின்றது.

இன்றைய நிலையில் தமிழ் பிரதேசங்களின் பெயர்களையும் அவற்றின் அடையாளங்களையும் மாற்றுவது என்பது தனியே மொழியுரிமையுடன் மற்றும் தொடர்புபட்ட விடயமாகவும் பார்க்க முடியாது. இது இத்தீவில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடியின் தொடர் நடவடிக்கையாகவே பார்க்கப்படவேண்டியதாகும். ஆனையிறவு என்பது போரியல் வரலாற்றிலும் அதற்கு அப்பால் காலனித்துவ காலகட்ட வரலாற்றிலும் முக்கியத்துவமிக்க ஒரு பிரதேசமாகும். அவ்வாறானதொரு பிரதேசம் இன்று பல வழிகளிலும் மாற்றங்கண்டு வருகின்றது. யுத்தத்தினை மாத்திரம் நினைவு கூறும் வலயமாக ஆனையிறவு மாற்றப்படுகின்றது. சிங்கள மக்களைப் பொருத்தளவில் ஆர்வத்திற்குரியதாக இப்பிரதேசம் இன்று அமைகின்றதுதான், எனினும் தமிழர்களைப் பொருத்தளவில் ஒரு வடுவையே ஆணையிறவு கொண்டுள்ளது. சிங்கள மக்களின் ஆர்வத்திற்குரிய பிரதேசமாக மாற்றப்படும் இங்கு அமைக்கப்படும் புகையிர நிலையத்தின் பெயரையும் சிங்கள மயமாக்க வேண்டும் எனத் திட்டமிடுவது அடிப்படையில் தமிழர்களுக்கு என்று பூர்வீக நிலமில்லை என்று கூறுவோரின் கருத்திற்கு வலுச் சேர்க்கும் முயற்சிகளேயாகும்.

ஆனையிறவு புகையிரத நிலையம் பற்றி கூறத்தக்க கதைகள் பலவும் உள்ளன. அதாவது, ஆனையிறவு புகையிரத நிலையத்தின் கட்டுமானத்திற்கு என 150 இலட்ச ரூபா நாட்டின் பாடசாலைகளின் மாணவர்களிடம் இருந்தே சேகரிக்கப்பட்டது. இவ் புகையிரத நிலையத்திற்கான அடிக்கல்லைக் கூட கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தணவே நாட்டிவைத்தார். இந்த இடத்தில் மாணவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பணத்தில் இனங்களின் நல்லுறவைப் பாதிக்கும் விடயங்களில் ஒன்றாகவுள்ள சிங்களப் பெயர் கொண்ட புகையிரத நிலையத்தினையா ஆட்சியில் உள்ளவர்கள் திறந்துவைக்கப் போகின்றனர் என்ற கேள்வியும் இக்கட்டுரைக்காக நேர்காணலுக்கு உட்படுத்திய சாதாரண பொதுமக்களிடத்தில் உள்ளது. மேலும், புகையிரத பணிகளை ஆரம்பிக்கையில் இதனை ஓர் உறவுப் பாலமாகவே அரசு அறிவித்திருந்தது. அவ்வாறான நிலையில் இவ் உறவுப் பாலத்திற்குள்ளேயே தமிழ் மக்களின் உணர்வுகளையும் அடையாளங்களையும் துண்டாடும் வேலைகள் நடைபெறுவது துரதிஷ்டமானதாகும்.

வரலாற்று ரீதியான சம்பவம் ஒன்றையும் இங்கு மீள நினைவுறுத்தலாம். அதாவது, உள்நாட்டு யுத்தத்தினால் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட முன்னர் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற யாழ்தேவி கிளிநொச்சியில் இறங்கவேண்டிய பயணிகளை ஒரு முறை இறக்காது அவர்களை பாதுகாப்புக் கேடயமாக புகையிரதத்தில் வைத்துக்கொண்டு ஆனையிறவு வரை சென்று அங்கு இராணுவத்தை இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சிக்கு வந்து பயணிகளை இறக்கியது. இதனால் பயணத்தில் பெரும் தாமதங்கள் ஏற்பட்டன. இச்சம்பவத்தினை செய்தியாக வெளியிட்ட அன்றைய வீரகேசரி பத்திரிகை ‘யாழ் தேவி நீ யார் தேவி? நிற்பதும் ஓடுவதும் யாருக்காக?’ என சுவரஸ்சியமாக செய்திக்குத் தலையங்கம் இட்டிருந்தது. இது போன்றுதான் இன்று யுத்தத்திற்குப் பின்பான நிலையில் மீள அமைக்கப்படும் புகையிரத சேவை தமிழ் மக்களின் அடையாளங்களையும் உணர்வுகளையும் மாற்ற முற்படுமாயின் யாழ் தேவியே நீ யார்? நீ வடக்கு வருவது எதற்காக?  என்று கேள்வியையே தமிழ் மக்கள் எழுப்பவேண்டி அமைந்துவிடும். எனவே, உறவுப் பாலங்களை துண்டாடும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும். நல்லிணக்கம் என்பது வார்த்தைகளில் அமையக் கூடாது. அது செயல் வடிவில் இருந்து சொல் வடிவமாக மாற்றப்படும்போதே நாடு பகைமறப்புச் சிந்தனைக்குள் செல்லும் வாய்ப்பும் நன்மைகளும் கிட்டும். போருக்குப் பின்பான காலகட்டத்தினை காத்திரமாகப் பயன்படுத்தும் முயற்சிகளுக்குள் அதிக தியாகங்களை சகல தரப்பும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தியாகராஜா நிரோஷ்

Niro