இலக்கியம், ஊடகம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ், யாழ்ப்பாணம்

தயக்கமும் எழுத்தும்

அண்மையில் பெருமாள் முருகனின் நாவலான ‘மாதொருபாகனை’ எரித்தமைக்காகவும், அவரை அச்சுறுத்தியமைக்காகவும் யாழ்ப்பாணத்தில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். யாழ். நூலகத்திற்கு அண்மையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இப்போது தான் சுன்னாகம் அனல் மின் நிலைய விவகாரமும் ஓய்ந்திருக்கிறது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஈழத்தில் உள்ள படைப்பாளிகள் எழுத்தாளுமைகள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று பார்க்கலாம்.

முதலில் எழுத்தாளன் என்பவன் யார்? பொழுது போகாமல் முகப்புத்தகத்தில் எழுதிப் போட்டுவிட்டு லைக்குகளுக்காக காத்திருப்பவனா? ஊரே எரியும் போது தான் மட்டும் வெறுமனே பார்த்துக் கொண்டு நின்று விட்டு அந்நிகழ்வை எழுத்தில் எழுதுவது தான் தன் கடமை என்று எண்ணுபவனா? இல்லவே இல்லை. எனக்குத் தெரியும், எழுத்தாளன் என்பவன், புற்களை, செடி கொடி, பூக்களை கூட சக உயிரினமாக மதிக்கக்கூடியவன். காக்கை குருவி எங்கள் சாதி என்று தான் அவனால் எழுத முடியும். எழுத்தாளன் என்பவன் தன் உயிரை விட தன் வாழ்வை விட இந்த பூமியையும் பிரபஞ்சத்தையும் நேசிப்பவன். அவனால் அதன் முன் நெக்குருகி கண்ணீர் விட முடியும். அந்தக் கண்ணீர் தான் அவனுடைய ஒவ்வொரு எழுத்தையும் துலக்கி ஒளிரச் செய்வது. ஆனால், நமது எழுத்தாளர்களோ சோம்பல் பேர்வழிகள், ஏதாவது செய்ய வேண்டுமென்றால், ஓடி ஒளிந்துவிடுவார்கள். உயிர்ப்பயம். பின் எப்படி இவர்கள் மகத்தான இலக்கியங்களை படைக்கப் போகிறார்கள். ஈழத்தில் இருக்கும் ஒரு சில பெண் எழுத்தாளர்களோ தங்களை Promote செய்வதிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள். என்ன எழுதிவிட்டார்கள் என்று தெரியாது, ஆனால், இலக்கிய வாதிகள்.

சரி, இவர்கள் தான் இப்படி என்றால், எழுத்தாளர்களை ஒன்று திரட்ட உருவாக்கிய சில அமைப்புக்களோ இருப்பதிலேயே பயந்தாங்கொள்ளிகளாக இருப்பது மேலும் துயரம். இப்படியாக தான் இருக்கிறது எழுத்தாளர்களின் நிலைமை. சமீபத்தில் நடந்து ஓய்வுக்கு வந்திருக்கும் சுன்னாகம் அனல் மின் நிலைய பிரச்சினையின் போது நான் உட்பட எந்த எழுத்தாளர்களும் பொருட்படுத்தும் படியாக எதையும் எழுதிவிடவோ அல்லது செய்துவிடவோ இல்லை. காரணம் அசமந்தம். பொறுப்பற்ற தன்மை, வேறு என்ன சொல்ல.

எழுத்தாளனுக்கு சமூகத்தோடு ஏற்பட்டிருக்கும் இடைவெளி பெரியது. எப்படியென்றால் சமூகத்திற்கு எழுத்தாளன் என்றால் யார் என்று தெரியாது, எழுத்தாளனுக்கும் சமூகத்தை தெரியாது. மா – ஓ – சேதுங்கின் உரையொன்றில் எழுத்தாளர்களின் பணியை அழகாகச் சொல்லுவார். எழுத்தாளர்களே எங்கே இருக்கிறீர்கள்? எங்கிருந்து இலக்கியத்தைப் படைக்கப் போகிறீர்கள்? மக்களிடம் சொல்லுங்கள், அவர்கள் தான் கதைகள் நிறைந்த பொக்கிஷக் கிடங்கு. ஆனால் அவர்களிடம் அறிஞர்களின் மொழியில் பேசாதீர்கள், மக்களின் மொழியில் பேசுங்கள் என்று.

நேற்று புலம்பெயர்ந்து வேறு தேசத்தில் வாழும் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன் அவரிடம் இந்தப் பிரச்சினைகளையும், எழுத்தாளர்களின் போக்கினையும் சொல்லி கவலைப்பட்டுக் கொண்டேன். அதற்கு நீர், சுன்னாகம் கழிவு நீர் பிரச்சினை பற்றி ஒரு கவிதையோ, கதையோ எழுதினால் அவர்கள் பாராட்டுவார்கள், அவ்வளவு தான் என்றார். அது தான் உண்மையும்.

எழுத்து என்பது என்ன? எழுத்து என்பது சொல். சொல்லென்பது சத்தியம். அது மனித அன்பின் உருவ வெளிப்பாடு. அது எப்போது கலையாகும்? அது எப்போது தன்னை தன் முழுமையான அர்த்தத்தில் வெளிப்படுத்திக் கொள்ளும்?

பேரன்பு கொண்ட இதயம் எப்போது சொற்களை தீண்டுகிறதோ, அப்போது தான் மற்ற எல்லா இதயங்களோடும் அந்தச் சொற்கள் உரையாடத் தொடங்குகிறது, இலக்கியமென்பதே சமூகத்துடனான முடிவற்ற உரையாடல் தானே, ஆகவே தான் கேட்கிறேன் என்ன வகையான தயக்கம் இது. என்ன வகையான எழுத்தாளார்கள் நீங்கள். உங்கள் துணிச்சலும் தீவிரமும் எழுத்தில் மட்டுமல்ல செயலிலும் இருக்க வேண்டும், அப்போது தான் சமூகத்திற்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான சுவர் இடிந்து விழும். அன்பை சொற்களில் மட்டுமல்ல செயலிலும் காட்டுங்கள்.

ஆகவே தான் சொல்லுகிறேன், எனதருமை நண்பர்களே, இந்த பூமியால் தாங்க முடியாத பேரன்புடன் உங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, முதல் அடியை நிலத்தில் வையுங்கள், பூமி அசைந்து உங்கள் பாதங்களை வாங்கிக் கொள்ளும், பூ என்ற சொல்லை எழுத்திப் பாருங்கள், சொல் மலர்ந்துவிடும்.