படம் | aljazeera

இலங்கை அரசியல் வரலாற்றில் மேல் மாகாணத் தமிழ் பிரதிநிதித்துவமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது. இலங்கை தேசிய காங்கிரஸின் முதலாவது தலைவராக இருந்த சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்கள் தேசிய காங்கிரஸிலிருந்து விலகி தனிவழி அரசியல் ஆரம்பித்ததற்கு மேல்மாகாணத்துக்கான தமிழ் பிரதிநிதித்துவமொன்றை வழங்குவதற்கு ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் ஈ.ஜே.சமரவிக்கிரம ஆகியோர் வழங்கியிருந்த உறுதிமொழியை மீறியமை முக்கிய காரணமாகிறது. இலங்கைத் தேசியம் என்ற அரசியல் சித்தாந்தத்திலிருந்து சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டதும் இதன் விளைவாகவே எனலாம்.

மேல்மாகாணமானது இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட பலவிதங்களில் முக்கியம் பெறுகிறது. தேசத்தின் தலைநகரான கொழும்பு மாவட்டம், அதிலும் குறிப்பாக பல்லின மக்களும் வாழும் பிரதேசம் என்ற வகையில், இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட மேல்மாகாணம், குறிப்பாக கொழும்பு மாவட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழர் (இலங்கைத் தமிழர் + இந்திய வம்சாவளித் தமிழர்) மற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கையானது கொழும்பு மாவட்ட சனத்தொகையின் 21% ஆகும். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகள் தவிர்த்து சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் பிரதேசம் என்ற வகையில் கொழும்பு இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெறுகிறது. கொழும்பு நகரைப் பொருத்தமட்டில் (கொழும்ப பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவு) 60% சத வீதமானோர் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களே. இவை 2012 ஆம் ஆண்டு குடிசனமதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள். சிறுபான்மையினர் கணிசமானளவில் வாழும் கொழும்பிலும், மேல்மாகாணத்திலும், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் என்பது போதுமானளவில் இருக்கிறதா என்ற கேள்வி நீண்டகாலமாகத் தொக்கு நிற்கிறது.

கொழும்பைப் பொருத்தவரையில் இங்கு அதிகமாக வசிக்கும் தமிழர்கள், மற்றும் முஸ்லிம் மக்களுடைய அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள் முதல், கல்வி, வடிகாலமைப்பு, வீட்டுவசதி, தொழில்வாய்ப்பு. சுகாதாரம் என பல்வேறுபட்ட பிரச்சினைகளும், எல்லாவற்றிற்கும் மேலாக உரிமைப் பிரச்சினைகளும் சரியான முறையில் கையாளப்படுவதற்கு உகந்த பிரதிநிதித்துவம் அத்தியாவசியமாகிறது.

தலைநகரில் தமிழ் பிரதிநிதித்துவம் பற்றிய விழிப்புணர்வு தலைநகரத் தமிழர்களிடையே 2000ஆம் ஆண்டுக்கு பின்பே வலுப்பெற்றது எனக் கூறலாம். மேல்மாகாணத் தமிழ் பிரதிநிதித்துவம் அல்லது குறிப்பாக தலைநகரத் தமிழ் பிரதிநிதித்துவம் ஜனநாயக ரீதியில் அடையப்பெற முடியும் என்று நிரூபித்ததில் மனோகணேசனுடைய பங்கு முக்கியமானது. 2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க தலைமையிலான கூட்டணியில் மனோ கணேசன் கொழும்பில் போட்டியிட்டார். அதற்கு முன்பாக இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மனோ கணேசனுடைய (அன்றைய) கட்சியான ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணியில், மயில் சின்னத்தில் போட்டியிட்டு சில ஆயிரம் வாக்குகள் பெற்று மாகாணசபைக்குத் தெரிவாகியிருந்தார். 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனாலும், 2001ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு 54942 வாக்குகள் பெற்று கொழும்பிலிருந்து ஜனநாய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்கிறார், இதிலிருந்தே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் மேல்மாகாணத்தில் புதிய தமிழர் அரசியல் பாதையொன்று தொடங்கியது எனலாம். மேல்மாகாணத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பல்வேறு மட்டங்களிலும் பிளவுபட்டு இருந்ததற்கு முக்கிய காரணம் தமிழர்களுடைய வாக்குவங்கி உடைந்திருந்ததே ஆகும். வடக்கு-கிழக்கிலும் 2001 தேர்தலுக்கு முன்பு இந்தப் பிரச்சினை இருந்தது, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தோடு பெருமளவு குறைந்தது எனலாம். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு-கிழக்கில் பெறும் பாரிய வெற்றிகளுக்கு இந்த ஒற்றுமையே (இது ஒற்றுமை அல்ல வெறும் தேர்தல் காலக் கூட்டு என்று கூட சில விமர்சகர்கள் கூறுவதுண்டு) முக்கிய காரணியாகிறது.

தமிழ் பிரதிநிதித்துவம் கொழும்பில் அடையப்பெற வேண்டுமென்றால் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று உணர்ந்ததன் விளைவாக மனோகணேசன் மற்றும் நல்லையா குமரகுருபரன் ஆகியோரது இணைவு 2003இல் இடம்பெறுகிறது. இது இன்னொரு முக்கிய விடயத்தையும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உணர்த்துகிறது. சிறுபான்மையினரை தமிழர்களை, முஸ்லிம்களை பிரித்துவைப்பதில் காலங்காலமாக அதிகாரசக்திகள் முனைப்புக்காட்டி வந்துள்ளன. குறிப்பாக இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர் என்ற பிரிவினையை ஊக்குவிப்பதனூடாக தமிழர் வாக்குவங்கிகளைப் பிளவுபடுத்தி வைத்திருப்பதன் மூலம், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் இருந்தபோதும் கூட, தமிழர் பெரும்பான்மையளவில் வசிக்கும் பிரதேசங்களுக்கப்பால் தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறாது இருப்பதையும், தமிழர் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிடக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்திக்கொண்டிருந்தன. இந்தக் காலகட்டத்தில் இந்த மரபை உடைக்கவேண்டிய கட்டாயம் வேறு பிரதேசங்களை விட கொழும்பிலேயே அதிகம் அவசியமாகியது மனோ-குமரகுருபரன் இணைவு மூலம் அது ஓரளவு சாத்தியப்பட்டது. இதன் பின்பதாக மேல் மாகாண மக்கள் முன்னணி (இன்றைய ஜனநாயக மக்கள் முன்னணி), மேல்மாகாணத்தில் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சக்தியாக வளரத் தொடங்கியது. இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் குறிப்பிடத்தக்கது. 2001 பொதுத் தேர்தலுக்கு பின்னர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கொழும்பில் நேரடியாகப் போட்டியிடுவதைத் தவிர்த்து மேல் மாகாண மக்கள் முன்னணிக்கு தனது ஆதரவினைத் தந்தது தமிழர் வாக்குகள் சிதறுபடுவதை கணிசமானளவு குறைத்தது.

இப்படியாக கொழும்புத் தமிழ் பிரதிநிதித்துவம் வளரத் தொடங்கிய காலகட்டத்தில்தான் கொழும்பில் தமிழ் மக்கள் சந்தித்த பல இன்னல்களை எதிர்த்து வலுவான குரல் எழத் தொடங்கியது. அடிக்கடி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களும், கடும் யுத்த காலத்தில் கூட கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பதாக ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு தமிழ் மக்களுடைய வலுவான சக்தி கொழும்பிலிருந்து இயங்குவது பறைசாற்றப்பட்டது. கொழும்பில் இந்த வலுவான தமிழ் பிரதிநிதித்துவ உருவாக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பங்கும் குறிப்பிடத்தக்கது. இதுவரை கொழும்பிலிருந்து உருவாகிய வலுவான தமிழ் பிரதிநிதித்துவம் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது அது தலைமையிலான கூட்டணியிலிருந்தே உருவாகியிருக்கிறது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பிலிருந்து இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவானார்கள். 57978 வாக்குகள் பெற்று தியாகராஜா மகேஸ்வரனும், 51508 வாக்குகள் பெற்று மனோ கணேசனும் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலிலிருந்து தெரிவாகியிருந்தார்கள். ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் தேர்தல் கேட்கும் தந்திரோபாயமானது மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல் மட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்திற்கு பெருமளவில் சாதகமாக அமைந்திருக்கிறது. இது ஒருவகையில் இரண்டு தரப்புக்கும் win-win நிலையை ஏற்படுத்துகிறது எனலாம்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு, தலைநகரைப் பொருத்தவரையில் கணிசமானளவு சிறுபான்மையின மக்களின் ஆதரவு இருக்கிறது. தமிழ்க் கட்சிகள் தனித்து தேர்தலை எதிர்கொள்ளும்போது அந்த தமிழ்க்கட்சிகளின் வாக்குகள் சிதறுவதுடன் மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினுடைய சிறுபான்மையினர் வாக்கு வங்கியும் சிதறுகிறது. ஆகவே, தமிழ்க்கட்சிகள் அல்லது சிறுபான்மைக் கட்சிகள் இங்கு தனித்துக் கேட்பது lose-lose நிலையையே ஏற்படுத்துகிறது. ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணியில் தேர்தலைச் சந்திப்பது என்பது இருதரப்புக்கும் சாதகமான முடிவுகளை ஏற்படுத்தும். இதுவரை கொழும்பிலிருந்து வந்திருக்கும் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலிலிருந்தே உருவாகியிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2004ஆம் ஆண்டு மேல்மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மனோகணேசன் தலைமையிலான மேலக மக்கள் முன்னணி (முன்பு மேல் மாகாண மக்கள் முன்னணி, இன்று ஜனநாயக மக்கள் முன்னணி) கொழும்பில் வெறும் 12219 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றுக்கொண்டது. ஆனால், 2009ஆம் ஆண்டு மேல் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட மேலக மக்கள் முன்னணியின் 3 தமிழ் வேட்பாளர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் வேட்பாளர்களைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருந்தனர். மேலும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான சி.வை.பி.ராமும் தெரிவாகியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு, தலைநகரைப் பொருத்தவரையில் தமிழ் மக்களுக்கு மிகச் சாதகமான ஒன்றாகவே அமைந்திருக்கிறது.

இந்த இடத்தில் மாநகரசபைத் தேர்தல் பற்றிக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. 2011இல் இடம்பெற்ற மாநகரசபைத் தேர்தலில் கொழும்பில் தனித்தப் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணி 26229 வாக்குகள் பெற்று 6 ஆசனங்களை வெற்றி கொண்டிருந்தது. இந்த முடிவானது ஐக்கிய தேசியக் கட்சிப்பட்டியலில் கேட்பதை விட தனித்துக் கேட்பது மேல் என்ற எண்ணத்தை உருவாக்கக்கூடும் அல்லது உருவாக்கியிருக்கிறது எனலாம். ஆனால், இங்கு தேர்தல்களிடையேயான கள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுதல் முக்கியமாகிறது. கொழும்பு நகரில் (கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவு) தமிழ் மக்களின் (இலங்கைத் தமிழர் + இந்திய வம்சாவளித் தமிழர்) இனவிகிதாசாரம் 31.7% ஆகும். ஆனால், கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இனவிகிதாசாரம் 11.1% ஆகும். ஆகவே கொழும்பு மாநாகரசபைத் தேர்தலுக்கும், மாவட்ட அளவில் கணிக்கப்படும் மாகாணசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கும் அடிப்படையில் பாரிய வேறுபாடு இருக்கிறது. மேலும், 2011 மாநகரசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவு பிரபல்யம் வாய்ந்த தமிழர் யாரும் போட்டியிடவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் அதிக வாக்குபெற்ற தமிழர் ஒரு புதுமுக இளைஞர், ஐ.தே.க. மாகாணசபை உறுப்பினர் சி.வை.பி.ராமின் மகன் ஆவார்; குறிப்பிடத்தக்க பிரபல்யம்மிக்க தமிழர்கள் யாரும் ஐ.தே.க. பட்டியலில் இல்லாததும் தனித்துக் கேட்ட ஜனநாயக மக்கள் முன்னணி 26229 வாக்குகள் பெற்று 6 ஆசனங்களை வெல்லக் காரணமாகிறது. மாறாக குறிப்பிடத்தக்க பிரபல்யம் உடைய யாரேனும் ஐ.தே.க பட்டியலில் இருந்திருப்பாராயின் அங்கு வாக்குகள் சிதறடைந்திருக்கும்.

இங்கு இன்னொரு விடயம் சுட்டிக் காட்டப்படுதல் அவசியமாகிறது. ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் ஐ.தே.க பட்டியலில் வாக்குக் கேட்டு முதலில் மாகாண சபைக்கும் அதனைத் தொடர்ந்து வந்த நாடாளுமன்ற தோ்தலில் நாடாளுமன்றத்திற்கும் தெரிவான பிரபா கணேசன் அரசு பக்கம் கட்சி தாவியது அவருக்கும். ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் ஆதரவளித்த தலைநகரத் தமிழ் மக்களிடையே பெரும் அதிருப்தியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், அதனைத்தொடர்ந்தும் கூட தமிழருக்கான தமிழர் பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் வாக்குக்கேட்டு வெற்றிபெற்ற மனோகணேசன், மாநாகரசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பின் தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு அந்த ஆசனத்தை பட்டியலில் தொடர்ந்து இருந்த வேறு பல தமிழ் வேட்பாளர்கள் யாருக்கும் வழங்காமல், பட்டியலில் மிகப் பின் தங்கியிருந்த பிரியாணி குணரத்ன என்ற சிங்களப் பெண்மணிக்கு வழங்கியது ஏன் என்ற கேள்வி தலைநகரத் தமிழ் மக்களிடையே எழாமல் இல்லை. தமிழர் வாக்கு தமிழர்களுக்கே போக வேண்டும் என்ற மகுடவாசகத்தை உச்சரித்து வாக்குக் கேட்டவர்கள், பிறகு தம் இஷ்டப்படி மக்களாணைக்கு எதிராக நடந்துகொள்ளும்போது அவர்கள் மீதான மக்கள் நம்பிக்கை பெரிதும் உடைகிறது. இது மக்களை அதிர்ச்சியடைச் செய்வது மட்டுமல்லாமல் தேர்தல் அரசியலில் நம்பிக்கையிழக்கவும் செய்துவிடும்.

மாநாகரசபைத் தேர்தலை அடிப்படையாக வைத்து மாகாணசபைத் தோ்தலிலும், நாடாளுமன்றத் தோ்தலிலும் தமிழ்க் கட்சிகள் கொழும்பில் தனித்துக் கேட்குமானால் அது வாக்குகளைச் சிதறடித்து தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பாதிப்பதுடன் இன்று ஆட்சியிலிருக்கும் அரசிற்கு சாதகமானதொன்றாகவே அது அமையும். ஏனெனில், இன்றைய நாட்டுச் சூழலில், சிறுபான்மையின மக்கள் ஆட்சியில் வீற்றிருக்கும் அரசிற்கு வாக்களிப்பது பெருமளவில் சந்தேகத்திற்குரியது. குறிப்பாக தமிழ் மக்கள் இந்த அரசிற்கு வாக்களிக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம். நாட்டின் வீழ்ச்சியடையும் பொருளாதாரம் நகரங்களில் வாழும் சிங்கள மக்களைக் கூட அரசு மீது நம்பிக்கையிழக்க வைத்துள்ளது. தமக்கு எதிரான வாக்குகள் பிரதான எதிர்க்கட்சிக்கு போய்விடாதவரை தமது ஆட்சிக்குக் குந்தகம் இல்லை என்பதை அரசு நன்கு புரிந்துவைத்தள்ளது.

ஆகவே, தனக்கு எதிரான வாக்குகளை சிதறடிப்பதில் அரசு முனைப்புக் காட்டும் என்பதில் ஐயமில்லை. வரவிருக்கும் மேல்மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பில் தனித்துத் தேர்தல் கேட்கப் போவதாக விடுத்திருக்கும் அறிவிப்பும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கொழும்பில் தனித்துத் தேர்தலைச் சந்திக்கும் என்ற அறிவிப்பும் இந்த அரசுக்கெதிரான சிறுபான்மையினரின் வாக்குகளை சிதறடிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படவேண்டும். இவ்வாறு சிறுபான்மையின வாக்குகளைச் சிதறடிப்பதன் மூலம் சிறுபான்மையினரின் தீர்மானிக்கும் சக்தி தடுக்கப்படுவது மட்டுமன்றி, சிறுபான்மைப் பிரதிநிதித்துவமும் குறைக்கப்படுகிறது. அதனையே இந்த அரசுமும் விரும்புகிறது. ஐ.தே.கவுடன் இணைந்து கேட்பதன் மூலம் மொத்தமாக 4 தமிழ்ப் பிரதிநிதிகள் வரை பெறக்கூடிய நிலையிருக்கையிலே, தனித்துக் கேட்பதன் மூலம் அதில் ஒன்று குறையுமென்றால் கூட அது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியேயன்றி வேறென்ன?

தலைநகரில் தனித்துத் தோ்தலைச் சந்திப்பதை ஒரு பெருமையாக, வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்ட மாபெரும் வெற்றியை ஒத்த வெற்றியை தலைநகரில் காணும் முயற்சியாக சித்தரிப்பதும், தமிழர்களின் மாபெரும் தனிச் சக்தி என அதீத வர்ணிப்புச் செய்வதும் உணர்ச்சிகளின் ஆளுகைக்குட்பட்டு அர்த்தமற்ற பெருமைப்படுதலாக பார்க்கப்பட வேண்டியதே அன்றி அது நிதர்சனமாகாது. 98.9% தமிழர்கள் வாழும் யாழ் மாவட்டத்திற்கும் 11.1% தமிழர்கள் வாழும் கொழும்பு மாவட்டத்திற்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது. அந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற தந்திரோபாயம் கையாளப் பட்டாலன்றி தலைநகரத் தமிழர் பிரதிநிதித்துவம் தொடா்ந்தும் காக்கப்பட முடியாததாகிவிடும். வெற்று உணர்ச்சிமிகு வார்த்தைகள், வெற்றியைத் தேடித் தராது.

குறுங்காலப் பிரச்சினைகள், தனிநபர்களுக்கிடையிலான, கட்சிகளுக்கிடையேயான தனிப்பட்ட முரண்பாடுகள் அரசியல் முடிவொன்றுக்கு தூண்டுகோலாக அமையுமாயின், அது குறித்த மக்களின் அரசியல் படுதோல்விக்கே வழிவகுக்கும். தன்னலமற்ற, மக்கள் நலன் மையச் சிந்தனை மற்றும் சாணக்கியத்தனத்தில் பிறக்கும் முடிவுகள்தான் நீண்டகாலத்தில் ஒரு குறிப்பிட்ட மக்களின் அரசியல் வெற்றியைத் தீர்மானிக்கிறது. ஆகவே, தலைநகரத் தமிழ் பிரதிநிதித்துவம் காக்கப்படவேண்டியதன் அவசியம் கருதி, வாக்குச் சிதறடைவதைத் தடுத்து, நீண்ட தொலைநோக்குப் பார்வையுடன் தலைநகரத் தமிழ்த் தலைமைகள் செயற்படவேண்டியது காலத்தின் தேவை. அப்படி செயற்படாத தலைமைகளை மக்கள் அடையாளங்கண்டு சரியான தீர்ப்பொன்றை வழங்கவேண்டியது மக்களின் கடமையே.

கௌடில்யன்